உத்தானபாதனுடைய வம்ச சரித்திரம், பிரசேதஸர்கள், முக்தியடைந்ததோடு நிறைவடைந்தது..
பட்டத்திரி, பிரியவிரதனுடைய வம்சத்தின் கதையை அடுத்துக் கூற துவங்குகிறார். பகவான், பிரியவிரதனுடைய பேரனாகிய நாபி என்னும் அரசனிடம், புத்திரனாக அவதரித்த சரித்திரத்தை இந்த தசகத்தில் நாம் காணலாம்.
பிரியவிரதனுடைய புத்திரன் ஆக்னீத்ரன். அவனுடைய மகனே நாபி.. ஒரு சமயம், நாபி யக்ஞம் ஒன்று செய்தான். பக்தி மிக்கவனான நாபி, தன் பக்தியின் பலனாக, யாகாக்னியின் நடுவில், எம்பெருமானையே தரிசிக்கும் பேறு பெற்றான்'
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
என்ற பூதத்தாழ்வார் திருவாக்கினையும் நாம் இங்கு பொருத்தி, தியானிக்கலாம்.
நாபி, பகவானை தரிசித்த வேளையில், அந்த யாகத்தை செய்த முனிவர்கள், நாபி மகாராஜனுக்கு, பகவானையொத்த புத்திரன் உண்டாக வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள்..எம்பெருமா னுக்கு ஒப்பானவர் எம்பெருமானே அல்லவா?!..ஆகவே , பகவான், 'நானே அவதரிக்கிறேன்!' என்று அருளினார். உரிய காலத்தில், தாம் அளித்த வரத்தின்படி, நாபியின் மனைவியான மேருதேவியிடம், மக்கள் அனைவரும் மகிழ, 'ரிஷபன்' என்ற பெயருடன் திருஅவதாரம் செய்தருளினார். ரிஷபனுக்கு தக்க வயது வந்ததும், அவனிடம் ராஜ்யபாரத்தை ஒப்புவித்து விட்டு, நாபி, தன் மனைவியுடன் தபோவனம் சென்று, தவத்தின் மூலம் பகவானை ஆராதித்து, வைகுண்ட பதவியடைந்தான்.
ரிஷபன் அரசாட்சி செய்து வரும் காலத்தில், அவருடைய புகழ் எங்கும் பரவியது.. ஞானிகளையும் பலவந்தமாக மோகத்தில் ஆழ்த்தும் மஹாமாயையின் லீலைக்கு, தேவர்களின் தலைவனும் தப்பவில்லை.. தேவேந்திரன், ரிஷபனின் பெருமைகளைக் கண்டு பொறாமை கொண்டான். அஜநாபம் என்னும் பூமண்டலத்தில் மழை பொழிவதைத் தடுத்தான்!.. இதன் மூலம் பஞ்சம் ஏற்படும், நல்லாட்சி நடைபெறாததால் மழை பொழியவில்லை என்று ரிஷபனின் பெருமைக்கு மாசு ஏற்படுமாறு செய்து விடலாம் என்பது அவன் எண்ணம். . ஆனால், பகவான் தன் யோகபலத்தால் மழை பொழியச் செய்தார்.
இந்திரன், தன் தவறை உணர்ந்தான். அதை சரி செய்யும் விதமாக, 'ஜயந்தி' என்ற தன் மகளை, ரிஷபனுக்கு மணம் செய்து கொடுக்க முன்வந்தான்.
எந்நேரமும் ஆத்மானந்தத்தில் திளைத்து இருப்பவராயினும், ரிஷபன், (அரசனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டி) ஜயந்தியை மணந்து, நூறு புதல்வர்களைப் பெற்றார். அவர்களுள் மூத்தவனான பரதன், அரசாளும் உரிமை பெற்றவனானான். ஸ்ரீமத் பாகவதம், இந்த பரதனின் பெயராலேயே, நம் நாடு, 'பாரதம்' என்ற பெயர் கொண்டதாயிற்று என்று கூறுகிறது.
ஜிதேந்த்³ரத³த்தாம்ʼ கமனீம்ʼ ஜயந்தீ-
மதோ²த்³வஹன்னாத்மரதாஸ²யோ(அ)பி |
அஜீஜனஸ்தத்ர ஸ²தம்ʼ தனூஜானேஷாம்ʼ
க்ஷிதீஸோ² ப⁴ரதோ(அ)க்³ரஜன்மா || (ஸ்ரீமந் நாராயணீயம்).
(தொடர்ந்து தியானிக்கலாம்!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
மிகவும் அழகான பயனுள்ள தொடர் பதிவு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு