ஒரு சமயம், கார்த்தவீர்யார்ஜூனன், வேட்டைக்குச் சென்றிருந்த போது, வனத்தில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில், காமதேனுவிடமிருந்து கிடைத்த பொருட்களால் நன்றாக உபசரிக்கப்பட்டான். பின் நகருக்குத் திரும்பிய அவனுக்கு, குணமற்ற மந்திரிகள் துர்போதனை செய்யவே, காமதேனுவை விலைக்கு வாங்க வேண்டி, ஒரு மந்திரியை அனுப்பினான். முனிவர் அதற்கு சம்மதிக்காததால், அவர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த காமதேனு, மந்திரியுடன் வந்திருந்த சேனையை அழித்தது. இருந்தாலும், அந்த மந்திரி, காமதேனுவின் கன்றுக்குட்டியை அபகரித்துச் சென்று விட்டான்.
சுக்ராச்சாரியார், ஜமதக்னி முனிவருக்கு உயிரூட்டினார். அவர் மூலம் நடந்ததை அறிந்த பரசுராமர், கார்த்தவீர்யனை எதிர்த்து, அவன் தலைநகரான மாஹிஷ்மதிக்குச் சென்றார். அதற்கு முன்பாக சிவபெருமானைப் பிரார்த்தனை செய்தார். எம்பிரான், குதிரைகளுடனும், சாரதியுடனும் கூடிய தேரை மஹோதரனிடம் அளித்து அனுப்பினார். அதில் ஏறிக் கொண்டு, வில்லும் பாணங்களும் பரசுவும் ஏந்தி, தம் நண்பருடன் (அக்ருதவ்ரணர்) மாஹிஷ்மதியை அடைந்தார்.
இந்தத் திருக்கோலத்தில், பரசுராமாவதார மூர்த்தியை, திருமங்கையாழ்வார் , 'மலை போன்று உயர்ந்த தோள்களையுடைய, மிக அழகிய பரசுவை (கோடாலியை), (கார்த்தவீர்யன் முதலான) அரசர்கள் முடியும்படியாகத் தரித்தவர்' என்று துதிக்கிறார்.
(வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே).
பரசுராமர், தர்மத்தை அனுசரித்து, முதலில் கன்றை திருப்பித் தர வேண்டி, பேச்சுவார்த்தை தொடங்கினார். அரசன் இணங்காததால் போர் துவங்கினார்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு கூர வேண்டும். கார்த்தவீர்யன் மிகப் பெரிய பலவான். பக்திமான். ஆயினும் தவறான ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, 'விநாச காலே விபரீத புத்தி', கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே' என்ற நன்மொழிகளை மெய்ப்பித்தான். ஆணவம், கண் முன்னே வந்த ஆண்டவனை அறிய விடாது மறைத்தது!!.. தான் யாரை வேண்டி வரங்கள் பல அடைந்தோமோ அவரே வேறு வடிவில் தன் முன்னே வந்திருக்கிறார் என்பதை, தன் உள்ளுணர்வால் ஆரம்பத்திலேயே அறி யும் திறனை ஆணவத்தால் இழந்தான்.
கார்த்தவீர்யன், தன் பதினாயிரம் புத்திரர்களுடனும், பதினேழு அக்ஷௌஹிணி சேனைகளுடனும், பலம் வாய்ந்த தளபதிகள், நண்பர்கள் ஆகியோருடன் கூடி பரசுராமரை எதிர்த்தான். ஒரு நொடியில், பரசுராமரின் பாணங்களும் பரசுவும் எதிரிகளை துவம்சம் செய்தன. பயத்தாலும் அஞ்சி ஓடியவர்களும், இறந்தவர்களும் போக, எஞ்சியிருந்தவர்களுடன், கார்த்தவீர்யன் மறுபடியும் போரிட்டான்.
( புத்ராணாமயுதேன ஸப்தத³ஸ²பி⁴ஸ்²சாக்ஷௌஹிணீபி⁴ர்ம ஹா
ஸேனானீபி⁴ரனேக மித்ர நிவஹைர்வ்யாஜ்ருʼம்பி⁴ தாயோத⁴ன: |
ஸத்³யஸ்த்வத்ககுடா²ரபா³ணவித³ல ந்நிஸ்²ஸே²ஷ ஸைன்யோத்கரோ
பீ⁴தி ப்ரத்³ருத நஷ்டஸி²ஷ்டதனயஸ்த்வாமாபதத்³ ஹேஹய: || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
இங்கு, 'அக்ஷௌஹிணி சேனை' என்று குறிப்பிடப்படுவதைக் குறித்த ஒரு கணக்கு இதோ... ஒரு அக்ஷௌஹிணி சேனை என்பது, 21,870 ரதங்கள் (தேர் படை), 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 காலாட்படை வீர்ர்களை அடக்கியது என்று கணக்குச் சொல்கிறார்கள். பதினேழு அக்ஷௌஹிணியைக் கணக்கிட்டுக் கொள்க!.
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்
இது, அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..