நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 1 அக்டோபர், 2014

SONG # 6.....THAYUMANAVADIGAL ARULIYA 'MALAIVALAR KAATHALI'....பாடல் # 6, தாயுமானவடிகள் அருளிய, 'மலைவளர் காதலி'..


அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 6,
பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்..........."உன்னை எவ்விதம் புகழ்ந்து பாடுவது என்ற வழிமுறைகள் அறிந்திலேன்...மலபரிபாகம் வரவோ மனதில் பண்பு சிறிதேனும் இல்லை..பாவியாகிய நான் செய்த பாவங்களின் உருவமான என் தேகத்தில், எனக்குரிய கடமைகளை சரிவரச் செய்திடும் வலுவில்லை..உன்னை அறிவதற்கு வேண்டிய ஞானம் குறித்து கனவில் கூட எண்ணவில்லை.. பேரின்பத்தில் சேர வேண்டும் என்றாலோ, என் கள்ள மனமானது, அது குறித்து மிகவும் சிந்திக்கிறது.. நான் என்ன செய்வேன்?!'.

( பரிபாகம் என்றால் பக்குவம் என்று பொருள்..இங்கே மலம் எனப்படுவது ஆணவ மலத்தைக் குறிக்கும்..  அது, உயிரறிவைத் தடுத்து வைத்திருந்த பிணிப்பு  நெகிழ்ந்து, நீங்கும் நிலையை அடைதலே மலபரிபாகம் எனப்படுகின்றது.. இது நிகழ்ந்தாலே உயிர்களுக்கு ஞானத்தைப் பெறுவதில் உண்மையான விருப்பம் உண்டாகும்..அத்தகைய பக்குவ நிலை இன்னும் தமக்குக் கைகூடவில்லை என்றார் அடிகள்..கர்ம வினைகளின் காரணமாகவே பிறவிகள் எடுப்பதால், 'பாபரூப தேகம் ' என்றார்...பேரின்பம் சேர்வது குறித்து தம் மனம் மிகவும் சிந்திப்பதாகக் கூறியது, மாயையிலிருந்து முழுவதுமாக விடுபடாத நிலையைக் குறிப்பதற்கே.. இந்நிலையில், உலக வாழ்வே உண்மையெனத் தோன்றுதலால், அதனின்றும் விடுபட்டு, பேரின்பம் அடையும் எண்ணம் வருவதே கடினம் என்பது மறை பொருள்).

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே........"உயிர்களைப் பாவம் செய்யத் தூண்டுவது,  காம, குரோத, லோப, மோக மத, மாச்சரியம் என்னும் ஆறு பகைவர்கள்.. இவை  முறியோலை எழுதி, என்னை அடிமையாக்குகின்றன..பொருள் தேட வேண்டுமெனில், மிக்க வேட்கையுடன், மலருக்கு மலர் பறந்து சென்று தேன் சேகரிக்கும் வண்டு போல்  நிலத்தில் மட்டுமின்றி, வானிலும் பறந்தோட‌ வல்லேன்..வளம் பொருந்திய தேவை நகருக்கு அரசியே!.. மலையரசனின் இருகண்ணின் மணி எனத் தோன்றி அருளிய மலைவளர் காதலிப் பெண் உமையே!..என்னை ஆட்கொள்ளத் திருவுருளம் இரங்கவில்லையோ!!!!...".

(ஆறு  குற்றங்கள் ...

1. காமம்..பொன், பொருள், போகம், மக்கள், சுற்றம் இவற்றின் மீது வைத்துள்ள அளவு கடந்த விருப்பம்..

2.குரோதம்....அடுத்தவருக்கு தீங்கிழைக்கும் நிலையை அடைவிக்கும்படியான, அளவுக்கு மீறிய கோபம்.

