நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 2 ஏப்ரல், 2014

YAMUNA JAYANTHI..5/4/2014....யமுனா ஜெயந்தி!!!!...


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நம் பாரத பூமியில், நீர் வளம் சேர்க்கும் ஆறுகள் அனைத்தும் தெய்வாம்சம் பொருந்தியவையாகக் கொண்டாடப்படுகின்றன.. கங்கை போலவே புனிதமாகக் கருதப்படும் மற்றொரு ஆறு யமுனை.. அந்த யமுனை பூமிக்கு வந்த திருநாளே 'யமுனா ஜெயந்தி'யாகச் சிறப்பிக்கப்படுகின்றது.. இந்தப் பதிவில், யமுனையைப் பற்றியும், 'யமுனா ஜெயந்தி' கொண்டாடப்படும் முறை பற்றியும் நாம் பார்க்கலாம்!..


யமுனை:

யமுனை, சூரிய தேவனின் புத்திரி... யமதர்மராஜனுடன், இரட்டையாகப் பிறந்த சகோதரி..இவளது மற்ற பெயர்கள், யமி, காளிந்தி என்பன..சூரிய தேவனுக்குப் பிடித்தமான மகள் இவள்..ஏனெனில் இவள் உடன்பிறந்த மற்ற அனைவரும் (வைவஸ்வத மனு, அஸ்வினி தேவர்கள்) ஆண் மக்களே. அந்தக் காரணத்தால், யமுனைக்கு, 'சூர்யதநயா, ரவிநந்தினி, சூர்யஜா' என்ற பெயர்களும் உண்டு.

அக்னி புராணம், யமுனையின் திருவுருவை அழகுறச் சித்தரிக்கிறது.. கரிய திருமேனியுடன், ஆமையின் மேல், நீர் நிரம்பிய பாத்திரம் தாங்கிய திருக்கோலத்தில், யமுனை உருவகிக்கப்படுகின்றாள்.

யமதர்மராஜர், இறப்பின் அதிதேவதையாகச் சித்தரிக்கப்படுவது போல், யமுனை, வாழ்வைத் தருபவளாகச் சிறப்பிக்கப்படுகிறாள்.. ரிக் வேதத்திலும், அதர்வ வேதத்திலும், யமுனையைப் பற்றிய குறிப்புகள் வருவதாகச் சொல்லப்படுகின்றது..தைத்திரீய சம்ஹிதை, யமுனையைப் பூமியாகவும், யமனை அக்னியாகவும் உருவகிக்கிறது.

யமுனையின் கரிய நிறம் குறித்த பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, சதி தேவியை இழந்த சிவபிரான், யமுனையில் மூழ்கி எழ, அவரது வருத்தம் மற்றும் சதியைக் குறித்த ஏக்கம் இவ்விரண்டும் சேர்ந்தே, யமுனையின் நிறத்தை கரியதாக மாற்றியது என்பது.. 

மற்றொன்று நாம் அனைவரும் அறிந்ததே.. ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படுவது. காளிங்கன் என்ற  பாம்பின் விஷத்தாலேயே யமுனை கரிய நிறம் அடைந்தது என்பது..

ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீகிருஷ்ணருடனான‌  யமுனையின் தொடர்பு பற்றி அழகுறச் சித்தரிக்கிறது..

குட்டிக் கண்ணன், கரிய இருளடர்ந்த சிறைச்சாலையில், உலகுக்கு ஒளி தரும் மணி தீபமெனப் பிறந்து விட்டான். அவனைத் தூக்கிக் கொண்டு, வசுதேவர் கோகுலம் செல்லும் வழியில், யமுனை குறுக்கிடுகிறாள். பரமாத்மாவின் திருவடிகளை ஸ்பரிசித்து விட வேண்டும் என்கிற ஆவல் எல்லை மீறுகிறது யமுனைக்கு.. அதனால், அவளது வேகத்தின் எல்லையும் மீறுகிறது. மெல்ல, மெல்ல நீர்மட்டத்தை உயர்த்துகிறாள். கண்ணனும், தன் குட்டித் தாமரைத் திருவடிகளை, தான் படுத்திருக்கும் கூடைக்கு வெளியே நீட்டுகிறான்.. பரந்தாமன் ஸ்பரிசம் கிடைத்து விட்டது யமுனைக்கு!.. என்ன ஆனந்தம்!..என்ன ஆனந்தம்!.. அதன் பின் வசுதேவருக்கு வழிவிடுகிறாள்..

