நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

KOLANGAL ..PART 2...கோலங்கள்..... பாகம் 2.


இதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்


பண்டிகைக் காலங்களில் போட வேண்டிய கோலங்கள்:

வெள்ளிக் கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் காவி இட்டு, கோலம் போட வேண்டும்.மாக்கோலம் போடுவது சிறந்தது. பண்டிகை நாட்களில் மணைக்கோலம் போட்டு, காவி இடவேண்டும். நடுவில் உள்ள டிசைன் உட்காரும் மணை போலக் கோலம் அமைந்திருப்பதால், இதற்கு, மணைக்கோலம் எனப் பெயர் வந்தது.இந்தக் கோலத்தின் நான்கு மூலைகளிலும் தாமரைப்பூ அல்லது செண்டு போன்ற டிசைன் போடுவது, அஷ்டதிக் பாலகர்களின் ப்ரீதிக்காக. ஆகவே கட்டாயம் அதைப் போடவேண்டும். கோலத்தின் மத்தி 'பிந்து ஸ்தானம்' எனப் படுகிறது. அங்கே தேவி வாசம் செய்கிறாள் .

ஆகவே எக்காரணம் கொண்டும் எந்தக் கோலத்தின் மத்தியிலும் (பூஜையறைக் கோலங்கள் உட்பட) வெறுமே விடக் கூடாது. செம்மண்பூசி அதன் மேல் பெரியதாக புள்ளி வைக்கலாம்.

நான் இங்கு சம்பிரதாயப்படி,போட வேண்டிய கோலங்களையே சொல்லிக்கொண்டு வருகிறேன்.  சம்பிரதாயங்கள் பெரும்பாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறையை ஒட்டியதாகவே அமைந்துள்ளன. உதாரணமாக,ஆடிப்பண்டிகை,போகிப்பண்டிகை முதலிய பண்டிகைகளின் போது,எண்ணை குளியல் கட்டாயம்.

Image result for padi kolamஆறு,குளங்களில் மட்டுமே குளிக்கும் வழக்கம் கொண்ட அக்காலத்தில், இம்மாதிரி பண்டிகை நாட்களில் தெப்பக்குளம் கோலம் (மணையைச் சுற்றி, நான்கு புறமும்,குளத்தின் படித்துறை போல் வரும் டிசைன்) போடுவார்கள். இயல்பாகவே, வேலைப்பளு மிகுந்த‌ பெண்களுக்கு, மங்களஸ்நானத்தை நினைவு படுத்தும் ஒரு குறியீடாகவும் கோலங்கள் பயன்பட்டன.

பொங்கல் பண்டிகையின் போது, மணையின் மேல், கோபுரம் வருவது போல் டிசைன் உள்ள கோலம் போட வேண்டும்.எல்லா வீடுகளிலும் அன்றைக்கு பால் பொங்கி,குடும்பம் செழித்து,கோபுரம் போல் வளர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக கோபுரக் கோலம்.

Image result for kanya kolamகனுப்பண்டிகையின் போது,வீட்டில் பிற‌ந்த‌ பெண்க‌ளை அழைத்து,சாப்பிட‌ச் சொல்லி,சீப்பு,க‌ண்ணாடி,முத‌லிய‌ ம‌ங்க‌ல‌ப் பொருட்க‌ளை வைத்துத் தாம்பூல‌ம் த‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். நமது சம்பிரதாயப்படி சீப்பு,மங்கலப் பொருட்களில் ஒன்று.தாம்பூலம் கொடுக்கும் போது, சீப்பு,கண்ணாடி,போன்ற மங்கலப் பொருட்கள் வைத்துக் கொடுப்பதால்,கணவனின் ஆயுளும்,ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஆக‌வே அன்றைக்கு சீப்புக் கோல‌ம் போட‌வேண்டும் நடுவில் 'ஸ்வஸ்திக்' வரைந்து,அதன் நான்கு புறமும்,சீப்பின் பற்கள் போல் கோடுகள் வரைந்து போடப்படுவதால், இதற்கு, சீப்புக்கோலம் என்று பெயர் வந்தது..

