நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 1 அக்டோபர், 2012

MAHALAYA PATCHAM ...(1/10/2012-15/10/2012)...மஹாளய பட்சம்

இன்று முதல் 'மஹாளய பட்சம்' துவங்குகிறது. பட்சம் என்றால் அரை மாதம் அதாவது 15 நாள். சூரியன் கன்யா ராசியில் இருக்கும் போது, அதாவது புரட்டாசி மாதத்தில், தேய்பிறைப் பொழுதை, 'மஹாளய பட்சம்' என்று அழைக்கிறோம். புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பிக்கப்படுகிறது. இது பித்ரு தேவதைகளின் ஆராதனைக்கு மிக உகந்த காலமாகும்.

ஒவ்வொரு மனிதனும், தேவகடன், பித்ருகடன், ரிஷிகடன் ஆகியவற்றைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். முறையான இறைவழிபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றைச் செய்வதன் மூலம், தேவகடனிலிருந்தும், தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றைத் தக்க காலங்களில் செய்வதன் மூலம் பித்ருகடனிலிருந்தும், முனிவர்கள் அருளிய உயர்ந்த படைப்புகளை பாராயணம் செய்து உபாசிப்பதன் மூலமும், குருமார்களையும் ரிஷிகளையும் ஆராதித்தல், வீடு தேடி வரும் சன்யாசிகளுக்கு உணவளித்தல், அவர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்தல் போன்றவற்றின்  மூலமும், ரிஷிகடனிலிருந்தும் நிவர்த்தி அடையலாம்.

பித்ரு லோகத்தில் வசிப்பவர்கள், மாதப்பிறப்பு, அமாவாசை, மஹாளய பட்சம், அவரவர் மறைந்த திதி ஆகிய நாட்களில் மட்டுமே பூலோகப் பிரவேசம் செய்ய இயலும். அதில், மஹாளய பட்சம், 'பித்ருக்களின் பிரம்மோற்சவம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. ஏனேனின், இந்த 15 நாட்கள் அவர்கள் தொடர்ச்சியாக பூலோக வாசம் செய்ய இயலும். அவர்கள், இவ்வாறு வாசம் செய்ய பூலோகம் வரும் போது, அவர்களை நினைத்துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு. 

இந்த பதினைந்து நாட்களும், பித்ரு லோகத்தில் வாசம் செய்யும் முன்னோர்கள், பூமிக்கு வருகை தருகிறார்கள்.  வாழ்வு முடிந்த பின், 9 நாட்கள், பிரேத சரீரத்துடன் இருக்கும் ஆத்மா, 10ம் நாள் செய்யப்படும் விசேஷ கர்மாக்களைத் தொடர்ந்து, 12ம் நாள் பிரேத சரீரம் நீங்கப்பெற்று, சூட்சும சரீரத்துடன் பித்ரு லோகத்தை அடைகிறது. அங்கிருந்து யமப்பட்டணமாகிய 'ஸம்யமனீபுரி'யை ஒரு வருட முடிவில் அடைகிறது. அங்கு, அந்த ஆத்மாவின் கர்மாக்களுக்கு ஏற்ப சொர்க்கவாசமோ, நரக வாசமோ கிடைக்கிறது. அதன் பின், மீண்டும் அடுத்த பிறவி எடுக்கவோ, அல்லது தகுந்த காலம் வரும் வரை பித்ரு லோகத்தில் வாசம் செய்யவோ நேரும்.

