நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

தேவியின் திருவடி....பாகம் 2; ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு


ஸ்ரீசக்ர நாயகி
இதன் முதல் பாகம் படிக்காதவர்கள்இங்குசொடுக்கவும்.

இந்தப் பதிவில், ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு, அதன் விவரணம் முதலியன இதைப் படிக்கும் அன்பர்கள் தெரிந்துகொள்வதற்காகவே எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்ரத்தைப் பூஜிப்பதற்கு குருவின் அனுமதி தேவை. அவர் மூலமாக உபதேசம் பெற்று, அவர் முன்னிலையில் பல முறை பூஜித்தபிறகே சாதகன் தனியாகப் பூஜை செய்ய இயலும்.

ஸ்ரீ சக்ரம் அமைப்பும் விளக்கமும்

ஜகன்மாதாவான அம்பிகையை, வெளிமுகமாக, மந்திர,யந்திர, தாந்திரிக முறைகளால் வழிபடலாம் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். மந்திர ரூபமாக வழிபட, ஏராளமான ஸ்லோகங்கள் உள்ளன. தேவியின் மூலமந்திரங்களை குருமுகமாக அறிந்து, ஜபித்துப் பலனடையலாம்.

யந்திரமுக வழிபாடு என்பது, ஸ்ரீசக்ர வழிபாட்டையே குறிக்கும். அம்பிகையின் திருநாமம் எதுவாயினும், வழிபடுவதற்கு ஸ்ரீசக்ரத்தையே உபயோகிக்கிறோம்.அம்பிகையே ஸ்ரீசக்ர வடிவமாக இருக்கிறாள். ஸ்ரீயந்திரம் என்பது இதன் மற்றொரு பெயர். வழிபாட்டுக்குரிய யந்திரங்கள் அநேகம் இருந்தாலும் , ஸ்ரீசக்ரமே "சக்ர ராஜம்" என்றழைக்கப்படுவது, இதன் மேன்மையை உணர்த்துவதாகும்.
ஸ்ரீசக்ரம்
அம்பிகையின் வாசஸ்தானமாக,ஸ்ரீபுரம் சொல்லப்படுகிறது. மேருகிரியில் உள்ள ஸ்ரீபுரத்தில், சிந்தாமணி கிருஹத்தில், சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். ஸ்ரீயந்திரமும், மஹாமேருவும் ஒன்றா? வேறு வேறா? என்ற கேள்வி சிலருக்கு உண்டு..முதலில் ஸ்ரீசக்ரத்தின் அமைப்பைப் பார்ப்போம்.

ஸ்ரீசக்ரத்தில், மத்தியில் உள்ள புள்ளி பிந்துஸ்தானம் எனப்படும். இதைச் சுற்றி,ஆவரணங்கள் உள்ளன. ஆவரணங்கள் என்றால், மறைப்பு என்று பொருள். ஆனால் இங்கே, சுற்றுகள் எனக் கொள்க.

ஸ்ரீசக்ரத்தில் 43 முக்கோணங்கள் உள்ளன. நம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்ரங்களும் ஸ்ரீ யந்திரத்தில் அடங்கி உள்ளன. அதாவது, நம் தேகமே ஸ்ரீசக்ர வடிவம். ஆஜ்ஞா சக்ரமே பிந்துஸ்தானமாகக் கூறப்பட்டிருக்கிறது.

இதில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவகோணங்கள் என்றும், கீழ்நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்திகோணங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.

 

ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது சுற்றுகள் (ஆவரணங்கள்) உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தேவியின் பரிவார தேவதைகள் வசிக்கிறார்கள். இந்த ஒன்பது ஆவரணத்திற்கும் பூஜை செய்வதையே 'நவாவரண பூஜை' என்கிறோம். இதை 'பஞ்சதசாக்ஷரி' மந்திர உபதேசம் பெற்றவர்களே செய்யலாம்.மந்திரங்களில் 'தேவி கட்க மாலா' ஸ்துதியை,முறைப்படி கற்று, பாராயணம் செய்வது, நவாவரணபூஜைக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. சாக்தர்கள் இதைத் தினமும் பாராயணம் செய்கிறார்கள்.

முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.

ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்



தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.

                                                                             

ஸ்ரீசக்ரத்தில், நீள, அகலங்கள் மட்டும் இல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது போல், இருக்கும் அமைப்பு 'பூர்ண மேரு' ஆகும்.

