நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

SONG # 5....THAYUMANAVADIGAL ARULIYA..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 5... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 5..
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
பொருள்:

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ...."பூரணி,புராதனி, சுமங்கலை,சுதந்தரி, புராந்தகி, த்ரியம்பகி, புங்கவி  சிவசங்கரி, ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் வீற்றிருக்கும் நாரணி, மனாதீத நாயகி, குணாதீத நாதாந்த சக்தி என்று உன் திருநாமத்தை இடைவிடாது ஜபிக்கும் உன் அடியாரது திருநாமங்களை, நான் உன் திருவருளால் ஓதி உய்யும் பேறு எனக்கு வசமாகுமோ?!!".

(அம்பிகை இப்பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் பூரணி, பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாகவே நிலைத்திருப்பவள், மிகப் பழமையானவள் என்பதால் புராதனி, மங்கலப் பெண் என்பதால் சுமங்கலை, முதல்வி, அனைத்தையும் ஆள்பவள் என்பதால் சுதந்தரி,  சிவசக்தி, முப்புரம் எரித்தவள் என்பதால் புராந்தகி (சிவன், சக்தி இருவரும் ஒருவரே என்பதால், எம்பிரான் செய்ததையெல்லாம் அம்பிகை செய்ததாகச் சொல்லி வழிபடுதல் மரபு), மூன்று திருவிழிகளை உடையவள் என்பதால் திரியம்பகி,

     இமவரை தருங் கருங்குயில் மரகத நிறந் தருங்கிளி
      எனதுயி ரெனுந் த்ரியம்பகி     பெருவாழ்வே
     அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
      ளணிமணி சதங்கை கொஞ்சிட   மயில்மேலே
     அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
      அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே என்று அருணகிரிநாதரும் அம்மையைப் பணிகின்றார்.

தெய்வப் பெண், பார்வதி என்பதால் புங்கவி,  நன்மைகளை அருளும் சங்கரனின் சக்தியாக விளங்கும் சிவை, நன்மைகளையே அருளுபவள் என்பதால் சிவசங்கரி, யோகமார்க்கத்தில், சிரசுச்சியில் இருக்கும் சஹஸ்ராரத்தில், ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் நாரணி, மனதால் அறியவொண்ணாதவள் என்பதாலும், பசு ஞானமாகிய, உயிர் தன்னைத் தானே அறியும் அறிவால் அறிய இயலாதவள் என்பதாலும் மனாதீத நாயகி, (பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி‍‍.....'சிவஞான சித்தியார்), சத்வ, ரஜஸ், தமோ குணங்களாகிய முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள் என்பதாலும், யோகமார்க்கத்தில், அத்தகைய குணங்கடந்த நிலையாகிய நாதாந்த நிலையில் திருக்காட்சி அருளும் சக்தி என்பதாலும் 'குணாதீத நாதாந்த சத்தி').

ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே......"மெய்யுணர்வின் அடையாளமாக, ஆத்தி மாலையினைச் சூடியருளுகின்ற எம்பிரான், மறை முதல்வி எனப் போற்றுகின்ற, அண்டமெல்லாம் ஈன்ற அன்னையே, அதன் பின்னும், மறைகள் 'கன்னி' எனத் துதிக்கின்ற பேரின்ப வடிவான மயிலே,  கச்சணியும் தனங்களை உடைய மாதர்கள்  மகிழும்படியான,   புனிதமான    கங்கையானவள் போற்றிக் கொண்டாடுமாறு, வளம் பொருந்திய தேவை நகரின் வீற்றிருக்கும் அரசியே..".

(ஆரணம் என்ற சொல்லுக்கு மறை (வேதங்கள்) என்றும் பொருளுண்டு.  வேதங்கள், முதற்பொருளாக வைத்துப் போற்றுவது அம்பிகையையே என்பதாலும், மறைமுடிவாக அறியப்படுபவள் என்பதாலும், எம்பிரானே அம்பிகையை மறைமுதல்வி (ஆரணி) எனப் போற்றுவதாகக் குறித்தார் அடிகள்.. 

