நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME...PART 26....கண்ணனை நினை மனமே.. பகுதி 26...கபில அவதாரம்.


ஸ்ரீமத் பாகவதத்தில், பகவானின் அவதார மகிமைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பகவானின் பத்து அவதாரங்களைத் தவிர, மன்னுயிர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு, எடுத்த, வேறு சில அவதாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமந் நாராயணீயத்திலும், அற்புதமான ஸ்லோகங்களால், அவை சுருக்கமாக விளக்கப்படுகின்றன.
பகவான் ஸ்ரீமந் நாராயணர், கபிலராக, தத்தாத்ரேயராக, நரநாராயணராக, ரிஷபதேவராக பற்பல அவதாரங்களை எடுத்தருளியிருக்கிறார்.   

ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்,
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்,
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே.

என்ற நம்மாழ்வார் திருமொழியை இங்கு உன்னி உணரலாம்.

இந்த தசகத்தில்,  கபிலராக திருஅவதாரம் செய்து, 'கபில கீதை' எனப் புகழ்பெற்ற சாங்கிய யோகத்தை உபதேசித்தது வரையில் பார்க்கலாம். 

​பிரம்ம தேவரின் புதல்வரான ஸ்வாயம்புவ மனு, பகவானின் திருவடிகளையே இடையறாது தியானித்துக் கொண்டும், அவரது திவ்ய சரித்திரங்களைப் படித்துக்  கொண்டும் தமது மன்வந்திர காலத்தை எவ்வித தடைகளுமின்றி சுகமாக கழித்து வந்தார். அச்சமயம், பிரம்மதேவரின் நிழலில் இருந்து தோன்றிய கர்த்தமர் என்னும் பிரஜாபதி, சிருஷ்டியில் விருப்பமுடையவராக, சரஸ்வதி நதிக்கரையில் பத்தாயிரம் வருஷங்கள் தவமியற்றினார். அதன் பலனாக, பகவான் ஸ்ரீமந் நாராயணர், அவருக்குக் காட்சியளித்தார். 

தமது தாமரை மலரையொத்த திருக்கரத்தில், விளையாட்டாக ஏந்திய தாமரை மலருடனும், புன்னகையால் மலர்ந்த திருமுகத்துடனும், கருடன் மேல் எழுந்தருளியவராக, பகவான் கர்த்தமருக்கு திருக்காட்சி அளித்தார். (ஆனால், ஸ்ரீமத் பாகவதத்தில், ஸ்ரீமந்நாராயணர், கர்த்தமருக்கு சப்த பிரம்ம வடிவினராகக் காட்சியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது).

தமது தரிசனத்தினால் மகிழ்ந்திருந்த கர்த்தமரிடம், பகவான், 'கர்த்தமரே, பிரம்ம புத்திரரும், ராஜரிஷியும், தருமத்தை நன்குணர்ந்தவரும், பரந்த இப்பூமியை ஆள்பவருமான, ஸ்வாயம்புவ மனு, தன் தர்மபத்தினியான, சதரூபாவுடன், உம்மைக்காணும் பொருட்டு, நாளை மறுநாள் வருவார். உத்தம குணசாலியும், அழகியுமான தம் புத்திரியாகிய தேவஹூதியை உமக்குக் கொடுக்கப் போகிறார். நீரும் அவளை ஏற்று, இல்லற‌ தர்மத்தை பரிபூர்ணமாக அனுசரிக்கப் போகிறீர்!. உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள். பிறகு, பத்தாவதாக, நானும்  உமது பத்தினியாகிய தேவஹூதியிடம் எனது அம்சமாக அவதரித்து, ஸாங்கிய தத்துவ ஸம்ஹிதையைச் செய்யப் போகிறேன். நீர் எனது அவதாரம் நிகழ்ந்ததும், சந்நியாச தர்மத்தைக் கைக்கொண்டு,  எல்லாக் கர்ம பலன்களையும் என்னிடமே அர்ப்பணம் செய்து, என்னை அடையப் போகிறீர் ' என்ற அமுத வார்த்தைகளை அருளினார். மகிழ்வெய்திய கர்த்தமர், ஸ்வாயம்புவ மனுவின் வருகைக்காக காத்திருந்தார்.

நாரத மஹரிஷியின் உபதேசத்தால் தூண்டப்பட்ட‌  ஸ்வாயம்புவ மனு, பகவான் கர்த்தமரிடம் குறிப்பிட்ட நாளில்,  தமது பத்தினியுடனும், புத்திரியுடனும் கர்த்தமரை நாடி, பிந்து ஸரஸ் வந்தடைந்தார். அவர்களது வரவை எதிர்பார்த்திருந்த கர்த்தமர், அவர்களை வரவேற்று, அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்தார்.

