நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 24 ஆகஸ்ட், 2013

SRI KRISHNA VIJAYAM (GOKULASHTAMI ((28/8/2013) SPECIAL POST)....ஸ்ரீ கிருஷ்ண விஜயம்.


 பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர்

குட்டிக் குட்டியாக பாதங்கள் வரைந்து,பட்டுப்பாதங்கள் பதிய, நம் இல்லத்திற்கு வர வேண்டுமென‌, கண்ணனை வரவேற்கும் கோகுலாஷ்டமித் திருநாள் வரும் புதன் கிழமை (28/8/2013) வருகிறது. ஒவ்வொரு வருடமும், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். கண்ணன் அவதரித்த ரோகிணி நக்ஷத்திர நன்னாளை ஸ்ரீஜெயந்தியாக வைணவப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கோகுலாஷ்டமி கொண்டாடப்படுவதன்  மகிமை குறித்தும், கொண்டாடும் முறை குறித்தும்,  'தேவகி பரமானந்தம்...கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (சொடுக்கவும்) பதிவில் விளக்கியிருக்கிறேன். 

ஸ்ரீகிருஷ்ணாவதாரம்:

ஸாத்வத குலத்தில் பிறந்த ஆஹூகன் என்னும் மன்னனுக்கு, தேவகன், உக்ரஸேனன் என்னும் இரு புதல்வர்கள். இவர்களில் தேவகனின் திருமகளே, எம்பெருமானைத் திருவயிறு வாய்த்த பெருமையுடைய தேவகி. தேவகியின் ஒன்று விட்ட சகோதரனே கம்ஸன்.  
கம்சனின் கொடுமையிலிருந்து, உலகோரைக் காக்க திருவுளம் கொண்ட பரமாத்மா, தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் பிரவேசித்தருளினார். சச்சிதானந்த ஸ்வரூபமாகிய பரமாத்மா அவ்விதம் பிரவேசித்த போது, தேவர்கள் யாவரும் மகிழ்ந்து துதித்தனர்

தேவர்களின் கர்ப்ப ஸ்துதி:

ஸ‌த்யவ்ரதம் ஸ‌த்யபரம் த்ரிஸத்யம்
ஸத்யஸ்யயோனிம் நிஹிதஞ்ச ஸத்யே |
ஸத்யஸ்ய ஸத்யம் ருத ஸத்ய நேத்ரம்
ஸ‌த்யாத்மகம் த்வாம் சரணம் ப்ரபன்னா: ||

அரவுப் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் மாதவன், ஆவணி (மாதம்), ரோகிணி (நக்ஷத்திரம்) , அஷ்டமி(திதி)யில் அர்த்த ஜாம நேரத்தில் (நள்ளிரவில்) யாரும் அறியாவண்ணம்,   அவதரித்தருளினார்.

பரமாத்மா அவதரித்தருளிய போது, சாதாரண மானிடக் குழந்தையாக இல்லாமல், தாம் யார் என்பதை தெளிவாக விளங்கச் செய்யும் வண்ணம், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை தாங்கிய நான்கு திருக்கரங்களுடன், ஒளிவீசும் கிரீடம், கங்கணம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றுடனும் நீல மேக வண்ணத் திருமேனியுடன் அவதரித்தார்.

பரந்தாமன் அவதரித்ததும், அவரது திருவுருவை, வசுதேவர், கேசாதி பாதம் தரிசித்து  மகிழ்ந்தார். அவ்வாறு அவர் தரிசிக்கும் போது, திருமாலின் திருமார்பில் அகலாது வீற்றிருந்தருளும் திருமகள், சற்றே நாணத்துடன் முகம் திருப்பிக் கொண்டாளாம். இப்பிறவியில் வாசுதேவனில் தந்தையல்லவா வசுதேவர்!!!. ஆகையால், திருமகளுக்கு நாணம் வந்ததாம். அதன் பின், லக்ஷ்மி தேவி, சிறைச்சாலையில் இருக்கும் அலக்ஷ்மீகரத்தை, அதாவது, தூசி முதலியவற்றை, தன் பார்வையாலேயே துடைத்தெறிந்தாளாம்!!. திருமகள் கொலுவிருக்கும் இடத்தில்  சுத்தம் இருப்பதே முறை இல்லையா?. மேலும் தன் நாதன் அவதரிக்கும் இடம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதே தேவியின் நோக்கம்.

அதன் பின், வசுதேவர், பரந்தாமனின் திருவுளப்படி, அவரை ஒரு கூடையில் வைத்து எடுத்துப் போய், கோகுலத்தில், நந்தகோபனின் திருமாளிகையில் சேர்ப்பித்தார். அங்கிருந்த யசோதையின் பெண் குழந்தையை (யோகமாயையை) கம்சனின் சிறைச்சாலைக்குக் கொண்டுவந்தார். பரமாத்மாவைக் கையில் எடுத்த போது, உடைந்து விழுந்த விலங்குகள், திறந்த சிறைக்கதவுகள், யோகமாயை வந்ததும் தாமே பூட்டிக் கொண்டன. மாயையினாலேயே உலகச் சிறையில் விழுந்து, பந்த விலங்குகளைப் பூட்டிக் கொள்கிறோம் இல்லையா?

