நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 21 மார்ச், 2012

தேவியின் திருவடி.....பாகம் 3, எளிய முறை பூஜை

                        
 

"யாதேவி ஸர்வ பூதேஷீ சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:"

'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சக்தி ரூபமாக ஒளிர்கிறாளோ அவளுக்கு நமஸ்காரம்.'

வசந்த நவராத்திரி நாளை மறுநாள் துவங்குகிறது.

இந்த ஒன்பது நாளிலும் முறையாக அம்பிகையை வழிபட்டு வணங்குவோர், கல்வி, கலைகள், முதலியவற்றோடு ஞானமும் பெற்று, பிறவாநிலை எய்துவர்.


எளிய முறை பூஜை:

1. ஒரு செம்பில், (வெள்ளி, தாமிரம், செம்பு என எது வேண்டுமானாலும் இருக்கலாம். எவர்சில்வர் தவிர்க்கவும்), அரிசி ஒரு ஆழாக்கு, சிறிது பயத்தம் பருப்பு, நான்கு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, இரண்டு மஞ்சள்கிழங்கு, உலர் பழங்கள் (சிறு பொட்டலமாக வைக்கலாம்) இவற்றைப் போடவும். மாவிலை வைத்து அதன் மேல் மஞ்சள்பூசி பொட்டுவைத்த தேங்காய் வைக்கவும்.கலசத்தில் ஒரு ரவிக்கைத் துணியைச் சுற்றி வைக்கவும். சிறு பாவாடை இருந்தால் கட்டலாம். இயன்ற ஆபரணங்கள், மஞ்சள் கயிறு சாற்றி, சிறு பூமாலை அல்லது பூச்சரம் சாற்றவும்.

2. செம்பில், மஞ்சள் தூள் ,வாசனைப்பொருட்கள் கலந்த நீர் ஊற்றியும் கலசம் வைக்கலாம். ஆனால் நீர்க் கலசம் அதிக ஆகர்ஷண சக்தி கொண்டது.  நியம நிஷ்டைகளுடன் கூடிய பூஜைகள் அவசியம்.

3. ஒரு வாழை இலை அல்லது சிறு தட்டில் அரிசியைப்பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். இதைப் பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட்டு அதன் மேல் வைக்கவும். வாழையடி வாழையாக வம்சம் தழைக்கவே, வாழை இலையில் வைக்கிறோம். 

4. இரண்டு பக்கமும் சிறு விளக்குகள் ஏற்றி வைக்கலாம். நெய் தீபம் காற்றைச் சுத்திகரித்து, அதிக அளவு பிராணவாயு(ஆக்சிஜன்) அளிக்கும் தன்மை கொண்டது. எனவே, முக்கியப் பூஜைகளின் போது நெய் விளக்கு ஏற்றுகிறோம். பலர் கூடி நடத்தும் விளக்குப் பூஜைகளின் போது, நெய் விளக்கு ஏற்றுவது, கூடியுள்ள பலரும் எளிதாக மூச்சுவிட உதவும்.


பொதுவாக, தீபம் ஏற்றுவது, தேவர்களுக்கும், பித்ரு தேவதைகளுக்கும் ஒருசேர திருப்தி அளிக்கக்கூடிய செயலாகும். தீப ஒளியைச் சுற்றி, முப்பத்து முக்கோடி தேவர்களும், பித்ருக்களும் கூடி இருந்து,ஒளி வடிவாகிய தேவியை வணங்குகின்றனர். மனையைக் காப்பதால் 'மனைவி' என்று பெயர் பெற்ற பெண்களே தீபம் ஏற்றவும், அதை வளர்த்து விடவும் உரிமை உள்ளவர்கள்.விளக்கை அணை என்று சொல்வதே அமங்கலம். தீபம் ஏற்றிய பின் நல்ல,அமைதியான வார்த்தைகளையே பயன் படுத்த வேண்டும்.

5. காலையில் நீராடி, தூய்மையான உடை அணிந்து பூஜைக்கு அமரவும்.

6. கலசத்தில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து பூஜைகளைச் செய்ய வேண்டும்.

7. மஞ்சள்பொடியில் சிறிது நீர் கலந்து, பிசைந்து, கூம்பாகச் செய்து கொள்ளவும். இதுவே பிள்ளையார். மங்களகரமாகப் பூஜை நடந்தேறுவதற்காக, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கிறோம். பிறகு குருப்யோ நம: என்று குருவை வணங்கிப் பின் பூஜையைத் தொடங்கவும். விளக்கு ஏற்றினாலே, பூஜையைத் தொடங்கி விட்டதாக ஐதீகம். அதன் பின் இடையில் எழுந்து செல்வதோ, கைபேசியில் பேசுவதோ கூடாது.பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்த பின்பே பூஜையைச் செய்ய வேண்டும்.