மஹாமேரு
    

அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில்,

"வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே."

என்று ஸ்ரீசக்ர நாயகியைப் போற்றுகிறார்.

ஆதி சங்கரர்,சௌந்தர்ய லஹரியில்,

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:

எனும் ஸ்லோகத்தில் ,

"ஹே தேவி, சிவஸ்வரூபமான நான்கு சக்கரங்கள், சக்திவடிவமான ஐந்து சக்கரங்கள், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தாதுக்கள் ஒன்பது, உன்னுடைய பிந்து ஸ்தானத்துடன் கூடிய மந்திர கோணங்கள், எட்டு தளங்கள், பதினாறு தளங்கள், மூன்று மேகலைகள், மூன்று பிரகாரங்கள், ஆகியவற்றுடன் சேர்ந்து, 44 தத்துவங்களாக அமைந்துள்ளன."

என்று ஸ்ரீசக்ரத்தின் வடிவத்தை விளக்குகிறார்.

இந்த ஸ்லோகத்தை, காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 8 நாட்கள்,தினந்தோறும், 1000 முறை ஜபம் செய்தால், புத்திர சந்தானம் உண்டாகும். ஜபம் செய்துவிட்டு, வெல்லப் பாயசம், மஹாநைவேத்தியம் (பச்சரிசி சாதம் ஒரு பிடி, வேக வைத்த துவரம்பருப்பு ஒரு ஸ்பூன்,ஒரு துளி நெய் சேர்ந்தது) நிவேதனம் செய்ய வேண்டும்.

லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ்ரீசக்ர ராஜ நிலயா, ஸ்ரீமத் திரிபுரசுந்தரி' என்று புகழ்கிறது.

ஸ்ரீசக்ர பூஜையைச் செய்யும் பேறு, பல பிறவிகளில் செய்த புண்ணியவசத்தாலேயே கிட்டும். இதை வீடுகளில் வைத்திருப்போர், மிகுந்த ஆசாரத்துடன் இருக்க வேண்டும். தினமும் இயன்றதை நிவேதனம் செய்ய வேண்டும்.தாங்கள் பூஜை செய்ய இயலாவிடினும், தகுதியானவர்களை வைத்து,வருடம் ஒரு முறையாவது பூஜை செய்ய வேண்டும்.

வெளியூருக்குச் செல்லும்போது, ஒரு பாத்திரத்தில் நீர்,ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசி, பாசிப்பருப்பு மற்றும் சில நாணயங்கள் வைத்து விட்டுச் செல்லவும். திரும்பியதும், அரிசி,பருப்பைச் சமைத்து, நிவேதனம் செய்யவும், நீரை, துளசியில் விடவும். நாணயங்களை, கோவில் உண்டியலில் சேர்க்கவும். யந்திர வடிவங்களைப் பூஜை செய்ய, அதிகப்படியான ஆசார அனுஷ்டானங்கள் முதலியவை அவசியம். இந்த விஷயத்தை ஸ்ரீமஹா மேருவையும், ஸ்ரீசக்ரத்தையும் வீடுகளில் புதிதாக வாங்கி வைக்க நினைப்போர், கவனத்தில் கொள்ள வேண்டும்.

   

அன்னையை முறையாக வழிபட்டு, வணங்கி, அவள் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!

வியாழன், 15 மார்ச், 2012

DEVIYIN THIRUVADI...தேவியின் திருவடி.....பாகம் 1




ஜகன்மாதாவான அம்பிகைக்கு நாம் அனைவரும் குழந்தைகளே. நாம் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதே அன்னையின் எண்ணம். தேவி அபராத க்ஷமாபன ஸ்துதி எனும் ஸ்தோத்திரத்தில்,

"குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி" (கெட்ட மகன் இருக்கலாம். ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பது என்ற எண்ணிற்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, எந்த எண்ணை ஒன்பதுடன் கூட்டினாலும், வரும் எண்ணின் கூட்டுத்தொகை, ஒன்பதுடன் கூட்டப்பட்ட எண்ணேயாகும். அதைப்போல்,நாம் ஆத்மஸ்வரூபமான தேவியுடன் ஒன்றிணைந்த நிலையிலும் சரி, அவளிடமிருந்து, நம் கர்ம வினையால் வேறுபட்ட நிலையிலும் சரி, அவளே நம்முள் உறைகிறாள்.இதை சௌந்தர்ய லஹரியில்,"மநஸ்த்வம், வ்யோமத்வம்" (நீயே மனம், நீயே ஆகாயம்) என்கிறார் ஆதி சங்கரர். இதையே அபிராமி பட்டரும்,

"அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக் "

என்று பாடியுள்ளார்.

