இந்த தசகத்தில், பிரம்மதேவர், புல் முதலான தாவர வகைகள் துவங்கி, மனிதர்கள், தேவர்கள் வரை சிருஷ்டித்தது விளக்கப்படுகின்றது..
எம்பெருமானது அனுக்ரகத்தால், பலம் பெற்ற பிரம்ம தேவர், பூமியில், தாவர வகைகள், பசு, பறவையினங்கள், மானிடர்கள், தேவர்கள் ஆகியோரின் சரீரங்களை சிருஷ்டித்தார். அவ்வாறு சிருஷ்டிக்கும் வேளையில், அவரையறியாமல், ஐந்து விதமான அஞ்ஞான(அறியாமை) விருத்திகளும் படைத்தார்.
அவை, அறிவு மயக்கம், அகங்காரம், விருப்பம், கோபம், பயம் ஆகியவை.. உதாரணமாக, எங்கும் நீக்கமற நிறையும் இறைவனிடமிருந்து உலகம் வேறுபட்டது என்று நினைப்பது, ஆத்ம ஸ்வரூப பாவனையின்றி, உடலையே 'தான்' எனக் கொள்ளுதல், உலகப் பொருட்களில் வைக்கப்படும் பற்று, அது பிறிதொருவர் வசம் செல்லும் போது வரும் ஆத்திரம், விரும்பிய பொருட்களை தன் வசப்படுத்திக் கொண்டாலும், அந்தப் பொருட்கள் தன்னிடமிருந்து எடுக்கப்படுமோ என்ற பயம் என்பதாக இந்த குணங்களை வகைப்படுத்தலாம். இவை தமோ குணத்தின் காரணமாகத் தோன்றுபவை. இவற்றைத் தோற்றுவித்தபின், இதற்காக வருந்தி, பகவானது இணையடிகளை தியானித்தார்.
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை,- நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து.
என்ற பேயாழ்வார் திருவாக்கினை, இவ்விடத்தில் தியானிக்கலாம்.
இறைவனை தியானிப்பதன் காரணமாக, மனம் தூய்மை அடைகிறது.. இவ்வாறு தூய்மையடைந்த மனதால், பிரம்ம தேவர், சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைச் சிருஷ்டி செய்தார். இந்த முனிவர்கள், இறைத் தியானத்தினால் தூய்மையடைந்த மனதின்கண் தோன்றியதன் காரணமாக, இயல்பாகவே பக்தி வசப்பட்டிருந்தார்கள்... அதனால், பிரம்மதேவர் இவர்களை, பிரஜைகளைச் சிருஷ்டிக்கும் தொழிலில் ஏவியும் அவர்கள் அதை ஏற்கவில்லை..
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை. (நம்மாழ்வார்).
என்பதை உணர்ந்தவர்களாக, பகவானது பக்தியில் மூழ்குவதிலேயே விருப்பத்துடன் இருந்தார்கள்.
இதனால் கோபமடைந்த பிரம்ம தேவர், தன் கோபத்தை அடக்க முயற்சி செய்த போது, அவரது புருவங்களுக்கு மத்தியில் இருந்து, பகவானின் அம்சமாக, 'ம்ருடன்' தோன்றினார். அவர், தோன்றியவுடனே, 'பிரம்ம தேவரே, எனக்கு பெயர்களையும் ஸ்தானங்களையும் அளியுங்கள்' என்றவாறு அழத் தொடங்கினார். இதனால், அவர் 'ருத்ரன்' என்ற பெயருடையவரானார்.
(புணர்க்குமயனா மழிக்குமரனாம்,
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி,
புணர்ததிருவாகித் தன்மார்வில்தான்சேர்,
புணர்ப்பன்பெரும்புணர்ப் பெங்கும்புலனே. (நம்மாழ்வார்)).
