சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்
த்ரிகூடம் என்னும் மலையில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தது கஜேந்திரன். முற்பிறவியில் பகவத் சிந்தனையில் இருந்ததன் காரணமாக, ஒளி பொருந்திய தேகமும் அபரிமிதமான பலமும், தேஜஸூம் கொண்டதாக விளங்கியது கஜேந்திரன். கஜேந்திரனின் அபரிமிதமான பலத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'பகவானது பக்தர்களுக்கு எங்கு தான் மேன்மை கிடைப்பதில்லை?!!' என்று, பக்தர்களின் பலத்துக்கு மூல காரணமான பகவானையே புகழ்கிறார் பட்டத்திரி!!!!...
அந்த மலையின் தாழ்வான பகுதியில், வருணபகவானுக்கு உரியதான, ருதுமத் எனப் பெயர் கொண்ட ஒரு உத்தியான வனம் இருந்தது. கஜேந்திரனும் அவனது யானைக் கூட்டமும், அந்த வனத்தில் இருந்த மரம் செடி கொடிகளை எல்லாம், சிதறடித்துக் கொண்டு சஞ்சாரம் செய்து வந்த போது, தாகம் மேலிட்டதன் காரணத்தால், அருகிருந்த ஒரு தடாகக் கரையை அடைந்தன.
தாமரை மலர்கள் நிறைந்த அந்த குளத்தில், கஜேந்திரனும் மற்ற யானைகளும், துதிக்கையால், நீரை எடுத்து அருந்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற யானைகளின் மேல் வாரி இறைத்தும், நீரை மேல் நோக்கிப் பொழிந்தும் விளையாடத் தொடங்கின.
அந்தர்யாமியாக, அனைவரின் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பகவானின் தூண்டுதலாலேயே, கஜேந்திரன், இவ்விதம் ஏரியில் புகுந்து விளையாடியது என்கிறார் பட்டத்திரி.. கஜேந்திரன் மோட்சமடைவதற்கு காரணமான நிகழ்வுகள், இதிலிருந்தே துவங்குவதால், இவ்விதம் உரைக்கிறார்.
பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே?
என்ற நம்மாழ்வாரின் திருமொழிகளை, இங்கு பொருத்தி தியானிக்கலாம்!!.
அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு முதலை, சினம் கொண்டு, கஜேந்திரனின் காலைப் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அந்த முதலையும் ஒரு சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியை அடைந்து இருந்தது. ஹூஹூ என்ற பெயருடைய ஒரு கந்தர்வன், தம் மனைவிமாருடன், இந்தக் குளக்கரையில் நீராடிய போது, நீருள் இருந்து தவம் புரிந்து வந்த 'தேவலர்' என்ற முனிவரின் காலைப் பற்றி அறியாமல் இழுத்துவிட்டான். தவம் கலைந்த முனிவர், கடும் கோபத்துடன், முதலையாகப் பிறக்க வேண்டுமென்று அவனுக்கு சாபம் கொடுத்து விட்டார். அறியாமல் செய்த தவறாகையால், பக்த சிரோமணி ஒருவருடைய காலைப் பற்றும் போது விமோசனம் கிடைக்கும் என்று சாப விமோசனமும் அருளினார்.
பரந்த இவ்வுலகில், சிறந்தது எதுவும் எளிதில் பெறப்படுவதில்லை.. நிலையான ஆனந்தமாகிய மோட்சம் அடைவதற்கான மார்க்கமும் அவ்வாறே.. தன் பக்தர்களுக்கு சாந்தியளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு சிரமத்தை அளிப்பவராகவும் பகவானே இருக்கிறார் என்று இந்நிகழ்வை உரைக்கிறார் பட்டத்திரி.
( ஹூஹூஸ்தாவத்தேவலஸ்யாபி ஸா²பாத்
க்ராஹீபூதஸ்தஜ்ஜலே வர்த்தமான: |
ஜக்ராஹைனம்ʼ ஹஸ்தினம்ʼ பாத³தே³ஸே²
ஸா²ந்த்யர்த²ம்ʼஹி ஸ்ராந்திதோ³(அ)ஸி ஸ்வகானாம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்)
(தொடர்ந்து தியானிக்கலாம்).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..