நம் முன்னோர்களில், யார் முக்தி அடைந்திருக்கிறார், யார் மறு பிறவி எடுத்திருக்கிறார், யார் பித்ருலோகத்தில் இன்னமும் வாசம் செய்கிறார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். ஆகவே, கண்டிப்பாக, பித்ருகர்மாக்களை, முக்கியமாக, மஹாளய  சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

நமது முன்னோர்கள் யாராவது முக்தி அடைந்திருந்தால், நமது சிரார்த்தத்தின் பலனை அந்த இறைவனே ஏற்று அருள் புரிகிறார். பொதுவாக, நாம் செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றின் புண்ணிய பலன், சேமித்து வைக்கப்பட்டு, தக்க நேரத்தில் நம்மை வந்தடையும். ஆனால், மஹாளய பட்சத்தில், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள், ஒன்று சேர்ந்து, நம்மை ஆசீர்வதிக்க வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள், உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாக நமக்குக் கிடைத்து, நம் தீராத, நாள்பட்ட ப்ரச்னைகள் உடனடியாகத் தீர்வுக்கு வருவதை நம் கண்முன் காணலாம்.
இந்த மஹாளய பட்சத்தில், ஒருவர், மறைந்த, தம் தாய் தந்தையர், தாத்தா,பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமில்லாமல், குழந்தை இன்றி இறந்து போன தம் தாயாதிகளுக்கும் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம். அதன் பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.

மிகுந்த தெய்வ பக்தி உடையவர்கள், வேதம், தமிழ் மறைகள் ஓதியவர்கள், நீதி நேர்மையுடன் வாழ்ந்தவர்கள், பித்ரு சரீரம் அடையும் போது, மிகுந்த நன்மை செய்பவர்களாகிறார்கள். அவர்களுடைய சரீரம் ஒளி பொருந்தியது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் சரியாகச் செய்யும் போது, குடும்பத்தில் இருக்கும் தீராத நோய், கடன், பகை, எதிர்பாராத விபத்துக்கள், குழந்தையின்மை போன்ற பல ப்ரச்னைகள் நீங்குகின்றன. மாறாக, இது தவிர்க்கப்பட்டால், தலைமுறைகள் தாண்டியும் ப்ரச்னைகள் தொடரும். இறைவழிபாட்டின் மூலம் கிடைக்கும் வரங்களை, பித்ரு சாபம் தடுக்கும் வல்லமையுடையது.

இவ்விடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். நம்மை பெற்றவர்களும், வளர்த்து ஆளாக்கியவர்களுமான, நமது முன்னோர்கள் ஒரு போதும் நம்மைச் சபிக்க மாட்டார்கள். இப்பூவுலகில், ஒருவர் செய்ய வேண்டிய சிரார்த்தம் தடைபட்டால், அதனால், பித்ருக்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போகும். அதனால் அவர்கள் அடையும் இன்னலே சாபமாக மாறி நம்மை அடைகிறது.

"சிரத்தையுடன் செய்ய வேண்டும்" என்பதாலேயே, சிரார்த்தம் என்ற பெயர் வந்தது. சிரார்த்தம், முன்னோர்கள் இறைவனடி சேர்ந்த தினத்தன்றும், மஹாளய பட்சத்தின் போதும் செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு மாத அமாவாசை, மாதப்பிறப்பு( இயலாதவர்கள், விஷூப்புண்ய காலம் என்று சொல்லப்படும், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப்பிறப்புகளிலாவது) தர்ப்பணம் செய்யவேண்டும். பித்ருக்களுக்கு, மானிட சரீரமில்லாததால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீரை, இந்த  சிரார்த்தம் தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பெறுகிறார்கள்.

இங்கு நாம் செய்யும் கர்மாக்களில் அளிக்கப்படும் பொருட்கள், பித்ருக்களின் தேவியாகிய 'சுவதா தேவி'யால், அவர்களிடம் அளிக்கப்படுகின்றன.

சுவதா தேவி அவதரித்த புராணம்:
பிரம்மதேவர், ஆதியில், ஏழு பிதுர்க்களை உருவாக்கினார். இவர்களில் நால்வர், சரீரமுள்ளவர்கள். மூவர் தேஜோ ரூபமாக இருப்பவர்கள். அவர்களுக்கு, உணவாக, ஸ்ரார்த்த காலத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணத்தையும், ஸ்நான காலத்தில் செய்யும் தர்ப்பணத்தையும்(அர்க்யம்), தேவ பூஜை செய்யும் முன்பாக செய்யும் ஸ்ரார்த்தத்தையும் (நாந்தி முதலியவை) நியமித்தார்.

