நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 23 மார்ச், 2017

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM.. PART 9..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. பகுதி 9. திருமகள் அவதரித்தாள்!!!..

Related image

பகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது   தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்!..
திருப்பாற்கடல் மேலும் கடையப்பட்டது. காமதேனு தோன்றியது!!!.. பகவான், அதை ரிஷிகளிடம் தந்தருளினார். குதிரைகளில் சிறந்த உச்சைச்ரவஸ், அடுத்ததாகத் தோன்றியது. பின், ஐராவதம்,  கற்பக விருட்சம், அப்ஸர ஸ்திரீகள் யாவரும் அடுத்தடுத்து தோன்றினர். தேவருலகம் அவற்றையெல்லாம் அடைந்தது!..

அதன் பின்னர், பகவானைத் தவிர, வேறொன்றையும் உயர்வாகக் கருதாத, இனிமை பொருந்தியவளான ஸ்ரீலக்ஷ்மி தேவி  அவதரித்தருளினாள்  !..

ஸ்ரீலக்ஷ்மி தேவியின் சௌந்தரியத்தால் கவரப்பட்ட உலகனைத்தும், ஸ்ரீதேவியைத் தாமே அடைய வேண்டுமென விரும்பின!.. 

ல‌க்ஷ்மி தேவிக்கு தேவேந்திரன், ரத்ன மயமான பீடத்தை அளித்தான். ரிஷிகள், வேதமந்திரங்களை உச்சரித்து, அபிஷேக திரவியங்களால் தேவிக்கு அபிஷேகங்கள் செய்தார்கள். தேவ கணங்கள், ரத்ன குண்டலங்களாலும், ஹாரங்களாலும், மஞ்சள் பட்டாடைகளாலும் தேவியை அலங்கரித்தார்கள். ஸ்ரீபட்டத்திரி, இந்த நிகழ்வை, 'தேவி, பகவானின் கடைக்கண் பார்வையினால் மட்டுமின்றி, ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டாள்' என்று அழகுற எடுத்துரைக்கிறார்!!!.

திருமகள், தன் திருக்கரங்களில், சுயம்வர மாலையை எடுத்துக் கொண்டு, மெதுவான நடையில், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிறைந்த திருமுகத்துடன், எம்பெருமானை நாடி, நடந்தாள்....

அனைத்து தேவர்களும் குணவான்களாக இருந்தாலும், அவர்களிடம், கோபம், காமம் முதலிய குற்றங்கள் முற்றிலும் நீங்கவில்லை!.. எனவே, எப்போதும், எல்லா நற்குணங்களுடனும் திகழும் பகவானிடத்தில், திருமகளின் திவ்யமான மாலை சமர்ப்பிக்கப்பட்டது!.. எம்பெருமான், தாயாரை ஏற்றுக் கொண்டான்!..

அனைத்துலகங்களுக்கும் தாயாக விளங்குபவளும், தன்னைத் தவிர, வேறிடத்தில் பற்றில்லாதவளுமாகிய ஸ்ரீதேவியை, தன் திருமார்பில் தாங்கிப் பெருமைப்படுத்தினான் எம்பெருமான்!...திருமாலின் திருமார்பில் பிரகாசித்த‌ ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வையால், உலகனைத்தும் செழிப்புடையதாயிற்று...

( உரஸா தரஸா மமா நிதை²னாம்ʼ
 புவனானாம்ʼ ஜனனீமனன்யபாவாம் 
த்வது³ரோவிலஸத்ததீ³க்ஷணஸ்ரீ
பரிவ்ருʼஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஸ்²வம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (நம்மாழ்வார்).

அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக்
கண்டவனே விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு
துண்டவெம் பெருமானே ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக்
கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. (திருமங்கையாழ்வார்).
என்ற பாசுர வரிகளை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்!..

(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. பாற்கடலிலிருந்து தோன்றிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவிக்கு, ஸ்ரீ மஹாவிஷ்ணு தன் வக்ஷஸ்தலத்தில் இடம் அளித்த நிகழ்ச்சிகளை மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பதிவையும் ஆழ்ந்து படித்து, உடன் கருத்துக்களைப் பகிர்வதற்கு என் மனமார்ந்த நன்றி!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..