நட்பாகத் தொடர்பவர்கள்

Thanusuvin kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thanusuvin kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

தனுசுவின் கவிதைகள்..எங்கள் ஊர் திருவிழா






எங்கள் ஊர் திருவிழாவில்
கூட்டமோ கூட்டம்.
எல்லோர் முகத்திலும் ஒருவகை
கொண்டாட்டம்.
ஆனால்
என்னிடம் மட்டும் ஒரு மாற்றமுமில்லை.

"வை ராஜா வை
ஒண்ணுக்கு நாலு
ரெண்டுக்கு எட்டு
வை ராஜா! வை ராஜா! வை! வை!!'
கணீர் குரலுக்கு மயங்கி
அதிர்ஷ்ட ஆசையில்
ஒரு கூட்டம் இங்கு.

"வந்திருப்பது முருகன் வள்ளி
வீட்டுக்கு
வர இருப்பது
கல்யாண சுள்ளி"
மங்களமான வார்த்தையில்
"கிளி ஜோசியக் கடையிலும் கூட்டம்'
சந்தோஷமும் சிரிப்புமாக இருக்கிறது.

"கருப்பு சொக்கா
செவப்பு சட்டை
தல பரட்ட
பேரு சுருட்ட
பெத்தவங்க வாங்க சிறுவனை கூட்டிட்டுப்போங்க'
காவல்துறை அறிவிப்பு-ஆனால்
யார் செவியிலும் ஏற வில்லை அந்த அழைப்பு.

"பக்கா வெண்மைக்கு
கொக்கு சோப்பு
பளிச்சிடும் தூய்மைக்கு பத்துரூபா சோப்பு"
விளம்பர அறிவிப்பு!-அதுவும்
ஒய்யாரமாய் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"மச்சான்
கத்திரி கலர்
நல்லா இருக்குடா
முந்திரி கலரும் நல்லாயிருக்குடா"
குறுஞ்செய்தி பரிமாற்றம்
ஓரடி முன் செல்லும் நன்பனுக்கு
அலைபேசியிலும் ஆனந்தம் ஒலித்தது.

"இருபது ருபாய்க்கு
இருபது சுத்து!
இம்மாம்பெரிய ராட்டினம்
வந்ததில்லை பார்த்ததில்லை!
வாங்க! வாங்க!"
ராட்சஸ ராட்டினக்காரன்
வாய்ப்பாட்டுக்கும் ஒரு கூட்டம்
மயங்கி ஏறியது.

"காடை ஒன்னு
கோழி ரெண்டு
முட்டை மூனு
கொத்து பரோட்டா நாலு
பிரியாணி அஞ்சி"
கூப்பாடோடு
சாப்பாட்டுக்கடையும்
கூட்டமோ கூட்டம்.

வாணவெடி!
வண்ணவிளக்கு!
புலியாட்டம்!
கரகாட்டம்!
கம்புசண்டை!
பாட்டு கச்சேரி! -இவையெங்கும்
கைதட்டலும் கும்மாளமும்!

இது எதுவும்
என் கவன‌ம் இழுக்கவில்லை!
இந்த திருவிழா
எனக்கு
இனிக்கவுமில்லை
ஏன் என்று தெரியுமா?
என் காதலி என்னுடன் இல்லை!

அவள்
இருட்டான பின்பே வருவாள்.
எனக்கு
திருவிழா சந்தோஷம் தருவாள்.

நான் வானத்தை பார்ப்பேன்
அவள்
தென்படுவாள்!
தவழ்ந்து வருவாள்!
யார் தெரியுமா?

அதோ அவளே வருகிறாள்!
வந்துவிட்டாள்!
அவள்
வானத்து நிலா!!

-தனுசு-

வெள்ளி, 6 ஜூலை, 2012

தனுசுவின் கவிதைகள்..ஏன் ஆத்தி சூடிக்கு பள்ளியில்லை ?


இதோ
இந்த ஆதரவற்ற சிறார்களின்
கண்களைப் பாருங்கள்
அந்த பிஞ்சு விழிகளில் இருப்பது
சொல்லத்தெரியாத தேடல்!
அது
வீட்டுக்கு போகும் பாதையா?
விரும்பி அழைப்பவரையா?

தான் யார்?
தாய் யார்?
தன்
விலாசம் அறிய தத்தளிக்குதா
இந்த தளிர்கள்!

யாரை நம்பி எதை சாப்பிட?
எங்கே ஒதுங்கி யாரோடு இருக்க?
மாயம் செய்தது போல்
மறைவிலிருந்து
யாரும் அழைப்பாரா?
அணைப்பாரா?