ஆனால், பூலோகத்தில், இதைச் செய்யும் போது, பித்ருக்களால் அவற்றைப் பெற முடியவில்லை. அவர்கள், பசி தாகத்தால், துன்புற்று, பிரம்மாவிடம் முறையிட்டனர். பிரம்மதேவர், பிரகிருதி தேவியின் அம்சமாக, நூறு சந்திரப் பிரகாசத்துடன், செண்பகப்பூவின் நிறத்துடன், புன்சிரிப்புடன் கூடியவளாகவும், அனைவருக்கும், வேண்டியதை அளிக்கும் சக்தி உள்ளவளாகவும், நூறு இதழ்கள் கொண்ட தாமரைப்பூவில் திருவடிகளை வைத்தவளாகவும் உள்ள 'சுவதா' என்ற பெண்ணைத் தோற்றுவித்து, பித்ரு தேவதைக்குப் பத்னி ஆகுமாறு (சில புராணங்களில், இந்த தேவி, தக்ஷப் பிரஜாபதியின் மகள் எனவும் வருகிறது) செய்தார்.

அதன் பின், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யும் போது, சுவதாவோடு கூடிய மந்திரத்தை உச்சரித்துச் செய்யலாயினர். அதன் பலனாக, ஸ்ரார்த்தக் காலத்தில் கொடுக்கப்பட்டவை, எந்த இடையூறும் இல்லாமல் பித்ரு லோகத்தை அடையலாயிற்று.

தேவர்களுக்கு, சுவாஹா மந்திரமும், பிதுர்க்களுக்கு சுவதா மந்திரமும் முக்கியமானவை. இவற்றை உச்சரிக்காமல், செய்யும் கர்மாக்களுக்கும் பலன் இல்லை. அது போல், சுவதா தேவியைப் பூஜிக்காமல் ஸ்ரார்த்தம் செய்தால், அவ்வாறு செய்தவன், ஸ்ரார்த்தம் செய்த பலனை அடையமாட்டான். இந்தப் புராணம் தேவி பாகவதத்திலும் இன்னும் பல புராண நூல்களிலும் வருகிறது.பித்ரு தேவதைகளுக்கு நாம் அளிப்பவை, சுவதா தேவியால் அவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன.

அவர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் கூட, அவர்களிடம், அவர்களுக்குத் தேவையான பொருள்களாக மாற்றி அவற்றைச் சேர்ப்பிக்கிறாள் சுவதா தேவி. உதாரணமாக, அவர்கள் வினைப்பயனால் உணவுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் நமது ஸ்ரார்த்த பலன், தக்க நேரத்தில் அவர்களுக்கு உணவாக யார் மூலமாவது கிடைக்கும்படி செய்வாள். அப்போது, அவர்கள் அடையும் திருப்தியால் ஏற்படும் புண்ணிய பலனை,  நமக்குக் கிடைக்கும்படியும் செய்வாள். ஆகவே, பித்ரு காரியங்களை விடாமல் செய்ய வேண்டும்.

சிலர், 'காசிக்குப் போய்ச் செய்து விட்டேன். ஆகவே இனி, பித்ருகர்மாக்களைத் தொடர வேண்டியதில்லை என்று கூறுகிறார்கள்'. இது, முற்றிலும் தவறான கருத்து. ஒரு நாள் விருந்து சாப்பிட்டால், மறுநாள் பட்டினி கிடப்போமா?. அது போல் பித்ருகர்மாக்களைத் தவறாமல் தொடர வேண்டும். ஏதேனும் ஆசிரமத்தில் அன்னதானத்திற்கு கொடுத்தால் மிக நல்லது. அதற்காக, அவ்வாறு கொடுத்துவிட்டேன் எனக் கூறி பித்ருகாரியத்தை நிறுத்தலாகாது. அன்னதானப்பலன் தனியாக வந்தடையும். பித்ருகாரியத்தை நிறுத்துவது தகாது.


