நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 9 நவம்பர், 2013

SRI JAGADHATHRI DEVI PUJA...ஸ்ரீ ஜகத்தாத்ரி தேவி பூஜை (9/11/2013---12/11/2013)


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்!!!.

நாம் ஒவ்வொரு பண்டிகைகள், மற்றும் ஆன்மீகக் கட்டுரைகளோடு, ஒவ்வொரு மாநிலத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பூஜைகள், பண்டிகைகள் மற்றும் விரதங்களையும் பார்த்து வருகிறோம். அம்மாதிரி, மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீஜகத்தாத்ரி பூஜையை இந்தப் பதிவில் காணலாம்....



அகில உலகமும் காத்தருளும் அன்னை பராசக்திக்குத் தான் எத்தனை எத்தனை திருநாமங்கள்!!. அன்னையின் அளப்பரிய கருணையைப் போற்றும் விதமாக எத்தனை எத்தனை வழிபாடுகள்.. பூஜை முறைகள்.. இந்த ஜகத்தை ஆளும் ஜகதம்பிகையான 'ஜகத்தாத்ரி தேவி'யைப் போற்றும் வழிபாடே ஜகத்தாத்ரி பூஜை. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகள், இந்தியாவின் கிழக்குப் பகுதி மாகாணங்களில்  ஜகத்தாத்ரி பூஜை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ சப்தமி தினம் துவங்கி, வரிசையாக அஷ்டமி, நவமி, தசமி தினங்களில் ஜகத்தாத்ரி பூஜை கொண்டாடப்படுகின்றது. ஆனால் பூஜையின் முக்கிய தினம், நவமி தினமே ஆகும்.

இந்த பூஜை, தாத்ரி பூஜை, ஜகதம்பா பூஜை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. ஜகத்தாத்ரி தேவி, ஸ்ரீதுர்கா தேவியின் மற்றொரு திருஅவதாரமாகவே கருதப்படுகிறார். தாந்த்ரீக முறைப்படி, ஸ்ரீதுர்கையும், காளி மாதாவும், ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களின் உருவகமாகக் கருதப்படுகின்றனர். ஜகத்தாத்ரி தேவி, சத்வ குணம் நிரம்பிய அன்னையாகக் கருதப்படுகிறார்.

இந்த  உலகத்தை ஆளும் அன்னை, பெற்ற தாயினும் பெரிதுவந்து, தன் மக்கள் மீது பேரருங்கருணையைப் பொழிபவள். தம் மக்களின் குற்றம் பொறுத்து, குணத்தைப் பெரிதுவப்பவள். அன்னை துர்க்கையின் ஆனந்தமான திருவடிவினள் ஜகத்தாத்ரி. இந்த ஜகத்தைத் தரிப்பதால்(தாங்குவதால்) ஜகத்தாத்ரி தேவியாக வழிபடப்படுகிறாள் அன்னை.

அன்னை, அதிகாலைச் சூரியனின் நிறமுடையவள். முக்கண்ணும், நான்கு திருக்கரங்களும் கொண்டருளும் வடிவினள். நான்கு திருக்கரங்களிலும், சங்கு, சக்கரம், வில், அம்பு முதலியவற்றைக் கொண்டருளுபவள். செவ்வாடை அணிந்து, அற்புதமான ஆபரணங்களுடன், நாகராஜரை யக்ஞோபவீதமாகக் கொண்டருளுபவள். சிம்ம வாஹினி.

குப்ஜிகா தந்திரம், காத்யாயினி தந்திரம் ஆகியவை அன்னையைப் பற்றி புகழ்ந்துரைப்பதாகக்  கூறுகிறார்கள். அன்னைக்கு 'த்ரிசந்த்யா வியாபினி' என்ற திருநாமமும் உண்டு. தர்ம ,அர்த்த, காம மோக்ஷம் என்னும் நான்கு வித புருஷார்த்தங்களையும் அருளுபவள் அன்னை ஜகத்தாத்ரி.

