நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

DEEPAVALI FESTIVAL...13/11/2012... தீபாவளி!!!!!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட தங்க மயமாக ஒளிவீசும் தீபங்களை ஏற்றி வழிபடும் தீபாவளிப் பண்டிகை வந்துவிட்டது. மத்தாப்பு சிதறலும் மனமெல்லாம் வெளிச்சமும்,வீடெங்கும் ஒளிவெள்ளமும் இதயமெல்லாம் இன்பமும், குழந்தைகளின் குதூகலமும், பெரியவர்களின் ஆனந்தமும் எல்லாமுமாக ஒன்று சேர்ந்து, நாடெங்கும் விழாக்கோலம் காணும் வேளை இது. பட்சணப் பரிமாறல், ஆடைகளின் அணிவகுப்பு, உறவினர்கள் வருகை, உள்ளத்தில் மகிழ்ச்சி என்று கொண்டாடும் இந்த நன்னாளில், அனைவருக்கும் என் உளமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்தியாவில், அனைத்து மாநிலத்தவராலும், பேதமின்றிக் கொண்டாடப்படும் பண்டிகை இது. முக்கியமாக, வடமாநிலத்தவர், இதை ஐந்து நாள் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

நம் தமிழகத்தில், இதை ஒரு நாள் பண்டிகையாக மட்டுமே கொண்டாடுகிறோம். முதலில் நம் தமிழ் நாட்டு வழக்கப்படி பண்டிகை கொண்டாடும் முறையைப் பார்க்கலாம். பொதுவாக, காலை எண்ணெயக் குளியல், பிறகு புத்தாடை உடுத்துதல், இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுதல் ஆகியவையே நாம் அறிந்தவை. கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும், நம் சம்பிரதாய முறைப்படி தீபாவளி கொண்டாடுதலை முதலில் நாம் பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகை (நம் சம்பிரதாய முறையில்).
நரகாசுர வதம் காரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. நரகசதுர்த்தசி ஸ்நானம் என்று போற்றப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் மிகவும் மகிமை வாய்ந்தது. அன்றைய தினம், அனைத்து நீர் நிலைகளில், கங்கையும், நல்லெண்ணெயில் ஸ்ரீ லக்ஷ்மியும் வாசம் செய்கிறார்கள். 'தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா' என்பது ஐதீகம். ஆகவே, அன்று யாரைப் பார்த்தாலும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று விசாரிப்பது நமது சம்பிரதாயம்.

அன்றாடம் செய்யும் குளியலில், 'கங்கா, கங்கா' என்று உச்சரித்தபடி குளிக்க, கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும். அவ்வாறிருக்க, கங்கையே நம் வீடு தேடி வரும் நன்னாளில், சூரியோதயத்திற்கு முன் குளிக்க கங்கா ஸ்நானப் பலன் கட்டாயம் கிடைக்கும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தஸீம்
ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யமலோகம் ந பச்யதி (நிர்-147)

தீபாவளியன்று அதிகாலை சந்திரன் இருக்கும் போதே, தலையில் நல்லெண்ணை தேய்த்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் என்பதே ஏற்படாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.

பண்டிகைகளை தெய்வீகம் கலந்து அனுசரிக்கும் போது, நம் மனம் மகிழ்வதை உணர்வு பூர்வமாக உணர முடியும்.  நம் முன்னோர்கள், கேளிக்கைகளுக்காக அல்லாது, மனோதத்துவ ரீதியாகவே, ஒவ்வொரு பண்டிகையையும் வழிமுறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொர் நிகழ்வையும், ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி, வாழ்க்கை அழகானது என்பதை உணர வகை செய்திருக்கிறார்கள்.

நராகசுரன் தீமையின் மொத்த உருவகம். அவன் இறந்த நாளை, ஒளிவீசும் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து புது மகிழ்வோடு கொண்டாடுகிறோம். பலர் வாழ்வில் சோகம் நிறைந்திருக்கலாம். அவர்களும், தம் வாழ்வின் துரதிருஷ்டங்கள் தொலைந்து, நமக்கும் நல்ல காலம் பிறக்கும் என்ற உந்துதலை, இப்பண்டிகையின் கதை மூலம் பெறுவதே, நரகசதுர்த்தசி திருநாள் கொண்டாடப்படும் நோக்கம்.

ஒவ்வொரு பண்டிகையும் குறிப்பிட்ட நேரத்தில் தான் கொண்டாடப்படவேண்டும்.