தெய்வ காரியங்களான, சமாராதனை போன்றவற்றிற்கு முடிந்து வைத்து, தள்ளிப்போடலாம். ஆனால் சிரார்த்த காரியங்களை அவ்வாறு செய்ய முடியாது. தகுந்த தினத்தில், தவறாது நிகழ்த்தவேண்டும்.

தகப்பனார் இல்லாதவர்கள், திதியன்று செய்தது போக, மஹாளய பட்சத்திலும் சிரார்த்தம் செய்ய வேண்டும். திதி கொடுக்கத் தவறியவர்களும், இந்த சமயத்தில் செய்யலாம்.  சிரார்த்த திதி செய்ய முடியாமல் போனவர்கள், மஹாளயத்தில் செய்யலாம். ஆனால் மஹாளய பட்சத்தில் செய்ய முடியாமல் போனால் அதற்கு மாற்றே கிடையாது. ஆகவே கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மஹாளய பட்சத்தில், தகப்பனார் இறந்த திதி வரும் சமயத்தில் மஹாளய சிரார்த்தம் செய்ய வேண்டும். திதி, பௌர்ணமியானால், மத்யாஷ்டமியன்று(அஷ்டமி) செய்யலாம். குடும்பத்தில்,  துறவியாகி, இறைவனடி சேர்ந்த உறவின‌ர்களுக்கு,   துவாதசியன்று செய்ய வேண்டும். அதற்கு யதி மாளயம் என்றே பெயர். துர்மரணம் அடைந்தவர்க‌ளுக்கு,  மஹாளய அமாவாசையன்று செய்யலாம். சிரார்த்த திதியன்று திதி கொடுக்கத்  தவறிப்போனவர்களுக்கு, இந்தப் பதினைந்து நாட்களில் அவர்கள் திதி வரும் தினத்திலோ அல்லது அமாவாசையன்றோ செய்யலாம்.

அந்தத் திதி வரும் நேரத்தில் செய்ய முடியாதவர்கள், வேறொரு திதியில் செய்யலாம். ஏனெனில், இந்த பட்சம் முழுவதும் பித்ரு தேவதைகள் பூவுலகிலேயே இருக்கிறார்கள். ஒவ்வொரு திதியன்று செய்வதற்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.
பிரதமை: செல்வ வளர்ச்சி.
துவிதியை:  வம்சம்  விருத்தியடைதல்.
திருதியை:  நல்ல மணவாழ்வு அமைதல்.
சதுர்த்தி: பகை விலகும்.
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும்  
சஷ்டி:  நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
சப்தமி: மேலுலகோர் ஆசி.
அஷ்டமி:  அறிவு வளர்ச்சி.
நவமி: ஏழு பிறவிக்கும் நல்ல மனைவி, குடும்பம்  அமைதல்.
தசமி:  விருப்பங்கள் நிறைவேறும்.
ஏகாதசி:  கல்வி அபிவிருத்தி.
துவாதசி: ஆபரணங்கள்  விருத்தியாதல்.
திரயோதசி: நல்ல குழந்தைகள், நீண்ட ஆயுள்  கிடைக்கும். பசுக்கள் விருத்தியாகும்.
சதுர்த்தசி:  கணவன் ,மனைவியருக்குள் சச்சரவு நீங்கி ஒற்றுமை வளர்தல்.
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் பரிபூரண அருள் கிடைத்தல்.