கொஞ்சம் வளர்ந்த கண்ணன் பிருந்தாவனத்தின் அங்குமிங்கும் செல்லும் போது, தானும் உடன் செல்கிறாள். இதனால் அவள் போக்கே மாறுகிறது.. ஆயினும் கண்ணனை விடுவதில்லை அவள்.

காளிங்க நர்த்தனம் யமுனையில் தான் நடக்கிறது.. கண்ணனின் திருநடனத்தை, முதலில் அவளே காணப் பெறுகிறாள்..

எல்லையில்லாத தன் அன்பின் காரணமாக, அவனை அடையும் வரமும் பெறுகிறாள். அந்த நிகழ்வு கீழ்க்கண்டவாறு சித்தரிக்கப்படுகின்றது.

ஒரு முறை, ஸ்ரீகிருஷ்ணர், இந்திரப்பிரஸ்தம் சென்றிருந்த போது, அர்ஜூனனுடன், வேட்டைக்குச் சென்றார்.. அங்கு யமுனைக் கரையில் இருந்த ஒரு குடிலின் வாசலில், அழகிய ஒரு பெண்ணைக் கண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் கட்டளைப்படி, அங்கு சென்ற அர்ஜூனன், அந்தப் பெண்ணைக் கண்டு விசாரிக்க, அவள் தன் பெயர் 'காளிந்தி (யமுனை)' எனவும், தான் சூரிய தேவனின் புதல்வி எனவும், ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் திருமணம் செய்யும் பொருட்டு, அங்கு தவமிருப்பதாகவும் உரைத்தாள். அதைக் கேட்ட  அர்ஜூனன்,  விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீகிருஷ்ணர் என உரைத்தான். ஸ்ரீகிருஷ்ணரும், காளிந்தியும் ஒருவரை ஒருவர் மணக்கச் சம்மதித்தனர். அனைவரும் இந்திரப்பிரஸ்தம் வந்து, அதன் பின் துவாரகையை அடைந்தனர். முறைப்படி, ஸ்ரீகிருஷ்ணருக்கும், காளிந்திக்கும் திருமணம் நடைபெற்றது..ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு பட்ட மகிஷிகளுள் காளிந்தியும் ஒருத்தி..காளிந்திக்கு ஷ்ருதன், சுபாஹூ, கவி உள்ளிட்ட பத்து புதல்வர்கள் பிறக்கின்றனர்.

யமுனை ஆறாக உருவம் பெற்றதைப் பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகின்றது..

சூரியனின் மனைவி உஷா தேவி, சூரிய தேவனின் பிரகாசம் தாங்காமல், தன் நிழலைப் பெண்ணாக்கி, சூரிய லோகத்தில் விட்டு விட்டுச் செல்கிறாள்..சாயா தேவி என்னும் பெயருடைய அந்தப் (நிழல்) பெண், தனக்குக் குழந்தை பிறந்ததும், யமியையும், யமனையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறாள். கோபமுற்ற யமன், சாயா தேவியுடன் சண்டையிட்டுப் பயமுறுத்துகிறான்.. இதனால் ஆவேசமடைந்த சாயா, கடும் சாபமிடுகிறாள். சூரியனால் கூட யமனை அந்த சாபத்திலிருந்து காக்க இயலவில்லை.. யமன் இறப்பின் அதிதேவதையாகிறான்.. தன் குடும்பத்திலிருந்து அவன் வெளிச் செல்ல நேரிடுகிறது.. இதனால் சோகமடைந்து, விம்மி விம்மி அழுகிறாள் யமுனா.. அவள் கண்ணீரே யமுனை ஆறாக உருவெடுக்கிறது.