லலிதா சஹஸ்ரநாமம், ஆயிரம் நாமங்களின் மூலமாக, தேவியின் எங்கும் நிறைந்த தன்மையைப் போற்றித் துதிக்கிறது.

அகில உலகத்திற்கும் அன்னையாகிய‌ ஸ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடு, எண்ணிய யாவையும் தர வல்லது. நம் சித்தாகாசத்தினுள் உறைந்திருக்கும் அன்னையை நித்தமும் நாம் வழிபட வேண்டுமென்றாலும், சில சிறப்பான நாட்களை அன்னையின் அருளை எளிதில் நாம் பெற வேண்டி, நம் பெரியோர் வகுத்து வைத்திருக்கிறார்கள்.    

அம்பிகையின் வழிபாட்டிலும் ஒன்பது என்ற எண்ணிற்கு பெரும் பங்குண்டு. நவாவரண பூஜை, நவராத்திரி வழிபாடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, நவராத்திரி வழிபாடு தேவியின் அருட்சக்தியை அதிக அளவில் நமக்குப் பெற்றுத்தர வல்லது.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. பங்குனி அமாவாசைக்குப் பின் வரும் 'வசந்த நவராத்திரி', ஆடி அமாவாசைக்குப் பின் வரும், 'ஆஷாட(வாராஹி) நவராத்திரி', புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும், 'சாரதா நவராத்திரி' (இதைத்தான் நம்மில் பெரும்பாலானோர் கொண்டாடுகிறோம்), மற்றும் தை அமாவாசைக்குப் பின் வரும் 'சியாமளா நவராத்திரி'.

இந்த வருடம் 'வசந்த நவராத்திரி' வரும் வெள்ளி, மார்ச் 23, 2012 யுகாதி பண்டிகையன்று ஆரம்பித்து, இராம நவமியன்று நிறைவடைகிறது.

சாரதா நவராத்திரியில் அசுர சம்ஹாரம் முடிந்து, வெற்றி தரும் கொற்றவையாய்த் திகழ்கிற அன்னை, சாந்த ஸ்வரூபிணியாய் ஞானோபதேசம் செய்கிற ஞானாம்பிகையாய் கருணை மழை பொழிகிற தினங்களே வசந்த நவராத்திரி.


வசந்த நவராத்திரியும் சாரதா நவராத்திரியுமே நவராத்திரிகளில் சிறப்பு வாய்ந்தவையாகக் கூறப்படுகிறது. உயிர்களுக்கு இதமளிக்கும் வசந்த காலத்தில் வருவதாலேயே இதற்கு 'வசந்த நவராத்திரி' எனப் பெயர். இது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் துவக்கி வைக்கப்பட்ட பெருமை உடையது.

தேவி வழிபாட்டில் இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று வாமாசாரம். இதுவே 'ஸமயாசாரம்' என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொன்று தக்ஷிணாசாரம்.

வாமாசாரம்:

'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாரதியின் வார்த்தைக்கொப்ப, நம் உடலினுள்ளே 'குண்டலினி' எனும் தெய்வத்தன்மை நல்கும் உயிர்ச்சக்தியாய்த் திகழ்கிறாள் அம்பிகை. அவளின் திருவடிகளே சரணம் என்று சரணாகதி அடைந்தோர்க்கு, அதை விழிப்படையச் செய்யும் வழியையும் காட்டி, அதில் வெற்றி காணவும் உதவுகிறாள். அதில் வெற்றி அடைந்து, சஹஸ்ராரக் கமலத்தில், காமேஸ்வரருடன் இணைந்த நிலையில், சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாகத் தேவியைக் காணும் பேறு பெற்றால், சாயுஜ்ய பதவி (தேவியுடன் இரண்டறக் கலத்தல்) கிட்டும்.

'குண்டலினி யோகம்' என்பது, நாமும் இறைவியும் ஒன்றே என்ற நிலையை அடைவதற்கு, வழிகோலும் ஒரு சாதனமாகும் .  அது சுலபமல்ல. அது மிகக் கடுமையான வழிமுறையாகும். 