அப்போதுதான் அதைக் கொண்டாடுவதன் பலன் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

தீபாவளிப்பண்டிகையின் முதல் நாள் செய்ய வேண்டியவை:
பூஜை அறையை மெழுகி, பூஜை சாமான்களை சுத்தப்படுத்தி, மாக்கோலமிட வேண்டும். வீட்டில் ஒட்டடை இல்லாமல் சுத்தப்படுத்துவது அவசியம்.

புதுத் துணிகளுக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். புடவைகளை அப்படியே வைக்காது, கொசுவி வைக்க வேண்டும். அட்டைப்பெட்டிகளைப் பிரிக்காது அப்படியே வைக்கக் கூடாது.

சில வீடுகளில், முதல் நாள்  இரவு, பாயசம் முதலியவை வைத்து விருந்தாகச் சமைப்பது வழக்கம். பஜ்ஜி, வெள்ளை அப்பம் முதலியவையும் முதல் நாள் செய்வார்கள்.

கெய்சர்கள் இருந்தாலும், சம்பிரதாயத்தை அனுசரித்து, ஒரு அடுப்பில் கோலம் போட்டு, ஒரு எவர்சில்வர், அல்லது பித்தளைப் பானையில், சுற்றிலும் சுண்ணாம்பு தடவி, நடுநடுவே நான்கைந்து குங்குமப்பொட்டுகள் வைத்து, தண்ணீரை நிரப்பி அடுப்பில் வைக்கவும். தண்ணீரில் கங்கை தங்குவதால், இவ்வாறு  கோலம் போட்டு அலங்காரம் செய்கிறோம்.

ஒரு பாத்திரத்தில், தேவையான நல்லெண்ணையை எடுத்து ஓமம், மிளகு, மஞ்சள் பொடி, வெற்றிலை இவைகளைப் போட்டு, பொங்கக் காய்ச்சி எடுத்து வைக்கவும். எண்ணை காய்ச்சுதலை இரவு எல்லா வேலைகளும் முடிந்த பிறகு செய்யலாம்.

ஒரு தாம்பாளத்தில், வெற்றிலை, பாக்கு, சீப்பு வாழைப்பழம், பூ, சந்தனம், குங்குமம், சீயக்காய் பொடி,  கஸ்தூரி மஞ்சள் பொடி, வாசனை(ஸ்நான)பொடி, ஒரு கிண்ணத்தில்,காய்ச்சிய எண்ணை ஆகியவற்றை எடுத்து வைக்கவும். எண்ணைப் பாத்திரத்தைச் சுற்றிலும், சுண்ணாம்பு தடவி பொட்டுக்கள் வைக்கவும்.

இன்னொரு தாம்பாளம் அல்லது ஓலைக்கூடைகளில்(அக்கால வழக்கம்) புதுத் துணிகளை எடுத்து வைக்கவும். இனிப்புப் பண்டங்களையும், தீபாவளி மருந்து, பட்டாசு முதலியவற்றையும் எடுத்து வைக்கவும்.

தீபாவளியன்று:
சம்பிரதாயப்படி, மிக அதிகாலை,  இரண்டரை மணிக்கு, வீட்டின் தலைவி எழுந்து, வெந்நீர் அடுப்பை ஏற்றிவிட்டு, வாசல் தெளித்து, பெரிய கோலம் இட்டு, பூஜையறையில் ஐந்து முகக் குத்துவிளக்கை ஏற்றி விட்டு, வீட்டிலுள்ளோரை எழுப்ப வேண்டும்.

ஆசனப்பலகை அல்லது பாயைப் போட்டு, கிழக்கு முகமாக வீட்டிலுள்ளோரை உட்கார வைக்க வேண்டும். எடுத்து வைத்துள்ள சாமான்களை வீட்டுக்குப் பெரியவர், இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு, எல்லோருக்கும் வாழைப்பழம் சாப்பிடக் கொடுப்பார். வெற்றிலை போடும் வழக்கம் உள்ளவர்கள், முதலில் வெற்றிலை போடுவார்கள். அன்றைய தினம் அதிகமான பலகாரங்கள் சாப்பிட வேண்டியிருப்பதால், ஜீரணமாகும்  பொருட்டு, தீபாவளி மருந்தை சில வீடுகளில் முதலில் சாப்பிடுவார்கள்.

பிறகு, ஒரு பட்டாசை எடுத்து, வாசலில் வெடித்து விட்டு வரவேண்டும்.

