நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 24 நவம்பர், 2012

PART 2, BRINDAVANA THUVADASI VIRATHAM. (25/11/2012).....பிருந்தாவன துவாதசி விரத‌ம்..பகுதி 2.


சென்ற பதிவின் தொடர்ச்சி...............

கணவனைக் கண்டதும், துளசி ஓடி வந்து பணிந்து வரவேற்றாள். சங்கசூடன் உருவில் இருந்த விஷ்ணு அவளிடம், தான் யுத்தத்தில் ஜெயித்து விட்டதாகவும், சிவபெருமான் விருப்பப்படியே, தேவர்களுக்கு அவர்களது அரசைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறினார். 

துளசி மிக மகிழ்ந்தாள். தன் கணவனுக்கு உபசாரங்கள் செய்யத் துவங்கினாள். இருவரும் ஆனந்தப்பட்டனர். துளசியின் நிலை அறிந்து சிவபெருமான், சங்கசூடனுடன் உக்கிரமாக யுத்தம் செய்யலானார். பிரளய கால அக்னி போல் ஜ்வலிக்கும் சூலாயுதத்தை அவன் மீது பிரயோகிக்க, சஙக்சூடன், இரு கரங்களையும் கூப்பி இறைவனைத் தியானித்தான். சூலாயுதம், சங்கசூடனின் தலையைத் துண்டித்தது.

துளசியின் அந்தப்புரத்தில், துண்டிக்கப்பட்ட தலை துளசியின் முன் வந்து விழுந்தது. அதைக் கண்ட துளசி துடித்தாள். மாயாசக்தியின் காரணமாக, அவளுக்கு அவள் வாங்கி வந்திருந்த வரங்கள் யாவும் மறந்திருந்தன.

தன் அருகில், தன் கணவன் உருவத்தில் இருந்த விஷ்ணுவிடம், "நீ என் கணவன் இல்லை. என்னை மோசம் செய்த நீ யார் என்பதைச் சொல்" என்று ஆத்திரத்தோடு வினவினாள்.

விஷ்ணு அவளுக்குத் தன் திருவுருவைக் காட்டினார்.  துளசியின் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. மனம் கொதித்து, 'என்னை வஞ்சித்த நீ,  கல்லாகப் போவாய்' என சபித்தாள்.

விஷ்ணு, அவளைப் பார்த்து, 'நீ முன்னர் என்னைக் கணவனாக அடைய வேண்டுமெனத் தவம் செய்தாய்.சங்கசூடனும், முற்பிறவியில் உன்னை அடைய விரும்பினான். பிரம்மன் வரம் தந்தபடி, முதலில் சங்கசூடனை மணந்தாய். இப்போது உன் தவத்திற்கு பலன் தர வேண்டிய தருணம். நீ இந்த சரீரத்தை விட்டு, என்னை அடைவாய். உன் உடல் கண்டகி நதியாகி மனிதர்களைப் புனிதப்படுத்தும். உன் உரோமங்கள், துளசிச் செடியாகி, எவ்வுலகிலும் நிலைபெறும்.

துளசிச் செடியிருக்கும் புண்ணியத் தலங்களில், நானும் தேவர்களும் தங்கியிருப்போம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதைக் காட்டிலும், ஒரு குடம் துளசித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதே எனக்கு மிக விருப்பமாகும். துளசி மாலையைத் தரிப்பவர்கள், லக்ஷம் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள்.


என்னைக் கல்லாக சபித்தது, பலிக்கும். நான் கண்டகி நதிக்கரையில் மலையாக உருவெடுப்பேன். என்னைப் பூச்சிகள் துளைத்து,சிறு சிறு கற்களாக நதியிலே தள்ளும். அவற்றை சாளக்கிராமம் என்ற பெயரில், என் அம்சம் நிறைந்ததாகப் பூஜிப்பார்கள். அதில், ஸ்ரீலக்ஷ்மியோடு நான் சாந்நித்யம் கொண்டிருப்பேன். சாளக்கிராம பூஜை செய்பவர்கள், வேறு யாகம், பூஜை முதலிய செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவே அவற்றிற்கு ஈடாகும். ஆனால் அதை வைத்திருப்பவர்கள், மிகுந்த நியமத்தோடு இருக்க வேண்டும் ' என்று கூறினார்.

இதைக் கேட்ட துளசி, தன் தேகத்தை விடுத்து, திவ்ய ரூபத்தோடு ஸ்ரீ விஷ்ணுவின் திருமார்பை அடைந்தாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

போரில் மாண்ட சங்கசூடன், திவ்ய தேகத்தை அடைந்து,  கோலோகத்திலிருந்து வந்த விமானத்திலேறிச் சென்றான். அவன் எலும்புகள் பூமியில் சங்கு வடிவங்களாயின. சங்கு தீர்த்தம் மிக புனிதமானது. அதனால் நீராடுபவர்களது சகல பாவங்களும் நீங்கும். கார்த்திகை சோமவாரங்களில், சங்காபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறுகிறது. சங்கு இருக்குமிடத்தில் துர்சக்திகள் தூர விலகும். வலம்புரி சங்கு இருக்குமிடத்தில், ஸ்ரீ லக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இந்தப் புராணக்கதை வெவ்வேறு புராணங்களில், சிற்சில மாற்றங்களோடு கூறப்படுகிறது.
துளசி பூஜை செய்யும் முறை:
துளசி பூஜை செய்ய, துளசிச் செடி மிக அவசியம். நாம் பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை. அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது. 

பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம். நெல்லி மரம் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம். ஆகையால், இவ்வாறு பூஜிக்கின்றனர். துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும். துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.

துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.  

பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். துளசி அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

அவல் பாயசம் நிவேதனம் செய்வது சிறந்தது. இயன்ற வேறு நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில், இனிப்புப் பண்டங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள். மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.

கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு  மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம்.  இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.

பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.

மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.

துளசி தேவியைப் போற்றி, பூஜித்து,

வெற்றி பெறுவோம்!!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..