தேவியின்  திருஅவதாரம் குறித்த புராணக் கதை:

மஹிஷாசுர வதம் முடிந்ததும், மகிழ்வடைந்த தேவர்கள் அன்னையின் திருமுன் ஒன்று கூடினர். ஆனால் அனைவர் மனதிலும், தத்தம் சக்தியாலும் ஆயுதங்களாலுமே அன்னை வெற்றியடைய முடிந்தது என்னும் எண்ணம் மேலோங்கியிருந்தது. தேவர்களின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரம்பொருள், ஒளி பொருந்திய யக்ஷனின் வடிவில் அவர்கள் முன் தோன்றினார்.

ய‌க்ஷனைக் கண்டதும், வாயு பகவான், யக்ஷனின் முன் வந்து நின்றார். யக்ஷன், வாயுவிடம், 'தாங்கள் யார்?' என்று வினவ, அதற்கு வாயு பகவான், 'நான் வாயு, பெரும் மரங்களையும், மலைகளையும் வேரோடு பெயர்த்தெறிய வல்ல பராக்கிரமம் பொருந்தியவன் நான்!!' என்றார்.

உடனே யக்ஷன் ஒரு சிறு புல்வெளியை உருவாக்கி, அதைப் பெயர்க்கச் சொன்னான். ஆனால் வாயு, தன் முழு பலத்தையும் பிரயோகித்தும் அதை அணுவளவும் அசைக்க இயலவில்லை.

அக்னி பகவானால், அந்தப் புல்வெளியைத் தீண்ட இயலவில்லை. மற்ற தேவர்களாலும் ஏதும் செய்ய இயலவில்லை.
நிறைவாக, பரம்பொருள், 'காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படைப்புகள் அனைத்தும் ஜகத்தாத்ரி தேவியினுடையதே!!. தேவர்களும் அன்னையால் படைக்கப்பட்டவர்களே!!, தேவர்களின் சக்தியனைத்தும் அன்னையால் உலகநன்மையின் பொருட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டதே!!' என்னும் உண்மையை தேவர்கள் உணருமாறு செய்தார். இப்படி, அனைத்தையும் படைத்து, காத்தருளும் வடிவினளாகத் துதிக்கப்பட்டவளே ஜகத்தாத்ரி.

ஆணவமற்ற உள்ளங்களே அம்பிகை உறையும் திருக்கோயில்கள் என்பதை உணர்த்தும் இந்தப் புராணக் கதையை ஒட்டியே வேறொரு புராணக் கதையும் வழங்கப்படுகின்றது.

முற்காலத்தில், வானவர்கள், தானவர்கள், மானிடர்கள் யாவரும் ஆணவ மேலீட்டால் தர்மத்தை மறந்து வாழ்ந்தனர். அம்பிகை அவர்களுக்கு நல்லறிவு புகட்ட திருவுளம் கொண்டாள். பேரொளிப் பிழம்பாக அவர்கள் முன் தோன்றினாள். கோடானுகோடி சூரிய சந்திரர்களின் பேரொளியை விஞ்சியது அம்பிகையின் திருவுருவம். அனைவரும் பயந்தனர். தத்தம் திறனொடுங்கினர்.

பேரொளி, இவ்வுலகனைத்தையும் அழித்து விடுமோ என்று அஞ்சி நடுங்கி, ஸ்ரீதுர்கையைப் பணிந்து துதித்தனர். அம்பிகை மனமிரங்கினாள். அந்தப் பேரொளிப் பிழம்பு ஸ்ரீஜகத்தாத்ரி தேவியாக திருவுருவுக் கொண்டது.

தேவியின் திருஅவதாரம் பற்றிய வேறொரு புராணக் கதையும் உள்ளது. இது முதல் கதையிலேயே சிறு மாற்றத்துடன் சொல்லப்படுகின்றது.

இதில், யக்ஷனாகத் தோன்றியவர் பிரம்மதேவர் என்று கூறப்படுகின்றது. பிரம்மதேவர், தேவர்களுக்கு மெய்யறிவை உணர்த்திய போது அவதரித்தவளே அன்னை ஜகத்தாத்ரி.

ஸ்ரீ ஜகத்தாத்ரி பூஜை:

இந்த பூஜை, மேற்கு வங்காளம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், சந்தன் நகோர் ,ரிஷ்ரா ஆகிய இடங்களே ஜகத்தாத்ரி பூஜையின் முக்கிய கேந்திரங்களாக கருதப்படுகின்றன.

