நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 24 மார்ச், 2013

THE COLOURFUL FESTIVAL, HOLI....வண்ணத் திருவிழா......


ஒவ்வொரு வருடமும், பருவ காலங்களில் ஏற்படும் மாற்றத்தை ஒட்டி சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குளிர் காலம் முடிந்து, கோடை துவங்குவதை ஒட்டி, 'வசந்தோற்சவம்' கொண்டாடுவது மிகப் பழங்காலத்தில் இருந்தே நம் நாட்டில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இன்றும் நம் நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பெயர்களில் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

பல நிறப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவிக் களிக்கும் ஹோலிப் பண்டிகையாக‌ வடஇந்தியாவிலும், ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காம தகனப் பண்டிகையாகவும் கொண்டாடப்படும் இந்த வண்ணத் திருவிழா,பெரும்பாலும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தை ஒட்டியே கொண்டாடப்படுகிறது.

ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி சொல்லப்படும் புராணக் கதை பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்ததே.

அசுரனான ஹிரண்யகசிபுவின் மகன்  பிரகலாதன், மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஸ்ரீ வைஷ்ணவ மரபு 'பிரகலாதாழ்வார்' என்றே பிரகலாதனைப் போற்றித் துதிக்கிறது. அசுரனான ஹிரண்யகசிபுவோ, மகனின் விஷ்ணு பக்தியை வெறுத்தான். எத்தனை சொல்லியும், உத்தமனான பிரகலாதன் பத்தருக்கருளும் எம்பெருமான் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை.

நாளடைவில், ஹிரண்ய கசிபுவின் வெறுப்பு மைந்தனிடமே திரும்பியது. பெற்ற மகனையே கொல்லத் துணிந்தான். வெவ்வேறு விதமாக கொலை முயற்சிகள் செய்தும், பிரகலாதனின் எட்டெழுத்து மந்திர உச்சாடனம், அவனை இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றிய வண்ணம் இருந்தது.  ஹிரண்ய கசிபு, தன் கடைசி முயற்சியாக, தன் சகோதரி 'ஹோலிகா' வின் உதவியை நாடினான்.

அசுரப் பெண்ணான ஹோலிகா, ஓர் அற்புத வரம் பெற்றிருந்தாள். பிரம்ம தேவனின் அருளால் பெற்ற ஒரு புதுமையான சால்வை அவள் வசம் இருந்தது.

அதை அவள் போர்த்திக் கொண்டால், அவளுக்குத் தீயினால் தீங்கு எதுவும் வாராது என்பதே அந்த சால்வையின் சிறப்பு. 'கொழுந்து விட்டெரியும் தீயில் அவளை அமர்த்தி அவள் மடியில் பிரகலாதனையும் அமர்த்தி விட்டால்,  பிரகலாதன் பஸ்மமாகி விடுவான்...' இப்படி நினைத்தான் அசுரத் தந்தை. எத்தனை சிறந்தது அத்தை உறவென்பதை மறந்து, அண்ணனுக்குத் தங்கையாக மட்டுமே இருக்க ஹோலிகாவும் ஒப்புக்கொண்டாள்!!.

பிரம்மன் அளித்த சால்வை தன்னைக் காக்கும் என்று நம்பினாள். பிரம்மனின் தந்தையான ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய மந்திரம், நம்பினோரைக் காக்கும் மாபெரும் கவசம் என்பதை துளியும் அறியாமல், தன் அழிவுக்குத் தானே விதையிட்டுக் கொண்டாள் ஹோலிகா.

ஆளுயரத் தீ வளர்த்து அதனூடே அமர்ந்தாள் ஹோலிகா, ஆசை ஆசையாய் பிரகலாதனை அழைத்தாள். அத்தை அழைக்கிறாளே என்று அருமை மருமகனும் வந்து அவள் மடிமேல் அமர்ந்தான்.  வெஞ்சுடரின் வெம்மை, பக்தியின் சுடர் விளக்கை என்ன செய்யும்?. திடீரென, சுழன்றடித்தது காற்று. ஹோலிகாவின் மேல் இருந்த சால்வை நழுவியது. பக்த சிரோமணிக்குப் பொன்னாடையாய் மாறி அலங்கரித்தது. பளபளக்கும் தீ நாக்குகள், ஹோலிகாவை உள்வாங்கி உண்டன.

'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தைச் சிக்கெனப் பிடித்த பக்தருள் உத்தமன் பிரகலாதன், சுடச் சுட ஒளிரும் பசும் பொன் போல், தீ நடுவே தேஜஸூடன் வீற்றிருந்தான்.

'ஹோலிகா தகனம்' நடந்து நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாகவே 'ஹோலிப் பண்டிகை' கொண்டாடப்படுகிறது. நாம் தென்னாட்டில் செய்யும் சொக்கப்பனை வழிபாடு போல், ஹோலி தினத்திற்கு முதல் நாள் இரவில் பெரிய அளவில் தீ வளர்த்து, அதனுள், பசுஞ்சாண உருண்டைகளை எறிந்து தீமை அழிந்ததைக் கொண்டாடுவர். ஹோலி தினம், வண்ணங்களின் திருவிழா. எத்தனை எத்தனை நிறங்கள் உண்டோ அத்தனை நிறங்களும் எங்கெங்கு நோக்கினும் தென்படும். வண்ணப் பொடி தூவி வாழ்த்தும் விளையாட்டு, இப்போது காலமாற்றத்தால் தேசமெங்குமே கொண்டாடப்படுகிறது.


