நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 8 ஜனவரி, 2019

KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU... PART...37..க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.37. பெருவாழ்வு எய்தினாள்!!.இடியோசையை ஒத்த ஒரு பெரும் கதறல் பூதனையிடமிருந்து வெளிப்பட்டது!!. பயங்கரமான தன் சுய உருவை அடைந்து, இரு கரங்களையும் விரித்துக் கொண்டு, மல்லாந்து நிலத்தில் வீழ்ந்தாள் பூதனை!!..

( மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி,
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே.(நம்மாழ்வார்))

( அஸுபி⁴ரேவ ஸமம்ʼ த⁴யதி த்வயி 
ஸ்தனமஸௌ ஸ்தனிதோபம  நிஸ்வனா | 
நிரபதத்³ப⁴யதா³யி நிஜம்ʼ வபு​: ப்ரதிக³தா 
ப்ரவிஸார்ய பு⁴ஜாவுபௌ⁴ || (ஸ்ரீமந் நாராயணீயம்)).

இத்தகைய ஒரு பயங்கரமான குரலைக் கேட்டும், அவளுடைய அசுர உடலைப் பார்த்தும் அதிர்ச்சியில் மயங்கிப் போனார்கள்  கோபியர்கள்.. பின் சற்று சுதாரித்துக் கொண்டு, குழந்தையைத் தேடினால்,  அந்த 'மிகுஞானச் சிறுகுழவி',  சற்றும் பயமின்றி, அவளது மார்பில் ஏறி, சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது!!.. குழந்தையை கோபிகைகள் ஓடி வந்து எடுத்துக் கொண்டார்கள். 

பின்னர், பகவானின் திருநாமங்களை ஓதியே, குழந்தை வடிவிலிருந்த‌ பகவானுக்கு காப்பு ( ரக்ஷை) செய்யப்பட்டது...

பயம் நிறைந்த மனதுடன் கோகுலம் திரும்பி வந்த நந்தகோபர், தன் வீட்டின் அருகிலிருந்த மரங்கள் பலவும் முறிந்து விழுந்திருப்பதையும், அவற்றை அவ்வாறு விழுமாறு செய்த ஒரு பெரிய அசுர உருவம், அருகில் வீழ்ந்து கிடப்பதையும் கண்டு, மனதால் பகவானைச் சரணடைந்து  பிரார்த்தித்தார்!!.

நடந்தவற்றை கோபியர்கள் மூலமாக அறிந்து கொண்ட நந்தகோபர் உள்ளிட்ட கோபர்களுக்கு, பயத்தாலும் ஆச்சரியத்தாலும் சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.பின், கோடரியால் அந்த பயங்கரமான உடலைத் துண்டுகளாக்கி, வெகு தூரத்திற்கு எடுத்துச் சென்று எரித்தனர்!!.. பகவானை மார்போடு அணைத்துப் பாலூட்டிய பூதனையின் உடலானது எரியும் போது, அதிலிருந்து வெகு உயரத்திற்குக் கிளம்பிய புகை, சந்தனமா, அகிலா, குங்கிலியமா என்று அனைவரும் வியக்கும் வண்ணம், நறுமணத்துடன் திகழ்ந்தது!!.. பகவானின் சம்பந்தம் ஏற்பட்டால், அதற்குப் பலன் வெகு சமீபத்திலேயே கிடைக்கும் என்று உலகுக்கு அறிவிப்பது போலிருந்தது அந்தப் புகையின் நறுமணம்!!.

வீடு திரும்புகையில், அரக்கியான பூதனையிடமிருந்து குழந்தை தப்பியதும், குழந்தைக்கு ஆபத்து நேரக் கூடும் என்று வசுதேவரால் முன்னமேயே கூறப்பட்டதும் அதிசயம் என்று கோகுலத்து வாசிகள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டார்கள். நந்தபாலனின் அழகு கொஞ்சும் திருமுக மண்டலத்தைக் கண்டு, எல்லாவற்றையும் மறந்து ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள்!!...

ஸ்ரீமத் பாகவதத்தில், கோகுல பாலன் வதம் செய்தருளிய அசுரர்களுள், பூதனையின் சரிதம் மட்டுமே பலச்ருதி உடையது. பூதனையின் சரிதத்தை பாராயணம் செய்யச் செய்ய, ஸ்ரீகிருஷ்ண ப்ரேமை அதிகரிக்கும்!!..பகவானை வெறுத்தாளாயினும் மார்போடு அணைத்துப் பாலூட்டும் பாக்கியமடைந்தாள் அல்லவா!!..மேலும் பகவானால் சம்ஹரிக்கப்பட்டு, மோக்ஷ சாம்ராஜ்யம் அடைந்தாள்!!. முற்பிறவியில், பகவானை மகனாகப் பெற வேண்டும் என்று ஒரு கணமேனும் ஆழ்ந்து நினைத்ததன் பலனே இது!!.. வேறு எந்த வழியையும் நாடாமல், தாய் போல் பாலூட்டியே கண்ணனை முடிக்க நினைத்தாள் பூதனை. அவளது அந்த மாத்ரு பாவனைக்கே, அது நாடகமாயினும் மோக்ஷ ப்ராப்தி அளித்தான் பகவான்!.

 (தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது.'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..