நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

PART 1, NAVARATHIRI GOLU (16/10/2012 TO 24/10/2012)......நவராத்திரி மகிமை.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
(மஹாகவி பாரதியார்).
பெண்மை போற்றுதலுக்குரியது. துதிக்கத் தகுந்தது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவப்பெருமான் போற்றிப் புகழ்கிறார். உலகில் உயிர்களின் தோற்றம் நிகழ்வது பெண்மையாலேயே.

இவ்வுலகமனைத்தும் ஒரு ஒழுங்கில் இயங்குகிறது.  ஒவ்வொரு இயக்கமும், அணுவிலிருந்து அண்டம் வரை இயங்குவதற்குக் காரணமான‌ ஆற்றலின் பிரவாகத்தை, சக்தியின் சொரூபத்தை பெண்வடிவில் தொழுது போற்றும் மார்க்கமே சாக்தம் ஆகும்.

நாம் வாழும் பூமி, அதில் ஓடும் நதிகள், பேசும் மொழி, உண்ணும் உணவு என எதையும் பெண்ணின் அம்சமாக, பூமாதா, கங்கையம்மன், காவிரித்தாய், அன்னைத் தமிழ், அன்னபூரணி, அன்னலட்சுமி என்று சிறப்பித்துக் கூறுவது நமது மரபு

நமது மரபில் 'அன்னை' என்ற உறவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்' நாம் மிக உயர்வாக வைத்து மதிக்க வேண்டியவை.

உயிர்களின் தோற்றத்திற்குக் காரணம் அன்னை. 'கெட்டமகன் இருக்கலாம் ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை' என்பது நிதர்சன உண்மை. குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னிக்கும் த‌கைமை தாய் ஒருத்திக்கே உண்டு. உலகிற்கு நம்மைத் தருவதிலிருந்து, உணவூட்டிப் பாதுகாத்து, நரைகூடி கிழப்பருவம் எய்தினாலும் தன் மக்கள் நலமே பெரிதென நினைத்துத் தியாகத்தின் மொத்த உருவமாய் வாழும் தாய்மார்களைப் பெரிதெனப் போற்றும் பாரம்பரியம் நம்முடையது.

தாய்மையின் மிக உன்னத, உயரிய வடிவாக, கருணைமழை பொழியும் கற்பக விருட்சமாக, உலகனைத்தும் தோன்றக் காரணமான பரம்பொருளாக, ஜகன்மாதாவாக, உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி நின்று உலகை இயங்கச் செய்யும் ஆற்றலின் பெருவடிவாக, அம்பிகையை போற்றி வழிபடுகிறார்கள் சாக்தர்கள்.

'சக்தியில்லையேல் சிவமில்லை' என்பது சாக்தர்களின் துணிபு. ச‌லனமற்றிருக்கும் நிர்க்குண நிராகாரப் பரம்பொருள் சக்தி எனும் ஆற்றலின் முழுவடிவமாய் இவ்வுலகனைத்தையும் தோற்றுவித்து, காத்து, பின் முடிவில் உலகனைத்தும் ஒடுங்கும் இடமாய்த் திகழ்கிறது.

பிரபஞ்சமுழுவதும் உள்ளும் புறமும் ஊடாடி நின்று உலகனைத்தையும் நன்றாய் இயங்கச் செய்து காத்து ரட்சிக்கும் சக்தியின்வழிபாடு, ஷண்மதங்கள் (காணபத்யம், சௌரம், கௌமாரம், சாக்தம், சைவம், ஸ்ரீ வைணவம் எனும் ஆறு பிரிவுகளே ஷண்மதங்கள்) அனைத்திலும் வியாபித்து நிற்பது கண்கூடு.

சைவத்தில் சக்தி சிவனாரின் பத்தினி. திருமாலின் தங்கை. விநாயகர், முருகப்பெருமானின் தாய். ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, 'தாயார்' என்றே போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளும் சக்தி சொரூபமான தேவியரின் துணை கொண்டே, முத்தொழில்களைப் புரிகிறார்கள்.
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;  . (அபிராமி அந்தாதி)

என்று அபிராமி பட்டர், மும்மூர்த்திகளையும் படைத்த பரம்பொருளான ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே, முப்பெருந்தேவியர் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

'த்ரயாணாம் தேவாநாம் ' எனத் தொடங்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரபகவத் பாதர், "சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் வடிவமாகத் தோன்றிய மும்மூர்த்திகளும் உனது திருவடிகளுக்குப் பூஜை செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, உனது திருவடிகளைத் தொழுதால், மும்மூர்த்திகளையும் தொழுவதாக ஆகிவிடுமன்றோ" என்று அம்பிகையின் மும்மூர்த்திகளுக்கும் மேலான தன்மையைப் புகழ்கிறார்.