வசந்த நவராத்திரி யோக சாதனை செய்வோருக்கு, மிகப் பலன் தரும் காலமாகும். 'அஞ்ஞான த்வாந்த தீபிகா' வாக அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தைத் தரும் அம்பிகையை இக்காலக் கட்டத்தில் வழிபட, கோரிய பலன் கிட்டும். மஹாமேரு வைத்து வழிபடும் இல்லங்களிலும் கோயில்களிலும் இது கட்டாயம் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். 

அம்பிகையின் வழிபாட்டு முறைகளில் வாமாசாரம் அல்லது  ஸமயாசாரம் என்று சொல்லப்படும் உள்முகமாக (அந்தர் முகமாக) அம்பிகையை ஆராதித்தலே சிறந்தது. இது, குண்டலினி சக்தியை நம்முள் இருக்கும் ஆதாரச் சக்ரங்களான, மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அனாஹதம், விசுத்தி,ஆஜ்ஞா முதலிய சக்ரங்கள் வழியாக, யோகப்பயிற்சியின் மூலம், மேலற்றி, சஹஸ்ராரக் கமலத்தில் அம்பிகையைக் காணுதல்.  மனம் அடங்கிய யோகிகளாலேயே இது இயலும்.

'தஹராகாச' மான இருதயத்தில், அம்பிகையை ஸ்ரீசக்ர ரூபமாகப் பாவித்து செய்யப்படும் பூஜையே 'ஸமயாசாரம்' என்று கூறுகிறார் பாஸ்கரராயர் எனும் தலை சிறந்த தேவி உபாசகர்.

"தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி 
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:" 

என்பது அவருடைய வாக்கு.

லலிதா சஹஸ்ரநாமம் இதையே "ஸமயாசார தத்பரா" (ஸமயாசாரமாக உபாசனை செய்தால் மகிழ்ச்சி கொள்பவள்) என்று கூறுகிறது.

இதில் மந்திரசித்தி முதல் சமாதி நிலை முதல் 30 நிலைகள் உள்ளன. யோகசாதனா மார்க்கத்தில் ஸ்ரீவித்யாமார்க்கமே தலைசிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும்.

ஆனால், அம்பிகை பக்திக்கு வசப்படுபவள். லலிதா சஹஸ்ரநாமம் அவளை 'பக்தி வச்யா' என்று புகழ்கிறது. மனப்பூர்வமான பக்திக்கு அம்பிகை நேரில் தோன்றி கருணை புரிவாள். 

தக்ஷிணாசாரம்:

இது 'பஹிர் முகமாக' அதாவது வெளிமுகமாக தேவியை வழிபடும் முறைகளைக் குறிக்கும். இது யோகிகளல்லாத சாமான்ய மனிதர்களுக்கு உகந்தது. அவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

1. மந்திர உச்சாடனம் அதாவது மூல மந்திரங்கள், பீஜங்கள் முதலியவற்றை குருமுகமாக உபதேசம் பெற்று, முறைப்படி உச்சரித்தல்,

2. யந்திர வழிபாடு அதாவது ஸ்ரீசக்கரம், மஹாமேரு முதலிய யந்திரங்களைப் பூஜித்து வழிபாடு செய்தல், இது 'கௌல பூஜை' எனப்படுகிறது. லலிதா சஹஸ்ரநாமத்தில் "கௌல மார்க்க தத்பர ஸேவிதா" (கௌல மார்க்கத்தின் மூலமாக ஸேவிக்கப் படுபவள்) என்று தேவி குறிப்பிடப்படுகிறாள்.கௌலினி எனும் நாமத்திற்கு சிவ சக்தி ஸ்வரூபமானவள் என்பது பொருள்.

3. தாந்திர சாஸ்திரம் அதாவது, கை அசைவின் மூலமாகச் செய்யப்படும் முத்திரைகள் மூலமாக ஆராதிப்பது. இது மந்திர உச்சாடனத்தில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இயலும். இது துரித தேவ ஆராதனை என்று சொல்லப்படுகிறது.

மேற்கண்ட யாவற்றிற்கும் குருவின் வழிகாட்டுதல் என்பது இன்றியமையாதது.


அடுத்த பதிவில், குண்டலினி யோகம், ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு, நவாவரண பூஜை, மற்றும் எளிய முறையில் இல்லத்தில் பூஜை செய்வது எப்படி என்பனவற்றைப் பார்ப்போம்.

வெற்றி பெறுவோம்!

