நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ASWATHTHA PRATHATCHINAM, AMASOMA VIRATHAM, (15/10/2012), அஸ்வத்தப்(அரசமர) பிரதட்சணம், அமாசோம விரதம்.


ஜயது ஜயது தேவோ தேவகீ நந்தநோsயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணிவம்ஸ‍‍---- -_ப்ரதீப:  |
ஜயது ஜயது மேகஸ்யாமள: கோமளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வீ _பாரநாஸோ முகுந்த:  (ஸ்ரீ முகுந்தமாலை, ஸ்ரீ குலசேகராழ்வார்).

"தேவகி மைந்தனுக்கு வெற்றி உண்டாகட்டும். ஆயர் குலத்தின் அணிவிளக்கான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, ஜெயம் உண்டாகட்டும். மேகம் போல் கருநிறம் கொண்டவனும், மென்மையான அங்கங்களை உடையவனுமாகிய கண்ணனுக்கு ஜெயம் உண்டாகட்டும். பூபாரம் நீக்கிய முகுந்தனுக்கு வெற்றி உண்டாகட்டும்."

நம் முன்னோர், மழை தரும் மரங்களையும்  தெய்வாம்சமாக நினைத்துப் பூஜித்து வழிபட்டனர் .  மரங்களின் அரசனாக விளங்குவது அரசமரம்.

'மரங்களில் நான் அரசமரம்' என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவே, கீதையில் அருளுகிறார் என்றால் (அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³:|), அரச மரத்தின் பெருமையினை விவரிக்கத் தேவையில்லை. மரங்களின் அரசன் என்பதாலேயே 'அரசமரம்' என்று அழைக்கப்படும் இம்மரம்,  கரியமில வாயுவை உள்வாங்கி, மற்ற மரங்களை விடவும் மிக அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை படைத்தது.

திங்கட்கிழமையும்(சோமவாரம்), அமாவாசையும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும். இதுவே 'அமாசோம விரதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்து, பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.

இவ்வருடம், மஹாளய அமாவாசை தினமான, 15/10/2012 அன்று அமாசோம விரதம் வருகிறது. அமாவாசை தினங்களில் மஹாளய அமாவாசை தினம் மிகச்சிறப்பு வாய்ந்தது. பித்ரு காரியங்களுக்கு உகந்த தினமான, அன்றைய தினத்தில் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அரசமரத்தின் மருத்துவ குணங்கள்:
அதிகாலை வேளையில் அரசமரத்தைச் சுற்றும் போது, அதிலிருந்து வரும் காற்று, நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி செயல்பட வைக்கும் வலிமையுடையதாக இருக்கிறது. மேலும்,பித்த சம்பந்தமான நோய்களையும், சரும நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. அரசமரப்பட்டை, வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடிசெய்து கஷாயமாகவோ, அல்லது பால் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினாலோ, பெண்களுக்கு, மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள், கருப்பைக் கோளாறுகள் முதலியவை நீங்கும்.

சிறப்பான இருதய வடிவம் கொண்ட இம்மரத்தின் இலைகளை நல்லெண்ணெய் தடவி, நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கொளியில் காட்டினால் பழுப்பு நிறமடையும். அதை உடம்பில் ஏற்படும் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் விரைவில் குணம் தெரியும். அதிகாலையில் இம்மரத்தைச் சுற்ற,  இரத்த ஓட்டம் சீர்ப்படும். மனஅழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.
ஆன்மீக ரீதியாக, அரசமரத்தின் முக்கியத்துவம்:
அரசமரத்திற்கு அஸ்வத்த மரம் என்றும் பெயர் உண்டு. ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து எனும் சொல், அரசங்குச்சிகளையே குறிக்கும். அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் போது வெளிவரும் புகை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான ப்ரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது. காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியும் அந்தப் புகைக்கு உண்டு. ஆனால் சமித்துகளுக்காக அன்றி வேறெந்தக் காரணத்துக்காகவும் அரசமரத்தை வெட்டலாகாது. அவ்வாறு செய்தால் அது பெரும் பாவமாகும்.

