பகவானை அடைய வேண்டுமெனில் மனதை ஒருமைப்படுத்தி, பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்த வேண்டும்.... ஆனால், ஆயிரம் வழிகளில் அலையும் மனதை அடக்கி, பகவான் மேல் திருப்புவது அத்தனை எளிதான செயலா??!!.. மஹாத்மாக்களால் மட்டுமே முடிந்த இந்த விஷயத்தை, மற்றவர்களும் ஓரளவுக்கேனும் சாதிக்கும் பொருட்டே பகவான் துன்பத்தைத் தருகிறான்.
தன் பலம் முழுவதையும் திரட்டி, வந்த துன்பத்தை விரட்ட முயற்சி செய்து, முடியாமல் போகவும், இறுதியில், 'என் செயலாவது யாதொன்றுமில்லை' என்ற உண்மை உணர்ந்து, தன் முயற்சியும், தன் அறிவின் செயல்பாடும், ஓர் எல்லைக்குட்பட்டதே என்பதை அனுபவபூர்வமாக அறிந்த பின்னால், 'உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்' என்று பகவானின் திருவடிகளில் சரணாகதி அடைபவர்கள் நிரந்தரமான இன்பத்தை நிச்சயம் அடைகிறார்கள்.
யானை அரசனாகிய கஜேந்திரனும் இந்த விதிக்கு விலக்கல்ல...யாராலும் வெல்லப்பட முடியாத பலம் வாய்ந்த கஜேந்திரனுக்கு, தன் மீது ஏகாக்ர பக்தி சித்திக்கும் பொருட்டே, முதலையால் துன்பத்தை ஏற்படுத்தினார் பகவான் என்கிறார் பட்டத்திரி.
கஜேந்திரன், தன் பலத்தை எல்லாம் திரட்டி, முதலையின் வாயிலிருந்து விடுபட முயற்சி செய்தது.. இந்நிகழ்வை, ஸ்ரீமத் பாகவதம், இன்னும் விரிவாகத் தருகிறது...
'கஜேந்திரன், ஒரு நாள் இருநாள் அல்ல, சுமார் ஆயிரம் ஆண்டு காலம் வரை தன் போராட்டத்தைத் தொடர்ந்தது. தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு, அக்கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், மனம் உருகி, வேதனை தாங்காமல் கதறின. பலங்கொண்ட மட்டும் கஜேந்திரனை இழுத்துப் பார்த்தன. அவற்றால் முடியவில்லை.
இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கியவாறு அந்த இடம் விட்டு அகன்றன' என்கிறது ஸ்ரீமத் பாகவதம்..
நெடுங்காலமாகப் போராடிய கஜேந்திரனின், மனோபலமும் உடல் பலமும் வெகுவாகக் குறையலாயின. அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. உடனே, அந்த யானை, தன் துதிக்கையால், குளத்தில் இருந்த தாமரை மலர்களை எடுத்து, பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது. ( தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக ) இந்திரத்யும்னனாக இருந்த போது கற்றுக் கொண்ட 'நிர்க்குண பரப்பிரஹ்ம ஸ்தோத்திர'த்தைக் கூறிக்கொண்டே பகவானை அர்ச்சிக்கத் துவங்கியது கஜேந்திரன்.
ஆர்த்திவ்யக்த- ப்ராக்தன- ஜ்ஞான- பக்தி:
ஸு²ண்டோ³த்க்ஷிப்தை: புண்ட³ரீகைஸ்ஸமர்ச்சன் |
பூர்வாப்யஸ்தம்ʼ நிர்விஸே²ஷாத்மனிஷ்ட²ம்ʼ
ஸ்தோத்ரஸ்ரேஷ்ட²ம்ʼ ஸோ(அ)ன்வகாதீ³த்பராத்மன் || (ஸ்ரீமந் நாராயணீயம்).
பூதத்தாழ்வாரின் கீழ்க்கண்ட பாசுர வரிகளை இங்கு பொருத்தி நாம் தியானிக்கலாம்!.
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு.
தொடர்ந்து தியானிப்போம்!..
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
பகவானை சரணடைவது ஒன்றே, மிகச் சாதாரண மனிதர்களாக உள்ள நமக்கான, மிகச்சுலபமான வழி என்பதை, ஸ்ரீமந் நாராயணீயம் மூலம், வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் பாராட்டுதல்களுக்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கும் நன்றி ஐயா!.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்!.
நீக்கு