நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME... PART 25....கண்ணனை நினை மனமே.. பகுதி 25...(ஹிரண்யாக்ஷ வதம்).​


சென்ற தசகத்தில், எம்பெருமான், பூமி தேவியை, தன் கோரைப் பற்களில் ஏந்தி, பிரளய நீரிலிருந்து வெளிவந்த லீலையைத் தியானித்தோம்!..

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.
என்று நம்மாழ்வாரும், 

அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்
ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்
திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!
மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்"

என்று கம்பநாட்டாழ்வாரும், எம்பெருமான் பூமி தேவியின் பால் கொண்டுள்ள அன்பினைப் போற்றுகின்றனர்.

வராஹ‌  மூர்த்தி, பூமிதேவியுடன் வெளிப்பட்டதை அறியாது, அவரைத் தேடி, பிரளய நீரில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான் ஹிரண்யாக்ஷன். அவனுக்கு இந்தச் செய்தியைத் தெரிவிக்க வேண்டி, நாரத முனிவர், ஒரு உபாயம் செய்தார். பகவானை போலியாக இகழ்ந்து கொண்டும், ஹிரண்யாக்ஷனை போற்றிக் கொண்டும் அவனை நெருங்கினார். 'பிரபுவே, மாயாவியான விஷ்ணு, நீ மறைத்து வைத்த பூமியை கவர்ந்து கொண்டு போகிறான்.. இது என்ன கஷ்டம்!' என்று அவனிடம் கூறியதும், அவன் சினம் மேலிட, நாரத முனிவர் வழிகாட்டியபடிக்குச் சென்று, பகவானை அடைந்தான்.

எம்பெருமானை, 'ஒரு காட்டு மிருகம்' என்று கூறி,  மேலும் பல கடுஞ்சொற்களால் ஏசினான் ஹிரண்யாக்ஷன். பூமி தேவி, இதையெல்லாம் கண்டு நடுக்கமுற்றாள். அவளை, தன் யோகசக்தியால் சமுத்திரத்தில் நிலைநிறுத்திய வராஹ‌ மூர்த்தி, ஹிரண்யாக்ஷனுடன் போரிடத் துவங்கினார். 

ஹிரண்யாக்ஷனின் கையில் கதாயுதம் இருந்ததால், தம்முடைய திருக்கரத்திலும் கதாயுதமேந்தி போரிட்டார். இருவருடைய கதாயுதங்களும் மோதுவதால், 'கட கட' என்ற சப்தம் வானில் எழுந்தது. இந்தப் போரைக் காண விரும்பி, தேவர்கள் வந்து கூடினர்.  பிரம்மதேவர், 'சந்தியா காலத்திற்கு முன்பே அசுரனைக் கொல்ல வேண்டும்' என்று வராஹ‌ மூர்த்தியைப் பிரார்த்தித்தார். ஏனெனில், சந்தியா காலத்திற்குப் பின்னர், அசுரர்களின் பலம் அதிகரிக்கும். ஆகவே அவ்விதம் கூறினார்.

போரில், எம்பெருமானுடைய கதாயுதம் கீழே விழுந்தது. இதுவும் அவருடைய லீலையே.. தம்மிடம் பணிபுரிந்தவனே அசுரனாக அவதரித்திருக்கிறான் என்பதால், அவனை ஒரு முறையேனும் வெற்றி பெற வைக்கும் பொருட்டே இவ்விதம் செய்தாராம் பகவான்.  பின்னர் , அவர் தம் சுதர்சன சக்கரத்தை, தம் திருக்கரத்தில் தாங்கிப்  பிரகாசித்தார்.

ஹிரண்யாக்ஷன், சினம் மிகக் கொண்டு, சூலத்தை ஏவினான். அது சக்ராயுதத்தின் தாக்குதலால் முறிந்து விழுந்தது. மாயைகளைக் கடந்த எம்பெருமானை நோக்கி, அவன் உலகை மயக்கும் மாயைகளை ஏவினான். சக்ராயுதத்தின் தீப்பொறி பட்டதும்,  அந்த மாயக் கூட்டங்களெல்லாம் அழிந்தன. கடுங்கோபம் கொண்டு, அவன் தன் கை முஷ்டிகளால் வராஹ‌  மூர்த்தியைத் தாக்கலானான்.  அவன் கோபத்தை அதிகரிக்கும் பொருட்டு, தம் கரத்தின் நுனியால், அவன் காதடியில் சுண்டி, அவனை எம்பெருமான் வதைக்கலானார். 

