நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME....PART 32...கண்ணனை நினை மனமே!... பகுதி 32.....துருவ சரித்திரம்


இந்த தசகத்தில், மகாத்மாவும் பக்த சிரேஷ்டனுமான துருவனின் திவ்ய சரித்திரம் உரைக்கப்படுகின்றது. பக்தர்களின் சிறந்தவரும், பகவானின் கருணைக்கு அதிவிரைவில் பாத்திரமானவருமான துருவனின் சரித்திரம்,  படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பகவானின் மேல் அசையாத பக்தியை உருவாக்க வல்லது!.. 

தேவரிஷியான நாரதர், 'வேறு எவராவது இப்பூவுலகில் பல ஆண்டுகளிருந்த போதிலும், துருவன் அடைந்த பதவியை (பதத்தை) அடைய ஆசையாவது கொள்வானா?' என்று துருவனின் புகழை உயர்த்திக் கூறுகின்றார் (ஸ்ரீமத் பாகவதம்).

'இதனை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுள் தானாகவே ஆனந்தானுபவம் பெற்று சித்தியடைவான்' என்று சொல்கிறது ஸ்ரீமத் பாகவதம்..

துருவ சரித்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாக உள்ளது.  நாம் இங்கு பட்டத்திரியின் திருநோக்கின் வழியாக துருவ சரித்திரத்தைப் பார்க்கலாம்!.
ஸ்வாயம்புவ மனுவின் புதல்வனான உத்தானபாத மன்னனுக்கு இரு  மனைவியர். ஸூநிதி, ஸூருசி என்ற பெயர்களுடைய அவர்கள் இருவரில், இளையவளான ஸூநிதியிடம் உத்தானபாதனுக்கு மிகவும் பிரியம். அதனால் ஸூநிதியிடம் பாராமுகமாகவே இருந்தான் மன்னன். பெரும் துணையாக பகவானிருக்க, திக்கற்றவர்கள் என்று இவ்வுலகில் யாருமில்லையல்லவா?!.. பகவானையே கதியாக நினைத்து, சரணமடைந்தாள் ஸூநிதி. 

ஸூநிதியின் மகனே துருவன். ஐந்து  வயதுக் குழந்தை.. தந்தையின் பாசத்திற்கு மிகவும் ஏங்கிய நிலையில், ஒரு நாள், தன் இளைய தாயாரின் புத்திரனான உத்தமன், தன் தந்தையின் மடி மீது அமர்ந்திருக்கக் கண்டு, தானும் ஏற முயற்சி செய்தான். பகவத் பக்தியில்லாதவர்களால் பொறாமையை விட முடியாது. பொறாமையே உருவெடுத்த தன் சிறிய தாயாரினால் அதட்டித் தடுக்கப்பட்டான் துருவன்.

மாயையால் மதி மயங்கி, மனைவி மேல் கொண்ட பிரியத்தால், உத்தான பாதன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய தாயின் கொடும் சொற்களால் புண்பட்ட நெஞ்சையுடையவனான துருவன், தன் தாயிடம் சென்றான். ஸூநிதி, கர்ம பலனைக் கடப்பதற்கு, பகவானின் திருவடிகளைச் சரணடைதலே தகுந்த உபாயம் என, தன் குழந்தைக்கு உபதேசம் செய்தாள் (அதாவது, துருவனுக்கு தந்தையின் அன்பு  கிடைப்பதற்கு தடையாயிருப்பது துருவனின் கர்ம வினையே என்பது ஸூநிதியின் உபதேசம்... கர்ம வினையின் தூண்டுதலே, ஸூருசியை துருவனிடம் கடுமையாக நடந்து கொள்ளச் செய்தது. ஆகவே, கர்ம வினை நீங்கினால் துன்பங்கள் தொடராது என்பதால் பகவானிடம் பற்றுக் கொள்ளச் செய்தாள் ஸூநிதி.. பக்தி மிகுந்தவளாதலால், தன் மைந்தனுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதிலும், கோபம் கொள்ளாது, தந்தையிடத்தும் சிறிய தாயிடத்தும் மகனுக்கு வன்மம் ஏற்படாதிருக்க, நல்ல மார்க்கத்தில் குழந்தையின் மனதைத் திருப்பினாள்!..).

இதைக் கேட்ட துருவன், பகவானை ஆராதிப்பதென்று மனதுள் நிச்சயித்தான். அவமானம் பொறுக்க மாட்டாத அந்த ஐந்து வயதுக் குழந்தை,  அந்த நகரத்திலிருந்து வெளியேறினான். திடமான உள்ளத்துடன் கூடிய அவனை, நாரத முனிவர் வழியில் சந்தித்தார். அவரால் மந்திரமார்க்கம் உபதேசிக்கப்பட்டு, மதுவனத்தினுள் சென்று  தவம் புரியலானான் துருவன்.

(ஆகர்ண்ய ஸோ(அ)பி ப⁴வத³ர்சனிஸ்²சிதாத்மா
மானீ நிரேத்ய நக³ராத்கில பஞ்சவர்ஷ​: | 
ஸந்த்³ருʼஷ்டனாரத³னிவேதி³தமந்த்ரமார்க³ஸ்
த்வாமாரராத⁴ தபஸா மது⁴கானனாந்தே || (ஸ்ரீமந் நாராயணீயம்)).

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம். 

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.

என்னும்  திருமங்கையாழ்வார் திருவாக்கினை இங்கு தியானிக்கலாம்!.. தன் தந்தையின் அன்பை வேண்டி தவம் புரியச் சென்றவன், எப்பிறப்புக்கும் தந்தையும் தாயுமாகும் எம்பெருமானின் கருணைக்குப் பாத்திரமாகும் மார்க்கம் உபதேசிக்கப் பெற்றான். அதுவும் குருவே அவனைத் தேடி வந்து உபதேசிக்கும் பேறு பெற்றான்.ஒருமுனைப்பட்ட மனமுடையவனாய், தவத்தில் ஈடுபட்டான் துருவன்.

தொடர்ந்து தியானிக்கலாம்....

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. அன்புள்ள சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (24.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 24ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/24.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த‌ நன்றி..

      நீக்கு
  2. தங்கள் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.. சென்று கண்டேன்... தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி!.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..