இம்மரம் ஸ்ரீ விஷ்ணுவின் வலக்கண்ணில் இருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது. அரசமரத்தின், வேரில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புத்தர் ஞானஒளி அடைந்த போதிமரம் எனப்படுவது அரசமரமே என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரைகளிலும் அரசமரத்தை நட்டு வளர்ப்பார்கள்.  ஏனெனில், அம்மரத்தின் நிழல் பட்ட நீர் நிலைகளில் நீராடுவது, பிரயாகையில்(திரிவேணி சங்கமத்தில்) நீராடுவதற்குச் சமம்.

திருவாவடுதுறை, திருநல்லம் போன்ற சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி ஆகிய வைணவத் திருத்தலங்களிலும் தல விருட்சமாக அரசமரமே விளங்குகிறது. இவ்வாறு கோவிலுக்குள் இருக்கும் அரசமரம் பன்மடங்கு அருட்சக்தி உடையதாக விளங்குகிறது. நாகதோஷ நிவர்த்திக்காக, அரசமரத்தின் அடியில் நாகர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வைப்பது வழக்கம். இம்மரத்தின் அடியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, பெண்கள், மஞ்சள் குங்குமத்தை இம்மரத்தின் அடியில் தூவி வழிபடுவதைக் காணலாம்.

அரசமரத்தின் கன்றை ஒரு நல்ல நாளில் ஊன்றி வைத்து, நீர் வார்த்து, கவனமுடன் வளர்க்க வேண்டும். பின், ஏழு வருடம் கழித்து, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போலவே, உபநயனம் செய்வித்து, ஒரு வேப்பங்கன்றை அதனருகில் நட்டு, இரண்டிற்கும் திருமணம் செய்வித்து வளர்த்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும், முன்னோர்கள் முக்தி நிலை எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்கும் இடங்களில் மிகுந்த சாந்நித்யம் நிலவுவது கண்கூடு. மேலும், இம்மரம் இருக்கும் இடத்திலிருந்து முப்பது மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் கோவிலில் மிகுந்த சாந்நித்யமும் அதன் விளைவாக, மன அமைதியும் கிட்டும் என்று கூறப்படுகிறது.
அஸ்வத்த நாராயண விரதமும் பூஜையும்:
திங்கட்கிழமையும் அமாவாசையும் சேரும் நாட்களில், விரதமிருக்கும் போது, அதற்கு அங்கமாக, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். இதை சுமங்கலிகள், புத்ர சந்தானமும், தீர்க்க ஸௌமாங்கல்யமும் ஏற்பட இதைச் செய்வது அவசியம். இந்தப் பூஜையை அரசமரத்தின் அடியில் செய்யலாம். அல்லது,  பூஜை அறையில் அரசமரக் கொத்தை வைத்துப் பூஜிக்க வேண்டும். 

இந்த விரதம் சம்பந்தமாக வழங்கப்படும் புராணக்கதை:
மகாபாரதத்தில், பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு, இவ்விரத மகிமையைக் கீழ்வருமாறு கூறினார்.

காஞ்சி நகரத்தில், தேவஸ்வாமி என்பவர், தனவதி என்னும் மனைவியுடனும், ஏழு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஏழு ஆண் மக்களுக்கும் திருமணமாகியது. ஒரு நாள், வேத வேதாந்தங்களில் கரை கண்ட ஒரு அந்தணர், தேவஸ்வாமியின் வீட்டுக்கு பிக்ஷையின் பொருட்டு வருகை புரிந்தார். 

அவரைத் தகுந்த முறையில் உபசரித்த தேவஸ்வாமி, தன் மனைவி, மருமகள்கள், மற்றும் மகளை, அவரிடம் ஆசி பெறச் செய்தார். மற்றவர்கள் நமஸ்கரிக்கும் போதெல்லாம், 'தீர்க்க சுமங்கலி பவ' எனும் நல்லாசி கூறிய அவர், குணவதி என்னும் பெயர் கொண்ட, தேவஸ்வாமியின் மகள் நமஸ்கரிக்கும் போது மட்டும், 'திருமணம் நடக்கும் போது, சப்தபதி நேரத்தில், இப்பெண், கணவனை இழப்பாள்' என்றுரைக்க, அதிர்ந்த தேவஸ்வாமி தம்பதியினர், இந்தப் பெருந்துயரம் ஏற்படாதிருக்க வழி கேட்டுப் பிரார்த்திக்க, சிம்ஹள தேசத்திலிருந்து, சோமவதி என்னும் பெண்ணை, திருமணத்திற்கு அழைத்து வந்தால், அப்பெண்ணின் உதவியால் துயர் தீரும் என நல்வழி கூறினார்.