கோகுலானந்தம்:
யசோதைக்குத் திருமகன் பிறந்த செய்தி, கோகுல வாசிகளை எத்தகையதோர் ஆனந்தத்தில் ஆழ்த்தியது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. கோகுலமே விழாக்கோலம் பூண்டது. அன்று மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் திருநாள் போல விளங்கியது.

தினே தினேsத ப்ரதிவ்ருத்த லக்ஷ்மி-
ரக்ஷீண- மங்ல்ய தோ வ்ரஜோsயம்
பவந் நிவாஸாதயி வாஸூதேவ‌
ப்ரமோஸாந்த்ர; பரிதோ விரேஜே (ஸ்ரீமந் நாராயணீயம்)

ஹே கிருஷ்ணா!! நீ வாசம் செய்வதால், கோகுலம் முழுவதும், ஒவ்வொரு நாளும் குறைவில்லாமல் வளருகின்றன் லக்ஷ்மி கடாக்ஷத்தைக் கொண்டு, பல வளங்களையும், மங்களங்களையும் உடையதாகி ஆனந்தம் நிறைந்து விளங்கியது.
ஆனந்த ரூபமான பரமாத்மாவைப் பார்க்க பார்க்க மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர் கோபியர்கள். குறும்பின் திருவடிவோ, தன் சிறுவாய் திறந்து, முறுவல் செய்து அவர்களை பேரின்பத்தில் ஆழ்த்தியது. ஒரு கோபிகையின் கைகளில் இருந்து கொண்டு மற்றொரு கோபிகையை நோக்கும் குழந்தை. உடனே அவள், 'என்னைத் தான் பார்க்கிறான் குழந்தை, கொடு' என்று வாங்குவாள். அவளிடம் சென்று, பின் அருகிருக்கும் மற்றொரு கோபிகையை நோக்குவான் விஷமக்காரக் கண்ணன். இவ்வாறு, கைக்குக் கை மாற்றப்பட்ட குழந்தை, சிவந்த தாமரை மலர்களால் ஆன மாலையில் மொய்க்கும் வண்டைப் போல் விளங்கியது.

நாமகரணம்:
ஆயிரம் திருநாமங்களால் அர்ச்சிக்கப்படும் தெய்வக் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா. வேதங்களின் மறைபொருளான வேதநாயகன் என்பதாலோ என்னவோ பெயர் சூட்டு விழாவும் யாரும் அறியாமலேயே நிகழ்ந்தது. கம்சன், பிறந்த குழந்தைகள் அனைத்தையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட செய்தி, சிறைச்சாலையில் இருந்த வசுதேவருக்கு எட்டியது. அவர், தம் குலகுருவான கர்க முனிவரை அழைத்து, கோகுலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு(வசுதேவரின் மூத்த மனைவி ரோகிணியும் அவள் குழந்தையும் அச்சமயம் நந்தகோபரின் பாதுகாப்பில் இருந்தனர்) ரகசியமாக நாமகரணம் செய்யுமாறு வேண்டுகின்றார்.
கர்கமுனிவர், கிடைத்தற்கரிய பெரும்பேறு தமக்கு வாய்த்ததை எண்ணி மகிழ்ந்தவராக, கோகுலம் சென்றார்.

நந்தகோபரிடம் விவரம் தெரிவித்த கர்கமுனிவர், குழந்தைகளை எடுத்து வர வேண்டுகிறார். மனம் மகிழ்ந்த நந்தகோபரும் அவ்வாறே செய்கிறார்.

குழந்தையைப் பார்த்ததும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது கர்க முனிவருக்கு. 'பிரபுவே, ஆயிரம் திருநாமங்களையும் அதற்கும் மேற்பட்ட அளவிலாத திருநாமங்களையும் உடைய தங்களுக்கு நான் எவ்விதம் நாமகரணம் செய்வேன்?!!' என்று அதிசயித்த முனிவர், பின், 'கிருஷி' என்ற தாதுவையும், 'ண' என்ற எழுத்தையும் சேர்த்து, 'ஸத்' என்ற ஸ்வரூபத்தையோ அல்லது உலக மக்களின் பாவங்களைக் கவரும் தன்மையையோ கூறும் 'க்ருஷ்ணன்' என்ற திருநாமத்தைச் சூட்டுகின்றார்.

