அரசராக இருந்த போதிலும், தன்னை பகவானது சேவகனாகவே கருதிக் கொள்ளும் அம்பரீஷர் , பகவத் பக்தியையே தனது பெரும் செல்வம் என எண்ணியவர்.
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், - கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
என்னும் நம்மாழ்வாரின் திருவாக்கிற்கிணங்க வாழ்பவர். முனிவர்களையும் ரிஷிகளையும், பகவானது ஸ்வரூபமாகவே எண்ணி வணங்கும் இயல்புடையவர். ஆகவே, துர்வாஸரைக் கண்டதும் ஓடிச் சென்று அவரைத் தகுந்த முறையில் உபசரித்தார். அவருக்கு ஆசனமளித்து மரியாதைகள் செய்து, உணவு உண்ண வேண்டினார். அதை ஏற்ற துர்வாஸரும், தாம் யமுனையில் நீராடி விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.
யமுனையில் நீராடிய துர்வாஸர், கண்களை மூடி பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இங்கே நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. த்வாதசீ திதி நிறைவடையும் நேரத்திற்குள் அம்பரீஷர் பாரணை செய்தாக வேண்டும். அப்போதே இந்த ஒரு வருட காலமாக அனுஷ்டித்து வந்த விரதம் நன்முறையில் நிறைவும் பெறும். ஆனால், துர்வாஸரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் கவலை கொண்ட அம்பரீஷர், தம் குருமார்களுடன் கலந்தாலோசித்தார். 'த்வாதசீ திதி நிறைவடைவதற்குள் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். அவ்வாறு அருந்துவது பாரணை செய்ததற்குச் சமம். அதே வேளையில் அதிதியாகிய துர்வாஸ மஹரிஷியை விட்டுவிட்டு உணவருந்திய பாவத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம்' என்று அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றார். அவ்வாறே பாரணை செய்து விட்டு, துர்வாஸ மஹரிஷியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.
துர்வாஸ மஹரிஷி வந்தவுடன், தகுந்த முறையில் உபசரித்தார். ஆனால் துர்வாஸரோ, தம் ஞானதிருஷ்டியின் மூலமாக, அம்பரீஷர் செய்ததைத் தெரிந்து கொண்டார். மிகுந்த கோபம் கொண்டு, 'அதிதியான என்னை போஜனம் செய்ய அழைத்து விட்டு, எனக்கு உணவளிக்காமல், தான் மட்டும் உண்டு விட்ட உனக்கு அதன் பலனைத் தருகிறேன் பார்' என்று விட்டு, தம் ஜடாமுடியிலிருந்த ஜடை ஒன்றைக் கிள்ளி, கீழே எறிந்தார். அது ஒரு மிகக் கொடிய பிசாசாக உருவெடுத்தது.
அதைக் கண்டு சிறிதும் அம்பரீஷர் மனங்கலங்கவில்லை. தம் இடம் விட்டு அசையாது நின்றார். ஆனால் அவரைக் காக்க பகவானால் அருளப்பட்ட சக்ராயுதம் அந்தப் பிசாசைத் தாக்கி, அதை ஒரு சலபப் பூச்சியைப் போல் விழுங்கி விட்டு, பின் துர்வாஸரை நோக்கிப் பாய்ந்தது.
க்ருʼத்யாம்ʼ ச தாமஸித⁴ராம்ʼ பு⁴வனம்ʼ த³ஹந்தீ
மக்³ரே(அ)பி⁴வீக்ஷ்ய ந்ருʼபதிர் ந பதா³ச்சகம்பே |
த்வத்³ப⁴க்தபா³த⁴மபி⁴வீக்ஷ்ய ஸுத³ர்ஸ²னம்ʼ தே
க்ருʼத்யானலம்ʼ ஸ²லப⁴யன்முனிமன்வதா⁴வீத் || (ஸ்ரீமந் நாராயணீயம்).
துர்வாஸர் ஓட ஆரம்பித்தார். எங்கு சென்றாலும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவரை விடாமல் துரத்தியது. துர்வாஸர் சத்ய லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரைச் சரண் புகுந்தார். அவரோ, சக்ராயுதத்தை தம்மால் மீற முடியாதென்று சொல்லி விட்டர். பின் துர்வாஸர் கைலாயத்தை அடைந்தார். சிவனார், ஸ்ரீவிஷ்ணுவையே சரணடையுமாறு ஆக்ஞாபித்தார். (சில புராணங்களில், சக்ராயுதம், பிசாசைத் துரத்த, அது பயந்து ஓடி, ஒரு கட்டத்திற்கு மேல், கோபமடைந்து தன்னை ஏவிய துர்வாஸரைத் துரத்தத் துவங்கியதாகவும், பிசாசு, சக்ராயுதம் இரண்டாலும் துரத்தப்பட்ட துர்வாஸர் பிரம்மதேவரைச் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது).
(தொடர்ந்து தியானிப்போம்!!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது, 'தமிழ் வாசல்' குழுமத்திலும், 'அதீதம்' மின்னிதழிலும் தொடராக வெளிவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..