நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!...PART 17..கண்ணனை நினை மனமே!.. பகுதி 17..பிரளயமும் சிருஷ்டியும்.

பட்டத்திரி, இந்த தசகத்தில், பிரளயமும் அதைத் தொடர்ந்து, சிருஷ்டி நடைபெறும் விதமும் பற்றி விவரிகின்றார். 
இங்கே சில தகவல்களை நினைவுபடுத்திக்  கொள்ளலாம்..யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகியன. ஆயிரம் சதுர்யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது, இது ஒரு கல்பம் எனப்படும்.. இது 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. பிரம்மாவின் ஒரு நாள், இரு கல்பங்களைக் கொண்டது.

பிரம்மாவின் இரவுப் பொழுதின் துவக்கத்தில் பிரளயம் வரும்.. அப்போது, 14 உலகங்களில், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் மட்டும் அழியும். தம் இரவுப் பொழுதில், தாம் உண்டாக்கிய அனைத்தையும், தம்மோடு இணைத்தே பிரம்மா உறங்குகின்றார். ஆன்மாக்கள், மாயையால், செயலற்று இருக்கும்.  ஆயிரம் சதுர்யுகங்கள் சிருஷ்டி ஏதுமின்றி கழியும்.. தம் இரவு முடிந்ததும், பிரம்ம தேவர், உறக்கம் நீங்கி எழுந்து, மீண்டும் சிருஷ்டியைத் தொடங்குவார். இவ்விதமான கால அளவுகளின்படி, பிரம்மாவின் ஆயுள் நூறு வருடங்கள்.. அதில் ஐம்பது வருடங்களுக்கு ஒரு 'பரார்த்தம்' என்று பெயர். அவரது ஆயுள் முடிவில், பிராக்ருத பிரளயம் உண்டாகும்.. 

அச்சமயம்,  உலகங்கள் அனைத்தும் அழியும்.. அதன் பின், பல கோடி வருடங்களுக்குப் பின்னரே மீண்டும் பிரம்ம தேவர் தோன்றுவார். பிராக்ருத பிரளயம் என்பது, சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் ஒன்றுதல். இந்த பிரளயம் முடிந்து, பிரம்ம தேவர் தோன்றுவதை  சென்ற தசகத்தில் நாம் பார்த்தோம்..

நைமித்திக பிரளயம் முடிந்து, பிரம்ம தேவர் எழுந்து சிருஷ்டியைத் துவங்குதல் குறித்து, பட்டத்திரி சொல்வதை,, இந்த தசகத்தில் நாம் காணலாம்.

"இவ்விதம் பிராக்ருத பிரளயம் முடிந்த பின், முதலாவதான பிரம்ம கல்பத்தில் தோன்றிய பிரம்ம தேவர், வேதங்களை உம்மிடமிருந்து பெற்று, சிருஷ்டியைத் துவக்கினார்.."

(எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே(குலசேகராழ்வார்)).

"பிரம்ம தேவர், ஆயிரம் சதுர்(நான்கு)யுகங்களை  பகலாகவும், ஆயிரம் சதுர்யுகங்களை இரவாகவும் பெற்றவர். தான் படைத்த அனைத்தையும் தன்னோடு இணைத்தே பிரம்ம தேவர் உறங்குகின்றார். ஆகையால், அவருடைய இரவை 'நைமித்திக பிரளயம்' என்கிறார்கள். அவர் உறக்கம் நீங்கி எழுந்ததும், நாம் காலையில் நம் கடமைகளைச் செய்வது போல், அவருடைய சிருஷ்டியைச் செய்கின்றார்.  முந்தைய கல்பத்தில் வாழ்ந்திருந்த சிரஞ்சீவிகளுக்கு, இந்த சிருஷ்டியானது, தூக்கத்திலிருந்து விழிப்பதற்கு ஒப்பாகின்றது"

பஞ்சாஸ²த³ப்³த³மது⁴னா ஸ்வவயோ(அ)ர்த⁴ரூபம்
ஏகம்ʼ பரார்த⁴மதிவ்ருʼத்ய ஹி வர்ததே(அ)ஸௌ | 
தத்ராந்த்யராத்ரிஜனிதான்கத²யாமி பூ⁴மன்
பஸ்²சாத்³தி³னாவதரணே ச ப⁴வத்³விலாஸான் ||  4

"ஸ்ரீஅப்பனே, பிரம்ம தேவர், தம் ஆயுளில் பாதியாகிய ஒரு பரார்த்தத்தைக் கடந்து விட்டார். அளவில்லாதவரே!!, அவருடைய ஆயுளில், சென்ற இரவில் நடந்தவையும், அதை அடுத்து, இந்த பகலின் துவக்கத்தில் நடந்தவையுமான உமது லீலைகளைச் சொல்கின்றேன்".
(அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ். (பொய்கையாழ்வார்)).

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..