இந்தப் பூஜை செய்வதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று கூறுகிறார்கள். ஆகவே, இது செல்வந்தர்கள் இல்லங்களிலோ அல்லது குழுவாகச் சேர்ந்தோ நடத்தப்படுகின்றது.

ஆனால் இது மெய்யல்ல என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்வு, அருள்நிறை அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் திவ்ய சரிதத்தில் கூறப்படுகின்றது.

அன்னையின் தாயார் திருமதி.சியாமாசுந்தரி, மிகுந்த தெய்வ பக்தி நிரம்பியவர்.  ஒரு முறை, காளி பூஜையை ஏழ்மையின் காரணமாக செய்ய இயலாத அவர், அருகில் ஒருவர் செய்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள எண்ணி, தம்மால் இயன்ற பொருட்களை அளிக்கச் சென்றார். ஆனால் அந்த நபர், ஒரு பழைய பிரச்னையை மனதில் வைத்துக் கொண்டு வாங்க மறுத்திருக்கிறார். வருத்தம் நிரம்பிய மனதுடன் உறங்கிய சியாமாவின் கனவில், கால் மேல் கால் போட்ட தோற்றத்துடன் ஒரு தேவி தோன்றினாள். 'காளிக்காக நீ வைத்திருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்!!' என்று அமுத வாக்களித்தாள்.

மறுநாள், சாரதா தேவியாரிடம், இது குறித்துத் தெரிவித்து, 'அம்மாதிரி தோற்றத்துடன் தோன்றும் தேவி யார்?' என்று வினவினார் தாய். 'ஜகத்தாத்ரி தேவி' என்று பதிலுரைத்தார் சாரதா தேவியார். சியாமா சுந்தரியார், இதன் காரணமாக தம்மால் இயன்ற அளவு அன்னையின் பூஜையை சிறப்பாகச் செய்தார். குடும்பம் ஏழ்மையில் இருந்து பெருமளவு விடுதலை பெற்றது.

மறுவருடம் இந்தப் பூஜை செய்ய சியாமா சுந்தரியார் விரும்பினார். ஆனால் சாரதா தேவியார் சம்மதிக்கவில்லை. இம்முறை கனவு வந்தது சாரதைக்கு. தம் தோழியரான, ஜயா, விஜயா ஆகியோர் புடை சூழ  வந்த ஜகத்தாத்ரி தேவி, 'அப்படியானால் நாங்கள் போக வேண்டியதுதானா?' என்று வினவ,  சாரதா தேவியார், 'நீங்கள் இங்கேயே இருங்கள்' என்று பதிலளித்தாராம்.. அது முதல் ஆண்டு தோறும், ஜகத்தாத்ரி பூஜை அன்னையால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாம்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும், அன்னை, பூஜையைத் தவிர்க்க எண்ணினார். அப்போதும் மீண்டும் கனவு வரவே, தொடர்ந்து பூஜையை நடத்தி வந்தார். 

இப்போதும், ஸ்ரீஇராமகிருஷ்ணா மடத்தின் சார்பில், அன்னையின் திருஅவதார ஸ்தலமான ஜெயராம்பாடியிலும் மற்ற இடங்களிலும் ஸ்ரீஜகத்தாத்ரி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
பூஜை செய்யப்படும் முறை:

அன்னையின் திவ்ய சரிதத்தில் இவ்வாறு குறித்திருந்தாலும், இன்றளவும், பொதுவாகவே பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு சமூக விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. மிக அழகாக, கலையம்சத்துடன் அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோயில் போன்ற அமைப்புக்களில், அன்னையின் பிரதிமைகளை மிக‌ அற்புதமாக அலங்கரித்து, கொலுவிருக்கச் செய்கிறார்கள். பட்டாடைகள், அழகான ஆபரணங்கள், மலர்கள் சூடி அன்னை அருளுகிறாள்.

இந்தப் பந்தல்களின் அலங்கார அழகு வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவ்வளவு அற்புதமாக இருக்கும்..பழங்காலத்திய மற்றும் தற்கால கலை நுணுக்கங்களின் சங்கமமாகவும், வங்காளத்தின் பிரத்தியேக கலையம்சத்தின் அத்தனை பரிணாமங்களும் நிறைந்துள்ள இடமாகவும் இந்தப் பந்தல்கள் காட்சியளிக்கின்றன.