பொங்கலுக்கு அடுத்து வரும் ரத சப்தமி நாளில் 'ஏக சக்ர தேர்'க்கோலம் போடவேண்டும்.

சுப காரியங்களின் போது போடவேண்டிய கோலம்


வீட்டில் திருமணம்,வளைகாப்பு,கிரஹப்பிரவேசம் முதலிய சுபகாரியங்கள் நடக்கும்போது,வாசலில் மணைக்கோலமும், வீட்டில், சுபகாரியம் நடைபெறும் இடத்தில்,இரட்டை மணைக் கோலமும் போடவேண்டும்.இந்தக் கோலத்திற்கு மற்றொரு பெயர்,லக்ஷ்மி நாராயணர் கோலமாகும். இரண்டு மணைகள் இருந்தாலும் பார்க்க ஒரே கோலம் போல் தோன்றுகிறது. இது திருமாலையும் அவர் திருமார்பில் உறையும் மஹாலக்ஷ்மியையும் நினைவுபடுத்துகிறது. இருவரும் ஒருவரே எனும் உண்மையை விளக்கும் இக்கோலம், மறைமுகமாக, கணவன் மனைவி ஒற்றுமையையும் விளக்குகிறது.


கோலங்களில் வைக்கப்படும் புள்ளிகள் சிவஸ்வரூபமாகும். அதைச் சுற்றியுள்ள கோடுகள் சக்திஸ்வரூபமாகும்.ஆகவே கூடுமானவரை கோலங்களை காலால் மிதிக்காமல் இருப்பது நலம். பெரிய கோலங்கள் போடும்போது, கட்டாயம் பக்கத்தில் ஒரு மிகச் சிறிய கோலம் போடவேண்டும். இதற்குப் பெயர் 'துணைக் கோலம்'. சில பகுதிகளில் இதை 'மோகினிக் கோலம்' என்றும் கூறுகிறார்கள் .

வாசலில் கோலம் போடும் போது, வீட்டு நிலை வாசல்படியிலும் கோலம் போடவேண்டும். வீட்டு நிலையில் தான் கிருஹ‌லக்ஷ்மி வாசம் செய்கிறாள்.  தினந்தோறும் நிலைப் படிக்கு மஞ்சள் ,குங்குமம், பூ வைப்பது சிறந்தது.

கோலங்கள் மறைமுகமாக யந்திர வடிவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால்,முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் கோலம் போடுவதில்லை கோலம்,முன்னோர்கள் நம் வீட்டினுள் வருவதைத் தடுக்கும் சக்தி கொண்டது.திதி கொடுத்து முடிந்தபின் கோலம் போடலாம்.எப்போதும் இரண்டு கோடுகளால் தான் கோலம் போடவேண்டும். ஒற்றைப்படை வரிகளால் ஆன‌ கோலம் சுபகாரியங்களின் போது போடக்கூடாது.
  
வட்ட வடிவமாகவோ அல்லது, ஒரு வட்ட வடிவத்திற்குள்ளோ போடப்படும் கோலங்கள், குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும்.


கோலம் போட்டு முடித்தபின், கோலத்தின் இருபுறமும், இரட்டை வரிகளில்,சிறு நேர்க்கோடுகள் அல்லது ஏதாவது டிசைன் வரைந்தால், மஹாலக்ஷ்மி நம் வாசற்படி தாண்டாமல் நம்முடனே நித்ய வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
                               


கோலம் போடுவதை ஒரு செயலாக மட்டும் பார்க்காமல், அதன் அர்த்தத்தை உணர்ந்து போட்டால், நலம் பல பெறலாம்.


வெற்றி பெறுவோம்!!!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. ////கோலங்களில் வைக்கப்படும் புள்ளிகள் சிவஸ்வரூபமாகும். அதைச் சுற்றியுள்ள கோடுகள் சக்திஸ்வரூபமாகும்////
    ஆஹா! அருமை! அருமையான கருத்து... நிறைய தகவல்களை அறிய முடிகிறது.
    நன்றி..

    பதிலளிநீக்கு
  2. Thanks a lot for such useful information. But some of the kolams are missing and is not getting displayed properly, can you please check and re-upload those?

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..