நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

KAMSA VADHAM.!!! (2/11/2014) ......கம்ச வதம்!!!!!...


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ தசமி, ஸ்ரீக்ருஷ்ணர், கம்சனை வதம் செய்த திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.

சொல்லப் போனால், ஸ்ரீக்ருஷ்ணரின் திருஅவதார நோக்கங்களுள் முதன்மையானது கம்ச வதம் என்றே சொல்லலாம்!.. 'கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே' என்று இந்த வைபவத்தை  ஆண்டாள் நாச்சியார் போற்றுகின்றார்.

தன் சகோதரியான தேவகியின் கர்ப்பத்தில் உதிக்கும் எட்டாவது மகன், தன்னைக் கொல்வான் என்று, அசரீரியின் வாயிலாக என்று கம்சன் அறிந்தானோ அன்றே, ஸ்ரீக்ருஷ்ணர் அவதரிப்பது, இவ்வுலகிற்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டு விட்டது..

பூர்வ ஜென்மத்தில் 'காலநேமி' என்னும் அரக்கனாக இருந்து, பரமாத்மாவால் கொல்லப்பட்ட போதிலும், அவன் மனதில் இருந்த அசுர பாவனை நீங்காத காரணத்தால், மீண்டும் இப்பிறப்பில் கம்சனாகப் பிறந்து, பகவான் திருக்கரங்களால் முடிக்கப்படும் பெரும் பேறு பெற்றவன் அவன். அந்த நோக்கம் நோக்கி அவன் செயல்கள் செலுத்தப்பட்டன.

காலநேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீரநின்
பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே. (திருமழிசை ஆழ்வார்)

கம்சன் கதை!

மதுராவை ஆண்ட உக்ரசேனரின் மகன் கம்சன்.  உக்ரசேனரின் சகோதரனான தேவகனின் மகளே தேவகி. மகதத்தை ஆண்ட ஜராசந்தனின் மகள்களான அஸ்தி, பிராப்தி இருவரையும் மணந்தான் கம்சன்.  தேவகி, வசுதேவர் இருவரது திருமணத்தின் போது, மணமக்களை அவனே தேரோட்டி ஊர்வலமாக அழைத்துப் போனான். அப்போதே அசரீரி அவனுக்கு அவன் மரணத்தைக் குறித்த முன்னறிவிப்பைச் செய்தது. அதன் விளைவாக, தொடர்ந்தன‌ அவன் அட்டகாசங்கள், தந்தை, தங்கை, தங்கையின் கணவர் என அனைவரையும் சிறைப்படுத்தியது தொடங்கி எண்ணிலாத‌ கொடுமைகள் செய்தான்.

தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் முடித்தான். ஏழாவது கர்ப்பம், யோகமாயையால், வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டது. இருள் சூழ்ந்த கம்சனின் சிறைச்சாலையில், அஞ்ஞான இருள் நீக்கும் ஞான தீபமென, இவ்வுலக பந்தமெனும் சிறையிலிருந்து, ஜீவர்களை உய்விக்க, பரமாத்மா, தேவகி, வசுதேவரின் எட்டாவது குழந்தையாகத் தோன்றியருளினார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைப்படி, வசுதேவர் அவரை, கோகுலத்தில் நந்தகோபரின் திருமாளிகைக்கு இடம் மாற்றினர். அங்கு கம்சனால் ஏவப்பட்ட அடுக்கடுக்கான அசுரர்களை முடித்தருளினார் பரமாத்மா.