அன்னையின் பிரதிமைகளும், வெவ்வேறு வடிவங்களில், தோழியருடன் சேர்ந்தோ அல்லது சிம்ம வாஹினியாகவோ, அமர்ந்த நிலையிலோ அழகுற செய்யப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

அன்னையை மூன்று தினங்கள் கொலுவிருக்கச் செய்கிறார்கள். மூன்று தினங்களும், மிக விமரிசையாக தூப தீப ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அனைத்து விதமான நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மாலை, இரவு வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன.பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பந்தலுக்கு வந்து தேவியை வழிபட்டு வலம் வரலாம். பந்தலில் எவ்வித பயமும் இல்லை. மேலும் சேவை செய்பவர்கள் நட்புணர்வுடன் சேவை செய்வதால் யாவரும் சௌகரியமாகப் போய் தரிசித்து வரலாம்.

வெளிநாட்டு யாத்ரீகர்கள் வருகையால், தற்போது இரவு முழுவதும் நடத்தப்படும் பூஜைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தசமியன்று, துர்கா பூஜைக்குச் செய்வது போல், அன்னையின் பிரதிமைகளை கங்கையிலோ அல்லது நதிகளிலோ விஸர்ஜனம் செய்கிறார்கள்.

ஸ்ரீஜகத்தாத்ரி தேவியை இல்லங்களில் பூஜிக்க விரும்புவோர், நவமி தினத்தில் (11.11.2013) மாலை வேளையில், அன்னையின் திருவுருவை அமைத்து, இயன்ற அளவில் பூஜிக்கலாம். ஸ்ரீ ஜகத்தாத்ரி பூஜையின் போது, பாராயணம் செய்ய வேண்டிய ஸ்ரீஜகத்தாத்ரி ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும். அன்னையை பூஜிக்க இயலாதவர்களும், இந்த ஸ்தோத்திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்து, அன்னையின் அருள் பெறலாம்.

அன்னை ஸ்ரீஜகத்தாத்ரி, பக்தர்களின் குற்றங்களை பெரிதாக எண்ணாதவள். யாராயிருப்பினும், தன் மக்களென்றே அருளுபவள். அன்னை ஸ்ரீசாரதாதேவியார், ஜகத்தாத்ரி தேவியின் திருஅவதாரமென்றே கருதுகிறார்கள். அன்னையின் திவ்யசரிதம், யாவரையும் தம் மக்களாக அரவணைத்துச் செல்லும் அன்பு நிறை உளப்பாங்கை அற்புதமாக எடுத்தியம்புகிறது..

இந்த ஜகத்தை தாங்கி நிற்கும் அன்னை ஸ்ரீ ஜகத்தாத்ரி தேவியைப் பணிந்து அருள் பெறுவோம்...

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

  1. ஆம்! ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களில் ஜக்தாத்ரிபூஜை எப்போதும் விசேஷமாகக் கொண்டாடப்படும். அதிலும் வங்காள சன்னியாசி ஒருவர் இருந்துவிட்டால் பெரிய ஆனந்தம்தான். நேரில் அனுபவித்துள்ளேன்.சுவையான பிரசாதங்கள் சாப்பீட்டு மகிழ்ந்துள்ளேன்.கட்டுரை நன்றாகவும்,எளிமையாகவும், இனிமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மனமுவந்த பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா!!..

      நீக்கு
  2. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா.. 'தொகுப்பு' வலைப்பூவிலும் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன்..

      நீக்கு
  3. எப்படிப்பாரு இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சி வச்சிருகீங்க? எளிமையா அருமையா எழுதிருக்கீங்கப்பா...இதெல்லாம் ஒண்ணுமே எனக்கு தெரியாது வாசிச்சி அறிந்தேன் amazing!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கையை மனமாரப் பாராட்டுகின்ற உங்கள் பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றிக்கா... புத்தகங்கள் படிக்கிறேன்னாலும், அதை விட அதிகமா, பெரியவர்கள், நண்பர்கள் மூலம் தெரிய வருகிற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தான் பதிவிடுகிறேன். அதனால அவர்களுக்குத் தான் நிறைய நன்றி சொல்லணும்!!!..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..