வட இந்தியர்களின் கார்த்திகை மாதமான இந்த மாதத்தில், தீபாவளி அமாவாசையை அடுத்து வரும், சுக்ல பக்ஷ பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி/லாப பஞ்சமி.
குஜராத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று லாப பஞ்சமி. புதிய தொழில் அல்லது முயற்சிகளை இன்றைய தினம் துவங்க, கட்டாயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. குஜராத்தில், லாப பஞ்சமி தினம், தீபாவளி பண்டிகை தினங்களுடன் இணைத்தே கொண்டாடப்படுகின்றது.
இது 'பாண்டவ பஞ்சமி' என்றும் சிறப்பிக்கப்படுகின்றது. பாண்டவர்கள், பன்னிரண்டு வருட வனவாசம் மற்றும் ஒரு வருட அஞ்ஞாத வாசம் நிறைவு செய்த தினமாக இது கருதப்படுகின்றது.
கடபஞ்சமி, ஞான பஞ்சமி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த தினம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த தினத்தில், புதிதாக திருமணமானவர்கள், சௌபாக்கிய கௌரி விரத பூஜை செய்கிறார்கள். திருமண வாழ்வில் நலமும் வளமும் அன்னையின் அருளால் பெருக வேண்டி, தம்பதியாகவோ, அல்லது புதுமணப் பெண் மட்டுமோ இந்த பூஜையைச் செய்யலாம்.
நிறுவனங்களில், புதுக் கணக்கு துவங்குவதற்கு உகந்த தினம் இது. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று, சென்ற வருடத்திய கணக்குகளை முறையாக நிறைவு செய்து, புதுக்கணக்குகளை துவங்காதவர்கள், லாப பஞ்சமி தினத்தன்று செய்கிறார்கள்.
தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தில், சாரதா பூஜை செய்யாதவர்கள், லாப பஞ்சமி தினத்தன்று செய்கிறார்கள்.
தொழிலகங்களில் புதுக்கணக்குப் புத்தகங்களுக்குப் பூஜை செய்வது, 'சாரதா பூஜை' என்று வழங்கப்படுகிறது. புதுக்கணக்குப் புத்தகங்களுக்கு ஸ்வஸ்திக் சின்னம், சுபம், லாபம் முதலிய மங்கலச் சின்னங்கள் வரைந்து பூஜிக்கிறார்கள். பொதுவாக, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இதைச் செய்வார் (குஜராத்தில் பொதுவாக, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, தொழிலை குடும்ப உறுப்பினர்களே நிர்வகிப்பது வழக்கம்). தொழில் முனைவோர் அல்லாதோரும், தத்தம் வங்கிக் கணக்குப் புத்தகம் போன்றவற்றை வைத்துப் பூஜிக்கிறார்கள். ஸ்ரீசரஸ்வதி தேவியின் மற்றொரு திருநாமமே 'சாரதா'. ஆகவே, மாணவர்கள், தமது பாடப் புத்தகங்களையும் பூஜையில் வைப்பது வழக்கம்.
பூஜையின் போது, பளிச்சிடும் வண்ணங்களில் ரங்கோலி வரைந்து, தீபங்கள் ஏற்றுகிறார்கள். பூஜை நிறைவுற்றதும், பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறார்கள்.
அசையா சொத்துக்கள் வாங்குவதற்கும், புது முயற்சிகளுக்கும் உகந்த நன்னாள் லாப பஞ்சமி என்பதால், நிறுவனங்களில், தொழிலில் ஏற்படும் இடையூறுகளை நீக்கும் வகையில், மிக விமரிசையாக ஸ்ரீவிநாயகருக்குப் பூஜை செய்கிறார்கள். திருமகளைப் போற்றும் வகையில் ஸ்ரீலக்ஷ்மி பூஜையும் நடத்தப்படுகின்றது.
லாப பஞ்சமி தினத்தன்று, உறவினர், நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி, இனிப்புகள் தருவது வழக்கம். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள், லாப பஞ்சமி தினத்தை ஒட்டி நடைபெறுகின்றன.
