நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI... SONG # 5....திருப்பள்ளியெழுச்சி....பாடல் # 5


பாடல் 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
  போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
  கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
  சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

  எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால் ‍===  பஞ்ச‌ பூதங்களிலும் நீ நின்றுறைகிறாய் என்று பலரும் சொல்வதும் அல்லது.
 
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் ‍==பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று நின்னை அறிவுடையோர்.
 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் ‍== கீதங்கள் பாடி, ஆனந்தக் கூத்தாடி துதிப்பதும் அல்லது.
 
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை ‍=== நின்னை உள்ளவாறு அறிந்தவர்களை நாங்கள் கேட்டும் அறிந்ததில்லை.
 
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா ==குளிர்ச்சி பொருந்திய வயல் வெளிகள் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே!
 
சிந்தனைக்கும் அரியாய் ‍== சிந்தித்து அறிவதற்கும் அரியவனே.
 
எங்கள் முன்வந்து - எங்கள் முன் எழுந்தருளி வந்து.
 
ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டருள் புரியும் ‍==எமது குற்றங்களைப் போக்கி
எங்களை ஆட்கொண்டருளுகின்ற.
 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எமது தலைவனே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்===இறைவன் பஞ்ச பூதங்களில் நிறைந்திருக்கிறான்... ஐந்தெழுத்து மந்திரத்தை அன்புடன் ஓதி வழிபடும் அன்பர் நெஞ்சில் பொருந்தி அருளுவான் எம்பெருமான்.. பஞ்சாக்ஷர ஸ்வரூபன் ஐயன். இறைவனது பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஒவ்வொரு அக்ஷரமும், பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைக் குறிக்கின்றன. 

`ம ய ந வா சி` என்பன முறையே நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றைக் குறிப்பதாக‌ வரும்.

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. (திருமந்திரம்

பஞ்சபூதத்தால் ஆனது நம் உடல்.. நீரிலிருந்து சுவையை உணருகிறோம். சுவையை உணரச் செய்யும் உறுப்பாக இருப்பது நாக்கு.. ஆகாயத்திலிருந்தே ஒலி பிறந்தது.. பிரணவ ஒலி நிறைந்தது ஆகாயம். இதை உணரச் செய்யும் உறுப்பு செவி..நிலத்திலிருந்து மணம் உணரப் பெறுகிறது..நாசி, இதற்கான உறுப்பு..காற்றிலிருந்து, ஸ்பரிசம்(தொடும் உணர்வு) பெறப்படுகின்றது..மெய்(உடல்)மூலம் தொடும் உணர்வு அறியலாம்.. நெருப்பிலிருந்து ஒளி பிறக்கிறது.. விழிகள் வெளிச்சத்தைக் காணுகின்றன..

அண்டத்திலிருப்பது பிண்டத்திலும் இருக்கிறது.

ஆக, பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகத்தில் 'நமசிவாய எனும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தின் மூலம் நிறையும் பரமன், சிவாய நம என்னும் சூக்கும பஞ்சாக்ஷரத்தின்  மூலம்,  நம் நெஞ்சத்துள்ளும்  குருவருளால் துலங்கும் போது, கர்மவினைகள் பொசுங்கி, திரோதான சுத்தி கிடைக்கப் பெறுகிறது.

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து 
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் 
அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல் 
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.(சிவவாக்கியர்).

இந்தப் பாடலை, சித்தாந்த அடிப்படையில், திரோதான சுத்திக்கு வழிகோலுவதாகச் சிந்தித்தால், சைவ நாற்பாதங்களுள் ஒன்றான 'சரியை' விளக்கப்பட்டிருப்பதை அறியலாம்..

முதலில் சரியை என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

சிவனார் உறையும் திருக்கோயில்களில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்தல்,  மாலை தொடுத்த‌ல், அலகிடல் மெழுகல், துதிகளைப் பாடுத‌ல், இறைவன் எழுந்தருளும் வாகனங்களைச் சுமத்தல், முதலிய இறைபணிகளைச் செய்தல், சரியை எனப்படும். இது தாச மார்க்கம் என்றும் வழங்கப்படுகின்றது.

திரோதான சுத்தி, இறையருளாலேயே நிகழும் என்பதை அறிவோம்.. பரமன் அருளைப் பெற, சரியை முதல் படி..

சரியை நெறியில் நிற்க சமய தீட்சை அவசியம்.. அந்த சமய தீட்சையின்  மூலம், சைவசமயத்தில் நிற்கும் உரிமை கிடைக்கும்..ஸ்தூல பஞ்சாட்சரத்தை, அறிந்து, செபிக்கும் உரிமையும் கிடைக்கும்..இதன் மூலம் சிவனின் முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும்.