முதலில் குழந்தைகளை உட்கார வைத்து, வீட்டில் முதிய பெண்மணி, 'கௌரி கல்யாணம்' அல்லது வேறு ஏதாவது மங்கலமான பாடல்களைப் பாடி, மூன்று சொட்டு நல்லெண்ணையை முதலில் தலையில் வைக்க வேண்டும்.  நீண்ட ஆயுளைப் பெற வேண்டி, 'அஸ்வத்தாம, பலி, வியாச, க்ருப, ஹனும, விபீஷண பரசுராம‌' என்று ஏழு சிரஞ்சீவிகள் பெயரைச் சொல்லி, ஆண் குழந்தைகளின் வலக்கையில் ஏழு பொட்டு எண்ணை வைத்து, பின் தலையில் எண்ணை வைக்கலாம். பெண் குழந்தைகளுக்கு,

'அகல்யா, திரௌபதி, சீதா தாரா மண்டோதரி ததா, 
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசனம்' 

என்று உச்சரித்து எண்ணை வைக்கலாம். சுமங்கலிகள் இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்யும் போது சொல்ல சௌமாங்கல்யம் பெருகும். ஸ்லோகம் சொல்லும் போது, நெற்றி வகிட்டில், ஐந்து எண்ணைப் பொட்டுக்கள் வைத்து, பின் எண்ணை தேய்த்து குளிக்கலாம். ஏழு சிரஞ்சீவிகள் பெயரை, பெண் குழந்தைகளுக்கு, இடக்கையில் ஏழு எண்ணைப் பொட்டுக்கள் வைத்துச் சொல்வதும் வழக்கம்.
பிறகு குளித்துவிட்டு, முதலில் ஏதாவதொரு பழைய ஆடையை அணிந்து கொண்டு, வீட்டுப் பெரியவர்களிடம் ஆசி பெற்று, புது உடையை அவர்கள் கையால் எடுத்துக் கொடுக்க வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.
சில வீடுகளில், குளித்த பின், முதலில் தீபாவளி  மருந்து சாப்பிட்டு, அதன் பின் டிபன் சாப்பிடுவார்கள். டிபன் சாப்பிட்டு முடித்த பின்னரே புதுத் துணி அணியும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து செய்து கொள்ளவும்.

காலை நான்கு, நான்கரைக்குள் ஸ்நானம் செய்ய வேண்டும் அந்த நேரத்திலேயே கங்கை நம் இல்லம் தோறும் வருகிறாள். சூரிய உதயத்திற்கு முன் அதாவது, ஆறு மணிக்குள் டிபன் சாப்பிட வேண்டும் என்பது சம்பிரதாயம். பொதுவாக, இட்லி. பட்சணங்கள் முதலியவையே காலை டிபன்.
மதியம், பாயசம், தயிர்ப்பச்சடி, பொரியல், கூட்டு, மோர்க்குழம்பு வடை முதலியவை செய்து சமைப்பார்கள். அமாவாசையன்று தீபாவளி வந்தால், அன்று தர்ப்பண தினம் என்பதால், மோர்க்குழம்பு வைப்பார்கள். இல்லையெனில் சாம்பார் வைக்கலாம்.  அமாவாசையன்று தீபாவளி வந்தால், தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள், மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு தர்ப்பணம் செய்து, இரவு ஏதாவது டிபன் சாப்பிட வேண்டும்.

அன்றைய தினம், காலை அல்லது மாலையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வரவேண்டும்.

நம் சம்பிரதாயப்படி, திருக்கார்த்திகை தினத்தன்றே வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால், இப்போது, வடஇந்தியர்களின் சம்பிரதாயத்தை அனுசரித்து, தென்னிந்தியர்களும் வீடு தோறும் தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துகிறார்கள். பல குடும்பங்களில், ஸ்ரீ லக்ஷ்மியின் அருளைப் பெறும் முகமாக, லக்ஷ்மி குபேர பூஜையும் செய்கிறார்கள்.

இவ்வாறு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், மாலை ஐந்து ஐந்தரை மணியளவில் பூஜை துவக்கலாம். உற்றார், உறவினர் அனைவரையும் அழைத்து பூஜையில் கலந்து கொள்ளச் செய்து, தேவியின் அருளைப் பெறச் செய்யலாம்.