இதைக் கேட்ட, தேவஸ்வாமியின் கடைசிப் புதல்வனான, சிவஸ்வாமி என்பவன், பெற்றோரிடம் அனுமதி பெற்று,  தன் தங்கையாகிய குணவதியையும் அழைத்துக் கொண்டு, சிம்ஹள தேசம் நோக்கிப் பயணமானான். இரவில், ஒரு பெரிய ஆலமரத்தினடியில் இருவரும் தங்கினார்கள். அம்மரத்தில் அண்ட பேரண்ட பக்ஷி என்னும் மிகப்பெரிய பக்ஷியின் கூடு இருந்தது.  இரவு கூட்டை அடைந்த தாய்ப்பறவை, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டத் தொடங்கியது.  ஆனால், குஞ்சுகளோ உணவை ஏற்காமல்,  'அம்மா, இம்மரத்தடியில் இருவர் பசித்திருக்க நாங்கள் மட்டும் எப்படி உணவை ஏற்க முடியும்?'  என்று வினவின.  தாய்ப்பறவை, 'அவர்களுக்கும் உணவளித்து, அவர்கள் வந்த காரியத்தையும் நிறைவேற்றி வைக்கிறேன்!' என்று உறுதியளித்த பின்பே,  அவை உணவுண்டன.  

பின், தாய்ப்பறவை, சிவஸ்வாமிக்கும் குணவதிக்கும் உணவுதந்து உபசரித்து,பின் அவர்கள் வந்த காரியத்தை விசாரித்து, இருவரையும் சிம்ஹளதேசம் கொண்டுபோய்ச் சேர்த்தது. அங்கு சோமவதியைக் கண்டு விவரம் கூறியதும் அவளும் உடனே கிளம்பி, அவ்விருவருடன் காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

தேவசர்மா என்பவரின் மகன் ருத்ர சர்மா என்பவருக்கும், குணவதிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.  திருமண தினத்தன்று, சப்தபதி நேரத்தில் ருத்ரசர்மா இறந்து விழ, அனைவரும் பதறித் துடித்தனர். இதைக் கண்ட சோமவதி, 'கவலை வேண்டாம். நான் இது நாள் வரையில் கடைபிடித்து வந்த 'அமாசோம விரதத்'தின் பலனைக் குணவதிக்குத் தருகிறேன்' என்று கூறித் தாரை வார்த்துக் கொடுத்தாள். உடனே, ருத்ரசர்மா, உறக்கம் நீங்கி எழுந்தவன் போல் எழுந்தான். சோமவதியும், இவ்விரதத்தைச் செய்யும் முறையை குணவதிக்கு உபதேசித்து,  விடைபெற்றுத் தன் ஊர் சேர்ந்தாள்.

