நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 23 மார்ச், 2017

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM.. PART 8...கண்ணனை நினை மனமே!.. இரண்டாம் பாகம்.. பகுதி..8.

Image result for amrutha mathanam

சென்ற பகுதியில், பகவான் கூர்மாவதாரம் எடுத்த நிகழ்வு கூறப்பட்டது. இந்தப் பகுதியில், பகவான், அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்கும் தத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.. நடப்பவை எல்லாம் பகவானின் லீலா விநோதங்களே என்னும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.. மனக் கவலைகள் நீங்க, இந்தப் பகுதியைப் படித்தல் மருந்தாகும் என்பது பெரியோர்கள் கருத்து..
பகவான் எடுத்த   ( கூர்மாவதார ) ஆமை வடிவம் பற்றி பட்டத்திரி, கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்.

' அந்த ஆமையானது,  வஜ்ரத்தைக் காட்டிலும் கடினமான முதுகோட்டினை உடையதாக இருந்தது..அதன் உடல் லட்சம் யோஜனை தூரம் பரந்ததாக இருந்தது'.

இதிலிருந்து, கூர்மாவதாரம் எடுத்தருளிய பகவானின் திருவுருவத்தின் பிரம்மாண்டத்தை நாம் ஓரளவு  எண்ணிப் பார்க்கக்  கூடும்.. இவ்விதமாக அவதாரம் எடுத்தருளிய பகவான், மூழ்கியிருந்த மலையை, மேலே தூக்கி விட்டார். அது உயரக் கிளம்பியதும், அனைவருக்கும் உற்சாகம் மேலிட்டது.. வேகமாகக் கடைந்தார்கள்..

திடீரென்று கிளம்பிய வேகத்தால், இரண்டு கூட்டத்தினரிடமும் களைப்பு உண்டாகமல் இருக்க, பகவான் தேவ, சுரர்களிடமும், வாஸூகியிடமும் உட்புகுந்து, அவர்களுடைய பலத்தை வளர்த்து, களைப்பைத் தணித்தருளினார்.

மலை மிக வேகமாகச் சுழன்றதால், அடுத்த தடங்கல் வந்தது!!!!.. மலை உயரமாக மேலே கிளம்பிற்று!!!...பகவான், தம் தாமரைக் கரத்தை, மலை மீது வைத்து அழுத்தி, அது மேலும் உயரக் கிளம்புவதை நிறுத்தினார். உடனே பிரம்மா, சிவன் முதலானார்  மகிழ்வுடன் பூமாரி பொழிந்தனர். அடுத்ததாக, வாஸுகியின் வாயிலிருந்து விஷக் காற்று கிளம்பியது.. தேவர்களும் அசுரர்களும் இதனால் மிகவும் துன்புற்றனர். ஆனால் அசுரர்கள், ஆணவத்தால், வாஸூகியின் தலைப் பகுதியில் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததால், பகவான் தேவர்கள் மீது மழை பொழியச் செய்து, விஷக்காற்றின் கொடுமையைத் தணித்தார்.

இவ்விதமாக, நெடுங்காலம் பாற்கடல் கடையப்பட்ட போதும், எவ்விதப் பலனும் விளையாததால், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உற்சாகம் குறையத் தொடங்கியது.. ஆகவே, பகவான், தான் மட்டுமே, தம் இரு கரங்களாலும் மலையை இழுத்து கடையத் தொடங்கினார். அதாவது, தேவர்களும் அசுரர்களும் தாமே கடைகிறோம் என்ற எண்ணத்திலிருந்த போதிலும், உண்மையில் அவர்கள் கடையவில்லை.. பகவானே கடைந்தார்!.. 

( வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, - வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ( பூதத்தாழ்வார்) ).

இப்படி, சர்வ வியாபியாக பிரகாசித்த குருவாயூரப்பன், தன்னை நோய்களிலிருந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..

( உத்ப்ராம்யத்  ப³ஹுதிமிந‌க்ர ச‌க்ர வாலே 
தத்ராப்தௌ சிரமதி²தே(அ)பி நிர்விகாரே | 
ஏகஸ்த்வம்ʼ கரயுக³க்ருʼஷ்ட ஸர்ப்ப‌ராஜ​: 
ஸம்ʼராஜன் பவனபுரேஸ² பாஹி ரோகா³த் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

( அடுத்த பகுதியில்,ஜகன்மாதாவான, ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திரு அவதார வைபவம்!!...).

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..