வெள்ளி, 9 மார்ச், 2012

URUGAATHA VENNAIYUM ORADAYUM...(KARADAYAN NONBU SPECIAL POST)...உருகாத வெண்ணையும் ஓரடையும். (காரடையான் நோன்பு சிறப்பு பதிவு).........


காரடையான் நோன்பு

 'காரடையான் நோன்பு'  பெயர்க் காரணம்

கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே 'காரடை' எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது.

இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு 'காரடையான் நோன்பு' எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் 'முதல் பருவம் ' என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும்.

இந்த நோன்பின் பயன்:
கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால் மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது.

இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான்.   திருமணம் இரு குடும்பங்களின் இணைப்பு. உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல,  இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப நாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம்.

பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது.

அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது,  'என் மனைவியைத் துணையாகக் கொண்டு' என்று பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும். 
திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும்.

மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும் 
என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது.

இணைப்பறவைகள் போல குடும்ப வானில் பறந்து செல்ல வேண்டிய கணவன் மனைவி இருவரும் உடலால், மனதால், உயிரால் ஒன்றுபட்டவரே. இருவரும் குடும்பத்தில் சரிபாதி அல்லவா?

இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே.... இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே.....

இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. 'நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்' என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான்.

விரதம் இருக்கும் நாள்;
மற்ற விரதங்களைப் போல், குறிப்பிட்ட நாள், நட்சத்திரம் என்று இதற்கு எதுவும் இல்லை. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரம் இந்த நோன்பைச் செய்யவேண்டும். சில சமயம், நடு இரவில் கூட இந்த நோன்பு வரும்.

இந்த வருடம், 14‍‍‍‍‍‍‍‍‍‍‍:03:2012 அன்று காலை 9 மணியிலிருந்து, 10 மணிக்குள் இந்த நோன்பைச் செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்,குங்குமம், நோன்புச்சரடு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மாவிலை, வாழை இலை, பூ (சரம் மற்றும் உதிரி), கற்பூரம், விளக்கு ஏற்றத் தேவையான பொருட்கள் (திரி, எண்ணெய் முதலியன), மாக்கோல மாவு, சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தருவதானால், அதற்குத் தேவையான கிஃப்ட்,ரவிக்கைத்துணி முதலியன.
        
நிவேதனத்திற்கு:

வெல்ல அடை, உப்படை, மற்றும் வெண்ணை.

வெல்ல அடை செய்ய:

அரிசி மாவு, வெல்லம், காராமணி, தேங்காய், ஏலக்காய், சிறிதளவு நெய்.

உப்படை செய்ய:
    
அரிசி மாவு, காராமணி, தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,கறிவேப்பிலை, தாளிக்கும் சாமான்கள், மற்றும் உப்பு.