ஏன்
கலக்கமும் பயமும்
அந்த விழிகளில்?
ஏன்
வீதியிலும் இடமில்லை
இந்த வெற்றுடம்புக்கு?
ஏன்
இந்த அனாதை சமுதாயத்துக்கு மட்டும்
ஜாதி சங்கம் இல்லை?
ஏன்
யாரோ செய்த தவறுக்கு இந்த
பிஞ்சுகள் பழி சுமக்கிறது?
ஏன்
தவறியும்
உயிர் சுமப்பதால்
இந்த ஊர் உமிழ்கிறது?
ஏன்
வயிறு மட்டும் கொடுத்தான்
யாரும் இல்லாத இவர்களுக்கு?
ஏன்
இந்த இளங்குருத்துகள்
விளைய
விளை நிலம் இல்லாமல் போனது?
ஏன்
இந்த சூரியன்கள்
உதயத்திலேயே
அஸ்தமித்தது?
ஏன்
இந்த ஆத்தி சூடிக்கு
மட்டும்
பள்ளியில்லாமல் போனது?

பருவமழையில்
பிறந்த காட்டாறு
அணையில் தங்கினால் பயனாகும்!
கடலில் சேர்ந்தால் சங்கமமாகும்!
கழிவுநீரில் கலந்தால் நாறாதோ?

ஏக்கத்தில் வளரும்
இந்த
காட்டுமரத்துக்கு வேலியில்லை!
வெட்டும் வேடனால்
வீட்டுக்கு உடைமையாகுமா?
அடுப்பில் எரிய விறகாகுமா?

எதையும் தர மறுக்கும்
இந்த உலகம்
அனாதை எனும்
பட்டம் மட்டும் தருவது ஏன்?

தானாய் வளரும்
இந்த
செடிகள்
எந்த வீட்டு தோட்டத்துக்கும்
குடியேறாதா?

இவர்களை மட்டும்
குறிவைக்கும்
அந்த தீவிரவாதம்
இவர்களை தத்தெடுக்கும் முன்
சிவப்பு விளக்கு அரவணைக்கும் முன்
இந்த பிஞ்சுகளை
நாம்
நம்மோடு சேர்த்துக் கொள்வோமா?

-தனுசு-

ஞாயிறு, 1 ஜூலை, 2012

கவிச்சோலை

உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',யில் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு.தனுசு அவர்களின் புதுக்கவிதையொன்றை தங்கள் பார்வைக்குத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். "தான் சொல்வதே சரி எனும் சிறு பிள்ளைத்தனமான கொள்கையோடு சிலர் இருக்கிறார்கள்.அதனை குறிப்பிட்டு எழுதியுள்ள ஒரு சின்ன கவிதை." என கவிஞர் இக்கவிதை பற்றிய சிறு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.


சிறு பிள்ளைத்தனம்

நான்
சாதிக்கப் பிறந்தவன்!
என்ன சாதனையா
சொல்கிறேன்...

அழகு
அமைதி
அன்பு
ஆராதனை-யாவும் பிடிக்காது
அவைகளை அழித்து விடுவேன்.

எனக்கு
எந்த விளையாட்டும் தெரியாது
ஆனால்
என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இல்லையெனில் ஆட்டத்தை
கலைத்து விடுவேன்.

எனக்கு பாட தெரியாது
ஆனால்
என் பாட்டை ரசிக்கவேண்டும்
இல்லையெனில்
கழுதையை கத்த விடுவேன்.

எனக்கு பேசத்தெரியாது
ஆனால்
என் பேச்சை
சொற்பொழிவு என பாராட்டவேண்டும்.

நான்தான்
எங்கும் பிரதானம்
வேடந்தாங்கல் போனாலும்
வேட்டையே ஆடுவேன்!
வேதங்கள் ஓதும் இடமென்றாலும்
பாதஅணி விலக்க மாட்டேன்!

படித்துறையும் படிப்புதுறையும்
இரண்டும் ஒன்றுதான்!
பத்தும் எனக்கு தெரியும்-நான்
ஊரில் உலாவிடும் சிங்கம்!

தற் புகழ்ச்சியாம்
எனக்காம்!
என்னை நீங்கள்
தெரிந்துகொள்ள சொல்வதெல்லாம்
எப்படி
தற் புகழ்ச்சியாகும்?

தலைகன‌ம் கூடாதாம்
சொல்கிறார்கள்.
எனக்கு
இலக்கணமே தெரியாதே!

நான்...
தான் எனும்
கர்வம் உள்ள
சாதிக்குப் பிறந்தவன்
சாதிக்க மாட்டேனா!

அதனால்தான் சொல்கிறேன்
நான்
சாதிக்கப்பிறந்தவன்!

-தனுசு-






வெற்றி பெறுவோம்!!!!