இறைவனுக்குச் செய்யும் தொண்டுகள், சிவ புண்ணியம் சேர்க்கும்..

சரி, சரியை நெறியில் நின்று, இறைவனுக்குத் தொண்டு செய்வதால் எப்படி பரமனருள் கிட்டும்?

பரமனருள் கிட்டும் முன் இருவினை ஒப்பு நிகழுதல் வேண்டும்.

இரு வினை ஒப்பு : நாம் செய்த நல்வினையின் காரணமாக, இன்பம் வரும் போது மகிழாமலும், தீவினையின் பயனாக, துன்பம் வருங்கால் துவளாமலும் இரண்டையும் ஒன்றாகவே நினைக்கும் பற்றற்ற மனநிலையை அடைதலே இருவினை ஒப்பு..

இது சரியை முதலிய சிவபுண்ணியத்தாலேயே உண்டாகும்.. இவ்வினையொப்பு முற்றும் வேளையில், இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றி தன்னை விளக்கியருள்வான்..அதுவே சத்தி நிபாதம். பரமனருள் .

இங்கு கூறப்படுதல், இருவினை ஒப்பு முற்றாத நிலை.. இறைவனை அறியத் துடிக்கும் ஆன்மாவின் பிறவிக் கதறல் இது.. 'அஞ்செழுத்தை உச்சரித்து, சரியை நெறியில் நின்று, இறைவனைத் தொழுது, கீதங்கள் பாடி ஆடி வணங்குதல், என‌ என்னென்னவோ செய்து விட்டேன்.. இன்னமும் திருவுளம் இரங்கவில்லையோ ' என்று அன்பர்கள் பதறுகையில், அடுத்த படிக்கான கதவு திறக்கும்.. முற்றாக அன்பு மயமானவர்களுக்கே இறைவனை அறிதல் கை கூடும் என்ற உண்மை புலப்படும்.. அன்பே சிவம் என்று அறியும் போது கிடைக்கும் பரிசினை மாணிக்கவாசகப் பெருமான் இப்படிச் சொல்கிறார். 

தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர்கைம் மாறே

பெருந்துறையான் திருப்பாதம் பணிந்தேத்தி நலம் பெறுவோம்!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

THIRUPPALLIYEZHUCHI...SONG # 4...திருப்பள்ளியெழுச்சி...பாடல் # 4


பாடல் 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்  
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் - இனிய ஓசையையுடைய வீணையையும்  யாழினையும் மீட்டுபவர்கள்  ஒரு புறமாக காத்திருக்கின்றனர்.

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் - வேதங்களோடு தோத்திரங்களைச் சொல்லித் துதிக்கும் பக்தர்கள் ஒரு பக்கமாக, உன்னைத் தொழக் காத்திருக்கின்றனர்.

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் - நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை ஏந்திய கரங்களை உடையவர்கள், புஷ்ப கைங்கரியம் செய்வோர் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ‍- பக்தி மீதூற, நின் திருமலர்த் தாளிணைகளை நினைவில் எப்போதும் நிறுத்தி, உன்னை வணங்குதலையுடையவரும்,  ஆனந்தத்தால் அழுகையையுடையவரும், துவளுதலையுடையவரும் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் – தலையின்மீது இரு கைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் காத்திருக்கின்றனர்.

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே!

என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும்  - அடியேனையும் அடிமை கொண்டு இனிய அருளைச் செய்கின்ற.

எப்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - எம் தலைவனே பள்ளி எழுந்தருள்வாயாக!

விளக்கம்:

வீணைக்கு ராஜ வாத்தியம் என்ற பெயருண்டு

எம்பெருமான் வீணை மீட்டுவது சங்கார காலத்தில்.. இவ்வுலகனைத்தும் மீளத் தோன்றும் பொருட்டு.

சங்கார காலத்தில், தம்முள் ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் பொருட்டு,சுத்த மாயையின் முதல் விருத்தியாகி நிகழ்வது வீணையின் நாதம்.

பாதந் தரிப்பார்மேல் வைத்த பாதர்
பாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஓதத் தொலிமடங்கி யூருண் டேறி
யொத்துலக மெல்லா மொடுங்கியபின்
வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.(அப்பர் சுவாமிகள்)

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி(கோளறு திருப்பதிகம்).

