துருவன் தவம் செய்யச் சென்றதும், செய்தியறிந்த துருவனின் தந்தையின் மனம் கலக்கமடைந்தது. தான் செய்த தவறை நினைத்து வருந்தினான். அப்போது அவன் முன் வந்த நாரத மஹரிஷி, அவனை சமாதானப்படுத்தினார்.
மதுவனத்தில், பாலன் துருவன், பகவானிடம் மனதை அர்ப்பணம் செய்து, படிப்படியாக, தன் தவத்தின் கடுமையை அதிகரித்தான். இவ்வாறு ஐந்து மாதங்கள் கழிந்தன.
ஸ்ரீமத்பாகவதத்தில், துருவனின் தவம், மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. துருவன், தன் தவத்தின் முதல் மாதத்தில், மூன்று நாட்களுக்கொரு முறை விளாம்பழமும், இலந்தைப் பழமும் மட்டும் ஆகாரமாகக் கொண்டான். இரண்டாவது மாதம், ஆறு நாட்களுக்கொருமுறை, உதிர்ந்த இலைகளையும், புல்லையும் உணவாகக் கொண்டான். மூன்றாவது மாதம், ஒன்பது நாட்களுக்கொரு முறை, நீரை மட்டும் அருந்தினான். நான்காவது மாதம், பன்னிரண்டு நாட்களுக்கொரு முறை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு, மூச்சையடக்கி, தியானத்தில் ஆழ்ந்தான்.
ஐந்தாவது மாதம், மூச்சை முழுவதும் அடக்கி, பிரம்மத்தையே தியானித்து, அசைவில்லாமல் ஒற்றைக் காலில் நின்று தவமியற்றினான். அவன் மனம் முழுவதும், பகவானே நிறைந்திருந்தார். வேறொன்றையும் அவன் காணவில்லை.
(முடிசேர் சென்னி யம்மா!நின் மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே! என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர் தூநீர் முகில்போல் தோன்றாயே (நம்மாழ்வார்).
திக்குகளெல்லாம், துருவனுடைய கடும் தவத்தால் திணறலாயின...(அதாவது, துருவனுடைய தவம், திசைகளனைத்தையும் அதிரச் செய்தது). தேவர்கள் எம்பெருமானை வேண்டினர். தம் உள்ளத்தில் உதித்த கருணையால், பகவான், தம் ஞானானந்த ஸ்வரூபத்தில் லயித்திருந்த துருவன் முன்பாக, கருடாரூடனாகத் தோன்றியருளினார்.
(தாவத்தபோப³லனிருச்ச்²வஸிதே தி³க³ந்தே
தே³வார்தி²தஸ்த்வமுத³யத்கருணார் த்³ரசேதா: |
த்வத்³ரூபசித்³ரஸனிலீனமதே: புரஸ்தா
தா³விர்ப³பூ⁴வித² விபோ⁴ க³ருடா³தி⁴ரூட⁴: || (ஸ்ரீமந் நாராயணீயம்)).
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. (நம்மாழ்வார்).
(எம்பெருமானே கருணையின் ஸ்வரூபம்.. அவர் உள்ளத்தில் கருணை உதித்ததாகச் சொல்வது, அவரது அபரிமிதமான கருணையின் வெளிப்பாடை சொல்வதற்காகவே... மிகக் குறுகிய காலத்தில், எம்பெருமானின் கருணைக்குப் பாத்திரமானவன் துருவனே... இளங்குழந்தையாய் இருக்கும் போதே, பகவானிடம் மனதை அர்ப்பணம் செய்ததன் பலனாக, மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை வெகு விரைவில் அடைந்தான். மிக நல்ல இகலோக வாழ்வோடு, தேவருக்கும் கிட்டாத உன்னதமான பதம் கிடைக்கப் பெற்றான்.. இத்தகைய பெரும் பேறு, துருவனின் ஒப்பில்லாத பக்தியால் கிட்டியதல்லவா?....தேவர்களின் வேண்டுதலும் எம்பெருமானின் திருவுளமே.. தேவர்களின் உள்ளத்தில், இவ்விருப்பத்தை தோற்றுவித்து, அவர்களை இவ்விதம் பிரார்த்திக்குமாறு செய்ததும் எம்பெருமானின் லீலையே..).
பகவானுடைய தரிசனத்தின் காரணமாக ஏற்பட்ட ஆனந்த அலைகள் மனதில் பாய, பகவானின் திருவுருவாகிய அமுதம் கண் வழியாகப் பாய்ந்து, அதில் முழுகிவிட்டாற் போலானான் துருவன்.
(தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போ,
தூநீர்க் கடலுள் துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே! (நம்மாழ்வார்)).
பகவானை பலவாறாகத் துதிக்க எண்ணியும் , ஆனந்தத்தால் வார்த்தைகள் வராமல் திணறினான். சப்தபிரம்ம வடிவான, தம் சங்கினால் அவன் கன்னத்தை அன்புடன் தொட்டருளினார் பகவான்.
( துருவன் செய்த துதி, பக்தி உலகத்தில் பிரதானமான இடம் வகிக்கிறது..'துருவ ஸ்துதி', மகாத்மாக்களால் உயரியதென்று போற்றப்படுகின்றது. பக்தியின் மாசுமறுவற்ற ஒளி, உள்ளத்தில் பிரகாசிக்க, செய்த தவத்தின் பலனான ஞானத்தால், வாழ்வின் நோக்கமே தன் முன் வந்ததென்று உணர்ந்து, மானிடப் பிறப்பெடுத்தவர், பகவானிடம் எதைப் பிரார்த்திக்க வேண்டுமோ அதையே செய்தான் துருவன்).
மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பிரார்த்தித்த துருவனிடம், அவன் தவத்தை ஆரம்பித்த நோக்கமறிந்த பகவான், இகலோக சாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளினார். 'நீண்டகாலம் அரசாண்டு, அதன் பின்னர், அனைத்திற்கும் மேலானதும், மீண்டும் (பிறவிச் சுழலுக்கு) திரும்பி வருதல் இல்லாததுமான (துருவ) பதத்தை அடைவாயாக' என்று ஆசி கூறினார்.
(தொடர்ந்து தியானிக்கலாம்...).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
மனம் போல் வாழ்க
பதிலளிநீக்கு