நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

PART 4 NAVARATHIRI POOJA (16/10/2012 TO 24/10/2012).......நவராத்திரி பூஜா முறைகளும் பலன்களும்.

சென்ற மூன்று பதிவுகளில், நவராத்திரி தினங்களின் மகிமை, கொலு வைக்கும் முறை, செய்ய வேண்டிய நிவேதனங்கள், கோலங்கள் முதலியவற்றைப் பார்த்தோம். இந்தப் பதிவில், நவராத்திரி பூஜையைச் செய்யும் முறை, மற்றும் பலன்களைப் பார்க்கலாம். இது 'தேவி பாகவதத்தில்' விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பூஜைக்கான காலம்:
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் இடம் பெறுகின்றன. அவற்றுள், மிக முக்கியமானது, சித்திரை மாதத்தில் வசந்த ருதுவில் வரும் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில், சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரியும் ஆகும். வசந்தருதுவும், சரத் ருதுவும்,  யமதர்மராஜனுடைய இரண்டு கோரைப் பற்களுக்கு சமமாகும். அதனால், அந்தக் காலங்களில், இறையருள் கிடைப்பதற்கு இடையூறாக, பகை, நோய் முதலியவை ஏற்படும். ஆகவே, இந்த இடையூறுகளுக்கு இடம் கொடாமல் தேவியைப் பூஜிக்க வேண்டும்.

மஹாளய அமாவாசையன்றே, பூஜைக்குத் தேவையானவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். பிரதமை திதி முதல் பூஜை துவங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்து முறையாகப் பூஜிக்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியது:
மேடு பள்ளம் இல்லாத சமதரையில், பசுஞ்சாணம் கொண்டு மெழுகி, செம்மண் தடவி வைக்க வேண்டும். பின், நான்கு மூலைகளிலும், பதினாலு முழமுள்ள, கொடிகளோடு கூடிய கம்பங்களை நட்டு, அழகான மண்டபம் அமைக்க வேண்டும். அதன் மத்தியில், நான்கு முழ நீளமும், ஒரு முழ அகலமும் இருக்கும் அழகிய மேடையை அமைக்க வேண்டும். மண்டபத்தை பூக்களாலும் தோரணங்களாலும் நன்றாக அலங்கரிக்க வேண்டும்.

வேத விதிகளை நன்குணர்ந்தவர்களைத் துணையாகக் கொண்டு, பூஜை துவங்க வேண்டும். பிரதமையன்று அதிகாலையில் நீராடுதல் முதலிய கடமைகளை முடித்து, வேதகோஷம் செய்து கொண்டே, மண்டபத்தின் நடுவில் இருக்கும் மேடை மீது, வெண்பட்டை விரித்து, அழகிய சிம்மாசனம் இட்டு, அம்பிகையின் திருவுருவை, சதுர்புஜங்களோடு கூடியதாகவோ, பதினாறு கரங்களுடனோ எழுந்தருளச் செய்து, மலர்மாலைகளாலும், ஆபரணங்களாலும் நன்கு அலங்கரித்து, அருகில், தூய நீர் நிரப்பி, ரத்தினம் முதலியவை சேர்த்த கலசத்தையும் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

பின் பூஜை நல்ல விதமாக நடந்தேற, அம்பிகையைப் பிரார்தித்து, நவாவர்ண பூஜை செய்து, வாசனையுள்ள மலர்கள், நிவேதனங்கள் முதலியவற்றை விதிப்படி, தேவிக்கு பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு நாளும், மூன்று காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். பூஜிப்பவர்கள், பகல் முழுவதும் உபவாசம் இருந்து, இரவு பூஜை முடிந்த பின்னரே உணவு கொள்ள வேண்டும். தரையில் தான் படுக்க வேண்டும்.

இவ்வாறு பூஜித்த பின்னர், ஒவ்வொரு நாளும், 2 வயது முதல் 10 வயது வரை உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.

கன்யா பூஜை குறித்த தகவல்களுக்கும், அப்போது சொல்ல வேண்டிய தியான ஸ்லோகத்துக்கும் இங்கு சொடுக்கவும்.

இவ்வாறு பூஜிப்பது மிக மிகச் சிறந்தது. ஆனால், மாறி வரும் உலகில், இவ்வாறு செய்வதற்கு இயலாதவர்களும் உள்ளனர். அவர்கள், அஷ்டமியன்று தேவியைப் பூஜிக்கலாம்.  தக்ஷனின் யாகத்தை அழித்தவளான, அன்னை ஸ்ரீ பத்ர காளி, திருஅவதாரம் செய்த தினமே அஷ்டமி. மேற்கூறியவாறு, முறையாக, சப்தமி,அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் பூஜித்தால் ஒன்பது நாள் பூஜித்த பலனும் கிடைக்கும்.