8. விநாயகரை எழுந்தருளச் சொல்லிப் பிரார்த்திக்கவும்.

9. விநாயகர் துதியைச் சொல்லி, பூஜையில் எந்தத் தடங்கலும் வராதிருக்கப் பிரார்த்திக்கவும். நேரமிருந்தால் அருகம்புல்லால் அர்ச்சனை செய்யலாம்.

10. வாழைப்பழம்,வெற்றிலைபாக்கு நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டவும்.

11. ஆத்மபிரதக்ஷிணம் (தன்னைத் தானே சுற்றி வருதல்) செய்து நமஸ்கரிக்கவும்.

12. கலசத்தில் அம்பிகையை எழுந்தருளப் பிரார்த்திக்கவும். அம்பிகை கால்களைக் கழுவுவதாகப் பாவனை செய்து,'பாத்யம் ஸமர்ப்பயாமி',  என்று ஒரு கிண்ணத்தில் உத்தரிணியால் மூன்று முறை நீர் விடவும். கைகளை அலம்புவதாகப் பாவனை செய்து 'அர்க்யம் ஸமர்ப்பயாமி' என்று கிண்ணத்தில் உத்தரிணியால் மூன்று முறை நீர் விடவும். 

13. அம்பிகை நீர் அருந்துவதாகப் பாவனை செய்து 'ஆசமனீயம் ஸமர்ப்பயாமி' என்று நீர் சேர்க்கவும். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் என்னென்ன உபசாரங்கள் செய்வோமோ அதே பாவனையில் தேவிக்கும் செய்தல் வேண்டும். பிறகு, 'ஸ்நானம் ஸமர்ப்பயாமி' என்று, தேவி ஸ்நானம் செய்வதாகப் பாவித்து நீர் சேர்க்கவும்.

14. 'வஸ்திரம் ஸமர்ப்பயாமி' என்று, தேவிக்கு ரவிக்கைத் துணி சாற்றவும். 

15. 'ஆபரணானி ஸமர்ப்பயாமி' என்று, தேவிக்கு அணிவித்திருக்கும் ஆபரணங்களைக் காட்டி,  கலசத்தில் அக்ஷதை சேர்க்கவும்.

16. 'அலங்கரனார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி' என்று கலசத்தில் அக்ஷதை சேர்க்கவும்.

17. 'கந்தாந் தாரயாமி' என்று, தேவிக்கு சந்தனப்பொட்டு வைக்கவும்.
'ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி என்று குங்குமப் பொட்டு வைக்கவும்.

18. 'ஸர்வ உபசாரார்த்தம் புஷ்ப அக்ஷதான் ஸமர்ப்பயாமி' என்று புஷ்ப அக்ஷதைகளைச் சேர்க்கவும். துர்கா தேவி, மஹாகாளி,மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி வடிவானவள். எனவே துர்கா அஷ்டோத்திரம் சொல்லி, மலர்களாலோ, குங்குமத்தாலோ அர்ச்சிக்கவும்.

துர்கா அஷ்டோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.

19. 'தூபம் ஆக்ராபயாமி' என்று ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும்.

20. 'தீபம் தரிசயாமி' என்று, ஒற்றை ஆரத்தி, (சிறிய அகலில் ஒரு முகம் ஏற்றி) காட்டவும்.
21. நிவேதனம் செய்ய வைத்துள்ள பொருள்களை, 'நைவேத்தியம் நிவேதயாமி' என்று காட்டவும்.  உள்ளத் தூய்மையே அன்னை விரும்புவது. எளிய நிவேதனங்களிலேயே அவள் மன மகிழ்கிறாள். காய்ச்சிய பாலில், வெல்லம், ஏலம் சேர்த்து, அல்லது, உலர் பழங்கள், அல்லது 'திரிமதுரம்' (மூன்று வகை இனிப்பு என்று பொருள்படும்) எனப்படும் பழம், தேன், சர்க்கரை இம்மாதிரி எளிய நிவேதனங்கள் போதும்.தினமும் பானகமும் நிவேதனம் செய்ய வேண்டும்.

22. 'தாம்பூலம் ஸமர்ப்பயாமி' என்று வெற்றிலைப் பாக்கு, பழம் நிவேதனம் செய்யவும். 

23. 'நீராஜனம் ஸமர்ப்பயாமி' என்று கற்பூரம் காட்டவும்.

