
வானரர்களால் பல திக்குகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பாறைகளால் அணை கட்டி, ஸ்ரீராமர் இலங்கையை அடைந்தார்!. மரங்களும் குன்றுகளுமே ஆயுதங்களாகக் கொண்டு, வானரர்கள் போர் புரிந்தனர்!. ஸ்ரீ ராமர் தம் இளையவருடன் சேர்ந்து போர்க்களத்தில் தமது பராக்கிரமத்தைக் காண்பிக்கும் பொழுது, இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு, பின், கருடனின் சிறகுகளால் வீசப்பட்ட காற்றுப் பட்டு, விரைவில் விடுவிக்கப்பட்டார்!. பின் நடந்த போரில், சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்ட லக்ஷ்மணரின் சுவாசம் நின்று போக, பிறகு அவர், ஹனுமாரால் கொண்டு வரப்பட்ட ஔஷத மலையிலிருந்த சஞ்சீவினி மூலிகையால் பிராணனை அடைந்தார். மாயையின் பெருமையால் ஆணவம் கொண்டிருந்த இந்திரஜித்தை, லக்ஷ்மணர் முடித்தார்.