நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

KANNANAI NINAI MANAME...BAGAM IRADU.. PART..20..கண்ணனை நினை மனமே.. பகுதி 20...அம்பரீஷ சரிதம்.

Related image

பக்தி  என்பது பூர்வ புண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது. க‌டும் வெயிலில் குடை போல்,  இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும். நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம் தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.

'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.

மிகச் சிறந்த பக்திமான்களின் சரிதங்கள் நமக்கு எப்போதும் உற்சாகமூட்டி நம்பிக்கை அளிப்பவை. அவர்களுக்கு நேர்ந்த சோதனைகளும், அவற்றை, பக்தியின் சக்தியால் அவர்கள் வெற்றி கொண்ட விதமும் படிக்குந்தோறும் நம்மைப் பண்படுத்தி, உயர்த்தக்  கூடியவை. அப்பேர்ப்பட்ட பக்திமான்களுள் ஒருவரான அம்பரீஷனின் சரிதத்தை சொல்லத் துவங்குகிறார் பட்டத்திரி.

வைவஸ்வத மனுவின் பத்தாவது புதல்வன் நபாகன். நபாகனுடைய குமாரன் நாபாகன். நாபாகனின் மைந்தனே அம்பரீஷச் சக்கரவர்த்தி .(மச்சாவதாரம் நிகழ்ந்த சமயத்தில், அந்நிகழ்வுக்குத் துணை புரிந்த சத்யவிரதனே வைவஸ்வத மனுவானார் என்று நாம் சென்ற பகுதியில் கண்டோம்).

அம்பரீஷர், ராஜரிஷி எனப் போற்றப்பட்டவர். மிகச் சிறந்த பக்திமான். இப்பூவுலகு முழுவதையும் ஒரு குடையின் கீழ் அரசு புரிந்து, நிகரற்ற செல்வத்தை அடைந்திருந்த போதிலும், அதன் காரணமாக, எவ்வித மதி மயக்கமும் அடையாதவர். பகவான் வாசுதேவனிடத்தில் அசையாத பக்தி பூண்டவர். பகவானின் பரம பக்தர்களான பாகவதர்களை மிகவும் மதித்துப் போற்றி பூஜிப்பவர்.

எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம், எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்
அம்பினல் அரக்கர் வெருக்கொள நெருக்கி, அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்,
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி,
நம்பிகாள்! உண்ண நான் கண்டுகொண்டேன்- நாராயணா என்னும் நாமம்.

என்ற திருமங்கையாழ்வாரின் திருவாக்குக்கு இணங்க, எந்நேரமும் 'நாராயண' என்னும் திருநாமத்தையே சிந்தித்து, தமக்கு சகலமும் எம்பெருமானே என்று பகவானைச் சரணடைந்து வாழ்பவர்!.

பற்றின்றி, தான் செய்யும் எல்லாவிதமான செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து, ஒருமைப்பட்ட மனதுடன் பக்தி செய்த அம்பரீஷர‌து பக்திக்கு மெச்சி, பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஆயிரம் முனைகளுடைய தம் சுதர்சன சக்கரத்தை அவரைக் காக்கும் பொருட்டு அவருக்கு அளித்து அருளினார்.

( த்வத்   ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோ(அ)ஸ்ய
ப⁴க்த்யைவ தே³வ நசிராத³ப்⁴ருʼதா²​: ப்ரஸாத³ம் | 
யேனாஸ்ய யாசனம்ருʼதே(அ)ப்யபி⁴ரக்ஷணார்த²ம்ʼ
சக்ரம்ʼ ப⁴வான்   ப்ர‌விததரா ஸஹஸ்ரதா⁴ரம் ||  (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

அம்பரீஷர், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிக உகந்த த்வாதசீ ((ஏகாதசி) விரதத்தை ஒரு வருட காலம் அனுஷ்டிக்க நிச்சயித்து, அவ்வண்ணமே, அந்த உயர்ந்த விரதத்தை, ஒத்த மனதினளான தம் பத்னியுடன் அனுஷ்டித்தார். ஒரு வருடம் கழித்து, கார்த்திகை மாதம் விரதம் நிறைவடையும் சமயத்தில், மூன்று நாட்கள் உபவாசம் இருந்து, யமுனா நதியில் நீராடி, மது வனத்தில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தார். அறுபது கோடி கோதானம் செய்து பகவானை ஆராதித்தார். பகவானின் பக்தர்களையும் பூஜித்தார்.

பின் பூஜையில் பங்கேற்ற  அனைவருக்கும் சிறந்த உணவை வழங்கி, அவர்கள் யாவரும் உண்ட பின், அவரவர் வேண்டிய பொருளை தானமாக அளித்து, பின் அவர்கள் அனைவரின் அனுமதியையும் பெற்று, பாரணை  (விரத நிறைவு) செய்ய முற்பட்டார்.

அந்தச் சமயத்தில் துர்வாஸ மஹரிஷி எழுந்தருளினார்.

(தொடர்ந்து தியானிப்போம்!).


வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, 'தமிழ் வாசல்' குழுமத்திலும், 'அதீதம்' மின்னிதழிலும் தொடராக வெளிவருகிறது!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..