முதல் நாள் செய்ய வேண்டியது:     
  • பூஜை அறையைத்துடைத்து, சுத்தம் செய்யவும்
  • மாக்கோலமிடவும்.
  • சுவாமி படங்களைத் துடைத்து, சந்தனம் குங்குமம் இடவும்.
  • கலசம் வைக்கத் தேவையான சொம்பு, மற்றும் பூஜைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து, பொட்டு வைக்கவும்.
  • ஒரு தேங்காயை மஞ்சள் பூசி,குங்குமம் வைத்து, தயார் செய்யவும்.
  • அடை செய்யத் தேவையான மாவு தயாரித்து, வறுத்து வைக்கலாம் (நேரமிருந்தால்).
  • தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறில் திருமாங்கல்யம் அணிந்திருந்தால்)மாற்றிக் கொள்ளவேண்டும்.' மாசிக் கயிறு பாசி படரும்'  என்பது நம்பிக்கை. 
நோன்பன்று செய்ய வேண்டியது.
  1. அதிகாலையில் எழுந்து, நீராட வேண்டும்.  வீடு,வாசலை மெழுகிக் கோலமிட வேண்டும். வாசலில் மாவிலை கட்டுவது விசேஷம். 
  2. அவரவர்கள் சம்பிரதாயப்படி உடை அணிந்து, தலையை பின்னி அல்லது முடிந்து கொண்டு, ஒரு கிள்ளுப் பூவை தலையில் வைத்துக் கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.  நம் இருதய கமலத்தில் தேவி உறைந்திருப்பதால், எந்தப் பூஜையானாலும் நம்மை சரியானபடி அலங்கரித்துக் கொண்டுதான் செய்ய வேண்டும்.                                                                                காரடையான் நோன்பு அடை செய்யும் விதம்இங்கே  சொடுக்கவும்
  3. சொம்பில் நீர் நிறைத்து, அதில் ஏலக்காய், பன்னீர் போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்த்து, பின் மாவிலைக் கொத்து, மஞ்சள் பூசிய‌ தேங்காய் வைத்து, ஒரு ரவிக்கைத்துணி சாற்றவும்.
  4. ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் கலசத்தை வைக்கவும்.
  5. பக்கத்தில் அம்மன் படம் வைக்கவும் (துடைத்து, பொட்டு வைத்து வைக்க வேண்டும்).
  6. இதையே சாவித்திரி அம்மனாகக் கருதி வழிபடலாம். பொதுவாக, காமாக்ஷி அம்மனையே சாவித்ரி அம்மனாக வழிபடும் வழக்கம் இருக்கிறது.
  7. கலசத்திற்கும், படத்திற்கும்,  பூ சாற்றவும்.
  8. நோன்புச் சரடில் ஒரு பசு மஞ்சளைத் துளையிட்டுக் கோர்க்கவும். இல்லாவிட்டால், பூ கட்டியும் வைக்கலாம். நோன்புச் சரடை, இரட்டைப்படை எண்ணில் வாங்கவேண்டும். இரண்டு சுமங்கலிகள் இருந்தால், நான்காக வாங்கவும். இரண்டை, கலசம், அம்மன் படத்துக்கு அணிவித்து விட்டு, இரண்டை உபயோகிக்கலாம். சிலர் துளசிச் செடிக்கும் கட்டுவதுண்டு.
  9. பூஜை அறையில் அம்பாளுக்குப் பெரிய கோலமாக ஒன்றும், வீட்டில் சுமங்கலிகள் எண்ணிக்கைக்கேற்ப சிறிய மாக்கோலங்களும் போடவும்.
  10. அம்மனின் கோலத்தில்,ஒரு தட்டில், தேங்காய் (உடைத்தது),வெற்றிலை, பாக்கு, பழம், பூ, அம்மனின் சரடு, முதலியவை வைக்கவும். மற்ற சிறிய கோலங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய நுனி வாழை இலையை வைக்கவும்.
  11. சில வீடுகளில், ஒவ்வொரு இலைக்கும், தனித்தனியாக வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, சரடையும் வைத்து, இலை நுனியில் வைப்பர். இருப்பதில் வயதான சுமங்கலி, தன் இலையில் அம்மனின் சரடையும் சேர்த்து வைத்துக் கொள்வார். இது, அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது.
  12. வாழை இலையை சிறிதாகக் கிழித்துத் தான்,அடையை வேக வைக்கவேண்டும். இட்டிலிப் பானை அல்லது குக்கரில் சிறிது வைக்கோல் சேர்த்து (கிடைத்தால்) வேக வைப்பது நல்லது. இதன் காரணம், இறந்த சத்தியவான் உடலை வைக்கோலால் மூடி விட்டுத் தான், சாவித்திரி எம தர்ம ராஜனின் பின் சென்றாள்.  வைக்கோல் சத்தியவானைப் பாதுகாத்தது  போல், கணவனை தெய்வ அருள் காக்கும் என்பது நம்பிக்கை.
  13. வேகவைத்த இலையோடு, அடையை எடுத்து (இரண்டு அடைகளாக 
  14. இருக்க வேண்டும்),   நிவேதனம் செய்யும் நுனி வாழை இலையில் வைத்து, சிறிது வெண்ணையையும் வைக்கவும். உப்படையை தனியாக ஒரு தட்டில் வைக்கலாம்.
  15. பூஜை செய்யும் வழக்கம் இருந்தால், கலசத்திற்கு பூஜை செய்யவும். மற்றவர்கள் முதலில் ஒரு விநாயகர் துதியைச் சொல்லி, பிறகு, கீழ் வரும் ஸ்லோகத்தை 21 முறை சொல்லவும்.