சில சமயம், வாழ்வில் திடீரென தேக்க நிலை ஏற்படலாம். இந்த நிலை மாற, லாப பஞ்சமி தினத்தன்று உபவாசம் இருந்து பூஜித்தல் சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகின்றது. அம்மாதிரி உபவாசம் இருப்போர், ஸ்ரீவிநாயகரையும், சிவபெருமானையும் பூஜை செய்கிறார்கள்.
பூஜிக்கும் முறை:
அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, நீராடி, பூஜைக்கு அமர வேண்டும். விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு, சூரியனுக்கு அர்க்கியம் (ஒரு செம்பு அல்லது பாத்திரத்தில், நீர் எடுத்துக் கொண்டு, சூரியனை நோக்கி, ஒருமித்த மனதுடன், நீரைப் பொழிந்து செய்யும் பூஜை முறை) சமர்ப்பித்து, பூஜை துவங்க வேண்டும்.
தூய்மையான இடத்தை பூஜைக்குத் தேர்ந்தெடுத்து, அதில் விநாயகர், சிவபெருமான் திருவுருவங்களையோ அல்லது திருவுருவப்படங்களையோ அழகாக அலங்கரித்து வைக்க வேண்டும். தீபங்கள் ஏற்றவும். இயன்றவர்கள் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.
அக்ஷதை, பூக்கள், அருகம்புல், சந்தனம் முதலியவற்றால் விக்னேசுவரரை அர்ச்சிக்க வேண்டும்.
பூஜையின் போது பாராயணம் செய்ய, சகல சௌக்கியங்களையும் அருளும், 'ஸர்வ சௌக்யப்ரத கணபதி ஸ்தோத்ர' த்திற்கு இங்கு சொடுக்கவும்..
அதன் பின், சிவனாருக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, வெண்ணிற வஸ்திரம் சாற்றி, வெண்ணிற மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.
மோதகம், பால், இயன்ற பழங்களை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.
ஆரத்தி செய்து வணங்கி, க்ஷமா பிரார்த்தனை (பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளுக்காக மன்னிப்புக் கோருதல்) யுடன் பூஜை நிறைவு செய்ய வேண்டும். பிரசாதங்களை விநியோகிக்க வேண்டும்.
உபவாசத்தை மறு நாள் பாரணையுடன் முடிக்க வேண்டும். இயலாதவர்கள், அன்றைய தினம் மாலை, சந்திர தரிசனத்துக்குப் பின் நிறைவு செய்யலாம்.
அன்றைய தினம் முழுவதும், ஸ்ரீகணேசரின் துதிகளையோ, மந்திரங்களையோ உச்சாடம் செய்தவாறு இருப்பது சிறப்பான பலன்களைத் தரும்.
இந்த நாள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களால், 'ஞான பஞ்சமி' தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
இன்றைய தினம், பெரும்பாலான ஜைனர்கள் உபவாசம் இருக்கிறார்கள். ஞானம், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இரண்டாவது சூரியன், மூன்றாவது கண்(ஆஜ்ஞா). பெறற்கரிய ஞானத்தைப் பெற வேண்டியே, இவ்வரிய விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. ஜைனர்கள், தேவ வந்தனம், தியானம் முதலியவை செய்து, ஞான ஒளியை வேண்டுகிறார்கள்.
பெரும்பாலானவர்கள், ஒவ்வொரு மாதமும், சுக்ல பஞ்சமியன்று விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு, ஐந்து வருடமும் ஐந்து மாதமும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
லாப பஞ்சமி தினத்தில் மேற்கொள்ளும் இறைவழிபாடுகள், மிக அதிக அளவில் நற்பலன்களை அளிப்பவையாக அமைந்திருப்பது கண்கூடு.
வாழ்வின் தேக்க நிலை மாற்ற உதவும் இந்த அற்புதமான தினத்தில், முறையான வழிபாடுகளை மேற்கொண்டு,
வெற்றி பெறுவோம்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
POOJA DETAILS SUPER.. TKS
பதிலளிநீக்குESSAR
THANKS SIR...
நீக்குஆமாம்..
பதிலளிநீக்குஆமாம்..
மிக்க நன்றி ஐயா!!..
நீக்குகணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...