நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME..PART 24...கண்ணனை நினை மனமே!.. பகுதி:24..வராஹ அவதாரம் (தொடர்ச்சி).



ஸ்ரீமத் பாகவதத்தில், மைத்ரேயர் மற்றும் விதுரரிடையே நடைபெறும் உரையாடலில், வராஹ அவதாரம் குறித்துச் சொல்லப்படுகின்றது.. ஸ்வேத வராஹ கல்பத்தில், ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிரம்மாவின் நாசியிலிருந்து தோன்றி, பூமியைக் காத்தார் பகவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அது போல், ஆறாவதான, சாக்ஷூஷ மன்வந்திரத்தில், திடீரென ஏற்பட்ட பிரளய வெள்ளத்திலிருந்து, கரு நிறமுடைய பன்றி வடிவத்தில் தோன்றி, பூமியைக் காத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்தார் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்த இரு நிகழ்வுகளையும் சேர்த்தே, மைத்ரேயர் விதுரரிடம் கூறினார் என்பது பெரியோர்களின் கருத்தாக இருக்கின்றது.


பிரம்மாவின் நாசி துவாரத்திலிருந்து, வெள்ளைப் பன்றியின் உருவில் தோன்றிய எம்பெருமான், முதலில், கட்டை விரலளவாக இருந்தார். அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வளர்ந்த அவரை, தம் தலையை உயர்த்திப் பார்த்த பிரம்ம தேவர், தம் புத்திரர்களுடன் கூடி, வியப்படைந்தவரானார்.

'என்னுடைய நாசியிலிருந்து தோன்றிய, சிந்திக்க முடியாத அளவு மகிமை பொருந்திய இந்த பன்றி வடிவம் என்னவாக இருக்கக் கூடும்?!.. ஒரு வேளை, யாராலும் வெல்ல முடியாத விஷ்ணுவின்  லீலையாக இருக்கக் கூடுமோ?!என்று பிரம்ம தேவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பன்றி வடிவில் இருந்த பகவான், ஒரு பெரியதொரு மலை போல் வளர்ந்து ,மிகப் பயங்கரமாக கர்ஜனை செய்தார்!..

பகவானுடைய அந்த கர்ஜனையைக் கேட்டு, ஜனலோக, தபோலோக, சத்யலோகங்களில் வசிக்கும்    ரிஷிகள் எம்பெருமானைத் துதித்து அகமகிழ்ந்தார்கள்.. அந்த துதியால் உவகை கொண்ட எம்பெருமான், தன் உருவை மேலும் பெரிதாக்கிக் கொண்டு, கர்ஜித்துக் கொண்டே, சமுத்திரத்தில் இறங்கினார் (இவ்வாறு நீ இறங்கினாய் அல்லவா?! என்று பட்டத்திரி வினவ, ஸ்ரீஅப்பன், 'ஆம்' என்று தலையசைத்தானாம்!!!!). 

தம் திருமேனியில் புகை வண்ணம் கொண்ட உரோமங்கள் மேல் நோக்கிச் சிலிர்த்துச் சுழல, தம் வாலை உயரத் தூக்கிக் கொண்டு, கீழ் நோக்கிய மூக்குடன், மேகங்களைப் பிளந்து கொண்டு, தம்மைத் துதிக்கின்ற முனிவர்களை, தன் திருவிழி நோக்கால் குளிரச் செய்தவாறு, சமுத்திர‌ நீருள் இறங்கினார் எம்பெருமான் (இம்மாதிரியான  தன் திருவுருவை, பட்டத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீஅப்பன் அவருக்கு நேரிலேயே காட்டியருளினானாம்!). .

எம்பெருமான், சமுத்திரத்துள் இறங்கிய போது, அதனுள்ளிருந்த திமிங்கிலக் கூட்டங்கள் சுழன்றோடின.. முதலைக் கூட்டங்கள் பயந்து ஓடின. பகவானின் கர்ஜனை சத்தத்தால், ரஸாதல வாசிகள் நடுங்கினர். இப்படியெல்லாம் செய்து கொண்டு, எம்பெருமான், பூமிப்பிராட்டியைத் தேடிச் சென்றார்.

கொடிய சுபாவமுடைய அரக்கனால், ரஸாதலத்தில் வைக்கப்பட்டிருந்த பூமி தேவியைக் கண்டடைந்து, எதிர்த்து வந்த அசுரர்களைப் பொருட்படுத்தாது,  விளையாடுவது போன்று  தம் கோரைப்பற்களின் நுனியில், பூமி தேவியை  எடுத்து ஏந்திக் கொண்டார் பகவான்.

​(வராஹ மூர்த்தி, பூமிப் பிராட்டியை காத்தருளிய லீலையை, ஆழ்வார் பெருமக்கள், பல பாசுரங்களில் போற்றியிருக்கின்றனர். அவர்கள் எம்பெருமானின் பிரபாவத்தை, அனுபவித்துக் கூறியிருப்பதை விவரிக்க வேண்டுமெனில், ஒரு பிறவி போதாது!..சில பாசுரங்கள் மட்டும் இங்கு தருகின்றேன்).​

பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே(திருமங்கையாழ்வார்).(ஏனம்=வராஹம்)

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்? (பொய்கையாழ்வார்).

டந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே. (திருமழிசைஆழ்வார்).

வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே? (நம்மாழ்வார்)​.

சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்
குலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே. (திருமங்கையாழ்வார்).

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (ஸ்ரீஆண்டாள் நாச்சியார்).
இப்பேர்ப்பட்ட மகிமையுடைய குருவாயூரப்பன், தன்னை பிணிகளிலிருந்து காத்து ரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றார் பட்டத்திரி!..


அப்₄யுத்₃த₄ரந்நத₂ த₄ராஂ த₃ஶநாக்₃ரலக்₃ந  
முஸ்தாங்குராங்கித இவாதி₄கபீவராத்மா |
உத்₃தூத கோ₄ரஸலிலாஜ்ஜலதே₄ருத₃ஞ்சந்
க்ரீடா₃வராஹவபுரீஶ்வர: பாஹி ரோகா₃த் || 

"உம் விருப்பத்தினால் (விளையாட்டைப் போல்) பன்றி உருவெடுத்தவனே!.. ஈச்வரனே!... கோரைப் பற்களின் நுனியில், கிழங்கு போன்று பூமியைக் கொண்டவனும், மிகப் பெருத்த திருமேனியை உடையவனும்,  பெரும் அலைகள் வீசும், கொந்தளிப்புடன் கூடிய பயங்கரமான சமுத்திரத்திலிருந்து வெளி வந்தவனும் ஆகிய நீர், என் பிணிகளிலிருந்து என்னைக் காப்பாற்றி அருளும்!..."

​(அடுத்த பகுதியில், ஹிரண்யாக்ஷ வதத்தையும், யக்ஞ வராஹ மூர்த்தியையும் தியானிக்கலாம்!)​.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..