சென்ற தசகத்தில், நாம், கபில மஹரிஷி, தன் திருவாக்கினால் உரைத்த, கபில கீதையை கேட்டு, கபில மஹரிஷியைத் தியானித்தோம்!.. யாரொருவர், பக்தி, சிரத்தையுடன், கபில மஹரிஷியின் அவதார வைபவத்தையும், கபில கீதையையும் கேட்கிறார்களோ அல்லது உபதேசிக்கிறார்களோ, அவர்களுக்கு, பகவானின் பாதாரவிந்தங்களில் நிலைத்த பக்தியும், மோக்ஷமும் கிடைக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.
இந்த தசகம், நர நாராயணர்கள் அவதரித்த நிகழ்வு குறித்தும், ஸஹஸ்ர கவசன் என்னும் அசுரனை, அவர்கள் சம்ஹாரம் செய்தது குறித்தும், இந்திரனது கர்வத்தை அடக்கியமை குறித்தும் விவரிக்கிறது.
ப்ரஜாபதிகளுள் ஒருவரான, தக்ஷப்ரஜாபதி, ஸ்வாயம்புவ மனுவின் புத்திரியான 'ப்ரஸூதி' என்பவளை மணந்தார். இவர்களுக்கு, பதினாறு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மணப் பருவம் எய்தியதும், பதிமூன்று பெண்களை தர்மதேவருக்கும், ஸ்வதா என்பவளை பித்ருதேவதைகளுக்கும், ஸ்வாஹா என்பவளை, அக்னி தேவருக்கும், ஸதீ என்பவளை, பகவானின் அம்சமான கிரீசருக்கும் (சிவன்) மணம் செய்து கொடுத்தார்.
தர்மதேவரின் மனைவியருள் ஒருத்தி 'மூர்த்தி' என்ற திருநாமமுடையவள். அவள் தன் புண்ணியவசத்தால், பகவானையும் (நாராயணன்), நரன் என்ற அவரது தோழரையும் குழந்தைகளாகப் பெற்றாள். பெரும்புகழை உடைய இந்த அவதாரத்தினால் மகிழ்ந்த தேவகணங்கள், துந்துபிகளை முழக்கினர். பூமாரி பொழிந்தனர்.
நர நாராயணர்கள், தவத்திலும், பராக்கிரமத்திலும் தலைசிறந்து விளங்கினர்.
'சஹஸ்ரகவசன்' என்னும் பெயருடைய அசுரன் ஒருவன் இருந்தான். ஆயிரம் கவசங்களால் பாதுக்காக்கப்படுவதால், அவன் இவ்விதம் அழைக்கப்பட்டான். அந்தக் கவசங்கள், தபோ பலத்தினால் மட்டுமே உடைபடக் கூடியன. ஆகவே, நர நாராயணர்கள், ஒருவர் மாற்றி ஒருவர், அவனோடு யுத்தம் செய்தனர். ஒருவர் யுத்தம் செய்கையில், மற்றவர் தவம் செய்தார். ஒருவர், அசுரனது ஒரு கவசத்தை உடைத்ததும் மற்றவர், தன் தவத்தை முடித்து அவனுடன் போர் துவக்குவார். இவ்வாறு செய்து, அவனுடைய ஆயிரம் கவசங்களையும் உடைத்து, அவன் ஒரே ஒரு கவசத்துடன் இருக்கும் போது அவனை முடிக்கும் லீலையைச் செய்தனர் இருவரும்.
( இந்த சஹஸ்ரகவசனே, தன் இறுதிக் காலத்தில், சூரியலோகத்தைச் சென்றடைந்ததாகவும், அவனே மறு பிறவியில், கவச குண்டலங்களுடன் கர்ணனாக பிறந்ததாகவும் ஒரு கூற்று உள்ளது).
அதன் பின், நாராயணராகிய பகவான், தம் சகோதரனான நரனுடன் சேர்ந்து, பதரிகாசிரமத்தில் மோக்ஷ தர்மத்தை அனுசரித்துக் கொண்டும், உபதேசித்துக் கொண்டும் வரும் போது, தேவேந்திரன், அவருடைய புலனடக்கத்தையும் தபோ பலத்தையும் கண்டு, பொறாமையுற்றான். அதைக் கலைக்க வேண்டி, மன்மதனையும், தேவமாதர்களையும் அனுப்பினான்.