இராமேசுவரம், காசி, அலகாபாத், நதி தீரங்கள் முதலியவற்றில் செய்யப்படும் மஹாளய சிரார்த்தம் அதிக பலனைக் கொடுக்கும். அவ்வாறு செய்யும் போது, கூட்டுக் குடும்பமாக இல்லாதவர்கள், தனித்தனியாகத் தான் செய்ய வேண்டும்.பொதுவாக, மாஹாளய பட்சத்தில், முழுமையான‌ சிரார்த்தம் செய்வது சிறப்பு. ஆனால் இப்போது, ஹிரண்ய சிரார்த்தம் செய்கிறார்கள். ஹிரண்யம் என்றால் தங்கம். முன் காலத்தில் தட்சணையாக தங்கம் வைத்துக் கொடுத்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

ஹிரண்ய சிரார்த்தம் செய்யும் போது, வைதீகர்களுக்கு, நல்ல உயர்ந்த அரிசி பருப்பு, பெரிய பசுமையான‌ வாழைக்காய் முதலியவற்றைத் தரவேண்டும. தரமும் அளவும் குறைந்த அரிசி முதலியவற்றைத் தரக் கூடாது. நாம் அளிப்பதைப் பொறுத்தே பலனும் என்பதை நினைவு கொள்ள வேண்டும். சிரார்த்த காலத்தில், பெரியோர்களின் நினைவைப் போற்றியெ பங்கு கொள்ள வேண்டும். கேளிக்கைப் பேச்சுக்களைப் பேசக்கூடாது. சிரார்த்தம் முடியும் வரை உபவாசம் இருக்க வேண்டும். வைதீர்களுக்கு உணவளிப்பது சாலச் சிறந்தது. சமாராதனை சமையலாகச் செய்து, பாயசம், வடை, போளி, பட்சணங்கள் இவற்றுடன் உணவளிக்கலாம்.  இரவு திரவ உணவுகளை உட்கொள்வதே சிறந்தது.

சில சமயம், தவிர்க்க முடியாத காரணத்தால், மஹாளய அமாவாசைக்குள், சிரார்த்தம் செய்யத் தவறிவிட்டால், அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி திதிக்குள், ஹிரண்ய சிரார்த்தம் செய்து விட வேண்டும். தவறக் கூடாது.சிரார்த்தம் செய்ய இயலாத நிலையில் இருப்போர், தர்ப்பணமாவது செய்ய வேண்டும். அதுவும் இயலாத நிலையில் இருப்போர், மனமுருகி ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டாலே, போதும். பித்ருக்கள், நிச்சயம் ஆசி கூறுவர்.

இந்தப் பதினைந்து நாட்களும் செய்ய வேண்டியவை:
வீடு சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சண்டை சச்சரவுகள், குறிப்பாக, இறந்தவர்களை நிந்திக்கக் கூடாது.  'என் அப்பா எனக்கு என்ன செய்தார்?' என்றோ, மறைந்த‌ மாமியார் மாமனார்களைத் திட்டியோ பேசக்கூடாது. அவர்கள் செய்தது நியாயமல்ல என்றாலும் அதற்கு நம் கர்மவினைகளும் ஒரு காரணம் அல்லவா?. மாமிசம் உண்போர் அதைத் தவிர்த்தலும், மற்றவர்கள், வெங்காயம், பூண்டு முதலியவற்றைத் தவிர்த்தலும் அவசியம். கூடுமானவரை கேளிக்கைகளைத் தவிர்த்தல் நலம். 

பித்ரு ஆராதனைக்கு உகந்த இந்த தினங்களில் அவர்களை ஆராதித்து, ஆசி பெற்று, 

வெற்றி பெறுவோம்!!!!

