நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 5 மே, 2015

KANNANAI NINAI MANAME.. PART 28...கண்ணனை நினை மனமே!.. பகுதி 28... கபில கீதை (தொடர்ச்சி..).உத்தம பக்தி!!..


கபிலராக அவதரித்த பகவான் ஸ்ரீவிஷ்ணு, தன் தாயாகிய தேவஹூதிக்கு, மேலும் உபதேசிக்கிறார்!. என்ன விதமான செயல்களைச் செய்தால், உத்தம பக்தி உண்டாகும் என்று கூறுகின்றார்.
மம கு³ணகு³ணலீலாகர்ணனை​: கீர்த்த‌னாத்³யை​:
மயி ஸுரஸரிதோ³க⁴ப்ரக்²யா- சித்தானுவ்ருʼத்தி​: | 
ப⁴வதி பரமப⁴க்தி​: ஸா ஹி ம்ருʼத்யோர் விஜேத்ரீ
கபில தனுரிதி த்வம்ʼ தே³வஹூத்யை ந்யகா³தீ³​: ||
​( ' என்னுடைய கல்யாண குணங்களையும், லீலைகளையும் கேட்பதாலும்,    கீர்த்தனம் முதலானவைகளைச்  செய்வதாலும், கங்கையின் பிரவாகம் போன்ற தடையில்லாத உத்தம பக்தி ஏற்படுகின்றது. அந்த உத்தம பக்தியானது,  (சம்சார சாகரமென்னும்) ம்ருத்யுவை ஜெயிக்க வல்லது  என்று கபில மூர்த்தியாகிய நீர் தேவஹூதிக்கு உபதேசம் செய்தீர்கள்!').​

உத்தம பக்தியானது,  மரணமில்லாப் பெருவாழ்வாகிய பகவானின் திருவடி நிழலின் கீழ் அழைத்துச் செல்லும் மகிமை வாய்ந்தது..  

இது, ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னும் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது...அதன்படி, நிர்க்குண பக்தியோகத்தின் லட்சணமாகக் கூறப்படுவது பின்வருமாறு...

இறைவன் எல்லா உயிரினங்களிடத்தும் ( பூதாத்மாவாக) இருக்கிறான். அவ்வாறிருக்க, சக உயிரினங்களிடம், பேதம் காட்டும் ஒருவனது பக்தியை இறைவன் ஏற்பதில்லை. மனிதர்களின் குணங்களை ஒட்டி, அவர்களிடம் காணப்படும் பக்தியும் வேறுபடுகின்றது.. கோபம், பேதபுத்தி ஆகியவை உள்ள மனிதன், 'தான் பக்திமான்' என்று பிறரால் புகழப்படுவதற்காகவோ (டம்பம்), அல்லது பிறர் செய்யும் வழிபாட்டைக் கண்டு அதனால் எழுந்த பொறாமையின் காரணமாகவோ,  இறைவனை வழிபடுவானேயானால் அவன் 'தாமஸன்' என்று அறியப்படுவான்.

உயிரினங்கள் அனைத்திலும் உறைவது  இறைவனே என்று அறியாமல் வித்தியாசம் பாராட்டும் பேதபுத்தியுள்ள ஒருவன், உலக சுகங்களையோ, செல்வத்தையோ, வேண்டி  பூஜிப்பானேயானால், அவன் 'ராஜஸன்'. இவ்விதம் பேதபுத்தியில்லாமல், தன் பாபத்தைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடனோ, தான் செய்யும் பூஜையை, இறையர்ப்பணமாகச் செய்பவன் எவனோ, அல்லது இறைவனைப் பூஜிக்க வேண்டியது தன் கடமையென்ற எண்ணத்துடனோ, பூஜிப்பவன் எவனோ அவனே 'சாத்விகன்'.

​இறைவனுடைய குணங்களைக் கேட்ட மாத்திரத்தில், சமுத்திரத்தை நோக்கி கங்கை ஓடுவது போல்  மனமானது இறைவனை நோக்கி ஓடுவதாகவும், எவ்வித காரணமோ, எதிர்பார்ப்போ இல்லாததாகவும் எந்த பக்தி பகவானிடம் இருக்கிறதோ அதுவே உத்தமமான, உயர்ந்த பக்தி!.​ 

(அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: | 
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || ( பகவத் கீதை, பக்தியோகம்).

(எதையும் எதிர்பார்க்காது,  தூயவனாய், பற்றுதலில்லாதவனாய், கவலை நீங்கியவனாக‌, எல்லா ஆடம்பரங்களையும் துறந்து, என்னிடம் பக்தி செய்பவனே எனக்கு மிகப் பிரியமானவன்)).

மிக உயர்ந்த, அரிய பொருட்களைக் கொண்டு, இறைவனைப் பூஜித்தாலும், ஜீவர்களிடத்தில், வித்தியாசம் பாராட்டி, அவர்களிடத்து உறையும் பகவானை அவமதிப்பவர்களின் பூஜையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. 'ஒருவன், தனக்கும் பிறருக்கும் சிறிதளவேனும் பேதம் பாராட்டுவானேயானால், அவனுக்கு நான் கொடிய பயத்தை(ம்ருத்யு) தருகிறேன்' என்கிறார் பகவான். இங்கே  'கொடிய பயம்' என்று குறிக்கப்படுவது, பிறப்பிறப்புக்களால் சூழப்பட்ட உலகியல் வாழ்வினின்றும் விடுபடாமல் சிக்கித் துயருறுதலே!. நிலையான ஆனந்தமாகிய இறைவனது திருவடியை அடைதலே பயமற்ற நிலையாகும்.....

இவ்வாறு ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.

'கீர்த்தனம் முதலியவைகளைச் செய்வதால்' என்று குறிப்பாக பட்டத்திரி கூறுவது, 'நவதா   பக்தி' யையே (ஒன்பது வகையான பக்தி) என்று சொல்கிறார்கள்.. இறைவனது புகழை செவிமடுப்பது (ச்ரவணம் ), இறைவனின் புகழைப் பாடுவது (கீர்த்தனம்), எப்பொழுதும் இறைவனையே மனதில் நினைத்தல் (ஸ்மரணம் ), இறைவன் அடியிணைகளுக்கு தொண்டு செய்தல் (பாதஸேவனம் ) மலரால் அவன் பாதத்தில் அர்ச்சனை செய்தல் (அர்ச்சனம்), இறைவனை நமஸ்கரித்தல், வணங்குதல்  (வந்தனம்), இறைவனின் பணியாளாக, தம்மைக் கருதி சேவை செய்தல்   (தாஸ்யம்), இறைவனை நண்பனென எண்ணி  வழிபடுதல் (ஸ‌க்யம்), தம்மையும் தமக்கு உரியவற்றையும், இறைவனிடம் முழுதுமாக சமர்ப்பணம் செய்வது (ஆத்மநிவேதனம்) ஆகியவையே  ஒன்பது வகையான பக்தி!.

(ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர்,
சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே.

 புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.

 இங்கே திரிந்தேற் கிழக்குற்றென். இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச் செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்  புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட் டோட அருளிலே? (நம்மாழ்வார்)).

இத்தகைய உத்தமமான பக்தியில்லாமல், பற்று மிக்கவனாக, மிகுந்த கஷ்டங்களுக்கு உட்பட்டு, பொருளீட்டி, உலகியல் வாழ்வில் உழல்பவனாக வாழ்பவன் நரகத்தில் புகுகின்றான் என்று கபில மூர்த்தியாக அவதரித்த பகவான், தேவஹூதிக்கு உபதேசித்தார்.

(தொடர்ந்து தியானிப்போம்).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள்  படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..