நவராத்திரி விரத மகிமை:
அம்பிகை, நினைத்த மாத்திரத்திலேயே, மகிழ்ந்து அதிக வரங்களைத் தரக் கூடியவள். தேவிக்கு உகந்த இந்த விரதத்தைப் போல், உத்தமமான பலன்கள் தரக் கூடிய விரதம் வேறு இல்லை. இதை முழுமையாக உணர்ந்து, விதிப்படி அனுஷ்டிக்கிறவர்கள்,  எல்லா நலன்களையும் பெற்று சுக வாழ்வு வாழ்வார்கள். பூஜையின் போது, 'ரக்த சந்தனம்' என்றழைக்கப்படும், செந்நிற சந்தனத்தை, வில்வத்தில் தோய்த்து தேவிக்கு  அர்ச்சனை செய்பவர், அரச வாழ்வைப் பெறுவர்.

இவ்விரதம் சம்பந்தமான புராணக் கதை:
கோசல தேசத்தில் சுசீலன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் வறுமையால் வாடினான். அவன் குழந்தைகள், பசியினால் துன்புற்று தினம் அழுவார்கள். அவன் மிகுந்த சிரமத்திற்கிடையில் கொண்டு வந்த பொருளைக் கொண்டு, அவன் குடும்பத்தார் ஒருவேளை மட்டுமே, உணவு அருந்த முடிந்தது.

இத்தகைய வறுமை நிலையிலும், சுசீலன், தர்ம நெறியில் தவறாது, வாழ்ந்து வந்தான். கோபம் கொள்வதோ, சண்டை செய்வதோ அவனிடம் இல்லை. தன் தினசரிக் கடமைகளிலும் தவறாது இருந்து வந்தான்.

ஒரு நாள், அவனுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.  மனம் மிக வருந்திய நிலையில், அங்கே வந்த ஒரு அந்தணரை அணுகி, 'ஐயா, என்னை மிகவும் துன்பப்படுத்தி வருகின்ற இந்த வறுமை நிலை நீங்க ஒரு உபாயம் சொல்ல வேண்டும். நான் ஏராளமாக பணம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல.  அன்றாடம் நிம்மதியாக  சாப்பிட்டு அன்றைய பொழுதைக் கழிக்கும் அளவுக்கு, எனக்கு பணம் கிடைத்தால் போதும். இன்று என் குடும்பத்திற்கு பிடி அரிசி கூட இல்லாத நிலை இருக்கிறது. என் மகளுக்கு திருமண வயது கடந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இந்த நிலை மாற ஏதேனும் விரதம், மந்திரங்கள் இருப்பின் தயவு கூர்ந்து தெரிவிக்க வேண்டும்
என்று பிரார்த்தித்தான்.

அந்தணர், சுசீலனுக்கு நவராத்திரி விரதத்தை உபதேசித்தார். மேலும் "இதை பக்தியுடன் அனுஷ்டித்தால் துயரங்கள் அனைத்தும் நீங்கும், இதை விட மேலானதொரு விரதமில்லை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அனுஷ்டித்துப் பலன் அடைந்த விரதம் இது" என்றும் கூறினார்.

சுசீலன், மிகுந்த பக்தியுடன், இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தான். ஒன்பது வருடங்கள் இடைவிடாது அனுஷ்டித்து வந்தான். ஒன்பதாவது வருடத்தில், அஷ்டமியன்று இரவில், அம்பிகை தரிசனம் தந்து, அவனுக்கு சகல நலன்களையும், நிறைந்த பொருட்செல்வத்தையும் மகிழ்ச்சியான வாழ்வையும் அனுக்கிரகித்து மறைந்தாள். சுசீலன், இந்த விரதத்தை தொடர்ந்து செய்து இறுதியில், அம்பிகையின் திருவடிகளை அடைந்தான்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி நவராத்திரி விரதம் அனுஷ்டித்த விதம்:
ஸ்ரீராமர், தம் வனவாசத்தில், சீதா தேவியைப் பிரிந்து துன்புற்ற போது, நாரத மஹரிஷி, அவரைச் சந்தித்தார். அவர் "ஸ்ரீ ராமா, இராவணனுக்கு மரணம் நெருங்கி விட்டது. அதனால் தான் சீதையை அபகரித்துச் சென்றிருக்கிறான். அவனை வதம் செய்வதே, உன் அவதார நோக்கம். இவ்வாறு அவன் செய்தது, பூர்வ ஜென்மத் தொடர்பால் ஆகும். சீதை ஸ்ரீலக்ஷ்மியின் அம்சம். முற்பிறவியில், சீதை, ஒரு முனிவருடைய மகளாகப் பிறந்து, தவம் செய்து கொண்டிருந்த பொழுது, அவளைக் கண்ட இராவணன், அவளை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அவள் மறுக்கவே, அவள் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முற்பட்டான்.  அவள் மிகுந்த கோபத்துடன், 'ஏ மூடா, உன்னை கொல்வதற்காகவே, அயோநிஜையாக(பெண் வயிற்றில் பிறக்காமல்) பிறவி எடுப்பேன்' என்று சாபம் தந்து விட்டு அக்னியில் பாய்ந்து உயிர் துறந்தாள்.

