நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 15 மே, 2013

SRI SANKARA JAYANTHI (15/5/2013).....ஸ்ரீ சங்கர ஜெயந்தி...


அஹமானந்த ஸத்யாதிலக்ஷண:கேவல:சிவ:
ஸதானந்தாதி ரூபம் யத்தேநாஹமசலோsத்வய: (அத்வைதானுபூதி)

("ஆனந்தம், சத்தியம் இவற்றின் இலக்கணமான சிவமே நான்.  எது எப்போதும் ஆனந்தமய ரூபமாக இருக்கிறதென்று கூறப்படுகிறதோ, அது போலவே, 'நான்' என்ற ஒன்றும் அசைவில்லாத, இரண்டற்ற பரதத்வம் ஆகும்.")

நமது சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக அவதரித்த குருமார்களில் முக்கியமானவர், ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாகவே கருதப்படும் ஸ்ரீஆதிசங்கரர், இப்போதைய கேரள மாநிலத்திலிருக்கும் 'காலடி' என்னும் புண்ணியத் திருத்தலத்தில், சிவகுரு, ஆரியாம்பிகை தம்பதியினரின் தவத்தின் பலனாக, திருஅவதாரம் செய்தார். இந்த‌ப் பதிவில், ஆசாரியரின் அவதார நோக்கம், மற்றும் அவரது பால பருவத்தில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஆதிசங்கரரின் அவதார நோக்கம்:
முற்காலத்தில் நமது ஹிந்து தர்மம், ஒன்றிணைந்த ஓருருவாக இல்லை. பல்வேறுபட்ட நம்பிக்கைகள், கொள்கைகள் சார்ந்து 72 பிரிவாகப் பிரிந்து இருந்தது. அதில் முக்கியமாக, 'மீமாம்சை' எனும் கொள்கை வலுவாக வேரூன்றியிருந்தது.

மீமாம்சைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள், வேதத்தில் கூறியிருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்களைத் தவறாமல் பின்பற்றுவார்கள். ஆனால் ஞான காண்டமாகிய உபநிஷதங்களை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களை கர்ம மார்க்கக்காரர்கள்  என்றே அந்நாளில் அழைத்தனர். இந்தக் கொள்கையை நிறுவியவர் ஜைமினி மஹரிஷி. ஹிந்து தர்மத்தின் ஆறு தரிசனங்களில் மிக முக்கியமானது மீமாம்சை. இது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என இருவகைப்படும்.
மீமாம்சகர்கள் 'நீரீஸ்வர வாதம்' எனப்படும் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள்( இது எவ்வளவு காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்திருக்கிறது பாருங்கள்!!!). 'ஒரு செயலைச் செய்தால், அதன் விளைவு தானே ஏற்படுகிறது(நியூட்டன் 3வது விதியை நினைவு கொள்ளவும்). இதற்குக் கடவுள் தேவையில்லை. கடவுள் இருந்தால், நன்மையும் தீமையும் எங்கிருந்து வந்தன?' என்பது அவர்கள் கருத்து. ஆனால் அவர்கள் 'தேவர்கள்' என்று  மனிதரிலும் மேம்பட்ட ஒரு இனம் இருப்பதை ஒப்புக் கொண்டு, அவர்களுக்கு யாகங்களில் அவிர்ப்பாகங்கள் அளித்து வந்தனர். ஆனாலும், யாகம் தான் யாகத்தின் பலனைத் தருகிறது என்பதில் உறுதியான கருத்துள்ளவர்கள்.

பிறவிப் பயனை அடையும் வழியாக மீமாம்சை கூறுவது என்னவென்றால், 'கடமைகளை, விருப்பு வெறுப்பின்றி செய்வதால், வினைப் பயனைக் கழித்து, ஜனன மரணச் சுழலில் இருந்து விடுதலையடையலாம்' என்பதே.

கிட்டத்தட்ட, பக்தி, ஞானம் இவையெல்லாம் மறைந்தே விட்டிருந்த சூழலில், இவற்றையெல்லாம் மீட்டெடுத்து புத்துயிர் அளித்து, அத்வைத சித்தாந்தத்தை உலகில் வேரூன்றச் செய்து, நமது பழமையான சனாதன தர்மம் தழைக்கச் செய்த அரும்பெரும் சாதனையைப் புரிந்தவர், ஸ்ரீ ஆதிசங்கரர்.  இவையனைத்தையும் தம் வாழ்நாளான 32 வயதிற்குள் சாதித்தார் ஆதிசங்கரர்.