3.லோபம்...பிறர் துன்பம் கண்ட நிலையிலும், தன் பொருள் குறைதல் கூடாது என்னும் எண்ணத்தால் அதைக் காணாத நிலை.. அதாவது பொருளின் மீது அளவுகடந்த பற்று.

4.மோகம்..சிலர் மீது வைக்கும் அளவு கடந்த விருப்பம். அதன் காரணமக, அவர்களை மகிழ்விக்கவெனவே செயல்படுதல்..

4. மதம்....'தான்' எனும் அகங்காரம்..

6. மாச்சரியம்.. பொறாமை.

இந்த ஆறினையும், பகைவர்கள் என்று குறிப்பதுண்டு. நம்முள் இருந்து, நம்மை நல்ல நிலை அடையாவண்ணம் தடுக்கும் உட்பகைவர்கள் இந்த ஆறு குணங்களும்...

அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப்புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்---
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலைஆமே.(சம்பந்தப் பெருமான்).

முறியோலை என்பது  ஆவண‌ ஓலை..  இந்த ஆறு குற்றங்களும்  தன்னை  அடிமையாகவே, ஆவண ஓலையில்  எழுதி வாங்கிக் கொண்டு விட்டன என்கின்றார் அடிகள்..

வண்டு மிக்க வேட்கையுடன் பறந்து சென்று தேன் சேகரிக்கிறது.. அது போல்,   தாம், பொருள் தேடும் வேட்கையுடன் செயல்பட இயலவில்லை என்கின்றார் அடிகள்.. 

இங்கு 'நிதியம்' என்பதை பொருட் செல்வம் என்று கொண்டு, உலக வாழ்விலும் மிக்க விருப்புடன் ஈடுபட இயலவில்லை என்று அடிகள் உரைப்பதாகக் கொள்ளலாம்..

'நிதியம்' என்பதை அருட்செல்வம் என்றும் கொண்டு, ஆறு கால் உயிரினமான வண்டு, தேன் தேடும் வேட்கையுடன் செயல்படுவதைப் போன்று, ஆறு குற்றங்களை உடைய தாம், அருட்செல்வம் தேடும் வேட்கையுடன் செயல்படும் சக்தி இல்லாதவனாக இருப்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.. முன்வரிகளை வைத்துப் பார்க்கும் போது, 'அருட்செல்வம்' எனும் பொருளே பொருந்தும் எனத் தோன்றுகின்றது.

 இந்நிலையில், தேவை நகருக்கு அரசியான உமையம்மை தன்னை ஆட்கொள்ள திருவுளம் கொள்ள வேண்டி விண்ணப்பிகின்றார் அடிகள்..

உண்மையில் இவ்வரிகள், நாம் உய்ய வேண்டியே அடிகள் அருளியது.  மனித மனத்தின் பல்வேறு நிலைகளை விளக்கி, அன்னையின் அருள் வேண்டுகின்ற அடிகளின் கருணை உள்ளம், நம்மையும் உருக்குவது உண்மையே.. அடிகளின் அடி பணிவோம்!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. தலைப்பு, பாடல்கள், பாடலின் பொருள்கள் + படம் அனைத்தும் அழகாக உள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகமூட்டுகின்றன.. இறையருளும் தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிகளுமே 200வது பதிவினை (முந்தைய பதிவு) எட்டுவதற்குக் காரணம்.. மிக்க நன்றி ஐயா!..

      நீக்கு
  2. மனம் மயங்க வைக்கும் வரிகள்...
    அதற்கான விளக்கம் இன்னும்
    இன்னிசையாய் செவியில்
    ஊற்றெடுக்கிறது...
    செவ்வாய் பவளமல்லிக்கு
    செந்தேன் ஊறிய பாமாலை தொடுத்தார் தாயுமானவர்..
    அதற்காய் செஞ்சுவை கொடுத்தது
    உங்கள் விளக்கம் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரிகள் ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன சகோதரரே!.. தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றீர்கள்.. மிக்க நன்றி!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..