நாத மயமானவன் இறைவன்.. ஓம் என்ற ஓங்கார நாதத்திலிருந்தே சிருஷ்டி துவங்கியது... அந்த ஓங்காரத்துள் ஒலிக்கும் ஒலியாக இருப்பவன் இறைவன்..

நாதம் சிவ தத்துவம்.. விந்து சக்தி தத்துவம் (நாத விந்து கலாதீ நமோநம==அருணகிரிநாதர்)

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.(திருமந்திரம்)

பூமன்னும் நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் நாமன்னும் 
வேதம்வே தாந்தம் விளக்கம் செய் விந்துவுடன் 
நாதம்நா தாந்தம் நடுவேதம் போதத்தால்
ஆம் அளவும் தேட அளவிறந்த அப்பாலைச் 
சேமஒளி எவருந் தேறும் வகை மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலை போற்றி (போற்றி பஃறொடை)

 இறைவனது அருள் வேண்டி, அவனைத் துதிக்கும் முறைமைகள்  இந்தப் பாடலில்  சொல்லப்பட்டதாகவும் கொள்ளலாம்..

பரம்பொருளை விக்ரக முறையில் ஆராதிக்கும் போது, நம் உடல், மனம் இரண்டும் ஓர் அலைவரிசையில் இணைகிறது.. எண்ணம், சொல், செயல் என்ற மூன்றும் இறைபணியில் ஈடுபடுகிறது..

பிரம்மத்தை, எத்தனை வடிவங்களின் மூலமாக ஆராதிக்க முடிகிறது!!!...

இன்னிசை என்பதால் நாதப் பிரம்மத்தின் மூலமாக‌...இருக்கொடு தோத்திரம் என்பதால், வேதங்கள் முதலான தோத்திரங்களைக் கூறி, சப்த பிரம்மத்தின் மூலமாக, மலர்கள் தொடுத்து அணிவிப்பதாலும், தூவி வணங்குவதாலும், செயல் மூலமாக, தொழுது, அழுது துவள்தல் என்பவை ஆழ்ந்த பக்தியின் மூலமே சாத்தியப்படும் என்பதால், எண்ணத்தின் மூலமாக..

ஐம்புலன்களும் இறைவழிபாட்டில் ஒன்றுகிறது விக்கிரக ஆராதனையின் போது.. வேறு எவ்விதமாகவேனும் இப்படி ஒன்றிணைக்க இயலுமா..

எங்கும் நிறைந்த பரம்பொருளை இப்படி விக்ரக வடிவில் வைத்து ஆராதிப்பது, ஆன்மீகத்தின் முதல் படி... இம்முறையில் இறை நம்பிக்கை உறுதியாகிறது..

விக்ரக வடிவிலிருக்கும் பரம்பொருளுக்கு செய்யபடும் பூசனைகள், நாளடைவில்  தன் உள்ளேயும் எவ்விதப் புறத்தூண்டுதலுமின்றி நடைபெறுவதை சாதகன் காண்கிறான். உள்முக வழிபாடு சிரமமின்றி கை கூடும் போது, வெளி முக வழிபாடு தானே விலகி வழிவிடும்..

இறைவன் திருமலரடி தொழுவோம்!!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

THIRUVEMPAAVAI.. SONG # 3..... திருப்பள்ளியெழுச்சி. பாடல் # 3


பாடல் எண் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்=== உதய காலத்தில், குயில், கோழி முதலான பறவைகள் ஒலி செய்கின்றன.. திருக்கோயில்களில் சங்குகள் முழங்குகின்றன‌..

ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது ==உதயமாகும் சூரியனின் ஒளியோடு, தாரகைகளின் ஒளி ஒன்றிணைகிறது. அதாவது, தாரகைகள், சூரியனின் ஒளி முன்பு ஒளியிழக்கின்றன.

விருப்பொடு நமக்குத்

தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்====இறைவா, எமக்கு அன்போடு, கழலணிந்த நின் திருவடி மலர்களை காட்டி அருள்வாயாக. பள்ளி எழுந்தருள்க..

சங்கொலி என்பது மங்கலச் சின்னம்.. சங்கொலிக்கும் பணி செய்பவர்கள், காலையில் திருக்கோயிலில் சங்கு முழங்குவர். இவ்வாறு ஒலி எழுப்ப, வலம்புரி சங்கு தான் பயன்படுத்துவது வழக்கம். சங்கு இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள்..

ஒவ்வொரு ஆலயத்தின் கருவறைக்கும் 'லக்ஷ்மி துவாரம்' என்று திருப்பெயரிட்டு அழைப்பது வழக்கம்.