பெருத்த சரீரமுடைய அசுரன், தாமரை மலரையொத்த எம்பெருமானது திருக்கரத்தால் அடிக்கப்பட்டு, வாயிலிருந்து உதிரம் பெருகக் கீழே சாய்ந்து மாண்டான். அப்போது ஹிரண்யாக்ஷன், முனிவர்களால் கொண்டாடப்பட்டான். எம்பெருமானது திருக்கரங்களால் மரணம் நேர்ந்தமையாலேயே, அவனுக்கு இவ்விதமான சிறப்பு நேரிட்டது.  ரிஷிகள் , யக்ஞவராஹ மூர்த்தியை, பற்பல துதிகளால் துதித்துக் கொண்டாடினர்.

யக்ஞவராஹ மூர்த்தி:

வேள்விகளின் ரூபமாக விளங்குபவன், வேள்வியின் நாயகனாய் இருப்பவன் எம்பெருமான்.

வராஹ‌ மூர்த்தியை, யக்ஞ வராஹ மூர்த்தியாக,  ரிஷிகள் துதித்ததை, பட்டத்திரியின் திருவாக்கின் மூலமே கேட்கலாம்!.

த்வசி ச்ச²ந்தோ³ ரோமஸ்வபி குஸ²க³ணஸ்²சக்ஷுஷி க்⁴ருʼதம்ʼ
சதுர்ஹோதாரோ(அ)ங்க்⁴ரௌ ஸ்ருக³பி வத³னே சோத³ர இடா³ | 
க்³ரஹா ஜிஹ்வாயாம்ʼ தே பரபுருஷ கர்ணே ச சமஸா
விபோ⁴ ஸோமோ வீர்யம்ʼ வரத³ க³ல‌தே³ஸே²(அ)ப்யுபஸத³​: ||

("பரம புருஷனே!.. குருவாயூரப்பனே!. , உமது தோலில் காயத்ரீ போன்ற‌ சந்தங்கள், உரோமங்களில் தர்ப்பைகள், திருவிழிகளில் நெய், கால்களில் நான்கு ரித்விக்குகள் (பிரம்மா, ஹோதா, அத்வர்யு, உத்காதா ஆகிய நால்வர்). திருமுகத்தில் 'ஸ்ருக்' என்ற ஹோமபாத்திரம்,  திருவயிற்றில் 'இடா' என்ற பாத்திரம், நாவில், சோமரஸ‌த்தை எடுத்து வைப்பதற்கான 'க்ரஹ'மென்கின்ற பாத்திரங்கள், திருச்செவியில் சோமபானம் செய்வதற்குரிய சமஸம். உமது வீரியமே சோமரஸம். வரதா!.. உமது திருக்கழுத்தில் 'உபஸதங்கள்' என்ற இஷ்டிகள்").

ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே. 

என்ற திருமழிசை ஆழ்வார் திருவாக்கினை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

இத்தகைய துதிகளால் மகிழ்ந்த மனமுடையவராக, பெருத்த சரீரத்துடனும், குறையில்லாத புகழுடனும் விளங்கி, வைகுண்டலோகத்தில், ஆத்மானந்த நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅப்பன், தம் நோய்களை எல்லாம் போக்கியருள வேண்டிப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி.

ஸ்ரீமத் பாகவதத்தில், 'இந்த ஹிரண்யாக்ஷ லீலையைக் கேட்போரும், பாடுவோரும், ஆமோதிப்போரும், பிரம்மஹத்தி முதலான பாவங்களில் இருந்து விடுபடுவர். அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இதைக் கேட்போருக்கு, முடிவில் ஸ்ரீமந் நாராயணனே கதியாகிறான்' என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய மகிமை பொருந்திய சரிதம் இது!.

(அடுத்து 'கபிலாவதாரம்").

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..