கம்சன், முடிவாக, ஸ்ரீக்ருஷ்ணரையும் பலராமரையும், மதுராவிற்கு வரவழைக்கத் திட்டமிட்டான். காந்தினி என்பவரின் புத்திரனான‌அக்ரூரரை வரவழைத்து, தான் 'தனுர் யாகம்' செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு ஸ்ரீக்ருஷ்ணர், பலராமர் ஆகிய இருவரையும் அழைத்து வர வேண்டுமென்று கூறி அனுப்பி வைத்தான். இவ்விதம், கம்சனின்   இறுதியை அவனே விரும்பி அழைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அழைப்பை ஏற்று மதுராவிற்குச் சென்றார்கள் இருவரும். உடன் தோழர்கள் சிலர். எல்லோரும் வயதால் சிறியவர்கள்.  ஸ்ரீக்ருஷ்ணர், மதுராவை அடைந்த போது, பகல் நேரம் பாதி சென்று விட்டிருந்தது. நகரின் எல்லையிலிருந்த நந்தவனத்தில் தங்கி, போஜனம் முதலானவைகளை  முடித்துக் கொண்டு, நகரைத்தைப் பார்வையிடச் சென்றார்கள்.

மதுரா நகர மக்கள், இச்சிறுவர்களது அளப்பரிய பெருமையை முன்பே அறிந்திருந்தனர். இந்த தெய்வீக பாலகர்களின் திவ்ய முகங்களில் அவர்கள் தங்கள் உள்ளத்தைப் பறிகொடுத்து, இவர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தனர்.

பகவான், மதுராவின் தெருக்களில் நடத்திய லீலாவிநோதங்கள் எத்தனை?!..உடைகளைத் தர மறுத்த ஒரு வண்ணானுக்கு கோபத்தினாலும், மனமுவந்து உடைகளைத் தந்த ஒரு தையல்காரனுக்கு கருணையினாலும் உத்தமகதியைத் தந்தருளினார். அழகாக மாலைகள் கட்டும் ஒரு பூக்காரன், மாலைகளாலும் பூச்செண்டுகளாலும் துதிக்க, அவனுக்கு அவன் வேண்டிய பரா பக்தியையும் செல்வத்தையும் அளித்தருளினார்.

தமக்கு அன்புடன் சந்தனமளித்த ஒரு கூனியைத் தன் திருக்கரத்தால் ஸ்பரிசித்து, அவளை பேரழகியாக்கினார்.

தனுர்யாகம் நடைபெறும் யாகசாலைக்குள் சென்று, அங்கு பூஜையில் வைத்திருந்த வில்லை நாணேற்றி ஒடித்து விட்டார்.

கம்சன், நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்டு சினம் மிகக் கொண்டான். மறு நாள், மல்யுத்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ள, மல்லரங்கத்தின் வாயிலை அடைந்த  ஸ்ரீக்ருஷ்ண, பலராமர்கள், அங்கு நின்றிருந்த 'குவலயாபீடம்' என்ற யானையை எதிர்கொண்டனர். இவர்களுக்காகவே கோபமூட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானை அது. எவ்வித அச்சமுமின்றி, அநாயாசமாக, ஒரு விளையாட்டுப் போல் அதனை முடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

அதன் பின் மல்லரங்கத்துள் நுழைந்த ஸ்ரீக்ருஷ்ணரை, சாணூரன் என்பவனும், பலராமரை, முஷ்டிகன் என்பவனும் எதிர்த்தனர்.

மிக விரைவில் சாணூரனும் முஷ்டிகனும் கொல்லப்பட்டனர். இதைக் கண்ட கம்சனின் சினம் எல்லை மீறியது!!!..முழங்கிக் கொண்டிருந்த பேரிகைகளை நிறுத்தச் செய்தான். உக்ரசேனர், வசுதேவர், நந்தகோபர் முதலானவர்களை கொல்ல உத்தரவிட்டான். ஸ்ரீக்ருஷ்ணரை, வெகு தூரம் விரட்டுமாறு கட்டளையிட்டான். இந்த வார்த்தைகளைக் கேட்டு, கோபமுற்ற ஸ்ரீக்ருஷ்ணர், அவன் மீது பாய்ந்தார்.