சங்கின்  ஊது துவாரத்திலிருந்து வெளிவரும் காற்று நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது.  பலர் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் இல்லத்தி சுத்தமான காற்று நுழையும். பலர் கூடும் திருக்கோயிலிலும் சங்கொலி செய்வதால், அங்கு இருக்கும் காற்று தூய்மை செய்யப்பட்டு, சுத்தமான பிராணவாயுவை சுவாசிக்க இயலும்.

சங்கொலி, வேத முழக்கங்களுக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டது அக்காலத்தில்.. ஆகவே  'இயம்பின சங்கம்' என்றார்

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப 
ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச் 
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் 
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே. (திருஞானசம்பந்தப் பெருமான்)

பேரொளி மயமானது சிவஞானம்.. ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் சோதி அவன். அவனளிக்கும் தன்மயமான ஞானமும் அவ்வாறே..

சிவமே பிரகாசம்..சொல்லால் விளக்கவொண்ணா அந்த சுயம்பிரகாச சோதி முன் எந்தப் பிரகாசம் நிற்க இயலும்?..

ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்திஆகி
உலகம்எலாம் அளித்துஅருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலர்இதழி திங்கள் கங்கை
திகழ்அரவம் வளர்சடைமேல் சேர வைத்து
நீங்கல்அருள் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றுஇமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வாம் (சிவப்பிரகாசம், உமாபதி சிவம்)

'ஓங்கு ஒளி' அதாவது,திருவருள் ஞானமே வடிவானது.. ஓங்கு ஒளி அது.. என்றார்.

விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்==இறைவனே விரும்பி நமக்கு அருள் செய்து , முத்திப் பேறு தருதல் வேண்டும்.. 'தாளிணை' என்ற பதத்துக்கு ஏற்ப, அம்மையோடு அப்பனும் விரும்பி அருள் சுரத்தல் வேண்டும்.. 

சிவனை அவன் திருவடிஞா னத்தால் சேரச் 
செப்புவது செயல் வாக்கு சிந்தை எல்லாம்
அவனை அணு காஎன்றும் ஆதலானும்
அவன்அடி அவ் ஒளிஞானம் ஆத லானும்
இவனும் யான் துவக்கு உதிரம் இறைச்சி மேதை
என்பு மச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ
அவம்அகல எனை அறியேன் எனும்ஐயம் அகல
அடி காட்டி ஆன்மாவைக் காட்டலானும்.(சிவஞான சித்தியார்)

இவ்வாறு அருள் தந்து மும்மலங்களை நீக்குவதற்கான கிரமமே 'தீக்கை' என்று செந்தமிழில் வழங்கப்படுகின்றது..
'தீக்ஷா' என்னும் வடமொழிச் சொல்லுக்கு, அஞ்ஞானத்தை, மலங்களை நீக்கி, ஞானத்தை அருள்வது என்று பொருள் சொல்லப்படுகின்றது.

 ஒரு உதாரணம் பார்ப்போம்.

பக்குவ நிலை வாய்த்த சகலருக்கு அருள் செய்யும் போது குருவடிவம் தாங்குவான்.. இது, காட்டில் இருக்கும் ஒரு மானுக்கு இன்னொரு மானைக் காட்டி அதைப் பிடித்தல் போலவாம். இவ்வாறு ஆன்மாக்களுக்குத் தக்கவாறு அருள் செய்யும் பான்மைக்கு தீக்கை இன்றியமையாதது.. 

தீக்கையின் வகைகள்:

சட்க்ஷு தீக்கை (பார்வையால் செய்யப்படுவது)
ஸ்பரிச தீக்கை (திருக்கையால் தொட்டுச் செய்யப்படுவது) . வாசக தீக்கை(ஐந்தெழுத்தையும் பொருளையும் உபதேசிப்பது ). 

பாவனையால் உணர்த்தப்படுவது பாவன  தீக்கை. அருள் நூலால் வழங்கப்படுவது ஆகமதீக்கை. உயிர்களின்  அறிவோடு கலந்து உயிருக்கு உயிராய் வழங்கப்படுவது யோக தீக்கை.

'யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் '=====

அறிவினால் அறிதற்கு அரியவன் அவன்..அவனருளால் கிட்டிய ஞானம் ஒன்றினால் மட்டுமே அவனை அறிய இயலும்..'அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆனந்த மலை' அவன்.. ஆழ்ந்து அன்பு செய்தால், அவனருள் கிட்டி, அதன் மூலம் ஞானம் வாய்க்கும்.. பந்த பாசக் கட்டுக்கள் அகலும். இவ்விதம் அகலுதற்கும் அவனருள் அவசியம்.. அவனருள் இருந்தாலன்றி அவன் தாள் பணிதல் இயலாது.

'அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி '(சிவப்பிரகாசம்)

இதைக் கேள்வியாகக் கேட்கிறார் வினாவெண்பாவில் உமாபதி சிவம்..

அறிவு அறிந்து எல்லாம் அசத்து ஆகும் ஆயின் 
குறி இறந்த நின் உணர்வில் கூடா பொறிபுலன்கள்
தாமாய் அறியா தடமருதச் சம்பந்தா!
யாம் ஆர் அறிவார் இனி.

பொருள்(சுருக்கமாக)...அறிவினால் அறிய முடியாதெனில் வேறு எவ்விதம் இறைவனை அறிவது..

இதற்கு விடை சிவஞானசித்தியாரில் இருக்கிறது..

செம்பு இரத குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச்
 செம்பொன் உடன் சேரும் மலம் சிதைந்தால் சீவன்
 நம்பன் உடன் கூடும் எனில் எனில் பொன்போல் அல்லன்
  நற்குளிகை போல அரன் நணுகுமலம் போக்கி 
 அம்பொன் அடிக் கீழ்வைப்பன் அரும்களங்கம் அறுக்கும்
 அக்குளிகை தானும் பொன் ஆகாது ஆகும் 
 உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்
 உயிர்தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே...

பொருள்(சுருக்கமாக)செம்பு தானே பொன்னாவதில்லை.. அது ரசக்குளிகையின் மூலம் பொன்னாக்கப்படுகின்றது.. ரசக் குளிகை, செம்பின் களங்கத்தைத் தீர்க்கிறது.. அது போல், இறைவனருள் மலங்களை ஒழித்து, வீடு பேறு தருகிறது..

மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

THIRUPPALAIYEZHUCHI.. SONG # 2...திருப்பள்ளியெழுச்சி..பாடல் # 2

Image result for lord siva images


பாடல் எண் : 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 

'அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது '===சூரியனின் தேர்ப்பாகனான அருணன், இந்திரன் திசையாகிய கிழக்குத் திசையை அணுகினான்..அதாவது, சூரியன் உதிக்கத் தொடங்கினான்.இருள் முழுவதும் அகன்றது..

'உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ'=====இறைவா, உன் மலர்ந்த திருமுகத்தினின்றும் சிறிது சிறிதாக அன்பர்கள் பால் பெருகுகின்ற கருணையைப் போல், சூரியன் உதயகிரியிலிருந்து எழுந்தான்..

நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்====நின் திருவிழிகள் போலும் தாமரை மலர்கள் மலர்ந்தன. அவ்விடத்து, ஆறு பாதங்களை உடைய வண்டுகள் ரீங்காரமிடத் துவங்கின..

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. ==தன் அருளாகிய பெருநிதியை, உயிர்கள் பால் கொண்ட‌ அன்பால், அவர்கட்கு தருவதற்காக எழுந்தருளும் ஆனந்த மலை போன்ற இறைவனே.. பள்ளி எழுந்தருள்க..

அதிகாலையில் நாம் தரிசிப்பது 'விஸ்வரூப தரிசனமே'.. விஸ்வரூப தரிசனம் என்பது இவ்வுலகனைத்தையும் தம்முள் அடக்கிய எம்பிரானின் தரிசனம்.. தேவர்கள் உட்பட உலகப்பொருளனைத்தும் இறைவனுள் அடக்கம்..அருணன், இந்திரன் முதலான தேவர்கள், திசைகள், இருள் நேரத்தில் ஒளி தரும் சந்திரன், சூரியன், மலைகள், அலைகடல் என அனைத்தும் ஓருருவான இறைவனின் தரிசனத்தை இப்பாடல் குறிக்கிறது எனக் கொள்ளலாம்..

அருணன்இந் திரன்திசை அணுகினன்== சூரியன் உதிப்பதற்கு முன் தோன்றும் செந்நிறச் சாயை அருணன் எனப்படுகிறது.. கிழக்குத் திக்கு அஷ்ட திக் பாலர்களில் ஒருவரான இந்திரனுக்குரியது.. கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு, உச்சி ஆகிய ஐந்து திசைகள் நோக்கி எம்பிரானின் ஐந்து திருமுகங்கள் (சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம்)அமைந்துள்ளன.. இதில் கிழக்குத் திசை நோக்கி அமைந்திருப்பது தத்புருஷம்..எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் யாவற்றிலும் கிழக்கு நோக்கியே அவரது திருமேனியை எழுந்தருளச் செய்வது மரபு.. நம்மை நோக்கியிருக்கும் திருமுகம் தத்புருஷமே..  

