நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

​KANNANAI NINAI MANAME.. PART 41...கண்ணனை நினை மனமே.. பகுதி 41....ரிஷப தேவர் சரித்திரம்..(தொடர்ச்சி).


ரிஷபதேவரின் நூறு புதல்வர்களுள், பரதன் அரசுரிமை பெற, மற்ற புதல்வர்களுள் ஒன்பது பேர் யோகீச்வரர்கள் ஆனார்கள். ஒன்பது பேர், இப்பூமண்டலத்தின் ஒன்பது கண்டங்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்..மற்ற எண்பத்தோரு புதல்வர்களும் தவத்தில் சிறந்தவர்களாகி, மானிடர்களில் மிக உயர்ந்த நிலையை தங்கள் தபோ பலத்தால் அடைந்தார்கள். 
அதன் பின்னர், முனிவர்கள் கூடியிருக்கும் சபையில், தன் புதல்வர்களுக்கு, முக்தி மார்க்கத்தை உபதேசித்தருளினார் ரிஷப தேவர் (ஸ்ரீமத் பாகவதம், ரிஷப தேவரின் உபதேசங்களை மிகவும் சிறப்பித்துக் கூறுகிறது. 'காமிய கருமத்தால் மதி கெட்டுப் போனவர்களை, மீண்டும் அதில் புகுத்தலாகாது. அவ்விதம் மதி கெட்டுப் போனவனை, அதிலிருந்து விடுவிக்காதவர்கள், தாயுமல்லர், தந்தையுமல்லர், உறவினருமல்லர், பதியுமல்லர், குருவுமல்லர், தெய்வமுமல்லர்' என்ற உபதேசம், அவரது உபதேசங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது).

பின், அனைத்தையும் துறந்து, ஆகாயத்தையே ஆடையாகக் கொண்டு, பரமஹம்ஸ சந்நியாச மார்க்கத்தில் செல்பவராக, அந்த தேசத்திலிருந்து வெளியேறினார். மூடன், பித்தன், பேயன் இவர்களைப் போல் சஞ்சாரம் செய்யலானார்.  தாமே அனைவரின் ஆத்ம ஸ்வரூபமாக‌ இருந்த போதிலும், அனைவருக்கும் ஞானோபதேசம் அருளினார். பித்தனைப் போல் இருப்பதால், பலர் அவரை அவமதித்தாலும், அதனால் எவ்விதமான மாற்றமும் அடையாமல், பிரம்மானந்தத்தில் மூழ்கியவராக, பூமி முழுவதும் சஞ்சாரம் செய்தார்.

(வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? (நம்மாழ்வார்)).

மலைப்பாம்பு, பசு, காகம், மான் ஆகியவைகளைப் போல் வாழும் விரதங்களைக் கைக்கொண்டார் (உதாரணமாக, 'மலைப்பாம்பு போல் வாழும் விரதம் ' என்பதைப் பார்க்கலாம். மலைப்பாம்பு, இரையைத் தேடிச் செல்லாது, ஓரிடத்தில் அசையாதிருந்து, தன் பக்கமாக வரும் இரையை மட்டுமே விழுங்கும். அது போல், யோகியானவன், தனக்கான உணவைத் தேடிச் செல்லக் கூடாது. கிடைத்ததை உண்டு திருப்தியுடனிருக்க வேண்டும் என்பது பொருள்.). 

எங்கும் நீக்கமற நிறையும் பரமாத்ம ஸ்வரூபத்தை அடைந்தவராக சஞ்சாரம் செய்து வந்த ரிஷபதேவர்,  குடகு மலையில் உண்டான காட்டுத் தீயில் சரீரத்தை விடுத்தார். இத்தகைய மகிமையுடைய ஸ்ரீஅப்பன், தன் நோயைத் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி.

(ஸ²யுவ்ரதம்ʼ கோ³ம்ருʼக³காகசர்யாம்ʼ 
சிரம்ʼ சரன்னாப்ய பரம்ʼ ஸ்வரூபம் | 
த³வாஹ்ருʼதாங்க³​: குடகாசலே த்வம்ʼ 
தாபான்மமாபாகுரு வாதநாத² ||  (ஸ்ரீமந் நாராயணீயம்)).

மிகவுயர்ந்த அவதார புருஷரான ரிஷபதேவர், காட்டுத் தீயில் உடலை உகுத்ததும்  அதற்கு ஒரு காரணம் வேண்டுமென்பதாலேயே.... ஞானிகள், உடலை விடுவதற்கு நியமித்த காரணங்கள் தேவையில்லை.. பெரும்பாலான ஞானிகள், உடலை விடுவதற்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமென்பதால் தம்மை ஒரு நோய்க்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலும், தம் சீடர்களின் கர்ம வினையை பெருமளவு குறைப்பதற்காக,  அவர்களது தீவினையை, தம் உடலுக்கு மாற்றிக் கொள்வதால், புற்று நோய் முதலான நோய்களால் அவர்களது உடல் பாதிக்கப்படுகிறது. எங்கும் நிறைந்தவனின் சொரூபமாக விளங்குபவர்களுக்கு, பிறரது வினைகளை ஏற்பதும் அவற்றைத் தீர்ப்பதும் ஒரு விஷயமில்லை. உலக நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றின் காரணமாகவே தம் உடலை உகுக்கின்றனர். இவ்விதமாக, ரஜோ குணம் மேலிட்டவர்களுக்கு, முக்தி மார்க்கத்தை விளக்குவதற்காகத் தோன்றிய ரிஷபதேவரது அவதார லீலை நிறைவடைகிறது.


(தொடர்ந்து தியானிப்போம்).​

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

  1. வணக்கம்.புதுக்கோட்டையில் 11.10.15 அன்று நடக்க உள்ள வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.பதிவு செய்ய www.bloggersmeet2015.blogspot.com
    வர இயலாத சூழ்நிலை இருப்பின் விழாவில் தயாரிக்க இருக்கும் வலைப்பதிவர் கையேட்டிற்காக தங்கள் வலைப்பூவைப்பற்றி பதிவு செய்ய வேண்டிய முகவரி.bloggersmeet2015@gmail.com.
    நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..