பகவான் தன் உள்ளிருந்து ஆணையிட்டபடி, பிரம்ம தேவர், அவருக்கு, பதினோரு பெயர்களையும், அதற்குரிய வெவ்வேறு உருவங்களையும் (ஏகாதச ருத்ரர்கள்), பிரியமான பத்தினிகளையும் அளித்து, ஒவ்வொருவருக்கும் ஏற்றதொரு ஸ்தானத்தையும் அளித்தார். பின்னர் அவர்களை பிரஜைகளை சிருஷ்டிக்குமாறு கூறினார். ருத்ரனும் அதை ஏற்றார்.
ருத்ரனால், அவரைப் போன்றே உருவாக்கப்பட்ட ருத்ரர்களால் நிரம்பிய மூவுலகையும் கண்ட பிரம்ம தேவர் அச்சத்தினால் பீடிக்கப்பட்டார். பின், உம்மால் தரப்பட்ட தூண்டுதலின்படி, ருத்ரர்களிடம், பிரஜைகளை சிருஷ்டிப்பதை நிறுத்தி விட்டு, உலக நன்மைக்காக தவம் செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன் பின்னர், சிருஷ்டித் தொழிலில் தாமே ஆர்வம் மிகக் கொண்டார் பிரம்ம தேவர். அவரது உடலில் இருந்து, அத்ரி, மரீசி, ஆங்கிரஸ், க்ரது, புலஹர், புலஸ்தியர், ப்ருகு, வசிஷ்டர், தக்ஷர் ஆகிய ஒன்பது முனிவர்கள் தோன்றினர். பகவானது திருவடித் தாமரைகளையே இடையறாது தியானிக்கும் மகா பக்திமானான நாரதரும் தோன்றினார்.
அதன் பின், தர்ம தேவனையும், கர்தமரையும் படைத்தார் பிரம்ம தேவர். தொடர்ந்து வாணியைப் படைத்த பொழுது, அவளிடம் காம வசப்பட்டார். அப்போது, அவரது புதல்வர்களான, சனகர், தக்ஷர் ஆகியோர் பிரம்ம தேவருக்கு அறிவுரை கூறினர். அதனால் பிரம்ம தேவரின் அஞ்ஞானம் விலகியது.
தமது நான்கு திருமுகங்களிலிருந்தும், நான்கு வேதங்கள், புராணங்கள் மற்றும் அனைத்து வித்தைகளையும் படைத்தார் பிரம்ம தேவர். அவற்றை, தமது புத்திரர்களுக்கு உபதேசித்தார். இத்தனைக்குப் பிறகும் சிருஷ்டித் தொழிலில் வளர்ச்சி இல்லாதிருப்பதைக் கண்டு, பகவானது திருவடிகளைத் தியானித்தார்.
அப்போது, பகவானின் அருளால், அவருக்கு நல்லதொரு உபாயம் தோன்றியது. அதனை, பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாகவே கேட்கலாம்!.
ஜானன்னுபாயமத² தே³ஹமஜோ விப⁴ஜ்ய
ஸ்த்ரீபும்ʼஸபா⁴வமப⁴ஜன்மனுதத்³ வதூ⁴ப்⁴யாம் |
தாப்⁴யாம்ʼ ச மானுஷகுலானி விவர்த⁴யம்ʼஸ்த்வம்ʼ
கோ³விந்த³ மாருதபுராதிப நிருந்தி⁴ ரோகா³ன் ||
"ஹே குருவாயூரப்பனே!, கோவிந்தா!..அப்போது, பிரம்ம தேவருக்கு, (உம்மை தியானித்ததன் பலனாக) சிருஷ்டி செய்வதற்கான உபாயம் ஒன்று தோன்றியது.. தம் உடலை இரு பிரிவாகப் பிரித்து, 'மனு' என்கிற ஆணும், 'சதரூபை' என்கிற பெண்ணுமாகிய (தம்பதிகள்) ரூபங்களை அடைந்தார். இவர்கள் மூலம் மனித இனம் பெருகலாயிற்று. இப்படியாக, மனித இனத்தை விருத்தி செய்யும் நீரே என் பிணிகள் அனைத்தையும் நீக்கியருள வேண்டும்!"..
(தொடர்ந்து தியானிக்கலாம்!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி!..கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..