யமுனையில் நீராடுவோர் மரண வேதனையிலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

பத்ம புராணத்தில் இதை விளக்கும் ஒரு கதை கூறப்படுகின்றது. மிகுந்த அறிவாளிகளும் ஒழுக்க சீலர்களுமான இரு சகோதரர்கள், விதி வசத்தால் தம் நெறியிலிருந்து பிறழத் துவங்குகின்றனர். இதன் காரணமாக, ஏழ்மை நிலையை அடைந்து, இறுதியில் கொள்ளைத் தொழிலில் ஈடுபடத் துவங்குகின்றனர்.. அவர்கள் இகலோக வாழ்வு முடிந்து, யமதர்மராஜனின் சபைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.. அங்கு மூத்த சகோதரனுக்கு நரக வாசமும், இரண்டாவது சகோதரனுக்கு ஸ்வர்க்க வாசமும் அளிக்கிறார் யமன்.. மூத்தவன் காரணம் கேட்க, அதற்கு யமன், இளையவன் இரு மாதங்கள் யமுனைக் கரையில் தங்கி அதில் நீராடியதாகவும் அதனால் அவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டதாகவும் கூறுகிறார்.

தீபாவளி அமாவாசையை அடுத்த இரண்டாவது தினம்,'யம துவிதியை' அன்று, யமன் தன் தங்கையைப் பார்க்க பூலோகம் வருவதாக ஐதீகம். அன்றைய தினம், சகோதரர்களுக்கு இனிப்புடன் விருந்தளிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியமும் கிட்டும் என்று யமன் வரமருளியிருப்பதால், வட நாட்டினர் அன்றைய தினத்தை, சிறப்புறக் கொண்டாடுகின்றனர். சகோதரர்களும், சகோதரிகளுக்கு அன்பளிப்புகள் தருகின்றனர்.

யமுனை ஆறாக உருவெடுத்த தினமாக, வசந்த நவராத்திரியின் ஆறாவது (சஷ்டி) தினம் சொல்லப்படுகின்றது..

வசந்த நவராத்திரி குறித்த முந்தைய பதிவுக்கு இங்கு சொடுக்கவும்..

வசந்த நவராத்திரியின் ஐந்தாவது தினம் நாக பஞ்சமியாக அனுசரிக்கப்படுகின்றது.. அன்றைய தினம் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி, நாக தேவதைகளை வழிபட வேண்டும்.. அன்று மாலை ஸ்ரீலக்ஷ்மிக்கு பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.. ஆறாவது தினமான யமுனா ஜெயந்தி தினத்தில், யமுனைக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

யமுனை நதி பாயும் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக, மதுராவில், இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.. அன்றைய தினம் யமுனைக்கு பூஜைகள் செய்து மலர்கள் தூவி வழிபாடுகள் செய்யப்படுகின்றது.. யமுனை நதியில் அன்று நீராடுவது சிறப்பு.. தீபங்கள் ஏற்றி, யமுனையில் மிதக்க விட்டு, தீப வழிபாடும் செய்யப்படுகின்றது.அன்றைய தினம், 'யமுனா மையா கி ஜெய்' என்ற கோஷத்துடன் பக்தர்கள் நீராடுகின்றனர். இவ்வாறு பூஜிப்பவர்கள், யமுனையின் அருளால், ஸ்ரீகிருஷ்ணரின் அனுக்கிரகத்துக்கும் பாத்திரமாவார்கள் என்பது நம்பிக்கை..

யமுனையில் நீராட இயலாதோரும், தம் இல்லங்களில், நீர் நிரம்பிய பூரண கலசத்தில், யமுனையை ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம்.. யமுனையுடன் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிமையையும் வைத்துப் பூஜிக்க, எல்லா நலமும் வளமும் பெறலாம்..

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..