நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 25 ஜூலை, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM.. PART 16..கண்ணனை நினை மனமே.. பகுதி 16. வாமனாவதாரம்!!!.திரிவிக்ரமனின் திருவுரு!..

Image result for lord thirivikrama
பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..

பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

என்று, திருமங்கையாழ்வார் எம்பெருமானைத் துதிக்கிறார்!!..

பிரம்ம தேவர், தம் சத்ய லோகத்தில் பகவானின் திருவடி நுனியினை தரிசித்து, பேரானந்தமடைந்தார். தம் கமண்டலத்தின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தமே, ஆகாய கங்கையானது.. மேலுலகங்களில் வசிப்பவர்கள், பகவானின் திருவடி தரிசனத்தால் மகிழ்ந்து, ஆன்ந்தமாக நாட்டியமாடினர்.

( த்வத்பாதா³க்ரம்ʼ நிஜபத³க³தம்ʼ புண்ட³ரீகோத்பவோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்யஜ்ஜலம்ʼ விஸ்வலோகான் | 
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப³ஹு கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பேரீம்ʼ நிக்னன்புவனமசரஜ்ஜாம்ப³வான் பக்திஸா²லீ || 
( ஸ்ரீமந் நாராயணீயம்)  ).

ஜாம்பவான், மகிழ்ச்சி மிக்கவராக, பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைப் பிரதக்ஷிணம் செய்தார்...ஸ்ரீமந் நாராயணீயம், ஜாம்பவானை, 'ஜாம்பவான் பக்திசாலீ' என்று போற்றுகிறது..ஜாம்பவான், வாமனாவதார காலத்திலேயே இருந்தாரா என்றால் ஆம்!!!!.. வாமனாவதாரம், ஸ்ரீராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்று மூன்று அவதாரங்களையும் தரிசிக்கும் பேறு பெற்ற பக்திமான் அவர்!!..

இவ்விதம், பகவானின் திரிவிக்ரமராக தோன்றிய‌ருளிய  மஹோத்சவம் கொண்டாடப்படுகையில், அசுரர்கள், தம் தலைவனின் உத்தரவின்றி போர் துவக்கி, பகவானின் பணியாட்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.

அப்போது மஹாபலி, 'முன்பு யாரால் ஜெயிக்கப்பட்டோமோ, அந்த பகவானே நம் முன் நிற்கிறார்!!!.. யுத்தம் செய்வதால் என்ன பயன்?!!' என்று அசுரர்களைக் கேட்க, அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததால், அசுரர்கள், பாதாளம் சென்று விட்டனர்.

கருடன், பாசக்கயிறுகளால் மஹாபலியைப் பிணைத்தார்!!!...மண்ணளந்து, விண்ணளந்து நின்ற திரிவிக்ரம மூர்த்தி, மஹாபலியைப் பார்த்து, உரத்த குரலில், 'நீ உலக நாயகனல்லவா?.. மூன்றாவது அடியை வைக்க இடம் காட்டு!!!'...என்று கேட்க, மஹாபலி, சிறிதும் நடுக்கமின்றி, 'என் தலையின் மீது தங்கள் திருவடியை வைத்தருளுங்கள்' என்று பதிலுரைத்தான்!!..

பகவானின் சொல்லொணா கருணையும், பக்தனது விவரிக்க இயலாத பெருமையும் இங்கு ஒருங்கு விளங்குகிறது!!..பகவானுக்கு அனைவரும் குழந்தைகளே!.. அவருக்கு பேதங்களில்லை.. பலி, உத்தம குணங்கள் பலவற்றைக் கொண்டவனாயினும், அவனது  ஆணவம், அவன் பகவானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு தடையாக இருந்தது!.. அதை அகற்றி, அவனுக்கு அருள் புரிய பகவான் திருவுளம் கொண்டான். வாமன ரூபத்தில் வந்து, உலகளந்த பெருமானாகி, எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன், அனைத்திற்கும் காரண கர்த்தா தானே என்பதை உணர்த்தினான்!!!.. உலகனைத்தையும் படைத்து, காத்து அழித்தலை, சிறு பிள்ளை விளையாட்டுப் போல் சங்கல்ப மாத்திரத்தில் எளிதில் செய்ய வல்ல எம்பெருமான் முன், 'நானே உலக நாயகன்' என்று சொன்ன பலியின் செயல் நகைப்புக்கு உரியதாயினும், அதுவே, அவனது அழியாத வாழ்வுக்கு காரணமாயிற்று.  ஆணவம், வெறுப்பு, பகை முதலான எதிர்மறை உணர்வுகளும், பரம மங்களங்களைத் தரவல்ல பகவானை நோக்கித் திருப்பப்பட்டால் நலமே தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்!!..

அசுரனாயினும் மஹாபலியின் பக்தி, போற்றுதலுக்குரியது!!.. பிரஹலாதனின் பேரனல்லவா?!!.. உலகெல்லாம் இரண்டடிக்குப் போதாவிட்டாலும், பக்தனாகிய என் தலை, மூன்றாவது அடிக்குப் போதுமானது என்ற பலியின் தீர்மானம், உறுதியான பக்தியால் விளைந்த உயர்ந்த சாதனையன்றி வேறென்ன?!!..பகவானின் சாந்நித்யமே, பலியின்   ஆணவத்தை அகற்றி, அவனைப் புனிதனாக்கியது!!..

( தொடர்ந்து தியானிப்போம்!!.).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் மின்னிதழில், தொடராக வெளிவருகிறது!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..