இக்கதையால், அக்காலத்தில், நீதி, தர்மம் முதலியவை எவ்வாறு தழைத்தோங்கியிருந்தது என்பதை அறியலாம். தனக்கு பிக்ஷையிட்ட இல்லத்தில் நேரவிருக்கும் துன்பத்தை அறிந்து, அதைத் துடைக்க வழி செய்த அந்தணர், நன்றி மறவாமைக்கு நல்லதொரு உதாரணமாகிறார். தன் மரத்தடியில் வந்து தங்கிய அதிதிகளை உணவளித்து உபசரித்ததோடு, அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்ற பறவையின் செயல், விருந்தினரை உபசரிக்க வேண்டிய முறையை, அக்காலத்தில் பறவைகளும் கடைப்பிடித்து வந்ததை எடுத்துக் காட்டுகிறது. மேலும், அதன் குஞ்சுகளும், விருந்தினர் உண்ணும் முன் தாங்கள் உண்ணுதல் கூடாது என்று மறுத்தது எத்தனை சிறப்பு?. முன்பின் அறியாதவராயினும், அவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம், தன்னால் நீங்குமென்றால், தன்னாலான உபகாரத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு, சோமவதி திருமணத்திற்கு வருகை புரிந்தாள். மேலும், தன் விரதப்பலனை தாரை வார்த்துக் கொடுக்கிறாள். பரோபகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை. புராணக்கதைகளை, கட்டுக்கதைகள் என்று எண்ணாமல், அதில் இருக்கும் நீதிகளை, வாழ்வில் கடைப்பிடிப்பது நல்லது.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறை: 
இதை விரதமாக எடுத்தால், ஒவ்வொரு வருடமும், அமாவாசையும் திங்கட்கிழமையும் வரும் நாளில், அரசமரத்தைப் பூஜை செய்து, பிரதட்சிணம் செய்ய வேண்டும். விரதம் எடுக்கும் வருடத்தில், நூற்றெட்டு அதிரசங்களைச் செய்து, நூற்றி எட்டு கிழங்கு மஞ்சள்கள் வாங்க வேண்டும். அரசமரத்தின் அடியில் முறைப்படி, வைதீகரை வைத்து, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும். பூஜையும் பிரதட்சணமும் நிறைவடையும் வரை உபவாசம் இருக்க வேண்டும்.  அதன் பின், ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுதல் சிறப்பு.

பூஜை  நிறைவடைந்த பிறகு,
மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே |
அக்ரத: சி'வரூபாய விருக்ஷராஜாய தே நம: ||
என்ற மந்திரத்தைச் சொல்லி, மரத்துக்கு நூற்றி எட்டு பிரதட்சணங்கள் செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளும் , ஒரு அதிரசமும் போட வேண்டும். மரத்தின் முன் ஒரு தட்டையோ, பாத்திரத்தையோ வைத்து, இவ்வாறு போடலாம். 

விரதம் எடுப்பதற்கு, அதிரசம் செய்ய சௌகர்யப்படாவிட்டால், மஞ்சளை மட்டும் போடலாம். அல்லது முதல் சுற்றுக்கு மஞ்சள், இரண்டாவது சுற்றுக்கு குங்குமச்சிமிழ், மூன்றாவதற்கு, வெற்றிலை பாக்கு, நான்காவதற்கு பூ இவைகளை வரிசையாகப் போட்ட பிறகு, மீதிச்சுற்றுக்களுக்க்கு சௌகரியம்போல் எதை வேண்டுமானாலும் போடலாம். இனிப்புப் பண்டங்கள் தான் வேண்டுமென்பதில்லை. 108 கண்ணாடி, சீப்பு முதலியவற்றைக் கூடப் போடலாம். 

இயலாதவர்கள், 108 பூக்கள் அல்லது வெல்லக்கட்டிகளைச் சமர்ப்பிக்கலாம்.

பிரதட்சணம் செய்யும் போது மரத்தைத் தொடக்கூடாது. சனிக்கிழமையன்று மட்டும் தான் மரத்தைத் தொடலாமென்றும் ஒரு கூற்று உள்ளது.  மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது.

இவ்வாறு பிரதட்சணம் செய்த பிறகு, புனர் பூஜை செய்து,மரத்திற்கு சமர்ப்பித்தவற்றில் சிலவற்றை விரதத்தை நடத்தி வைத்தவருக்கு தாம்பூலம் தட்சணையுடன் அளித்து விட்டு, மீதியுள்ளவற்றை விநியோகிக்க வேண்டும். அதன் பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