அன்னை, 'புவி ஏழையும் பூத்தவள்..'(அபிராமி அந்தாதி).  பின்னும் கன்னி எனவே மறைகள் போற்றுகின்றன.

மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் 
மாதிரக்கரி எட்டையும் மாநாகம் ஆனதையும் 
மாமேரு என்பதையும் மா கூர்மம் ஆனதையும் ஓர் 
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையும் திகிரி மாயவனையும் 
அரையில் புலியாடை உடையானையும் 
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் 
பழைமை முறைகள் தெரியாத நின்னை 
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் 
மொழிகின்றதேது சொல்வாய்!.. 
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே! என்று அபிராமி பட்டரும் அன்னையைப் போற்றுகின்றார். .

வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே...."மலையரசனாகிய இமவானுக்கு, அவனது இருகண்ணின் மணியெனத் தோன்றி அருளும், மலைமகளாகிய காதலிப் பெண் உமையே..".

( மலைவளர் காதலியாகிய உமையம்மையே!, எம்பிரான் நின்னை மறைமுதல்வி எனப் போற்றுகின்றார். அண்டங்களை ஈன்ற பின்னும் கன்னி எனப் பெயர் கொண்ட பேரின்ப வடிவான மயில் நீ!  மாதர்கள் மனம் மகிழுமாறும், கங்கை துதிக்குமாறும், வளம் பொருந்திய இராமேஸ்வரத்தில் அரசியாக வீற்றிருப்பவளே, உன் மகிமை பொருந்திய திருநாமங்களை கணமும் விடாது ஓதும் அடியவர்களின் திருநாமங்களை நான் ஓதி உய்யும் பேறு எனக்கு வசமாகுமோ?!!.." என்று அன்னையிடம் விண்ணப்பிக்கிறார் அடிகள்...இதன் மூலம் அன்னையின் அடியார்களது திருநாமங்களை பக்தியுடன் உச்சரித்தாலே அன்னை மனங்கனிந்து அருள் மழை பொழிவாள் என்பது விளங்குகின்றது.. அன்னையின் அடியவரும் அன்னையும் வேறு வேறு அல்ல..அன்னையை விடாது சிந்திக்கும் அவர்களது உள்ளம், அன்னை  குடி கொண்டருளும் திருக்கோயிலாகவே மாறிவிடுவதால், அடியவர்களது திருநாமங்களை ஓதுதல், அன்னையின் கருணையை எளிதில் பெற்றுத் தந்து விடுகின்றது.. ஆகவே அடியவர் நாமங்களை ஓதிடும் பேறு வேண்டினார்).

அன்னையின் அளவற்ற பெருங்கருணையால், இந்தப் பதிவு 'ஆலோசனை' வலைப்பூவின் இருநூறாவது (200வது) பதிவாக  வெளியாகின்றது... இதை சாத்தியப்படுத்திய  அனைத்து வாசக அன்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கங்களும்... தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு நல்லாதரவு அளித்து, ஊக்கமும் அறிவுரைகளும் தந்து வரும் அனைத்து பெரியோர்களின் பாதங்களையும் பணிந்து வணங்குகின்றேன்..  தங்கள் அனைவரது தொடர்ந்த நல்லாதரவை எப்போதும் எதிர்பார்க்கின்றேன்..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள். 

2 கருத்துகள்:

  1. அன்புள்ள பார்வதி,
    உங்கள் ஆலோசனை வலைத்தளத்தில் இந்த பதிவு 200வது பதிவு என்றறிய மிகவும் மகிழ்ச்சி. சின்னப் பெண் ஆக இருந்தும் இத்தனை ஆன்மீகப் பதிவுகள் எழுதும் நீங்கள் இன்னும் பலபல பதிவுகள் எழுதி பல விஷயங்களை படிப்பவர்களுக்கு சொல்ல வேண்டும். இந்த ஆன்மீக சேவைக்கு வேண்டிய பலத்தையும், விஷயங்களையும் அம்பிகை உங்களுக்கு வாரி வாரி வழங்கட்டும்.
    உங்கள் இந்த நல்ல சேவை சீராக நடந்து வர எனது பிரார்த்தனைகளும்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..