கங்கா தேவியைப் போற்றும், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கங்காஷ்டகத்திற்கு இங்கு சொடுக்கவும். இதைத் தீபாவளி தினத்தில் பாராயணம் செய்ய கங்காதேவியின் அருளால், எல்லா நலன்களும் பெற்று வளமோடு வாழலாம்.

அன்றைய தினம், அனைவருக்கும் தாம்பூலம் வழங்குவதும், பெரியோர்கள் இருக்கும் இடம் சென்று ஆசி பெறுவதும் மிக அதிக அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரும்.

தமிழகத்தின் பல பகுதிகளில், ஸ்ரீ உமா தேவி, சிவனாரின் உடலின் இடப்பாகத்தை தவமிருந்து பெற்ற நன்னாளாக, ஐப்பசி அமாவாசையை, கேதார கௌரி விரதமாகக் கொண்டாடுகின்றனர். தம்பதியருக்குள் ஒற்றுமையை நல்கும் மகிமை பொருந்திய விரதம் இது. உமா தேவி, சிவனாரை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டி, கேதார திருத்தலத்தை அடைந்த போது கௌதம முனிவர், உமாதேவிக்கு உபதேசித்தருளிய விரதம் இது. இதன் பலனாகவே, இறைவனின் இடப்பாகத்தை உமாதேவியார் பெற்றார். அந்தத் திருத்தலத்தின் பெயருடனேயே, இது கேதார கௌரி விரதம் எனச் சிறப்பிக்கப்படுகின்றது.
புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவசை முடிய மொத்தம் 21 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முடிச்சு வீதம் இருபத்தோரு முடிச்சுக்கள் கொண்ட நோன்புச்சரடு நிறைவு நாளன்று அணியவேண்டும். ஆனால், இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, பெரும்பான்மையோர், தீபாவளி அமாவாசை ஒரு நாள் மட்டுமே இதனை அனுசரிக்கின்றனர்.
இதை இல்லத்தில் கொண்டாடுவோர், அம்மிக் குழவியை, மஞ்சள் பூசி, நகைகள் போட்டு, அரிசி நிரம்பிய தாம்பாளத்தின் மேல் வைத்து அதையே அம்மனாகப் பாவித்து பூஜிக்கின்றனர். அதிரசம் முக்கிய நிவேதனங்களுள் ஒன்று. காலை தொடங்கி உபவாசம் இருந்து, மாலை வேளையில் பூஜைகள் செய்கிறார்கள். நோன்புச்சரடு கட்டிக் கொண்டு, நிவேதனங்களை உண்டு, விரதத்தை முடிக்கிறார்கள். சிலர் கோவிலில் கொண்டாடுவதும் உண்டு. அவர்கள், நிவேதனப்பொருட்களைக் கொண்டு, கோவிலுக்குச் சென்று,அங்கு நிவேதனங்களைச் சமர்ப்பித்து சரடு கட்டிக் கொள்வதும் வழக்கம்.

வடஇந்தியாவில் தீபாவளி:
தீபாவளிக்கு முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் வாங்க, அவை பெருகும் என்பது நம்பிக்கை. இப்போது தென்னிந்தியர்களும் வாங்கத் துவங்கி விட்டனர். அன்றைய நாள் தன்வந்த்ரி ஜெயந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. அதனாலேயே, தீபாவளி லேகியம் வழக்கம் வந்ததெனவும் கூறுகின்றனர்.

அன்று மாலை வீடெங்கும் தீபமேற்றுவர். இதை ஒட்டி ஒரு புராணக் கதை கூறப்படுகின்றது.  ஹிமா என்ற அரசனின் 16 வயது மகன், திருமணமான நான்காம் நாள் இரவு பாம்பு கடித்து இறப்பான் என்று அவன் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் சொல்ல, அவன் இளம் மனைவி, அந்த நாளில், வீடெங்கும் தீபமேற்றி, நடுவில் ஒரு குவியலாக, தன் ஆபரணங்களை வைத்து, தன் கணவனைத் தூங்க விடாது, பாடல்களைப் பாடியும், புராணக் கதைகளைச் சொல்லியும் பார்த்துக் கொண்டாள். பாம்பு உருவில் வந்த யமதர்மராஜா, தீபங்கள் மற்றும் ஆபரணங்களின் பிரகாசம் கண்களை கூசச் செய்யவே, விடியும் வரை காத்திருந்து பின் திரும்பி விட்டாராம். இவ்வாறு அந்தப் பெண், தன் கணவனைக் காத்தாளாம். ஆகவே, யம பயம் நீங்க, யமதீபம் ஏற்றப்படுகின்றது. வீடு, மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு,   பூஜை நடத்தப்படுகின்றது.

