நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME.. PART 35... PRUTHU CHARITHRAM..கண்ணனை நினை மனமே.. பகுதி 35.. ப்ருது சரித்திரம்.


பகவான், ஜீவர்களைக் கடைத்தேற்ற வேண்டி, பற்பல அவதாரங்களை எடுத்தார். அவற்றுள் தசாவதாரங்கள், மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அந்தப் பத்து அவதாரங்களைத் தவிரவும், பகவான் எடுத்தருளிய மற்ற அவதாரங்கள், ஸ்ரீமத் பாகவதத்திலும், ஸ்ரீமந் நாராயணீயத்திலும் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே, ஸ்ரீ ப்ருது சக்கரவர்த்தியின் அவதார வைபவம்.

துருவ மஹாராஜாவின் வம்சத்தில், ஏழாவது தலைமுறையில், அங்கன் என்றொரு புகழ் பெற்ற அரசன் இருந்தான். அவனுக்கு, வேனன் என்ற பெயருடைய மகன்  பிறந்தான். கெட்ட நடத்தையுடைய அவனால் மனம் மிகவும் வேதனையடைந்த அங்கன், வைராக்கியமுடையவனாகி, எம்பெருமானின் திருவடிகளில் மனதைச் செலுத்தியவனாக, வனம் சென்றான்.

(ஜாதஸ்ய த்⁴ருவகுல ஏவ துங்க³கீர்தே
ரங்க³ஸ்ய வ்யஜனி ஸுத​: ஸ வேனனாமா | 
தத்³தோ³ஷவ்யதி²தமதி​: ஸ ராஜவர்ய
ஸ்த்வத்பாதே³ விஹிதமனா வனம்ʼ க³தோ(அ)பூ⁴த் || (ஸ்ரீமந் நாராயணீயம்))..

(ஏன்றேன் அடிமை இழிந் தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு,மேலை
இடநாடு காண இனி. (திருமழிசை ஆழ்வார்)).

நல்ல புத்திரர்களால், தகப்பனுக்கு அழியாத புகழ் உண்டாகும். ஆனால் பிரம்ம ஞானத்தின் திறவுகோலாகிய வைராக்கியம், கெட்ட புதல்வர்களாலேயே உண்டாகும்.   ஆகையால், அங்கன், 'நல்ல புதல்வர்களை விட, கெட்ட புதல்வர்களையே மேலென எண்ணுகிறேன்' என்ற எண்ணம் கொண்டு, நடு இரவில், அரண்மனையை விட்டு வெளியேறியதாக, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

நாடு அரசனின்றி இருக்க இயலாது என்பதால், துர்நடத்தையுடைய வேனன், முனிவர்களால், அந்நாட்டிற்கு அரசனாக ஆக்கப்பட்டான். கெட்ட புத்தியுடையவனிடம், அதிகாரமும் ஐஸ்வர்யமும் சேர்ந்தால் என்ன ஆகுமோ அது நடந்தது!.. தன்னைத் தானே பெருமையாக எண்ணிக் கொண்டு, பகவானுக்கு செய்யப்படும் பூஜைகளைத் தடுத்தான்..தனக்கு மேல் ஒருவரும் இல்லை என்ற எண்ணத்தால், தன்னையே பூஜிக்க வேண்டும் என்றான்.

ரிஷிகள், வேனனுக்கு நன்மையை உபதேசிக்க வந்தார்கள். 'உலகங்களுக்கு அதிபதியாக, தன்னைத் தவிர வேறொருவன் இல்லை' என்ற எண்ணத்தில், பகவானை நிந்திக்கத் தொடங்கினான் வேனன். இதனால் முனிவர்கள் கோபமடைந்தனர். தீயில் விழுந்த விட்டில் பூச்சி அழிவது போல், முனிவர்களின் சாபத்தீ அவனை அழித்தது (ஹூங்காரத்தினால் அழித்தனர் என்று பாகவதம் சொல்கிறது). 

ஆள்பவன் இல்லையென்றால், மக்களுக்கு தர்மத்தைப் பற்றிய பயமென்பது போய்விடும்.. அவர்களிஷ்டப்படி நடந்து கொள்வார்கள்.. ராஜ்யத்தின் ஸ்திரத் தன்மை சீர்குலையுமென்பதாலும், பகைவர்களுக்குப் பயந்தும், கெட்ட நடத்தையுடையவனாயினும் வேனனை அரசனாக்கினார்கள் முனிவர்கள்.. தங்களது செயலால், பிரஜைகள் அனைவரும் துன்புறுவது தெரிந்ததும், வேனனை அழிக்கவும் செய்தார்கள். கோபமே வராதவர்கள் ரிஷிகள். ஆயினும் பகவானின் நிந்திப்பது அவர்களை கோபமடையச் செய்கிறது.. ஸ்ரீமத் பாகவதம், 'அச்சுத நிந்தனையால் ஏற்கெனவே கொல்லப்பட்ட வேனனை, முனிவர்கள் ஹூங்காரத்தினால் அழித்தார்கள்' என்கிறது.. பகவானை நிந்திப்பது, அழிவுக்கு நிகர் என்பது இதனால் அறியப்படுகிறது. இருப்பினும், தங்கள் செய்கையால் முனிவர்கள் வேதனையே அடைந்தார்கள்.. 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பதற்கு யாரும் விதிவிலக்கிலையே!..

(தொடர்ந்து தியானிக்கலாம்).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..