அதிகாலையில், இறைவன் திருமுன் கூடி நிற்கையில் முதற்கண் நம்மை நோக்குவது தத்புருஷ முகம்..நம்மை காத்தருளும் முகம் நோக்கியே 'பள்ளி எழுந்தருள்க' என்றார்.

உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ ==== இறைவனின் வலக்கண்ணையே சூரியனாகச் சொல்வது மரபு.. இங்கோ, கருணையின் சூரியன் என்றார்.. ஆக, இங்கு சூரியனாகச் சொல்லப்படுவது எம்பிரானின் கருணை.. எழ எழ என்பதால், மெல்ல  மெல்ல சூரியோதயம் ஆகும் என்பது குறிக்கப்பட்டு, அது  போல் சிறுகச் சிறுக, எம்பிரானின் கருணை உயிர்களை வந்து அடையும் என்றார். அவ்வாறு அடைந்து, அந்தச் சிறு துளி பெருவெள்ளமாகி ஆட்கொள்ளும் பான்மையையே 'அலைகடல்' என்றார். 

பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள்.'(திருவருட்பயன்)..

(உலகியலார், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் சேர்ப்பதற்கும், அதனை நுகர்வதற்கும் துணை செய்யும்படியாக, சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி இருப்பது போல, இறைவனது திருவருள், உயிர்கள் நல்வினை தீவினைகளைப் புரிவதற்கும் அவற்றின் பயன்களாகிய‌ இன்பத் துன்பங்களை நுகர்வதற்கும் உதவி, பேரறிவொளியாய் எங்கும் நிற்கும்).

சூரியனின் ஒளி இருவிதப் பயன்களை மக்களுக்குத் தருகிறது.. ஒன்று, உலகப் பொருட்களை நாம் காணுமாறு செய்வது.. மற்றொன்று, தனக்கு(ஒளிக்கு) முதலாகிய சூரியனைக் காட்டுவது..

இறைவனின் கருணையே, மும்மலங்கள் நீங்க வேண்டி தனு,கரண புவன போகங்களைப் படைத்தது.. அதுவே, மும்மலங்கள் நீங்க வேண்டி உயிர்களுக்கு அருள் செய்வதும்.

உலகியலார், சூரிய ஒளியால் தெரியும் உலகப் பொருட்களை நுகர்வதிலேயே கருத்தாக இருக்கின்றனர்.. அவ்வாறில்லாமல், சூரியனை(இறைவனை) நோக்குவதில் நாட்டம் பெற்றால், சூரியனின் ஒளி போன்ற இறைவனின் அருள், நமக்கு இறைவனைக் காட்டும்.. மறைப்பு நீங்கும்.. திரோதான சுத்தி கிட்டும்.

'திரள்நிரை யறுபதம் முரல்வன ' 

வேதங்கள் எம்பெருமானை யாண்டும் தொழுதேத்துவதும்.. நான்மறைகள் எம்பிரானின் கழல்களாய் ஒலிப்பதுவும் நாம் அறிவோம்..

வேதத்தின் ஆறு அங்கங்களாகவும் இருப்பவன் எம்பிரான். (ஆறு  அங்கங்கள்== சிட்சை, வியாகரணம்,சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம்)

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. (திருமூலர்)..

 ஆறு அங்கங்களையுடைய மறை வடிவான எம்பிரானின் திருவடி மலர்களில் இருந்து, பிறவிப்பயனாகிய தேனை அடையும் பொருட்டு ஆன்மாக்களாகிய வண்டுகள் துதி செய்வதாகவும் கொள்ளலாம்.

சத்,சித்,ஆனந்தம் என்னும் மூன்று  மண்டபங்களால் ஆன திருப்பெருந்துறை ஆலயத்தில் உறைந்திருக்கும் பேரானந்த வடிவே எம்பிரான்.. ஆனந்தமலையென்பது பேரானந்த நிலையே..

மாணிக்க வாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

திங்கள், 6 ஜனவரி, 2014

THIRUPPALLIYEZHUCHI... SONG # 1....திருப்பள்ளியெழுச்சி.. பாடல் # 1

'பாவை நோன்பு'  இருக்கும் மகளிர் இறைவனைத் துதிக்கும் பாடல்கள் என்பதால், திருவெம்பாவை பாடல்களை,  மார்கழி மாதம் இறைவன் திருமுன் பாடி வேண்டுகிறோம்..இருபது பாடல்களைக் கொண்டது திருவெம்பாவை.. ஆகவே, பத்து பாடல்களைக் கொண்ட திருப்பள்ளியெழுச்சியையும் இணைத்து, மார்கழி முப்பது நாட்களும் பாடி, இறைவனைத் துதிக்கின்றோம்..