மன்மதனும், மலயமாருதம், வசந்த ருது முதலான தன் உறவினர்களுடன் கூடி, தேவமாதர்களின் லீலைகளாலும், கடைக்கண் வீச்சாகிய அம்புகளாலும் நாராயணரை பல தடவைகள் தாக்கினான். ஆனால், அவன் தோல்வியையே தழுவினான். மேலும் அவன், இவ்வாறு நாராயணர் அசைக்க முடியாதவராக இருப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அப்போது, புன்சிரித்த வண்ணம் பகவான் கீழ்வருமாறு கூறினார்.
'மன்மதா!, வசந்தனே!, தேவமாதர்களே!, அஞ்ச வேண்டாம். என் மனதிலிருந்து தோன்றியவர்களைப் பாருங்கள்!!...' என்று சொல்லி விட்டு, தமக்கு பணிவிடை செய்யக் காத்திருக்கும், அழகிய விழிகளை உடைய பெண்களைக் காட்டினார். அவர்களது அழகைக் கண்டு வெட்கிய, மன்மதனும், தேவ மாதர்களும், அவர்களை வலம் வந்து வணங்கினர்.
பின்னர், மன்மதன், தேவ மாதர்கள் உள்ளிட்ட தேவ கணங்கள், பகவானால் சிருஷ்டிக்கப்பட்ட, ஸ்வர்க்கவாசிகளின் கர்வத்தைப் போக்கடிக்கக் கூடிய அழகு வாய்ந்த ஊர்வசி என்ற பெண்ணை, வெட்கத்துடன் தம்முடைய குழுவில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டார்கள். ( 'ஊரு' என்றால் தொடை என்று பொருள்.. பகவான் தம்முடைய தொடையிலிருந்து சிருஷ்டித்தமையால், 'ஊர்வசி' என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது!).
இவ்விதம் சொல்லி வந்த பட்டத்திரி, தாம் கிருஷ்ணாவதாரத்தின் மேல் வைத்திருக்கும் அளப்பரிய பக்தியையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.. மற்ற அவதாரங்களைப் பற்றி, விவரிக்கும் போதே, பட்டத்திரியின் கிருஷ்ண பக்தியும் இடையிடையே வெளிப்பட்டு விடுகின்றது.. இப்போதும் பட்டத்திரி கீழ்வருமாறு சொல்கிறார்!.
த்³ருʼஷ்ட்வோர்வஸீ²ம்ʼ த்வம்ʼ கதா²ம்ʼ ச நிஸ²ம்ய ஸ²க்ர:
பர்யாகுலோ(அ)ஜனி ப⁴வன்மஹிமாவமர்ஸா²த் |
ஏவம்ʼ ப்ரஸா²ந்தரமணீயதரோ(அ)வதாரஸ்
த்வத்தோ(அ)தி⁴கோ வரத³ க்ருʼஷ்ணதனுஸ்த்வமேவ ||
( 'ஊர்வசியின் அழகைக் கண்டும், உமது லீலையைக் கேட்டும், உமது மகிமையை உணர்ந்த இந்திரன், தன் செயலை எண்ணி மனங்கலங்கினான். ஹே வரதா!....அமைதியும் அழகும் மிக்க இந்த அவதாரத்தைப் பார்க்கிலும், உமது கிருஷ்ணாவதாரமே சிறப்பாக விளங்குகின்றது').
(கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து
மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்
திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ
எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே. (நம்மாழ்வார்)).
(அடுத்த பகுதியில், 'தக்ஷ யாகம்').
தொடர்ந்து தியானிப்போம்!.
வெற்றி பெறுவோம்!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
நர நாரயணர்கள் அவதாரக்கதையின் மூலம் பல புதிய தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குகிருஷ்ணாவதாரமே அனைத்திலும் சிறப்பு வாய்ந்தது என்பது உண்மை. ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய லீலைகள் போதுமே........... நம் மனதுக்கு சாந்தி ஏற்படுத்த.:)