நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 26 மார்ச், 2015

KANNANAI NINAI MANAME...PART 22...கண்ணனை நினை மனமே!.. பகுதி 22...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல். ​​

''மனு' என்கிற ஆணும், 'சதரூபை' என்கிற பெண்ணுமாகிய (தம்பதிகள்) ரூபங்களை அடைந்தார் பிரம்ம தேவர்' என்று சென்ற தசகத்தின் நிறைவில் பார்த்தோம்...அவ்விதம் தோன்றிய மனுவானவர், 'ஸ்வயாம்புவ மனு' என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கும் சதரூபாவுக்கும் ப்ரிய விரதர், உத்தான பாதர் என்ற இரண்டு மகன்களும், ஆகூதி, தேவஹூதி, பிரஸூதி என்ற பெயருடைய மூன்று மகள்களும் பிறந்தனர்.
ஆகூதியை ருசி என்னும் பிரஜாபதிக்கும், தேவஹூதியை கர்த்தமப் பிரஜாபதிக்கும், பிரஸூதியை தக்ஷப் பிரஜாபதிக்கும் மணம் செய்து கொடுத்தார் ஸ்வயாம்புவ மனு... இந்த விருத்தாந்தங்கள் பாகவதத்தில் முதலிலேயே சொல்லப்பட்டிருந்தாலும், நாராயணீயத்தில் சற்றுப் பின்னரே விளக்கப் படுகின்றன.  
​இந்த தசகத்தில் சனகாதி முனிவர்கள் வைகுண்டம் செல்லுதலும், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த துவாரபாலகர்கள், அவர்களிடம் சாபம் பெறுதலும் விளக்கப்படுகின்றன்..

சனகாதி முனிவர்கள், வயதால் முதியவர்களானாலும், ஐந்து வயதுக் குழந்தையின் சரீரத்தைக் கொண்டவர்கள்.. ஆத்ம ஞானம் அடைந்த அவர்கள், ஆகாய மார்க்கத்தில், எல்லா உலகங்களிலும் தங்கு தடையின்றி சஞ்சரித்து வந்தார்கள்.. ஒரு சமயம், பகவானை தரிசிக்க வேண்டி, அவர்கள் வைகுண்டத்திற்கு வந்தனர்..(இதனை பகவானிடம், பட்டத்திரி வினவிய போது, அவர் 'ஆம்' என்றார்!).

அந்த முனிவர்கள், வைகுண்டத்தின் ஆறு கோட்டை வாயில்க‌ளைக் கடந்து, நைச்ரேயஸம் என்ற பெயருடைய நந்தவனம், பல குளங்கள், உயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மணிமயமான‌ மாளிகைகள் முதலியவற்றை, எவ்வித பற்றுமின்றி, பகவத் சிந்தனையிலேயே மனதை நிறுத்தியவர்களாய், கடந்தனர்.​ 

ஏழாவது வாயிலை அவர்கள் அடைந்த போது,  ஜய, விஜயர்கள் என்ற பெயருடைய இரு துவாரபாலகர்கள், தம் பிரம்பினால் அவர்களைத் தடுத்தனர்.  அவர்களுடைய இச்செய்கை,  பகவானோடு எஞ்ஞான்றும் ஆத்மஸ்வரூபமாக உறைந்திருக்கும் பிரம்ம ஞானிகளான சனகாதி முனிவர்களுடைய தவ வலிமையை அவமதித்ததாகும்.. தன் பக்தர்களை அவமதிப்பதை பகவான் விரும்புவதில்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் ஏனோ இச்செய்கையில் ஈடுபட்டனர்.. இந்தச் செய்கை, கோபம் என்பதையே அறியாத அம்முனிவர்கள் மனதிலும், கோபத்தை ஏற்படுத்தியது.. எங்கும் நிறைந்த பகவானின் திருவுள்ளப்படியே இம்மாதிரியெல்லாம் நிகழ்ந்தது.

முனிவர்கள், வாயிற்காப்பாளர்களை நோக்கி, 'துஷ்டர்களாகிய நீங்கள், அசுரப் பிறவியை அடையக் கடைவீர்கள்' என்று சபித்தார்கள்...இதனால் வருந்திய துவாரபாலகர்கள், தான் செய்கின்றது இன்னதென்று அறியாது செய்து, சாபம் பெற்றார்களெனினும், பகவானிடமிருந்து பிரிந்திருக்க மாட்டாது, அவரை அடையும் வழி தேடி, 'நாங்கள் எவ்விதமான பிறவியை அடைந்தாலும், ஸ்ரீஹரியின் நினைவு எங்களுக்கு சித்தியாகுமாறு அருள் புரிய வேண்டுகிறோம்' என்று சனகாதியரை சரணடைந்தார்கள்.

இந்த நிகழ்வு, ஸ்ரீமத் பாகவதத்தில் மிக நுணுக்கமாகவே விவரிக்கப்பட்டுள்ளது...அதன்படி,  சனகாதியர், வைகுண்டத்தின் தலைவாயிலில் நிற்கும் வாயிற்காப்பாளர்களிடம், இம்மாதிரியான நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை.. 'காம, குரோத, லோபமாகிய  மூன்று பகைவர்கள் உட்புக நினைத்தலும் முடியாத இடமே வைகுண்டம். இந்த குணங்களின் காரணமாகவே (இறைவன் வேறு, அடியார்கள் வேறு என்னும்) பேத புத்தி தோன்றுகின்றது'  (ஆத்ம நாசத்துக்குரிய மூவகை வாயில்கள் என்று, காமம், குரோதம், லோபம் ஆகிய மூன்றையும் ஸ்ரீமத் பகவத் கீதை இயம்புகின்றது..எப்பாடுபட்டேனும்  இவை மூன்றையும் தள்ள வேண்டும்.. த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: | 
காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || (தெய்வாசுர சம்பத் விபாக யோகம்)).

'அப்படியிருக்க, பரம்பொருளாகிய பகவானிடத்து சேவக‌ர்களாகியிருக்கும் உங்களிடம், பேத புத்தி தோன்றியதன் காரணமாக, உங்களை சீர்படுத்த வேண்டுமென்று தோன்றியே இச்செயலைச் செய்கின்றோம்... இந்த மூன்று பகைகள் எங்குண்டோ அந்த உலகங்களுக்குச் செல்வீர்களாக!' என்று கூறுகின்றார்கள் ஆகவே இந்த சாபத்தையும் கருணை என்றே கூற வேண்டும்.

நடந்ததனைத்தையும் அறிந்தவராக, ஸ்ரீலக்ஷ்மி சமேதராக, கருடனின் தோளில் வைத்த அழகிய கரங்களையுடையவராக, மனதைக் கவரும் அழகிய வடிவில் வெளிப்போந்தார் பகவான்..அப்போது,  தன் திருவாக்கினால் அருளியதை, பட்டத்திரியின் திருவாக்கின் மூலமே கேட்கலாம்!..

ப்ரஸாத்³ய கீ³ர்பி⁴​: ஸ்துவதோ முனீந்த்³ரானனன்யனாதா²வத² பார்ஷதௌ³ தௌ
ஸம்ʼரம்ப⁴யோகே³ன ப⁴வைஸ்த்ரிபி⁴ர்மாமுபேதமித்யாத்தக்ருʼபாம்ʼ ந்யகா³தீ³​: ||

("முனிசிரேஷ்டர்கள், பகவானை பக்தி மேலிட துதி செய்தனர். அவர்களை அன்பான வார்த்தைகளைச் சொல்லி சமாதானம் செய்தார் எம்பெருமான்.   பின்னர்,  தம்மையே நாதனாகக் கொண்ட‌,  ஜய விஜயர்களை நோக்கி, 'நீங்கள் இருவரும், என்னை விரோதிப்பதன் மூலமாக உண்டாகும் த்வேஷத்தையே யோகசாதனமாகக் கொண்டு, மூன்று பிறவிகளுக்குப் பின்னர் என்னை வந்தடைவீர்களாக!' என்றருளினார்").

சூழ்ச்சி ஞானச் சுடரொளி யாகி,என்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்,
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சி,யான் சேரும் வகையருளாய் வந்தே!.

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம்..

(ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் கோபத்திற்காக, ஹிரண்யாக்ஷன், ஹிண்யகசிபு என்ற பெயர்களுடன், அசுரப் பிறவியையும், காமத்திற்காக, ராவணன், கும்பர்கணன் என்ற பெயர்களுடன் ராட்சசப்  பிறவியையும், லோபத்திற்காக, சிசுபாலன், தந்தவக்த்ரன் என்ற பெயர்களுடன் மானிடப் பிறவியையும் காலக்ரமத்தில் அடைந்தனர். இங்கு இன்னொரு தகவல்.. அசுரர்களுக்கும் ராட்சசர்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.. உதாரணமாக, அசுரர்களுக்கு, தேவர்களே முக்கிய எதிரிகள். ராட்சசர்களுக்கு மனிதர்களும், தவத்தில் சிறந்த முனிவர்களுமே எதிரிகள்).).

இவையெல்லாம் பகவானின் திருவுள்ளப்படியே நிகழ்ந்தது.. உலக நாடகத்தை நடத்த வேண்டியே எம்பெருமான் இவ்வாறெல்லாம் சங்கல்பித்தான் போலும்!...

(தொடர்ந்து தியானிப்போம்).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..