மேலும் ' முன்னொரு  காலத்தில் இவன் வசுதேவருக்குப் புதல்வனாகப் பிறந்திருந்ததால் வாசுதேவன்,  இவனுக்கு மேலும் பல பெயர்களும் பெருமைகளும் ஏற்படும்' என்று கூறிய முனிவர், ரோகிணியின் குழந்தைக்கு, ராமன் என்றும் யாதவர்களை ஒன்றுகூட்டப் போவதாலும், இரண்டு கர்ப்பங்களில் வாசம் செய்ததாலும் சங்கர்ஷணன் என்றும், பலம் மிகுந்தவனாதலால் பலராமன் என்றும் திருநாமங்களைச் சூட்டி, 'இவர்கள் இருவரும் மிகுந்த மகிமை உடையவர்கள்' என்று தெரிவிக்கிறார்.

இவ்வாறு, ஸ்ரீகிருஷ்ணரின் திருஅவதார வைபவம், ஸ்ரீமத் பாகவதத்தில் விளக்கப்படுகின்றது.

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜாதகம்:

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம் மிகவும் மகிமை பொருந்தியது. ஜாதகத்தில், சந்திரன், புதன், செவ்வாய், சனி, ராகு ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சபலத்துடனும், குரு, சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருக்கின்றன. கேது பகவான் நீசமாக அமர்ந்திருக்கிறார். ஒன்பதில் எட்டு கிரகங்கள் மிக வலிமையுடன் இருக்கின்றன.

ஸ்ரீராமரின் ஜாதகத்தினைப் போலவே, ஸ்ரீகிருஷ்ணரின் ஜாதகத்தையும் பூஜையில் வைக்கலாம். வியாபாரத் தலங்களில் வைக்க, மறைமுக எதிர்ப்புகள் வீழும். செல்வம் செழிக்கும்.

பிரம்ம வைவர்த்த புராணம், ஸ்ரீகிருஷ்ணரை பரப்பிரம்மமாகத் துதிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் வசிப்பிடம் 'கோலோகம்' என்று அறியப்படுகின்றது. பிரளய காலத்திலும் அழியாத சிறப்புடையதாய் அது விளங்குகிறது. கோலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா தேவியுடன் அருளாட்சி புரிகின்றார். கண்ணனின் சக்தி அம்சமே ராதாதேவி. கிருஷ்ணரின் இடப்பாகத்திலிருந்து ராதை தோன்றினாள் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.

பத்மபுராணத்தின்படி, விருஷபானு என்ற முனிவருக்கு  நிலத்தில் கிடைத்த பெண்குழந்தையே ராதா தேவியாவாள். தேவி பாகவதம், ஸ்ரீதாமன் என்னும் ஒரு கோபாலனின் சாபத்தால், பூமியில் விருஷபானு, கலாவதி தம்பதியருக்கு மகளாக வந்துதித்தாள் ராதை எனப் பேசுகிறது. ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்யவதி, பத்ரா, லக்ஷ்மணா என எட்டு பட்ட மகிஷிகள் உட்பட எண்ணற்ற மனைவியர் கண்ணனுக்கு. இருப்பினும், 'ராதே ஷ்யாம்' என்ற கோஷமே கண்ணன் மனத்துக்குகந்தது. ராஸலீலையின் போது ராதையின் மகத்துவம் நன்கு வெளிப்படுகிறது. அச்சமயம், அங்கு வந்த அனைத்து தேவர்களும் ராதாதேவியைத் துதிக்க, சிவபெருமான், தம் திருவாக்கினால் 'ராதிகா சஹஸ்ரநாமத்தை' அருளினார். 

ஸ்ரீகிருஷ்ணர் உபமன்யு முனிவரால் சிவ தீக்ஷை பெற்ற சிவபக்தர் என்று பாகவதம் குறிக்கின்றது.

பூர்ணாவதாரமான கிருஷ்ணாவதாரமே அனைவராலும் விரும்பப்படுவது. ஸ்ரீகிருஷ்ணபகவான் அவதரித்த நன்னாளில், கண்ணனைப் போற்றித் தொழுது, 

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

9 கருத்துகள்:

  1. ஸ்ரீ கிருஷ்ண விஜயம் சிறப்போ சிறப்பு....! நன்றி அம்மா.. தொடர வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி டிடி சார்!!!

      நீக்கு
  2. உங்களின் mail (dindiguldhanabalan@yahoo.com) மூலம் வந்தேன்.... நன்றி....

    பதிலளிநீக்கு
  3. இறந்தவர்களுக்கு நாங்கள்
    பிறந்த நாள் கொண்டாடுவதில்லை

    வருகை பதிவினை
    வழக்கம் போல் தந்து

    அன்பு வணக்கங்கயும்
    அனைத்து நலனும் பெற வாழ்த்துக்களையும்

    தந்த மகிழ்கிறோம்
    திருவருள் துணைபுரிவதாக

    பதிலளிநீக்கு
  4. பூர்ணாவதாரம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..