அம்பிகையின் கருணை அளப்பரியது. அடியவர்களை அதிகம் சோதிக்காது, வேண்டுவனவற்றை அப்பொழுதே தரும் தன்மையுடையது. இதை சௌந்தர்ய லஹரியில்,  'பவாநி த்வம் தாஸே' எனத் தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர், "பவானி, உன் கருணையுடன் கூடிய கடைக்கண் பார்வையைத் தந்து அருள்வாயாக எனக் கேட்க நினைக்கும் ஒருவன், 'பவானி' எனத் தொடங்கும் முன்பே, மும்மூர்த்திகளின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பட்ட உன் திருவடிகளை உடைய உனது மேலான சாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்" என்று புகழ்கிறார்.

"கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே."
என எங்கும் நிறைப் பரம்பொருளாக அம்பிகையைப் போற்றித்துதிக்கிறார் அபிராமி பட்டர்.

அம்பிகையே 'ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனி' யாக உலகனைத்தையும் படைக்கிறாள். தன் கடைக்கண் பார்வையாலேயே உயிரினங்களைக் காக்கிறாள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள  "உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ" என்ற திருநாமம், தேவி இமை கொட்டாமல் உலகைக் காக்கும் தன்மையை வியந்து போற்றுகிறது. இமை கொட்டுகிற அந்த சிறு துளி நேரம் கூட அம்பிகையின் குழந்தைகளான நமக்கு அவள் பார்வையின் பாதுகாப்பு  கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்ற தாய்மையின் தவிப்போடு நம்மைக் காக்கிறாள் அம்பிகை.

உலகில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகும் போது மஹாகாளியாக அசுரர்களை சம்ஹரித்து அருளுகிறாள். மஹாமாயையாக, உலகனைத்தையும் வசப்படுத்தி, ஆள்கிறாள். அஞ்ஞான இருளில் மூழ்கி ஜீவர்கள் தவிக்கும் போது, தன் வற்றாத பெருங்கருணையால் முக்தியை அருள்கிறாள்

சக்தி வழிபாட்டின் வேர் மிகப் பழமையானது. தாய் வழிபாடும் கன்னி வழிபாடும் மெல்ல மெல்ல ஒருங்கிணைந்தே சாக்தமாகத் தோற்றம் கொண்டது என்றொரு கூற்று உண்டு.ஆதிகாலத்தில், உயிர்களைத் தோற்றுவிக்கும் அதிசய சக்தியாகப் பெண்மையை மதித்த மனிதன், தன் கூட்டங்களுக்குப் பெண்ணின் தலைமையை ஏற்று நடந்தான். காலமாற்றத்தால், இந்நிலை மாறியபோது கூட, பெண்மையின் மகிமையை உணர்ந்து போற்றும் மார்க்கம் மனிதனால் சாக்தமாகப் பேணப்பட்டே வந்திருக்கிறது.

'சக்தி' என்ற சொல்லை உச்சரிக்கும் போதே, நாடி நரம்புகளெல்லாம் பரவும் சிலிர்ப்பு, அந்தச் சொல்லுக்குரிய மகிமையைப் புலப்படுத்தும். ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இந்த உலகைக் காக்கும் அன்னையைத் தொழுது போற்றும் ஒன்பது நாட்களே 'நவராத்திரி'. 

சிறுமி, இளம்பெண், திருமணமான மங்கை, வயது முதிர்ந்த பெண் என பெண்மையின் அனைத்து வடிவங்களையும் பூஜிக்கிறது சாக்தம். பாலா, கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, ஸூவாஸினி பூஜை என அனைத்தும் சாக்தத்தில் முக்கிய இடம் பெறுகிறது. முக்கியமாக, அம்பிகைக்கு உகந்த தினங்களான 'நவராத்திரியில்' இப்பூஜைகள் செய்வது இகபர சுகங்களை அளிக்க வல்லது.

கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியையும் செல்வத்தின் தலைவியாக, ஸ்ரீ லக்ஷ்மியையும் வீரத்தின் அதிதேவதையாக பார்வதியையும் போற்றும் சாக்தத்தில் நவராத்திரிப் பண்டிகை, அமைதியும் காருண்யமும் பொருந்திய அம்பிகை, அநீதி மேலோங்கும் போது துர்க்கையாக, மஹாசண்டியாக, மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை வென்றதைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது புரட்டாசி மாதத்தில் பத்து தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிரவும், வசந்த நவராத்திரி, சியாமளநவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆகியவையும் சாக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

ஆயினும், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே, நாடெங்கும் திருவிழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புனிதமான பாரத நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதத்தில் அன்னை மிகச் சிறப்பாக ஆராதிக்கப்படுகிறாள். வங்காளத்தில், 'துர்க்கா பூஜா' மிக முக்கியமான பண்டிகை. கயிலையில் வாசம் செய்யும் மலைமகளான அன்னை, பிறந்தகம் வந்து செல்வதாக ஐதீகம். பெரும் பந்தல்களில், துர்கா தேவியின் திருவுருவச்சிலைகளை வைத்து, பூஜிக்கிறார்கள். இதற்காகவே, சிறப்பாகத் தயாரிக்கப்படும் அன்னையின் உருவச் சிலைகள், சஷ்டியன்று இரவு, பந்தல்களுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இரவு முழுவதும், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்த தினங்களில் பூஜைகள் விமரிசையாக நடக்கின்றன. தசமி அன்று, அன்னையை வழியனுப்புவதாகக் கருதி, கங்கையில் பிரதிமைகளைக் கரைத்து விடுகிறார்கள்.

குஜராத்தில், மிகச் சிறப்பாக, அன்னையைக் கொண்டாடுகிறார்கள். அங்கு நவராத்திரியின் சிறப்பே, 'டான்டியா' எனப்படும் கோலாட்டம், கும்மி ஆகிய நடனங்கள் தான். பார்வைக்கு வெறும் நடனங்களாகத் தோன்றினாலும், அவற்றின் பின் இருக்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் பிரமிக்கத் தக்கது.

நவராத்திரி பண்டிகை, வர்ஷருது என்று சொல்லப்படும், புரட்டாசி, ஐப்பசி மாதக் காலங்களில் வருகிறது. இதமான தட்பவெப்பம் நிலவும் இக்காலகட்டத்தில், காஸ்மிக் எனர்ஜி, பூமியின் மேல் படுவதால், அதை நம் உடல் கிரகித்துக் கொள்ளும் பொருட்டே, மாலை வேளையில் வெளியில் சென்று தாம்பூலம் வாங்குதல், பெரிய திறந்தவெளியில் கோலாட்டம், கும்மி ஆடுதல் ஆகிய பழக்கங்கள் ஏற்பட்டன. கோலாட்டக் கோல், மிகச் சரியான அளவில் காஸ்மிக் எனர்ஜியை நம் உடலுக்குச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கோலாட்டக் கோலை சுழற்றி, சுழன்று ஆடுவதால், இந்த எனர்ஜி உடல் முழுவதும் சீராகப் பரவி உடலுக்கு நன்மை தரும். 
கைகளைத் தட்டி, ஆடும் கும்மி, நம் உடலில் இருக்கும் இருவேறு சக்தி நிலைகளை(பாட்டரி செல்லின் இருபுறமும் இருப்பதைப் போல்) ஒருங்கிணைத்து உடல் நலத்தைச் சீராக்கும். நடுவில் தீபம் ஏற்றி வைத்து, அதைச் சுற்றி ஆடப்படும் கர்பா நடனமும், இவ்வகையைச் சார்ந்ததே. மேலும், தேவியை ஒளிரூபமாக தியானித்து, நடனத்தினால் ஆராதிக்கும் ஒரு முறையே அது.  கர்நாடகாவில், மைசூரில், தசரா உலகப் பிரசித்தம். மேலும், ஒவ்வொரு வீட்டிலும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. உ.பியில், ராவணவதம் நிகழ்ந்த தினமாக  விஜயதசமி கொண்டாடப்படுகிறது. டில்லி, ராம்லீலா மைதானத்தில், ராவணனின் பொம்மைகளைச் செய்து வைத்து, அதை அம்பு விட்டு எரிப்பார்கள்.