அத்வைதம், பின்வருமாறு, மீமாம்சைக் கொள்கையைக் கண்டிக்கிறது.

"வேதங்கள் கூறும் சடங்குகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த மட்டுமே உதவும். அவை வீடுபேறாகிய மோக்ஷம் அளிப்பதற்கு உதவாது.  தூய உள்ளம் அடைந்த பின், ஆன்ம விசாரணை மேற்கொண்டு, பரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதை, ஞான மார்க்கத்தாலேயே பெற முடியும். எல்லாக் காரணங்களுக்கும்  மூல காரணமே பரம்பொருள். அதை அறிவது என்பது அதுவாகவே ஆவதுதான். அந்நிலையில் கர்மாக்களே இல்லாமல் போகிறது. இப்பிரபஞ்சமே ஒரு மாயத் தோற்றம் போல் உருக்கொண்டு விடுகிறது ....." இப்படிப் போகிறது அத்வைத சித்தாந்தக் கருத்துக்கள்.  இவற்றை விவரிக்க வேண்டுமெனில் ஒரு வாழ்நாள் போதாது.

பகவத் பாதரின் பால பருவத்தில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகள்.
சிவகுருவும் ஆரியாம்பிகையும், சிவப்பேரூர் திருத்தலத்தில் (இன்றைய திருச்சூர்), பிள்ளை வரம் வேண்டி, ஒரு மண்டல காலம் பஜனம் இருந்து, விருஷாசலேசரின் அருளால் அவரது அம்சாவதாரமாகப் பெற்ற திருக்குழந்தையே  ஆதிசங்கரர். சங்கரன் என்ற பெயருக்கு, என்றும் நிலையான மங்களத்தைச் செய்பவன்  என்று பொருள். அவரே, நம் சனாதன தர்மத்திற்கு நிலையான மங்களத்தைச் செய்யப் போகிறார் என்பதை அறியாமலேயே, அந்தப் பெயரையே தம் தவக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். 

அவரது இளம் வயதில், ஒரு நாள், சிவகுரு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆரியாம்பிகைக்கும் உடல் நிலை சரியில்லை. குழந்தையிடம், 'ஸ்வாமிக்கு ஏதேனும் நிவேதனம் செய்' என்றாள். உலகநாதனே ஒரு வடிவாகி வந்த சிறு குழந்தை யோசித்தது.... ஆம்!!! சிந்தனைக்கு எட்டாத சிவ வடிவம் யோசித்தது... அப்போது, பால் தரும் பணிமகள், ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலை வாங்கிக் கொண்டு, அந்த பிஞ்சுக் குழந்தை, தன் சின்னஞ்சிறு பாதம் எடுத்து வைத்து, 'ஜல், ஜல் ' என கொலுசொலிக்க நடந்து பூஜா கிருகத்தை அடைந்தது.

அப்பா பூஜை செய்யும் போது, பாலசங்கரன் அருகிருப்பது வழக்கம். எனவே, பாலை பூஜை கிருகத்தில் வைத்து விட்டு, மனப்பூர்வமாக, 'பாலை நிவேதனமாக அளிக்கிறேன்' என்று கண்களை மூடிக் கொண்டு, கூறியது.

கண்ணைத் திறந்து பார்த்தால்..காணோம் பால்!!. ஒரு கிண்ணம் பாலும் காணவில்லை. கிண்ணம் காலியாக இருந்தது. குழந்தை பதறிவிட்டது. சிறு உதடு துடிக்க, கண்களில் நீர் மழை கொட்ட, 'அழுது அருளினார்'பகவத் பாதர் . அழுகையினூடே திரும்பவும் கிண்ணத்தைப் பார்த்தால்... அது நிரம்ப, நிரம்ப பால் இருந்தது!!!. ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க இயலவில்லை குழந்தைக்கும். தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பார்த்தது. கிண்ணத்தில் இருந்த பாலை எடுத்துப் பருகி ஆனந்தமடைந்தது.

அன்னை அன்னபூரணியின் திருவிளையாடலே இது.சங்கரருக்கு, ஞானத்தையே பாலாக அளித்து, பின்னாளில், தம் மேன்மையான கவிதா விலாசத்தால், பல வடமொழி நூல்களை அவர் அருளுவதற்கு வித்தூன்றி விட்டாள் அன்னை.  இதையே,  பகவத் பாதர்,  தம் சௌந்தர்யலஹரியில், 

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா

என்று அருளியிருக்கிறார். அக்காலத்தில் தென்னாடெங்கும் திராவிட நாடெனவே அறியப்பட்டது. ஆகவே, 'திராவிட சிசு' என்பது   சங்கரரைத் தான் குறிக்கும் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

மற்றொரு நிகழ்வு நாம் யாவரும் அறிந்ததே.

