ப்ருது சக்கரவர்த்தி, மேடு பள்ளமாக இருந்த பூமியை சமப்படுத்தி, புரங்கள், பட்டினங்கள், வயல்கள், மலை வாசஸ்தலங்கள் என்றெல்லாம் தனித்தனியாக அமைத்தார். அதற்கு முன்பாக இது போன்று இருந்ததில்லை என்கிறது ஸ்ரீமத் பாகவதம்..
இவ்வாறு, ப்ருது சக்கரவர்த்தி, போற்றுதற்குரிய முறையில் நல்லாட்சி புரிந்து வந்தார். அஸ்வமேத யாகங்கள் செய்ய எண்ணம் கொண்டார். யக்ஞங்களின் மூலமாக ஆராதிக்கப்படுபவரான பகவான் செய்த யாகங்கள், அவரை அவரே ஆராதிக்கும் முகமாக செய்யப்பட்டன என்கிறார் பட்டத்திரி!.
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.
என்ற திருமங்கையாழ்வார் திருவாக்கினை இங்கு நாம் தியானிக்கலாம்!.
ப்ருது சக்கரவர்த்தியின் நூறாவது அஸ்வமேத யாகம் தொடங்கப்பட்டதும், முன்பே நூறு அஸ்வமேத யாகங்களை நிறைவு செய்திருந்த இந்திரன், தன் மதியீனத்தால் பகவானிடம் பொறாமை கொண்டான். நூறாவது யாகம் நிறைவு பெறுவதை தடுக்க வேண்டி, யாகக் குதிரையைக் கவர்ந்தான். ஆனால் ப்ருது சக்கரவர்த்தியின் புதல்வன், இந்திரனை தோல்வியடையச் செய்தான்.
இவ்விதம் செய்த இந்திரனை, முனிவர்கள் அக்னியில் ஹோமம் செய்து விட முடிவெடுத்தனர். ஆனால், பிரம்ம தேவர், அதைத் தடுத்தார். அதன் பின், யாகம் நல்ல முறையில் நிறைவேறியது. யாக முடிவில், ப்ருது சக்கரவர்த்தி, தம்மைத் தாமே, எங்கும் நிறைந்த விஷ்ணுவாக தரிசித்தார்!...
பின்னொரு சமயம், கங்கைக் கரையில் சத்ரயாகம் ஏற்பாடாயிற்று. அந்த வேளையில், யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்களுக்கு, தர்மங்களை உபதேசித்தார் ப்ருது சக்கரவர்த்தி. அப்போது, சனகாதி முனிவர்கள் நால்வரும் அங்கு எழுந்தருளினர்.
ஞான ரூபனான பகவான், சனகாதி முனிவர்களிடம், சம்சாரத்திலிருப்போருக்கு, எளிய முறையில் நன்மை உண்டாகும் வழியை வேண்டினார். அனைத்துமறிந்த பகவான், மானிட வேடம் தாங்கியதன் காரணமாக, தமக்குகந்த தர்மத்தை அனுசரிக்கும் பொருட்டும், யாக சாலையில் கூடியிருந்த அனைவரும் உய்யும் பொருட்டும் இதை வினவியதை அறிந்திருந்த சனகாதியரும், மகிழ்ச்சியுடன் அதனை உபதேசித்தனர்.
சனகாதியரிடம் பெற்ற ஞானத்தை ஏற்றுக் கொண்ட ப்ருது சக்கரவர்த்தி வனத்திற்கு புறப்பட்டார். அங்கு தமது ஸ்வரூபத்தை அடைந்தார். இப்படியாக, போற்றுதலுக்குரிய ப்ருது சக்கரவர்த்தியின் திருவடிவில் அவதரித்த ஸ்ரீ குருவாயூரப்பன், தம் வியாதிக் கூட்டத்தை நாசம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து, ப்ருது சரித்திரத்தை நிறைவு செய்கிறார் பட்டத்திரி!..
'விஜ்ஞானம்ʼ ஸனகமுகோ²தி³தம்ʼ த³தா⁴ன:
ஸ்வாத்மானம்ʼ ஸ்வயமக³மோ வனாந்தஸேவீ |
தத்தாத்³ருʼக்ப்ருʼது²வபுரீஸ² ஸத்வரம்ʼ மே
ரோகௌ³க⁴ம்ʼ ப்ரஸ²மய வாதகே³ஹவாஸின் || (ஸ்ரீமந் நாராயணீயம்).
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!..'
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..
தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..