விரதம் எடுத்தவர்கள், இந்த விரதத்தை, சௌகர்யப்பட்ட வருடத்தில் அமாவாசை, திங்கட்கிழமையன்று பூரணமாக வரும் நாளில் முடித்து விடலாம். அவ்வாறு முடிப்பதற்கு, ஐந்து கலசங்கள், அரசமர உருவம் பொறித்த வெள்ளித் தகடு ஒன்று, பிரதிமைத் தகடுகள்(வெள்ளியில்)ஐந்து, கலசங்களுக்கு சுற்ற வேஷ்டி, துண்டுகள்(வஸ்திரம் ஆகியவை தேவை. மற்ற விரதங்களுக்குச் செய்வது போல், பஞ்சதானம் (வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் முதலியன) செய்ய வேண்டும். அதிரசம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

விரதத்தை நிறைவு செய்யும் வருடத்தில், எப்போதும் போல் அரசமரத்துக்குப் பூஜை செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் போட்டு பிரதட்சணம் செய்து விட்டு, அவற்றை எடுத்துக் கொண்டு வீடு வந்து விட வேண்டும்.  அதன் பின் ஐந்து வைதீகர்களைக் கொண்டு, கலசங்களை ஸ்தாபனம் செய்து பூஜித்த பின், பஞ்ச தானம்  செய்து, வைதீகர்களுக்கு போஜனம் அளித்து, அவர்கள் சாப்பிடும்போது இலையில் அதிரசத்தையும் போட வேண்டும். பிறகே, மீதியுள்ளவற்றை விநியோகிக்கலாம்.
இதை விரதமாக எடுக்காவிட்டால்:
இம்மரத்தைப் பிரதட்சணம் செய்தால் அனைத்துப் பாவங்களும், சாபங்களும் உடனே நீங்கும். எனவே, இதை விரதமாக எடுக்க சௌகர்யப்படாவிட்டால் கூட பிரதட்சணம் செய்வது சிறப்பு. அவ்வாறு செய்ய விருப்பப்பட்டால், நூற்றி எட்டு இனிப்புப் பண்டங்களை, அல்லது பூக்கள் , வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொண்டு, அதிகாலை நேரத்தில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒவ்வொரு இனிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுமானவரை ஏழு மணிக்குள் வலம் வருவது சிறப்பு. அந்நேரத்தில் ஓசோன் வாயுவை அதிக அளவில் அரசமரம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது. இயலாதவர்கள், பத்து மணிக்குள்ளாவது பிரதட்சணத்தை முடித்துவிடவேண்டும்.

பிறகு,  மரத்துக்கு சமர்ப்பித்தவற்றை, சிறிதளவு வீட்டுக்கு எடுத்துவைத்துக் கொண்டு, மீதியை விநியோகிக்க வேண்டும்.  பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு வந்துவிடலாம்.

மேலே  பிரதட்சணம் செய்வதற்கென்று குறிப்பிட்ட‌ மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்தவாறே சுற்றுவது சிறப்பு.

நூற்றி எட்டு முறை சுற்ற இயலாதவர்கள், இயன்ற அளவு சுற்றலாம். மூன்று முறை  சுற்றினால்,  விருப்பங்கள் நிறைவேறுதலும், ஐந்து முறை சுற்றினால், எக்காரியத்திலும் வெற்றி அடைதலும், ஒன்பது முறை சுற்றினால்,  புத்திர பாக்கியம் அடைதலும், பதினொரு முறை வலம் வந்தால்  எல்லா போக பாக்கியங்கள் கிடைத்தலும்  நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம்  செய்த பலன் அடைதலும் கிடைக்கும்  என்று புராணங்கள் கூறுகின்றன.

அமாசோம விரதத்தன்று, அரசமரத்தைப் பூஜித்து, அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெற்று, 

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. பிரமாதமான பதிவு. அனைவரும் அறிய தந்ததற்கு என்னுடைய நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. //sriganeshh said...
    பிரமாதமான பதிவு. அனைவரும் அறிய தந்ததற்கு என்னுடைய நன்றிகள்.//

    இந்தப் பதிவு போடுவதற்கு, தூண்டுதலாகவும் மூல காரணமாகவும் இருந்தது இந்த பிரதட்சணம் குறித்து தாங்கள் கூறிய செய்திகளே. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தாங்கள் என் எழுத்துக்களுக்கு அளித்து வரும் ஊக்கத்திற்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே!!!.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..