  • மங்களே மங்களாதாரே
  • மாங்கல்யே மங்களப்ரதே
  • மங்களார்த்தம் மங்களேசி
  • மாங்கல்யம் தேஹிமே சதா

  1. இதன் பொருள் :
  2. 'மங்கள ஸ்வரூபமாகவும்,சர்வமங்களங்களுக்கும் ஆதாரமாகவும்,நித்ய மங்களங்களை அருளுபவளாகவும் இருக்கிற ஹே தேவி, எனக்கு, மாங்கல்யம் நிலைக்க அருளுவாய்'.  
  3. பிறகு, கணவனின் நலனுக்காக மனதார வேண்டிக் கொண்டு,             'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் வைத்து, நோன்பு செய்தேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்'
  4. என்று கூறி,நீரைச் சுற்றி அடைகளை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்ய வேண்டும். கற்பூரம் ஏற்றிக் காண்பிக்கவும். பிரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும். உதிரிப் பூக்களை சமர்ப்பித்து, தேவியை வேண்டிக் கொண்டபின், வயதில் பெரிய சுமங்கலிகள், அம்மன் படத்துக்குச் சரடு சாற்றிவிட்டு, சிறியவர்களுக்குக் கட்டவும். பிறகு  அவர்கள் தங்களுக்குத் தாங்களே சரடு கட்டிக் கொள்ளலாம்.
  5. சரடு கட்டும் போது, இலைக்கு எதிரில் ஒரு மணை போட்டு, அதில் உட்கார்ந்து கட்டவும். பிறகு சரடுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். நெற்றியிலும் இட்டுக் கொள்ள வேண்டும்.
  6. நிவேதனம் செய்ததில் ஓர் அடையை வெண்ணையுடன் வைத்து கணவனுக்குக் கொடுத்து,  நமஸ்கரித்த பின்,  இலையில் உட்கார்ந்து சாப்பிடலாம்.
  7. பூஜை முடியும் வரை விளக்கு எரிய வேண்டும். எனவே தகுந்தபடி எண்ணை விடவும். மாசி முழுவதும் முடிவதற்குள் நோன்பைச் செய்துவிட வேண்டும்.
  8. சாவித்திரி தேவியின் கதையைப் படிப்பது, மிகவும் நல்லது. அன்று, அக்கதையைப் படிப்பவர்களை சாவித்திரி தேவியே நேரில் வந்து ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.எமதர்ம ராஜனும் 'தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என்று ஆசி கூறுவாராம்.
  9. சாவித்திரி சத்தியவான் கதைக்கு இங்கு சொடுக்கவும்.                                                                

இவ்வாறு முறையாக நோன்பு நோற்கும் அனைவருக்கும் தேவி, சகல சௌபாக்கியங்களும் தந்திடப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 2 மார்ச், 2012

அம்பிகையைச் சரண் புகுந்தால்......





'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்பது, யாவரும் அறிந்த ஒன்று. வள்ளுவப் பெருந்தகையும் 'மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்று மனத்தின் வலிமையை சிறப்பாகக் கூறியிருக்கிறார்.

ஆக மனோவலிமையே வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம். மனிதப் பிறவிகளின் மனோவலிமையை நிர்ணயிக்கும் மனோகாரகனான சந்திர பகவான் தன் முழுப்பிரகாசத்தையும் பூவுலகுக்கு அளிக்கும் நாளே 'பௌர்ணமி' . 


ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலோ அல்லது அந்த நட்சத்திரத்தை ஒட்டி வரும் நாளிலோ பௌர்ணமி அமையும்.எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே அந்த மாதத்தை அழைக்கும் வழக்கம் உள்ளது.(உ.ம்., பெரும்பாலும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், இதற்கு மற்றொரு பெயர் மாக மாதம்). 


சந்திர பகவான் பாற்கடலில் உதித்தவர். மஹாலட்சுமியின் சகோதரர். கிழமைகளில் திங்கட்கிழமை அவருடையது.சிவனின் இடப்பாக சடையில் அமர்ந்து அருள் ஒளி வீசும் சந்திரனின் அருள் பெற சிவனாரின் இட பாகத்துக்கு உரியவளான அம்பிகையை வழிபடலாம்.  


சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். அதற்கு பௌர்ணமி உகந்த நாளாகும். 


பெற்ற தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை,  அடிக்கடி விபத்து ஏற்படும் அமைப்பு, மன அழுத்தத்தால் துன்புறுவது இப்படி பலவற்றுக்கு பலம் குறைந்த சந்திரனை காரணமாகச் சொல்லலாம். 


இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் சந்திர திசை, புத்தி, நடப்பவர்கள் (சந்திரன் ஜாதகத்தில் எவ்வாறு இருந்தாலும்), கீழ்வரும் துதியைப் பாராயணம் செய்யலாம்.