சதுர்த்தசி தினத்தன்று, நம்மைப்போலவே, நரக சதுர்த்தசி கொண்டாடுகின்றனர். அடுத்த நாள், லக்ஷ்மி பூஜையை வெகு விமரிசையாக நடத்துகின்றனர்.

பிரதமை தினம், அவர்களுக்கு புதுவருடம் தொடங்குகிறது. வாமனராக அவதரித்த எம்பிரான், மஹாபலிச் சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண்கேட்டு, அவர் சம்மதிக்க, திருவிக்ரம மூர்த்தியாக விண்ணளந்து, மண்ணளந்து மூன்றாவது அடியை மஹாபலியின் சிரத்தின் மேல் வைத்து அவரைப் பாதாள லோகத்துக்கு அனுப்பிய நன்னாளாக, 'பலி பிரதிமா' என்று பிரதமை சிறப்பிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்த நாள், மஹா பீஜ் என்று சகோதரர்கள் சகோதரிகள் இல்லங்களுக்குச் சென்று பரிசுப்பொருட்களை வழங்குகின்றார்கள். வட இந்தியாவின் சில பகுதிகளில், தீபாவளி மறு நாள், பாய் தூஜ் என்று சகோதரிகள், சகோதரர்கள் நலம் வேண்டி திலகமிட்டு வாழ்த்தும் நன்னாளாகக் கொண்டாடப்படுகின்றது.

யமனுடைய சகோதரி யமுனாதேவி, அன்றைய தினம் தன் வீட்டுக்கு வந்த தன் சகோதரனுக்குத் திலகமிட, யமதர்மராஜாவும், தீர்க்க சுமங்கலியாக இருப்பாய் என வாழ்த்தினாராம். மேலும், அன்றைய தினம், யாரொருவர், தம் சகோதரி கையால் திலகம் அணிகிறாரோ அவருக்கு நரக வாசம் என்பது கிடையாது என்று வரமளித்தாராம். ஆகவே, அன்றைய தினம், சகோதரிகள், தம் சகோதரரை திலகமிட்டு வாழ்த்தி, இனிப்பு அளிப்பது வழக்கம். 

உத்திரப்பிரதேசத்தில், ஸ்ரீராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நன்னாளே தீபாவளி.  ஜைனர்களும் பகவான் மஹாவீரர், முக்தி அடைந்த நன்னாளே தீபாவளி. பௌத்தர்களும் தீமைகள் அகல ஒளிவிளக்கேற்றும் நன்னாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

நாடெங்கும் ஒளி தீபமேற்றிக் கொண்டாடும் தீபாவளி நன்னாளில் எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!!!

4 கருத்துகள்:

  1. ////அய்யர் said...
    Special DIWALI Greetings..!!/////

    Thank you so much, sir. wish you the same.

    பதிலளிநீக்கு
  2. அடுத்தது சஷ்டி தானே..
    அறுபடை வீட்டு கவசங்கள்

    ஆறு நாட்களுக்கு தொடர்ந்து எழுதுங்கள்
    அவை தனித்தனியாக ஆறு நாட்களுக்கு

    உங்கள் பாணியில் பொருளுடன்
    உள்ளம் நெகிழ எழுதுங்கள்

    நாம் அனைவரும் சொல்லும் சஷ்டி கவசம்
    நம்மை வெற்றி பெறசெய்யும் திருச்செந்தோர் கவசம் தான்

    அதற்கு முன்னர் உள்ள 5 கவசங்களை
    அம்மையார் பதிவேற்ற வேண்டுகிறோம்

    பதிலளிநீக்கு
  3. ////அய்யர் said...
    அடுத்தது சஷ்டி தானே.

    அதற்கு முன்னர் உள்ள 5 கவசங்களை
    அம்மையார் பதிவேற்ற வேண்டுகிறோம்////

    தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் மனமார்ந்த நன்றி. வெளியூர்ப் பயணங்கள் மற்றும் உடல்நிலைக் கோளாறுகளால் தொடர்ந்து உட்கார்ந்து எழுத முடியாத நிலை. எனினும் இயன்ற போது எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்கள் ஆவலை வெகு சீக்கிரம் பூர்த்தி செய்ய இறையருளை வேண்டுகிறேன். தங்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..