கம்ஸ மன்னனைத் தரையில் சாய்த்து, முடித்த வேளையில், தேவர்கள் பூமழை பொழிந்தனர். பயத்தின் காரணமாக, இடைவிடாமல் ஸ்ரீக்ருஷ்ணரையே நினைத்திருந்த கம்சன், சாயுஜ்ய பதவியை அடைந்தான். இது, முற்பிறவியில் அவன் காலநேமியாயிருந்து, பகவானால் கொல்லப்பட்டதன் வாஸனை காரணமாகத்தான் என்கிறார் ஸ்ரீநாராயண பட்டத்திரி!!!!!.

ஸத்யோ நிஷ்பிஷ்ட ஸந்த்திம் புவி
நரபதிமாபாத்ய தஸ்யோபரிஷ்டாத்
த்வய்யாபாத்யே ததைவ த்வதுபரி
பதிதா நாகினாம் புஷ்பவ்ருஷ்டி :|
கிம் கிம் ப்ரூமஸ்ததானீம் ஸததமபி
பியா த்வத்கதாத்மா ஸ பேஜே
ஸாயுஜ்யம் த்வத்வதோத்தா பரம‌
பரமியம் வாஸனா காலநேமே: (ஸ்ரீமந் நாராயணீயம்).

பக்தியின்  வகைக‌ள் மூன்று என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஞான பக்தி (ருக்மணி போல், அறிவாலும் அன்பாலும் பகவானின் பால் ஈர்க்கப்பட்டு, அவரை தியானித்திருப்பது),  மூட பக்தி (கோபியர்களின் பக்தி போல),  வித்வேஷ பக்தி, (பகவான் மீது வெறுப்பும் த்வேஷமும் மிகக் கொண்டு, அதன் காரணமாக அவரை இடைவிடாது நினைத்திருப்பது) என்பவை அவை. கம்சன் வித்வேஷ பக்திக்கு சிறந்த  உதாரணமானான்.

இன்றே அந்தத் திருநாள்!.. ஸ்ரீக்ருஷ்ணர், கம்சனை சம்ஹரித்து, மதுரா வாசிகளனைவரையும் மகிழச் செய்த நன்னாள்!.. இன்றைய நாளில், ஸ்ரீக்ருஷ்ணரின் லீலைகளை கேட்டாலோ, படித்தாலோ அளவற்ற பலன் கிட்டும்!..  மனித அழிவுக்கு வழிவகுக்கும் எத்தகைய தீய குணமும், பகவானின் பால் திருப்பப்பட்டால், அது நன்மையே நல்கும் என்பதற்கு, கம்சனின் கதை சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. வெறுப்பும் கோபமும் பகவானின் பால் சென்று விட, கம்சன் பேரானந்த நிலை அருளப்பட்டு உத்தம கதியை அடைந்தான். எவ்விதமேனும் பகவத் ஸ்மரணை வேண்டும் என்பதே நாம் அறிய வேண்டிய உட்கருத்து.

இடந்தது பூமி; எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச!-கிடந்ததுவும்
நீரோத மாகடலே; நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது (பொய்கையாழ்வார்)

நாம் பக்தி பூர்வமாக, பகவானை சரணடைந்தால், நம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பகவான் பார்த்துக் கொள்வான் என்று ஸ்ரீமத் பகவத் கீதை உரைக்கிறது... பகவானைச் சரணடைந்து,

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. அருமையான இடுகை பார்வதி அடிக்கடி உங்கள் வலைப்பூவிற்கு வந்தால் அத்தனை ஆன்மீக விஷயமும் நான் அறிந்துகொள்ள முடியும். கம்சவதம் இத்தனை விவரமாய் தெரியாது அழகாக ஆழ்வார்கள் பாசுரம் நாராயணீயம் என கொடுத்து கம்சவதம் பதிவையும் இதமாகத்தந்துள்ள நேர்த்தி சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி அக்கா!..தாங்கள் அளிக்கும் ஊக்கமும் பாராட்டுக்களுமே மேன்மேலும் எழுதத் தூண்டுகோலாக இருக்கின்றன.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..