பஞ்சாபில், 'விஷால் பகவதி பூஜை' என்று நவராத்திரி சிறப்பிக்கப்படுகிறது. மிகுந்த நியமத்துடன், உபவாசம் இருந்து பூஜிக்கிறார்கள். எட்டாவது நாள், கன்யா பூஜை மிகச் சிறப்பான ஒன்று. அன்றைய தினம், கன்யா குழந்தைகளை(பூப்படையாத பெண் குழந்தைகள்) மணையில் அமர்த்தி, மருதாணி, பூ முதலியவை அளித்துப் பாத பூஜை செய்கிறார்கள். ஜரிகை வேலைகள் செய்த, துப்பட்டாவை அவர்களுக்குப் போர்த்தி, நமஸ்கரித்து, தக்ஷிணை, பூரி, ஹல்வா, பர்பி, சுண்டல் என்று வழங்கி மகிழ்விக்கிறார்கள்.

மும்பையில், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இப்பண்டிகை. ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நித்ய வாசஸ்தலமாக விளங்கும் மும்பையில்,அன்னை மகாலக்ஷ்மிக்கு அன்றன்றைய  திதிக்கேற்ப ஒன்பது நிறங்களில் புடவைகள் அணிவிக்கப்படுகின்றன. அதன்படியே, அன்னையை வழிபடும், மும்பை  வாழ் பெண்மணிகளும் அணிவதாகச் சொல்கிறார்கள்.

பிரதமை=பச்சை, திவிதியை=சாம்பல், திரிதியை= பிங்க், சதுர்த்தி=வெள்ளை, பஞ்சமி= சிவப்பு, சஷ்டி=நீலம், சப்தமி=மஞ்சள், அஷ்டமி= ஊதா, நவமி=மயில் கழுத்து பச்சை ஆகிய நிறங்களில் வஸ்திரங்கள் சார்த்தப்படுகின்றன. இங்கும் கன்யா பூஜையும், டான்டியா, ராஸ் நடனங்களும் சிறப்பாக நடக்கின்றன.
எங்க வீட்டு கொலு
நம் தமிழ்நாட்டில், அற்புதமான கொலு கலாசாரம் இருக்கிறது. உயிரினங்கள் அனைத்தையும், புல் பூண்டு முதற்கொண்டு கொலுவாக வைத்துப் பூஜித்து, படைப்பின் அருமையை, வாழ்வின் பெருமையை, இவ்வாழ்வை நமக்களித்த சக்தியின் மகிமையைப் போற்றி, முப்பெருந்தேவியரையும் பூஜித்து, விழாஎடுக்கிறோம்.

நவராத்திரியில் முதல் மூன்று தினங்கள், துர்கா தேவியையும், இரண்டாவது மூன்று தினங்கள் லக்ஷ்மி தேவியையும், நிறைவான மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும், பூஜிக்கிறோம்.

ஸ்ரீதுர்கா தேவியைப் பூஜிக்க உதவும் ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சத நாமாவளிக்கு இங்கு சொடுக்கவும்.

ஐந்தாம் நாளான, ஸ்ரீலலிதா தேவியின் திருஅவதார தினத்தில், கன்யாகுழந்தைகளை வீட்டுக்கு அழைத்து,  பாத பூஜை செய்து, ஆடை, அணிமணிகள் தந்து மகிழ்விக்கிறோம். இது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு அளிக்கப்படும் பொருட்கள், ருத்ர லோகத்தைச் சேர்ந்து, பல ஆயிரம் ஆண்டுகள் அங்கேயே இருந்து, இவ்வாறு பூஜித்த குடும்பத்தை வாழ்விக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு விஸ்தாரமாகப் பூஜிக்க இயலாதவர்கள், குழந்தைகளுக்கு, புத்தகம், பென்ஸில் பாக்ஸ் முதலிய்வற்றை இனிப்புடன் வழங்கலாம்.

இவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்படும் நவராத்திரியில் கொலு வைக்கும் முறையையும், ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் அடுத்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வெற்றி பெறுவோம்!!!!!.

அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. எங்கும் நீக்கமற நிறைந்து இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தி; அவள் நமது அன்னை, அவளின் அருளைப் பெற...
    நவராத்தி பண்டிகையின் அருமைப் பெருமைகளையும் கூறி மிகவும் அற்புதமான பதிவை தந்துள்ளீர்கள் சகோதரி.

    அன்னை பராசக்தி உலகில் உள்ள அனைவருக்கும் நல்லருள் புரிந்துக் காக்க அவளின் பொற் தாமரைப் பாதங்களைப் பணிந்து போற்றுகிறேன்.

    பதிவு, பகிர்விற்கு நன்றிகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. //ஜி ஆலாசியம் said...//
    நவராத்தி பண்டிகையின் அருமைப் பெருமைகளையும் கூறி மிகவும் அற்புதமான பதிவை தந்துள்ளீர்கள் சகோதரி.//

    தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..