நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

தேவியின் திருவடி....பாகம் 2; ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு


ஸ்ரீசக்ர நாயகி
இதன் முதல் பாகம் படிக்காதவர்கள்இங்குசொடுக்கவும்.

இந்தப் பதிவில், ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பு, அதன் விவரணம் முதலியன இதைப் படிக்கும் அன்பர்கள் தெரிந்துகொள்வதற்காகவே எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்ரத்தைப் பூஜிப்பதற்கு குருவின் அனுமதி தேவை. அவர் மூலமாக உபதேசம் பெற்று, அவர் முன்னிலையில் பல முறை பூஜித்தபிறகே சாதகன் தனியாகப் பூஜை செய்ய இயலும்.

ஸ்ரீ சக்ரம் அமைப்பும் விளக்கமும்

ஜகன்மாதாவான அம்பிகையை, வெளிமுகமாக, மந்திர,யந்திர, தாந்திரிக முறைகளால் வழிபடலாம் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். மந்திர ரூபமாக வழிபட, ஏராளமான ஸ்லோகங்கள் உள்ளன. தேவியின் மூலமந்திரங்களை குருமுகமாக அறிந்து, ஜபித்துப் பலனடையலாம்.

யந்திரமுக வழிபாடு என்பது, ஸ்ரீசக்ர வழிபாட்டையே குறிக்கும். அம்பிகையின் திருநாமம் எதுவாயினும், வழிபடுவதற்கு ஸ்ரீசக்ரத்தையே உபயோகிக்கிறோம்.அம்பிகையே ஸ்ரீசக்ர வடிவமாக இருக்கிறாள். ஸ்ரீயந்திரம் என்பது இதன் மற்றொரு பெயர். வழிபாட்டுக்குரிய யந்திரங்கள் அநேகம் இருந்தாலும் , ஸ்ரீசக்ரமே "சக்ர ராஜம்" என்றழைக்கப்படுவது, இதன் மேன்மையை உணர்த்துவதாகும்.
ஸ்ரீசக்ரம்
அம்பிகையின் வாசஸ்தானமாக,ஸ்ரீபுரம் சொல்லப்படுகிறது. மேருகிரியில் உள்ள ஸ்ரீபுரத்தில், சிந்தாமணி கிருஹத்தில், சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். ஸ்ரீயந்திரமும், மஹாமேருவும் ஒன்றா? வேறு வேறா? என்ற கேள்வி சிலருக்கு உண்டு..முதலில் ஸ்ரீசக்ரத்தின் அமைப்பைப் பார்ப்போம்.

ஸ்ரீசக்ரத்தில், மத்தியில் உள்ள புள்ளி பிந்துஸ்தானம் எனப்படும். இதைச் சுற்றி,ஆவரணங்கள் உள்ளன. ஆவரணங்கள் என்றால், மறைப்பு என்று பொருள். ஆனால் இங்கே, சுற்றுகள் எனக் கொள்க.

ஸ்ரீசக்ரத்தில் 43 முக்கோணங்கள் உள்ளன. நம் உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்ரங்களும் ஸ்ரீ யந்திரத்தில் அடங்கி உள்ளன. அதாவது, நம் தேகமே ஸ்ரீசக்ர வடிவம். ஆஜ்ஞா சக்ரமே பிந்துஸ்தானமாகக் கூறப்பட்டிருக்கிறது.

இதில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவகோணங்கள் என்றும், கீழ்நோக்கிய ஐந்து முக்கோணங்கள் சக்திகோணங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.

 

ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது சுற்றுகள் (ஆவரணங்கள்) உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தேவியின் பரிவார தேவதைகள் வசிக்கிறார்கள். இந்த ஒன்பது ஆவரணத்திற்கும் பூஜை செய்வதையே 'நவாவரண பூஜை' என்கிறோம். இதை 'பஞ்சதசாக்ஷரி' மந்திர உபதேசம் பெற்றவர்களே செய்யலாம்.மந்திரங்களில் 'தேவி கட்க மாலா' ஸ்துதியை,முறைப்படி கற்று, பாராயணம் செய்வது, நவாவரணபூஜைக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. சாக்தர்கள் இதைத் தினமும் பாராயணம் செய்கிறார்கள்.

முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.

ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.