அதை நிறைவேற்றவே ஜனகர், பொன்னேர் பூட்டி உழும் போது, பூமியில் கிடைத்த பெட்டியில் சீதை தோன்றினாள். அவளை நீயும் மணந்தாய். இப்போது அவள் பதிவிரதா தர்மத்தில் சிறிதும் குறைவு வராமல் வாழ்கிறாள். தேவேந்திரன், காமதேனுவின் பாலை ஓர் பாத்திரத்தில் நிரப்பி அனுப்பியிருக்கிறான். அதைப் பருகியே அவள் வாழ்கிறாள். ஆகவே, இராவணனை வதம் செய்வதற்கான வழியைக் கேட்பாயாக. இது ஐப்பசி மாதம். பகவதியான தேவியினுடைய திருப்திக்காக, நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால், அன்னையின் அருள் உனக்குக் கிடைக்கும். ஒன்பது ராத்திரியும் உபவாசமிருந்து, தேவி பூஜை மற்றும் ஹோமத்தை செய்து வந்தால், எல்லா சித்திகளும் அடையலாம்.

இந்த விரதத்தை  திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனாரும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர் " என்று கூறி, விரதத்தின் விதிமுறைகளை ஸ்ரீராமருக்கு உபதேசித்தார். ஸ்ரீ ராமரின் வேண்டுகோளுக்கிணங்கி விரதத்தை உடனிருந்து நடத்தி வைக்கவும் ஒப்புக் கொண்டார்.

ஸ்ரீ ராமரும் வனத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, பக்தியுடன் விரதத்தை அனுஷ்டித்தார். அஷ்டமி அன்று இரவில், ஒரு மலை உச்சியில், அனைத்துலகையும் காத்து ரட்சிக்கும் லோகமாதாவான அம்பிகை, சிம்ம வாஹினியாக, ஸ்ரீராமருக்கு தரிசனம் அளித்தாள். 'ஹே ராமா, நீ பக்தியுடன் அனுஷ்டித்த விரதத்தால் திருப்தியடைந்தேன்' என்று அருளியதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான். அயோத்தி திரும்பி, பதினாயிரம் வருடம் ராஜ்ய பரிபாலனம் செய்து, பின் பரமபதம் அடைவாய்' என வரமருளினாள்.

அவ்விதமே, ஸ்ரீ ராமர், இராவணனை வதம் செய்து, சீதையை சிறை மீட்டு, அயோத்தி திரும்பி, நல்லாட்சி நடத்தி மகிழ்ந்திருந்தார்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை:
மேற்கூறிய விதத்தில் விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள், இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்தித்து, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையைப் பூஜிக்கலாம். பூஜை முடிவில் யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தரலாம். அன்னைக்கு நாம் அனைவரும் குழந்தைகளே. அதனால், பக்தி ஒன்றே அம்பிகை நம்மிடம் வேண்டுவது.  

ஒன்பதாவது நாள், மஹா நவமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்கி தொழும் தினமாதலால், சரஸ்வதி பூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது.அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால், வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பார்கள். இவற்றைப் பயிற்றுவிக்கும் குருவுக்கு மரியாதை செய்வார்கள். ஆகவே, 'ஆயுத பூஜை' தினம் என்றும் பெயர் வந்தது. 

அன்று,புத்தகங்களை அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ விக்கிரகத்தையோ வைத்துப் பூஜிப்பது வழக்கம்.  அன்று, வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும் சந்தனம் குங்குமம் இடுவது வழக்கம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜை அவசியம் செய்ய வேண்டும். வண்டி வாகனங்களைத் துடைத்து, பொட்டு வைத்து, பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் கூட ஆயுத பூஜை நடத்துவார்கள். 

