ஒரு சமயம், ஒரு அப்சர ஸ்திரீ, தனக்குக் கிடைத்த தெய்வப் பிரசாதமான ஒரு மாலையை, துர்வாச மஹரிஷிக்குக் கொடுத்தாள். அவர், அதை தேவேந்திரனுக்கு அளித்தார். அந்த நேரத்தில் தேவேந்திரன், ஐராவதத்தின் மேல் வீற்றிருந்தான். மாலையின் மகிமையை உணராமல், அவன் அதை, ஐராவதத்தின் தலையில் வைக்க, அது, அந்த மாலையை கீழே தள்ளி மிதித்து விட்டது!!!!!.. கடுங்கோபம் கொண்ட மஹரிஷி, இந்திரனை சபித்து விட்டார்.
சாபத்தின் காரணமாக, இந்திரன், அசுரர்களால் ஜெயிக்கப்பட்டான். செல்வங்கள் நீங்கியதால் ஒளி குன்றியவர்களான தேவேந்திரன் முதலான தேவர்களும், பிரம்மா, பரமசிவன் முதலானவர்களும், இந்நிலையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டி, பகவானைச் சரணடைந்தார்கள்!.
பகவான், மிகவுயர்ந்த பிரகாசத்துடன் அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, 'அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, அமுதம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடையுங்கள்' என்று கட்டளையிட்டார். அதன்படி, தேவர்கள், அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு (அமர வாழ்வளிக்கும் அமுதம் வேண்டி, அசுரர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர்) திருப்பாற்கடலைக் கடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.
தேவர்கள், பகவானின் உதவி தங்களுக்குக் கிடைத்து விட்டது என்ற கர்வத்துடன், மந்தர மலையை, பாற்கடல் கடைவதற்கான மத்தாகக் கொண்டு வரும் வேளையில், அது, (அவர்கள் கர்வத்தைப் பங்கப்படுத்தும் விதமாக) கீழே விழுந்து விட்டது.. பகவான், அதை, கருடன் மேல், ஒரு இலந்தைக் கொட்டையைப் போல் எளிதாக எடுத்து வைத்து, பாற்கடல் மேல் அதைக் கொண்டு வைத்தார்!!..
வாஸூகி என்னும் நாகம், பாற்கடல் கடைவதற்கான கயிறாக மாறியது..எல்லா விதமான விதைகளையும் திருப்பாற்கடலில் இட்டு, தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, திருப்பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில், பகவான், முதலில் அசுரர்களை வாஸூகியின் வால் பக்கம் இருக்கச் சொன்னார். அவர்கள், அதை ஏற்கவில்லை.. உடனே அவர்களை தலைப் பக்கம் இருக்கச் சொன்னார். அதை ஏற்று செயல்பட்ட அவர்கள், பின்னால், பாம்பின் வாயிலிருந்து வந்த விஷக் காற்றின் துன்பத்தை அனுபவித்தனர். இவ்வாறு,அசுரர்களை பாம்பின் தலையிருக்கும் பக்கத்தில் இருக்கச் செய்து, தேவர்களைத் துன்பத்திலிருந்து காத்தார்.
கடையும் நேரத்தில், பாரம் தாங்காமல், மலையானது திருப்பாற்கடலில் முழுகியது.. தேவர்கள், மிகுந்த துன்பத்திற்கு ஆளான போது,மனம் இரங்கிய பகவான், தேவர்கள் மேலிருந்த பிரியத்தின் காரணமாக, முதுகில் கடினமான ஓடு கொண்ட ஆமையின் வடிவத்தை எடுத்துக் கொண்டார்!!!..
க்ஷுப்தாத்ரௌ க்ஷுபிதஜலோத³ரே ததா³னீம்ʼ
து³க்தாப்தௌ கு³ருதரபாரதோ நிமக்னே |
தே³வேஷு வ்யதி²ததமேஷு தத்ப்ரியைஷீ
ப்ராணைஷீ: கமட²தனும்ʼ கடோ²ரப்ருʼஷ்டா²ம் | | ( ஸ்ரீமந் நாராயணீயம்).
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
என்ற திருமங்கையாழ்வாரின் வரிகளை இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்!..
(இந்த பாசுரத்தை, தொடர்ந்து பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால், இழந்த செல்வம், புகழ் யாவும் பகவான் அருளால் மீண்டும் கிடைக்கும் என்பது பெரியோர்களின் திருவாக்கு!).
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இந்த கூர்மாவதாரக்கதை தங்கள் பாணியில் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதொடர்ந்து ஊக்கமளித்து வருவதற்கு, என் மனமார்ந்த நன்றி!.
பதிலளிநீக்கு