24. 'பிரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி' என்று ஆத்மபிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்கவும்.

25. மனமுருகிப் பிரார்த்திக்கவும். 'பூஜையில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்' என்று வேண்டவும்.

26. ஒரு தட்டில், மஞ்சள், குங்குமம், நீர் சேர்த்து, நடுவில் இரு சிறு அகல்களில் நெய்தீபம் ஏற்றி, ஆரத்தி காட்டவும். இதனால்,பூஜையில் ஏற்பட்ட தோஷங்கள் மறையும். தெய்வங்களுக்கு ஆரத்தி காட்டும் போது, சுண்ணாம்பு பயன்படுத்தக் கூடாது. ஆரத்தி காட்டிவிட்டு, கீழே வைக்கவும். சிறிது நேரம் கழித்து, துளசிச் செடியிலோ, கிணற்றிலோ, கால் மிதி படாத இடத்தில் கொட்டவும். வாசலில் கொட்டக் கூடாது.

ஒன்பது நாட்களும் பூஜை செய்து, கடைசி நாளில், பூஜை முடிந்ததும், தேவியை கலசத்தில் இருந்து, இருப்பிடம் அடையப் பிரார்த்திக்கவும். சிறிது வடக்குத் திசையில் கலசத்தை நகர்த்தி வைக்கவும். 
ஒன்பது நாளும் தேவி நம்முடன் இருக்கிறாள். ஆகவே சண்டை சச்சரவுகள், அழுகை சீரியல்களைத் தவிர்க்கவும்.

கலசத்தில் உள்ள அரிசி,பருப்பு, தேங்காயைப் பயன்படுத்தி, சர்க்கரைப்பொங்கல் செய்து, நிவேதனம் செய்யவும். பூஜை செய்த மலர்களை(நிர்மால்யம்),செடியில் போடலாம் அல்லது ஏதாவது நீர்நிலையில் சேர்க்கலாம். குப்பையில் போடுவதைத் தவிர்த்தல் நலம்.
திங்கட்கிழமைகளில், 'துர்கா சப்த ஸ்லோகி' என்னும் துதியைச் சொல்லி, திரிமதுரம் நிவேதனம் செய்தால், உத்தியோகத்தில் உள்ள சிக்கல்கள் அகன்று,கிடைக்க வேண்டிய உத்தியோக உயர்வு கிட்டும்.

துர்கா சப்த ஸ்லோகி, தேவி மகாத்மியத்தின் சுருக்கமே ஆகும். ஏழு ஸ்லோகங்கள் உள்ள இந்தத் துதியின் வலிமை சொல்லி முடியாது. இதைப் பாராயணம் செய்வோரிடம் இருந்து,  உச்சரிக்கும் முறைகளைக் கற்று, பிறகு சொல்லவும். 

'துர்கா சப்த ஸ்லோகி'க்கு இங்கு சொடுக்கவும்.

ஒன்பது நாள் மாலையிலும் ஏதாவது பால்,பழம் என்று நிவேதனம் செய்யலாம்.

கலசம் வைத்து பூஜை செய்ய இயலாதவர்கள், பிரதமையன்று தொடங்கி, ஸ்ரீராம பட்டாபிஷேகப் படத்திற்கு முன்னால் விளக்கேற்றி, முதல் நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற எண்ணிக்கையில் ரவா லட்டுக்களை நிவேதனம் செய்யவும். பானகமும் நிவேதனம் செய்ய வேண்டும்.

பிரதமை தொடங்கி ஸ்ரீராம நவமி வரை செய்யும் பூஜை 'கர்ப்போத்ஸவம்' ஆகும். ஒன்பதாம் நாள், ஸ்ரீஇராம நவமி பூஜையைச் செய்து, ஒன்பது லட்டுக்களை நிவேதனம் செய்து, விநியோகிக்கவும். நினைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

ரவா லட்டு செய்முறைக்கு இங்கு சொடுக்கவும்

குழந்தைகளை தினமும் மாலை கலசத்தின் முன் அமர்ந்து, தெரிந்த துதிகள் பாடல்களைப் பாடச் சொல்லவும். குறிப்பாக, சரஸ்வதி துதிகள்,  அறிவாற்றலை அதிகரிக்கும்.

சரஸ்வதி பாடல்கள் இங்கு பார்க்கலாம்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகள், குழந்தைகளுக்குத் தாம்பூலம் தருவது நல்லது.

  
                                 

தாம்பூலம் தரும் முறையைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்

வெற்றி பெறுவோம்!

3 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..