நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

SONG # 4....THAYUMAANAVADIGAL ARULIYA 'MALAI VALAR KAATHALI'......பாடல் # 4.. தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'....

அன்பர்களுக்கு பணிவான வணக்கம்!..
பாடல் # 4.. 
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

முதலில் சில சொற்களுக்கான பொருளை மட்டும் பார்க்கலாம்..மிடி - வறுமை. கலம் - மட்பாண்டம். வாசம் - உறைவிடம்.   துடி - நடுக்கம்.

அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே......"மிகப் பழங்காலத்தே தோன்றியதும், இனிமையானதுமாகிய செந்தமிழ் மொழியின் மேல் கொண்ட காதலால், திருவாரூரில் உறையும் தியாகராசப் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்காக, பரவை நாச்சியாரிடம், தம் திருப்பாதங்கள் பூமியில் பதியுமாறு, அடிமேல் அடிவைத்து நடந்து, தூது சென்றருளினான். தம் தொண்டருக்காக இத்தகைய அருஞ்செயலைச் செய்த இறைவனின் திருவடிகள் இது, திருமுடிகள் இது என, அடியவருக்கு காட்டியருளும், நான்மறைகள் போற்றும் பச்சிளங்கிளியே..."  (இறைவன், சுந்தரருக்காக தூது சென்ற பான்மையை இவ்வரிகளில் சிறப்பாக உரைத்தார் அடிகள்.. சுந்தரரின் சுந்தரத் தமிழ் மேல் பித்தாக இருந்ததாலன்றோ, அவரைத் தடுத்தாட் கொண்டு, 'பித்தா' என்றழைதததையும் உகந்து ஏற்று, அதையே முதலாகக் கொண்டு பாடுமாறு அருளினான் எம்பிரான்!...தம் தொண்டருக்காக, நினையவொண்ணா செயலையும் செய்து முடிப்பான் எம்பிரான்.. ஆகவே,  சுந்தரரின் காதலுக்காக, தம் திருவடிகள் நோக நடந்து, தூதும் சென்றருளினான்..

தொண்டர்கள் பால் அத்துணை அன்பு பூண்ட இறைவனது திருவடியும்,திருமுடியும், திருமாலும் பிரமனும் அறியவொண்ணா சிறப்பு மிக்கவை.. ஆயினும், அன்னை, தன் பெருங்கருணையால், அடியவர்களின் மாயத்திரையை விலக்கி, இறைவனது திருவடியின் தன்மையையும், திருமுடியின் தன்மையையும் காட்டியருளுகின்றாள்..

அன்னையின் கருணையாலேயே இறைவனை அறிய இயலும் என்பது மறைபொருள்..கிளி, ஞானத்தின் குறியீடாக அறியப்படுகின்றது..அதனால், மெய்ஞான வடிவான அம்பிகையை, நான்மறைகளும் போற்றும்' பச்சிளங்கிள்ளை' என்றார்.. முதல் பாடலில் வேதாகமங்களின் உட்பொருள் அம்பிகையே என்று அடிகள் போற்றியதும் இங்கு நினைவு கூரத்தக்கது ).

வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே......."வளம் பொருந்திய தேவைநகராகிய இராமேஸ்வரத்தின் அரசியே.. இமவானின் இருகண்ணின் மணியெனத் தோன்றிய, மலைமகளாகிய காதலிப் பெண் உமையே..."

(ஒவ்வொரு பாடலிலும் இறைவியை 'காதலி' என்று அழைப்பதன் பொருளும் இங்கு சற்று சிந்திக்கத் தக்கது.. இறைவனையும் இறைவியையும் காதலனும் காதலியுமாகச் சித்தரிப்பது மரபு.. இருவரும் ஒருவர்பால் ஒருவர் கொண்ட மாளாத காதலன்றோ இப்பிரபஞ்சம் முழுவதுமாகக் காட்சியளிக்கின்றது!!!!.. மேலும், அடியவர் மேல் தீராத அன்புடன், அவர்தம் குற்றங்குறைகளை பொறுத்து, அவர்களுக்கு கருணை செய்து, திருவடிப் பேற்றை அளித்தருளும் அம்மையப்பனை இவ்விதம் அழைப்பது பொருத்தமென்றே தோன்றுகிறது!...).

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ....."மட்பாண்டத்தில் உப்பு வைத்தால், அது நாளடைவில் உடைந்து போகும்.. அது போல், வறுமை நிறைந்த வாழ்வினால், என் உடலும் உருக்குலைந்து போகின்றது.. அதன் காரணமாக, மிகுந்த செல்வமுடையவர் வாயில்களே கதியாக நின்று,  நான் வேதனை அடையுமாறு, வேதங்களை ஓதும் பிரமன், நடுக்கமுறச் செய்யும் கொடிய வினைகளை என் மீது ஏவினான்.. நான் செய்த தொழில்களெல்லாம், ஒரு சாண் வயிற்றை நிரப்புவதன் பொருட்டாகவே முடிந்தன.. இதனை விடுத்து, உன் தொண்டர்களின் பணி செய்வது எந்நாளோ?!!."

(பிரமன் கொடிய வினைகளை ஏவினான் என்றது, கர்மவினைகளால் துன்புறுவதைக் குறித்தது. வினைகள், நாம் செய்வதே ஆயினும், அதன் பலனைத் தக்க இடத்தில் அனுபவிக்குமாறு நம் தலைவிதியை எழுதுவது, நான்முகனே ஆதலால், 'பிரமன் வினைகளை ஏவினான்' என்றார்..

செல்வர்களின் வாயிலே கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டதென்று கூறுதலும்,, தொடர்ந்த தொழில்களின் பலன், வயிற்றை நிரப்புவதாகவே முடிந்ததென்று உரைத்ததும்,, இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களை சுட்டுவதற்காக சொல்லப்பட்டது.. இத்தகைய தன்மை வாய்ந்த இவ்வுலக வாழ்க்கையில் உழலுமாறு செய்த பழவினையைப் பழித்து, அதனின்றும் மீட்டு, தொண்டர் பணி செய்யும் நல்விதியை அருளுமாறு பராசக்தியைப் பிரார்த்திக்கின்றார் அடிகள்.. 'இறைவனோ தொண்டர்தம் உள்ளத்தொடுக்கம்' என்பதால், தொண்டர் பணி செய்யும் பேறு வேண்டினார்.

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. (அபிராமி அந்தாதி)

 இங்கு வறுமை என்பதை, செல்வத்துக்காக ஏங்குதல் என்ற பொருளில் மட்டும் இல்லாது, இறைவனின் கருணையென்னும் செல்வம் இல்லாததால் வருந்துதல் என்ற பொருளிலும் கொள்ளலாம்..

(தொடரும்)

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..