             அலைகட லதனின்றுமன்று வந்துதித்த போது
             கலைவளர் திங்களாகிக் கடவுளென்ற வருமேத்துஞ்
             சிலைருதலுமையாள் பங்கன் செஞ்சடை பிறையாய்மே
             மலைவலமா கவந்தமதியமே போற்றி போற்றி.

சந்திரன் ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் தினங்களையே சந்திராஷ்டம தினங்கள் என்கிறோம்.அத்தகைய தினங்களில் சந்திர வழிபாடு, எதிர்பாரா சிக்கல்களில் இருந்து ஒருவரைக் காப்பாற்றும்.

பௌர்ணமி தினத்தில்.....

1. பொதுவாக, பௌர்ணமி தினம் வழிபாடுகளுக்கு உரியது. சத்திய நாரயண பூஜை,  அம்பிகை வழிபாடு முதலியவை செய்ய உகந்தது.

2. லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி
இவற்றைப் பாராயணம் செய்ய அம்பிகை அருள் மழை பொழியக் காணலாம்

3. பௌர்ணமியன்று, உபவாசம் இருந்து, இரவு, நிலவு தரிசனம் செய்த பின், அம்பிகை வழிபாடு செய்து, பால், பழம், பால்பாயசம் இதில் ஏதாவதொன்றை நிவேதனம் செய்து, உட்கொள்ளலாம்.தீராத மன வருத்தம் தீர இது சிறந்த பரிகாரமாகும்.

4. நல்முத்து அணிவதும் இயன்றவர்கள் தானம் செய்வதும்,சந்திர பகவானுடைய அருளை பன் மடங்கு பெற்றுத்தரும்.

நேரமின்மையால் சுருக்கமான வழிபாட்டு முறை வேண்டும் என்று கூறுவோருக்கு......

                                                
1. ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றிக் கொள்க. ஐந்து முக குத்து விளக்கு ஏற்றினால், கருவறையில் உள்ள தெய்வத்தின் சாந்நித்யம் வந்து விடுகிறது.

2. தெரிந்த விநாயகர் துதியைச் சொல்லவும். 

3. தீப ஒளியில் அம்பிகையை எழுந்தருளுமாறு பிரார்த்திக்கவும். 

4. பூஜையில் எவ்விதக் குற்றங்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அருள வேண்டிப் பிரார்த்திக்கவும்.  


5. திருமகளுக்கு உரிய அங்க பூஜையைச் செய்யவும். 

6. வெண்ணிற மலர்கள் கொண்டு,லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கவேண்டும். 

7. ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். 

8. ஒற்றை தீபத்தை ஏற்றி, விளக்கைச் சுற்றிக் காட்டவும். 

9. நிவேதனங்களை சமர்ப்பிக்கவும். 

10. தேங்காய், வெற்றிலை, பாக்கு ,பழ‌ம் முதலியவற்றை சமர்ப்பிக்கவும். 

11. கற்பூர ஆரத்தி காட்டவும். 

12. தனக்குத் தானே மூன்று முறை சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். 

13. கோரும் வரங்களை வேண்டி,பின் பூஜையில் குற்றங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கவும். 

14. தேவியை மீண்டும் தீபத்திலிருந்து, தன் இடம் சென்றடையப் பிரார்த்திக்கவும். 

15. பிரசாதங்களை நாமும் உண்டு பிறருக்கும் விநியோகித்தல் நலம்.  


16. சந்திர தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். பௌர்ணமியன்று, சித்தர்களும் ஞானிகளும் சந்திரனுக்கு அருகில்,சூட்சும சரீரத்தில் வழிபாடு செய்வார்கள். ஆகவே, சந்திர தரிசனம்,அவர்களின் ஆசியையும் நமக்குப் பெற்றுத்தரும்.வாழ்வில் தீராத துயர் தீர இது மிக உதவும். 


வரும் மார்ச் 7,2012  மாசி மக நன்னாளில் பௌர்ணமி வழிபாடு செய்து, நலம் பல பெறலாம்.'விதியை மதியால் வெல்லலாம்'. ஆகவே, அன்றைய தினம் மதியாகிய சந்திரனுக்கு உகந்த வழிபாடுகளைச் செய்து,



  
 முழுநிலவின் கதிரொளி
பூர்ண மஹா மேரு அபிஷேகம்












வெற்றி பெறுவோம்!