உபநயனம் ஆகி, குருகுல வாசம் செய்து வந்த ஆதிசங்கரர், பிக்ஷை பெறுவதற்காக, அயாசகனுடைய இல்லத்தின் வாசலில் நின்றார். குருகுல வாசம் செய்வோர், பிக்ஷை எடுத்தே உண்பது சம்பிரதாயம்.

தன் குடும்பத்துக்காக, யாரிடமும் எதையும் யாசிக்காததால் 'அயாசகன்' என்றே பெயர் அந்த இல்லத்தலைவனுக்கு. அதனால் ஏழ்மையின் எல்லையில் நின்றது அந்த இல்லம். பார்ப்போருக்கு எந்த முக்கியத்துவமும் தோன்றாத அந்த இல்லம், பெரும் பாக்கியம் செய்தது என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

அன்றைய தினம் துவாதசி. அயாசகன், நித்யானுஷ்டானங்களை முடிப்பதற்காக சூர்ணா நதிக்கரைக்குச் சென்றிருந்தார். அவன் மனைவி, 'பவதி பிக்ஷாம் தேஹி' என்ற இனிய குரல் கேட்டு, இல்லத்தின் வெளியே வந்தாள். அழகிய சிறு பாலகன். முகத்தில் பிரம்ம தேஜஸ் மிளிர, நெற்றியில் வியர்வை அரும்ப, தன் சிறு வாய் திறந்து தேனினும் இனிய குரலில் பிக்ஷையிடுமாறு கேட்கிறான்.

துடித்துப் போனாள் பாவம். இல்லத்தில் பிக்ஷையிட ஏதும் இல்லை. கணவன் வீடு வந்ததும் ஏகாதசி விரதம் முடித்து துவாதசி பாரணை செய்வதற்காக வைத்திருந்த சிறு நெல்லிக் கனி மட்டும் இருந்தது.

எதையும் யோசிக்கவில்லை அவள். ஓடி வந்து, மிகவும் கூச்சத்துடன், அந்த நெல்லிக்கனியை பிக்ஷா பாத்திரத்தில் இட்டாள். உடனே, அந்த இடத்தில் நிற்காமல், கண்களில் பொங்கும் நீருடன், உள்ளே ஓடினாள்.

நெல்லிக்கனியைப் பார்த்த ஆதிசங்கரருக்கு, அந்த இல்லத்தின்  ஏழ்மை தெளிவாகத் தெரிந்தது. அதைத் தனக்குப் பிக்ஷையாக இட்ட அன்பின் திருவுருவமான அந்தப் பெண்ணின் உள்ளமும் தெரிந்தது. அன்பே சிவம். சிவமே அன்பு. சிவப்பரம்பொருளின் அவதாரமாகவே கருதப்படும் ஆதிசங்கரரின் உள்ளத்தில் கருணை நிரம்பியது. அவரது முதல் கிரந்த மான‌ 'கனகதாரா ஸ்தவம்'  அவரது திருவாயினின்று, பொங்கிப் பிரவகித்துக் கிளம்பியது.

ல‌க்ஷ்மி தேவியைக் குறித்து, அமுதூறும் சொற்களால் பாமாலை பாடி, அம்பிகையின் திருநோக்கு, அந்த ஏழைத் தம்பதியர் மேல் திரும்ப வேண்டும் என மனமுருக வேண்டினார் ஆதிசங்கரர். அதில் ஒரு ஸ்லோகமும் பொருளும் உங்களுக்காக...

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:|

("ஸ்ரீமந் நாராயணரின் பிரியத்துக்குகந்த உன் (ஸ்ரீலக்ஷ்மியின்) கடாக்ஷம் என்ற கார்மேகம்,   உனது கருணை என்ற பூங்காற்றின் துணை கொண்டு,  பல காலம்  செய்த  பாவமாகிய கோடை வெயிலை நீக்கி,  செல்வமாகிய பெரும் மழையை, இந்த   சாதகப் பட்சியின் மேல் பொழியட்டும்".