13 கருத்துகள்:

  1. பழமையை புதுப்பித்து தரும்
    பதிவுலகின் "ஆன்மிக அலைவரிசையே"

    பதிவிற்கு பாராட்டுக்கள்..
    பழகிய நட்பில் சொல்கிறோம்

    அய்யருக்கு இது குறித்து
    அதுவல்லாது வேறு கருத்துண்டு

    பின்னொரு சமயம் வாய்ப்பிருப்பின் சொல்கிறோம்
    பின் தொடர்கிறோம்.. உமது பணி தொடர

    பலமான வணக்கமும்
    வளமான வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  2. //அய்யர் said...
    பழமையை புதுப்பித்து தரும்
    பதிவுலகின் "ஆன்மிக அலைவரிசையே"//

    //பின்னொரு சமயம் வாய்ப்பிருப்பின் சொல்கிறோம்//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்கள் கருத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் மேலான கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. thank you for sharing this information. got to know about many things. keep writing.

    பதிலளிநீக்கு
  4. நல்லப் பதிவு!!!
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. // Jaya Ramachandran said...
    thank you for sharing this information. got to know about many things. keep writing.//

    Thank you so much Jaya.

    பதிலளிநீக்கு
  6. //ஜி ஆலாசியம் said...
    நல்லப் பதிவு!!!
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.//

    தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. அருமயான விளக்கம் தெய்வ நம்பிக்கை திதி கொடுதால் பலன்களை மிகவும் அற்புதம்

    பதிலளிநீக்கு

  8. வணக்கம்!

    நல்ல கருத்துக்களை நன்றே வழங்கிவரும்
    வல்ல வலைப்பூவே வாழ்துகிறேன்! - வெல்லுதமிழ்
    நுால்மீது காதல்! நுவன்ற மொழிநடக்கும்
    கால்மீது காதல் கனிந்து

    பதிலளிநீக்கு
  9. //Mohan P said...
    அருமயான விளக்கம் தெய்வ நம்பிக்கை திதி கொடுதால் பலன்களை மிகவும் அற்புதம்//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...

    வணக்கம்!

    நல்ல கருத்துக்களை நன்றே வழங்கிவரும்
    வல்ல வலைப்பூவே வாழ்துகிறேன்! - வெல்லுதமிழ்
    நுால்மீது காதல்! நுவன்ற மொழிநடக்கும்
    கால்மீது காதல் கனிந்து//


    வணக்கம். தங்கள் வருகைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்களது கருத்துரை என் எழுத்துக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  11. thank u for your valuable information. nobody knows these matters nowadays. in my house my husband died 1986 december. now my son is in Canada. all are telling that you will do the thithy as hiranyam. now pl. tell me '' na yeppadi indha mahalaya paksham thithya yeppadi nallabadiya panradhu '' . I am much interested in these aspects. pl. advice me. just I can call 2 brahmins and feed them or manthra roopama pannanum ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!. நான் காசி சென்றிருந்த போது, அங்கு ஒரு பெண்மணி சிரார்த்தமே செய்தார். ஆனால் இங்கு அப்படிச் செய்ய விடுவதில்லை. தாங்கள் கீழ்க்கண்டவற்றுள் ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றலாம்.

      1. தங்கள் இல்லத்துக்கென்று புரோகிதர் இருந்தால் அவரைச் செய்யச் சொல்லலாம். உங்களிடம் இருந்து 'கைப்புல்' (தர்ப்பை) வாங்கிச் செய்வார்.

      2.இது சௌகரியப்படாவிட்டால், நீங்கள் கூறியது போல் இருவருக்கு உணவளித்து தக்ஷணை கொடுக்கலாம்.

      3.இம்மாதிரி விஷயங்களில் உதவவென இருக்கும் இடங்களில் பணம் கொடுத்தால் செய்வார்கள். உதாரணமாக, சென்னையில் மத்யகைலாஸ் மாதிரி இடங்கள்.

      தங்கள் ஆர்வமே பித்ருக்களைப் பெரிதும் திருப்திப்படுத்தும். ஆகையால் மனம் சங்கடப்படாமல் ஏதேனும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள். இறையருளும் பித்ருக்களின் ஆசியும் கிட்டும்.

      நீக்கு
    2. Mom, the details furnished are very useful to us and our children.thanks a lot..om namashivaya..

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..