பூஜைக்குத் தேவையானவற்றில் கருப்பு நூல் கலக்காத ரவிக்கைத் துணி முக்கியமானது. வெள்ளையில் பூக்கள் போட்ட ரவிக்கைத் துண்டு விசேஷம் என்று கருதப்படுகிறது. வீட்டில் பெண்குழந்தைகள் இருந்தால், குழந்தைக்கு புது உடை வாங்கி, அதை சரஸ்வதிக்கு சாற்றி விட்டுக் கொடுக்கலாம். வீட்டில் பிறந்த பெண்கள்(நாத்தனார்கள்) உள்ளூரில் இருந்தால், சாப்பிட அழைத்துத் தாம்பூலம் தருவது விசேஷம். புடவை வைத்துக் கொடுத்தல் மிகச் சிறந்ததது.
அன்று நிவேதனங்களோடு, வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என விருந்தாக சமைப்பது வழக்கம். சில வீடுகளில் சொஜ்ஜி அப்பம் அல்லது சுகியன் செய்து நிவேதனத்திற்கு வைப்பார்கள்.

விஜய தசமி:
அம்பிகை மகிஷனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாகக் கொண்டாடப்படும் விஜய தசமியன்று காலையில், சரஸ்வதிக்குப் புனர் பூஜை செய்ய வேண்டும். தியானம், ஆவாஹனம் முதலியவை ஏற்கெனவே செய்திருப்பதால், சுருக்கமாக, மற்ற உபசாரங்களைச் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி, வீட்டு வழக்கப்படி, சுத்த அன்னம், சுக்கு நீர் முதலியவற்றையோ அல்லது மஹாநைவேத்தியத்தையோ நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி, பிரதட்சிண நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும். பிறகு ஆரத்தி எடுத்து விட்டு, பூஜையின் போது ஏற்பட்டிருக்கும் குற்றம் குறைகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டும்.

பூஜை முடிந்த உடனோ, அல்லது மாலையிலோ, சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டு கொலுவை எடுத்து வைத்து விடலாம். சில ஊர்களில், ஸ்வாமி அம்பு போடும் வழக்கம் உண்டு. அம்பு போடப் புறப்பட்டுவிட்டு, திரும்பும் முன் பொம்மைகளைப் படுக்க வைப்பார்கள். அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்துச் செய்து கொள்ளவும்.

முறையாக கலசஸ்தாபனம் செய்து பூஜிப்பவர்கள், விஜயதசமியன்று, சுமங்கலி பூஜை, வடுக பூஜை முதலானவற்றை நடத்திவிட்டு, விருந்தினர்களுக்கு உணவளித்த பின்பே சாப்பிடுவார்கள்.

நம் பண்டிகைகள், கலாசாரம் இவற்றில் இருக்கும் அழகியலைப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாகக் கொண்டாடுவதோடு, அவற்றில் மறைந்திருக்கும் தத்துவத்தை, நம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லி, அவற்றை விடாமல் பேணுவதே இந்நாளில் நம் முக்கியக் கடமையாகும். கலைகள் வளர்வதற்கும், உறவுகள் சிறப்பதற்கும் உதவும் இந்தப் பண்டிகை, பெண்மையைப் போற்றும் ஒரு அற்புத விழாவாகும். இந்த நல்ல நாட்களில், அம்பிகையைக் கொண்டாடி, வணங்கி,

வெற்றி பெறுவோம்!!!

2 கருத்துகள்:

  1. அன்னையவளின் கருணையைப் பெற வழிகூரிய
    பதிவிற்கும் பகிர்விற்கும் நன்றிகள் சகோதரி...
    அன்னையைப் பற்றிய அழகியக் கவிதையோடு
    தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. இதோ கவிதை.

    யாவுமாகி அதனியக்க முமாகி
    எங்கும் நிறைந்தவளே அம்மா!
    எத்தனை கரங்கள் உனக்கு
    இத்தனை பேரையும் அணைக்க!

    நீலநயனங்கள் ஆழக் கடல்களோ
    நீலாம்பரி மார்பகங்கள் மேருவோ
    பாதச் சுவடுகள் அது
    மாதவ முனிகள் மாளிகையோ

    கொஞ்சும் சலங்கைகள் அதை
    மிஞ்சும் நினது சிரிப்போ!
    அழகின் அழகே நல்
    அமுதக் குடமே அருமருந்தே!

    உயிரின் உயிரே ஏழேழு
    உலகத்தின் உண்மைப் பொருளே
    கருணைக் கடலே கவின்மிகு
    கற்பக நறு மலரே!

    உந்தன் பிள்ளை நானுனை
    உரிமையோடு கேட்கிறேன் மறுக்காதே
    ஒரே.... ஒரு.... கணம்
    ஒரே.... ஒரு.... முறை
    உந்தன் மடியிலெனை இருத்துவாயே!

    மலரின் மெல்லிய இதழ்களால்
    அமிழ்தினும் இனிய தொரு
    அழகு முத்த மொன்றை
    அம்மா எனக்கு தருவாயோ!

    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப்பட்ட என்னை கறைபோக்கி
    கரை ஏற்றுவாய் தாயே!

    அனைவருக்கும் வாழ அருளாவாய் அன்னையே எனவேண்டி
    அன்பான வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..