சாதகப் பட்சி என்பது, கவிஞர்களின் மரபில் கூறப்படும் ஒரு பறவை. அது கழுத்தில் துவாரமுள்ளது. அதனால் நீர் அருந்த இயலாது. வானிலிருந்து பொழியும் மழை நீரே, அதன் கழுத்துத் துவாரத்தின் வழியாகச் சென்று அதன் தாகம் தீர்க்கும்.  அது போல், சாதகப் பட்சியாகிய இவர்களுக்கு, பாவமாகிய  கழுத்துத் துவாரம் பொருள் எனும் நீரை அருந்த விடாமல் தடை செய்தாலும், உன் கருணைப் பூங்காற்றின் துணை கொண்டு, கடைக்கண் நோக்கால் பொழியும் செல்வமழை, இவர்களது ஏழ்மையைத் தீர்க்க வேண்டும் என்பது கருத்து.)

சங்கரரின் திருமுன் திருமகள் தோன்றினாள். அயாசகனுடைய முன் வினைகளை நினைவூட்டினாள்.

அயாசகன், முற்பிறவியில், குசேலனாகப் பிறந்து, ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் செல்வச் செழிப்பை அடைந்தார். அதன் பின், செல்வத்தை சிறிதும் லட்சியம் செய்யாது, கணக்கு வழக்கின்றி செலவு செய்தார். முறையற்ற செலவு காரணமாக, இப்பிறவியில் இந்த நிலை அயாசகனுக்கு.

"பொருளைப் பொருட்படுத்தாமல் மனம் போன போக்கில் செலவு செய்வோரிடம் தாம் தங்குவதில்லை" என ஆதிசங்கரரிடம் திருமகள் திருவாய் மலர்ந்தருளினாள்.


ஆதிசங்கரர், 'தாயே, நீ உன் பக்தர்களின் தலை எழுத்தை, உன் திருப்பாதங்களாலேயே உதைத்து அழித்து விடக் கூடியவளாயிற்றே!!!. மனிதர்களின் கர்ம வினையாகிய மூட்டையை, அவர்கள் அன்பு வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விடுமே!!!. இருந்த ஒரு நெல்லிக்கனியையும் எனக்குப் பிக்ஷையிட்ட இவளது அன்புக்காக, உன் கருணை ததும்பும் கடைக்கண் நோக்கு, இவர்கள் மேல் படலாகாதா' என்று வேண்டினார்.

திருமகள் உள்ளம் குளிர்ந்தது. ஜீவர்களின் மேல் பாயும் தம் பெருங்கருணை வெள்ளமென, பொன் நெல்லிக்கனிகளை அந்த இல்லத்தின் மேல் பொழிந்தாள் ஹரிப்ரியை.

இன்றும் அந்த இல்லம், 'ஸ்வர்ணத்து மனை' என்ற பெயரில் காலடி க்ஷேத்திரத்தில் இருந்து வருகிறது.

செல்வத்துக்குத் தலைவியான, லக்ஷ்மி தேவியை குறித்த  அற்புதத் துதி இது. தினமும் இதைப் பாராயணம் செய்வோருக்கு,  திருமகளின் அருளால், பொருட் தட்டுப்பாடு என்பதே ஏற்படாது.  இக்கலியுகத்தில் கண்கண்ட உண்மை இது.

ஆதிசங்கரரின் இவ்வுலக வாழ்வு, நமக்கு அரும்பெரும் உண்மைகளை உணர்த்த வல்லது. அவற்றை விவரிப்பது எளிதான செயல் அல்ல. பிறிதொரு சந்தர்ப்பத்தில், குருவருள் இருப்பின், ஆதிசங்கரரின் திவ்ய சரிதத்தில் இருக்கும் மேலும் சில நிகழ்வுகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதிசங்கரர் அவதரித்த திருநாளான இன்று, அவரைப் போற்றி, அவரது பெருங்கருணை நம் உள்ளங்களில் ஞான ஜோதி ஏற்றிடப் பிரார்த்திப்போம்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செஞ்சாச்சு....ஆமாம், புதுப் பெயர் நன்றாகத்தானே இருந்தது....

      நீக்கு
  2. Adi Sankara and Ramanuja ( both are Maha Guru for Saivites and Vaishnavaite, both born in same Star and in the Same Month, Thiruvathirai Star In Chitra Month. What a coincidence ?

    பதிலளிநீக்கு
  3. Adi Sankara Bhagwathpatha and Sri Ramanuja both are born in the same Tamil Month of Chithirai and Same Star Thiruvathirai, What a Coincidence , You can right about Sri Ramanujar also

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி. நிச்சயம் வெகு விரைவில் தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..