                                                                             

ஸ்ரீசக்ரத்தில், நீள, அகலங்கள் மட்டும் இல்லாமல், உயரமும் சேர்த்து, மூன்று தளங்களில் அடுக்கடுக்காக, கூம்பு வடிவத்தில் முடிவது போல், இருக்கும் அமைப்பு 'பூர்ண மேரு' ஆகும்.

மஹாமேரு
    

அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில்,

"வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே."

என்று ஸ்ரீசக்ர நாயகியைப் போற்றுகிறார்.

ஆதி சங்கரர்,சௌந்தர்ய லஹரியில்,

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:

எனும் ஸ்லோகத்தில் ,

"ஹே தேவி, சிவஸ்வரூபமான நான்கு சக்கரங்கள், சக்திவடிவமான ஐந்து சக்கரங்கள், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தாதுக்கள் ஒன்பது, உன்னுடைய பிந்து ஸ்தானத்துடன் கூடிய மந்திர கோணங்கள், எட்டு தளங்கள், பதினாறு தளங்கள், மூன்று மேகலைகள், மூன்று பிரகாரங்கள், ஆகியவற்றுடன் சேர்ந்து, 44 தத்துவங்களாக அமைந்துள்ளன."

என்று ஸ்ரீசக்ரத்தின் வடிவத்தை விளக்குகிறார்.

இந்த ஸ்லோகத்தை, காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து, 8 நாட்கள்,தினந்தோறும், 1000 முறை ஜபம் செய்தால், புத்திர சந்தானம் உண்டாகும். ஜபம் செய்துவிட்டு, வெல்லப் பாயசம், மஹாநைவேத்தியம் (பச்சரிசி சாதம் ஒரு பிடி, வேக வைத்த துவரம்பருப்பு ஒரு ஸ்பூன்,ஒரு துளி நெய் சேர்ந்தது) நிவேதனம் செய்ய வேண்டும்.

லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ்ரீசக்ர ராஜ நிலயா, ஸ்ரீமத் திரிபுரசுந்தரி' என்று புகழ்கிறது.

ஸ்ரீசக்ர பூஜையைச் செய்யும் பேறு, பல பிறவிகளில் செய்த புண்ணியவசத்தாலேயே கிட்டும். இதை வீடுகளில் வைத்திருப்போர், மிகுந்த ஆசாரத்துடன் இருக்க வேண்டும். தினமும் இயன்றதை நிவேதனம் செய்ய வேண்டும்.தாங்கள் பூஜை செய்ய இயலாவிடினும், தகுதியானவர்களை வைத்து,வருடம் ஒரு முறையாவது பூஜை செய்ய வேண்டும்.

வெளியூருக்குச் செல்லும்போது, ஒரு பாத்திரத்தில் நீர்,ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசி, பாசிப்பருப்பு மற்றும் சில நாணயங்கள் வைத்து விட்டுச் செல்லவும். திரும்பியதும், அரிசி,பருப்பைச் சமைத்து, நிவேதனம் செய்யவும், நீரை, துளசியில் விடவும். நாணயங்களை, கோவில் உண்டியலில் சேர்க்கவும். யந்திர வடிவங்களைப் பூஜை செய்ய, அதிகப்படியான ஆசார அனுஷ்டானங்கள் முதலியவை அவசியம். இந்த விஷயத்தை ஸ்ரீமஹா மேருவையும், ஸ்ரீசக்ரத்தையும் வீடுகளில் புதிதாக வாங்கி வைக்க நினைப்போர், கவனத்தில் கொள்ள வேண்டும்.

   

அன்னையை முறையாக வழிபட்டு, வணங்கி, அவள் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!

5 கருத்துகள்:

 1. லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ்ரீசக்ர ராஜ நிலயா, ஸ்ரீமத் திரிபுரசுந்தரி'
  என்று புகழும் அருமையான 'ஸ்ரீசக்ரம் பற்றிய தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. ////
  இராஜராஜேஸ்வரி said...
  லலிதா சஹஸ்ரநாமம் 'ஸ்ரீசக்ர ராஜ நிலயா, ஸ்ரீமத் திரிபுரசுந்தரி'
  என்று புகழும் அருமையான 'ஸ்ரீசக்ரம் பற்றிய தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்...//////

  தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.  பதிலளிநீக்கு

 3. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!


  Kind Regards,
  RajaRajeshwari Jaghamani

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..