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பல பதிகங்கள் இருக்க, திருப்பள்ளியெழுச்சியைத் தேர்ந்து பாடுவது குறித்த எனது புரிதல்..

ஆலயங்களில் அதிகாலையில் நடக்கும் 'விஸ்வரூப தரிசனம்' பெரும் சிறப்பு வாய்ந்தது என்பதை அன்பர்கள் அறிவீர்கள்..

பிற சமயங்களில் ஆலய தரிசனத்தின் போது, நாம் இறைவனைத் தரிசிக்கச் செல்கிறோம். ஆனால், விஸ்வரூப தரிசனத்தின் போது, இறைவன் முதல் நாள் இரவு செய்த அலங்காரம், நிர்மால்யங்களோடு அருளுகிறார்..திரை விலக்கப்பட்டதும், தம் முன், இத்தனை அதிகாலையில் யார், யார் வந்திருக்கிறார்கள் என்று நோக்குவார்..(அதாவது இறைவன் நம்மைப் பார்க்கிறார் என்பது ஐதீகம்)

இயல்பாகவே அதிகாலை வேளையில், நம் மனம் தூய்மையாக இருக்கும்.. அதோடு சேர்ந்து, இறைவனின் அருட்பார்வை நம் மீது விழும் போது,  நமக்கு ஏற்படும் நன்மைகளை, அனுபவித்தால் அன்றி புரிந்து கொள்ளுதல் இயலாது..

மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்தம். அதாவது தேவர்கள் துயிலெழும்பும் காலம்..  

தேவாதிதேவனான இறைவனைத் துயிலெழுப்பும் விதமாகப் பாடி, அவரது விஸ்வரூப தரிசனத்தின் போது, அவரது அருட்பார்வை நம்மீது விழும்படியாகக் கோரும் திருப்பள்ளியெழுச்சியை, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான மார்கழி மாதத்தில் பாடுவது நன்மை தரும் என்று கருதி இணைக்கப்பட்டிருக்கலாம்.

இனி முதல் பாடலைப் பார்க்கலாம்..

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
    புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொருள்:

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே

'என் வாழ்வுக்கு ஆதாரமான பொருளே, உலகப் பொருட்கள் யாவற்றுக்கும் முதலாக விளங்கும் இறைவனே!..

'புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றி'=== பொழுது புலர்ந்தது.. நினது பூப்போன்ற மென்மையான, ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளுக்கு, இரு மலர்களைச் சமர்ப்பித்து பூசித்து,

நின் திருமுகத் தெமக்கருள் மலரும்
    எழில்நகை கொண்டு== அதன் பயனாக, நினது திருமுகத்தில், எம் மீது அருள் கொண்டு மலரும் அழகிய புன்னகையைக் கண்டு..

நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.=== 

நின் திருவடிகளைத் தொழுதோம்... 

நீர் வளம் மிக்கதாதலால், திருப்பெருந்துறையின் குளிர்ந்த வயல்களில், தாமரை மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்சுரக்கும் சிவபிரானே!.. இடபக் கொடியை உடையவனே!.. எம்மை அடிமையாகக் கொண்டருளுபவனே!.. எம்பெருமானே!.. பள்ளி எழுந்தருள்க..

இதன் மூலம், அதிகாலையில், இறைவனின் திருமுன், இறைவனைப் புகழ்ந்து பாடி, பின், மலரிட்டு வழிபடும் முறைமை புலப்படுத்தப்படுகின்றது..


இப்போது, தத்துவ விளக்கம் குறித்து, சிறிது சிந்திக்கலாம்.

இதில் திரோதான சத்தியைக் குறித்துப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

நம் வாழ் முதலாகிய பொருள் இறைவனே!.. உயிர்களின் மும்மலங்களை நீக்குவித்து ஆட்கொள்ள வல்லது இறைவனின் பேரருட்சக்தியே...

இந்தப் பாடல்இறைவனைக் குறித்த ஞானம் நம்முள் மலர்வது குறித்துப் பாடப்பட்டது....

'சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்என்பதிலிருந்துசேற்றிலிருந்து மலரும் செந்தாமரை போல்அஞ்ஞானமாகிய சேறு படிந்திருக்கும் உள்ளத்திலிருந்தேஅவை நீங்கிஞானமாகிய தாமரை  மலருதல் வேண்டும் என்று குறித்தார்.

'அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே' என்று சிவபுராணத்தில் சிவபிரானைப் பாடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

'ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்என்ற வரியினை எடுத்துக் கொள்ளலாம் நாம்..இறைவனைத் துதித்த மாணிக்கவாசகப் பெருமான்உடனடியாகஇறைவன் திருக்கரங்களில் இருக்கும் மானையோமழுவையோ பாடாமல்கொடியையும் அதிலிருக்கும் இடபத்தினையும் குறித்துப் பாடுகிறார்.

மும்மலங்களுடன் கூடிய நிலையிலிருக்கும் உயிர்களின் நிலை 'சகல நிலை'.   சகல நிலையிலிருக்கும் உயிர்களின் ஆணவம் முதலாகிய மும்மலங்கள் நீங்குதல் இறையருளாலேயே நிகழும்..

இதற்கு 'தீக்கை'    துணை செய்யும்

இந்த தீக்கை பெறுதலே கொடியேற்றம்..மும்மலங்களின் தாக்கம் நீங்கும்படிக்கு தீக்கைக் கிரமங்களினால் கொடி கட்டினேன் என்கிறார் உமாபதி சிவாச்சாரியார்.

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே. (கொடிக்கவி)

'த்வஜாரோஹணம்என்று வடமொழியிலும், 'கொடியேற்றம்என்று தமிழிலும் வழங்கப்படும் நிகழ்வு,ஒவ்வொரு திருக்கோயில் திருவிழாவிலும் மிக முக்கியமானது.. இதிலும் ஒரு சைவ சித்தாந்த உட்பொருள் மறைந்துள்ளது..

சைவசித்தாந்த மரபுப்படி,

கொடிமரம் = பதியாகிய இறைவன்
கொடிச்சீலை‍ = திரோதன சத்தி;
இடபம்=உயிர்(பசு)
கொடிமரத்தில் சுற்றப்பெறும் தர்ப்பைக்கயிறு- பாசம் என்ற மலங்கள்
கொடிச்சீலை ஏற்றப் பயன்பெறும் கயிறு‍ ‍‍இறைவனின் அருட் சக்தி

என்று கருதப்படுகிறது. ஆக இறைவனுடன் பாசமும் பற்றும் அறுத்து ஆன்மா கலப்பதே கொடியேற்ற உற்சவத்தின் தத்துவம். ' ஏற்றுயர் கொடியுடையாய்என்று இறைவனின் திருமுன்நாம் உய்ய,கொடியேற்றுகிறார் அடிகள்.

இவ்வாறு செய்துஎனை உடையேனாகக் கொள்ளுதல் வேண்டும் என்றார். 'எம்மைஎன்று பன்மையில் கூறாது 'எனைஎன்று ஒருமையில் குறித்ததால்ஒவ்வொரு உயிரும்தமக்கு ஞானம் அருளல் வேண்டும் என்று தனித்தனியே இறைவன் தாள் பணிய வேண்டும் என்பதைக் குறித்தார்.

திருவாசகமே 'சிவராஜ யோக நெறி'.. இதிலும் அந்த நெறி மறை பொருளாக இருப்பதில் வியப்பில்லை..'திருப்பெருந்துறையுறை சிவபெருமான்என்ற குறிப்பினால் இதை உணரலாம்.மாணிக்கவாசகப் பெருமானால்எழுப்பப் பட்ட இந்த திருக்கோயில்ஆகம நெறியில் அல்லாதுசிவராஜ யோக நெறிப்படி அமைந்திருப்பதை அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.

இதை ஆழ்ந்து சிந்திக்க விரும்பும் அன்பர்கள்கீழ்க்கண்ட குறிப்புகளைத் துணை கொள்ளலாம்.

சைவ சித்தாந்தத்தில்குண்டலினி உறையும் மூலாதாரமாகபிரதான‌ கோபுரவாயில் சொல்லப்படுகிறது. பலிபீடம் சுவாதிஷ்டானமாகவும்துவஜஸ்தம்பம் மணிபூரகமாகவும்நந்தி பீடம் அநாகதமாகவும்உட்கோபுரவாயில் விசுத்தியாகவும்அந்த்ராளக் கோபுர வாயில் ஆக்ஞா சக்கரமாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இறைவனின் கருவறையே சஹஸ்ராரம்.

இறைவனைக் கருவறையில் துயிலெழச்செய்துபூசனை செய்தலை இவற்றோடு பொருத்தி உணரலாம்.

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.