பின், கர்த்தமருடைய சம்மதத்தின் பேரில், கர்த்தமருக்கும், தேவஹூதிக்கும் திருமணம் நடைபெற்றது.  கர்த்தமர், திடமான மனதுடையவராக, பகவானின் பூஜையிலேயே ஆழ்ந்திருந்தார். அவருக்கு, தேவஹூதி, தக்க பணிவிடைகள் செய்து வந்தாள். அவளது பணிவிடையால் கவரப்பட்ட கர்த்தமர், அவளிடம் மனம் மகிழ்ந்து அன்பு செய்தார். தம் யோக பலத்தால் சிருஷ்டித்த தேவ விமானத்தில், தேவலோகத்துப் பெண்கள், தம் மனைவிக்கு தோழிகளாய் விளங்க, தம் மனைவியின் மனம் கவரும் வண்ணம் எடுத்துக் கொண்ட அழகிய சரீரத்தோடு, தேவஹூதி மகிழும்படியாக வானவெளிகளில் சஞ்சரிக்கலானார்.

தம் மனைவி, பல குழந்தைகளை விரும்புவதறிந்து, தம்மை, யோகபலத்தால், மனதில் ஒன்பது வடிவாக வகுத்துக் கொண்டு, ரமிக்கலானார்.

மிகவும் அழகான ஒன்பது பெண் குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தனர். அதன் பின் கபிலர் வனம் செல்ல முயன்றார். ஆயினும், மனைவியின் விருப்பத்திற்காகவும், எம்பெருமானின் திருவாக்கிற்கொப்ப, அவரது அவதாரத்தை எதிர் நோக்கியும் நூறு வருஷங்கள் அந்த இடத்திலேயே வாழ்ந்து வந்தார். ( ஸ்ரீமத் பாகவதத்தின்படி, கபிலர், தேவஹூதியை மணம் புரியும் முன்பு, தாம், சந்ததிக்காகவே இல்லறத்தில் ஈடுபட விரும்புவதாகவும், அதன் பின்னர், தாம் வனம் சென்று, துறவு நெறியை பின்பற்றி, இறையடி சேர விரும்புவதாகவும்  கூறி, அதற்கு தேவஹூதி சம்மதித்த பின்னரே திருமணம் நடைபெறுகின்றது).

எம்பெருமான், தாம் கூறியருளியபடி, உலக மக்களுக்குப் பரமாத்ம தத்துவத்தை வெளியிடும் பொருட்டு, கபிலராக அவதரித்ததும், அவரை வணங்கி, அவரிடம் அனுமதி பெற்று, முக்கடன்களும் நீங்கியவராக,  கர்த்தமர் துறவறம் மேற்கொள்ளப் புறப்பட்டார்.

கர்த்தமர் வனமேகிய பின்னர், தம் தாயான தேவஹூதிக்கு, கபிலர் உபதேசித்தது, 'கபில கீதை' என்று போற்றப்படுகின்றது. அவ்விதம் உபதேசித்த, கபில ரூபியான ஸ்ரீஅப்பனை, தம் வியாதிக் கூட்டத்தைப் போக்கியருளுமாறு பட்டத்திரி பிரார்த்திக்கிறார்.

வனமேயுஷி கர்த³மே ப்ரஸன்னே 
மதஸர்வஸ்வமுபாதி³ஸ²ஞ்ஜனன்யை | 
கபிலாத்மக வாயுமந்தி³ரேஸ²த்வரிதம்ʼ 
த்வம்ʼ பரிபாஹி மாம்ʼ க³தௌ³கா⁴த் ||

'(பகவான் அவதரித்ததால்) மகிழ்வுற்ற கர்த்தமர், வனம் சென்ற பின்னர்,  மதத்தின் தத்துவங்கள் அனைத்தையும்,  தம் தாயாருக்கு உபதேசித்த கபில ரூபமான ஸ்ரீஅப்பனே!,, என்னை வியாதிக் கூட்டங்களிலிருந்து, விரைவில் காத்தருளும்!...'.

இந்த ஸ்லோகம், உபதேச மந்திரமாகவே போற்றப்படுவதால், இதனை மூன்று முறைகள் சொல்ல வேண்டும் என்பர். பிறவிப் பிணியையே நாசம் செய்ய வல்ல மகத்துவம் வாய்ந்தது இந்த ஸ்லோகம் என்பதால், பலர் இதனை தினசரி பாராயணத்தில் சேர்த்துச் செய்கின்றனர்.

(அடுத்து..'கபில கீதை'..)

தொடர்ந்து தியானிக்கலாம்.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..