ஆனால் முற்காலத்தில், இப்படி வண்ணப் பொடி தூவி விளையாடும் வழக்கம் ஏற்பட்டதில் ஒரு காரணம் இருக்கிறது. இந்தப் பண்டிகை கொண்டாடும் கால கட்டத்தில்,  சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாறுதல்களால், காய்ச்சல் போன்ற நோய்கள் வரக்கூடும்.   இயற்கை வண்ணங்களான, சந்தனப் பொடி, வேம்புப் பொடி, மஞ்சள், இலைகள், பூக்கள் ஆகியவற்றை காய வைத்து அரைத்து எடுக்கப்பட்ட பொடிகளையே பயன்படுத்துவது அக்கால வழக்கம். இவை யாவும் மருத்துவ குணங்கள் கொண்டவை. நோய் தீர்க்கும் சக்தி படைத்தவை.  இன்றோ செயற்கை வண்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இப்பண்டிகை வடஇந்தியாவின் சில பகுதிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் 'ஹோலிகா' என்ற அரக்கியை அழித்ததைச் சிறப்பிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.

காமன் பண்டிகை:
'காமன்'  என்னும் பெயர் காதற்கடவுளாக அறியப்படும் மன்மதனைக் குறிக்கும். வசந்தன்,அனங்கன்,அன்பன் என்னும் பல்வேறு பெயர்களால் அறியப்படும் மன்மதன், இரதி என்னும் தன் துணையோடு சேர்ந்து, இவ்வுலக உயிர்களின் பிறப்புக்குக் காரணமான காதலுணர்வை ஏற்படுத்தி, உலக இயக்கத்திற்குத் துணை புரிகிறான்.

காம தேவன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு, பின் உயிர்ப்பிக்கப்பட்ட புராணத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

சூரபன்மனால் கொடுந்துயரம் அனுபவித்தன‌ர் இந்திராதி தேவர்கள்.  தேவர்களின் தலைவனான தேவேந்திரன், இந்த இன்னல் நீங்க வேண்டி சிவனாரை குறித்துத் தவம் செய்தார். அத்தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், தேவேந்திரன் முன் தோன்றி, தம் அம்சமான சிவ குமாரனால் சூரன் வதம் செய்யப்படுவான் என அருளினார்.

அதன் பின் சில காலம் கழிந்தது. முற்பிறவியில் தாக்ஷாயணியாகப் பிறந்து, தக்ஷனின் யாக குண்டத்தில் வீழ்ந்து மடிந்த சக்தி தேவி, இமவான் பெற்ற வரத்தின் பலனாக,  'பார்வதி'   என்ற திருநாமத்துடன் இமவான் மகளாகப் பிறந்து, இறைவனை மணம் புரிந்து கொள்ள வேண்டி தவம் இயற்றி வந்தார். சிவனார், திருக்கயிலாயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக மோன நிலையில் வீற்றிருந்து அருளினார்.

சிவனாரின் மோனத் தவம் கலைந்தாலே விரைவில் சிவ பார்வதி திருமணம் நடைபெறும், சிவகுமாரனான எம் பெருமான் முருகவேள் அவதரித்தருளுவார் என்பதால்,  அதற்கு ஆவன செய்ய வேண்டி, மன்மதனை இந்திராதி தேவர்கள், சிவனாரிடம் அனுப்பத் திட்டமிட்டனர். மன்மதன் முதலில் மறுத்தான். ஆனால் அதன் பின், தேவர்களின் கட்டாயத்துக்காக இசைந்தான். திருக்கயிலை சென்று, மோனத் தவத்தில் மூழ்கி இருக்கும் எம்பெருமானின் மேல் மலர்கணையை எய்தான்.

அண்டமெல்லாம் நடுங்க, எம்பெருமானின் நெற்றிக் கண் திறந்தது. சிவனாரின் கோபாக்கினி, நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்டது. காமன் எரிந்து சாம்பலானான்.

தன் கணவனான மன்மதனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு, இரதி தேவி பதறி அழுதாள்.  தேவர்களும், மன்மதனின் மனைவியான இரதி தேவியும், சிவனாரை வணங்கித் தொழுது, மன்னிப்பு வேண்டினர். மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்கக் கோரினர். சிவனாரும் அதற்கு இசைந்து, தம் திருமண நன்னாளில், மன்மதனை உயிர்ப்பிப்பதாக வாக்களித்தார்.

அதன்படியே, உமா தேவியாரை இறைவன் மணந்த நன்னாளில், இரதி, உலக உயிர்கள் அனைத்தையும் பெற்ற உமாபதியான இறைவன் முன் விழுந்து பணிந்தாள்.
தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி
இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து
மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல்
பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள்.(கந்த புராணம்)

இறைவனும் காமனை உயிர்ப்பித்து, 'இரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் அனங்கனாக (அங்கம் இல்லாதவனாக)இருப்பாய்' என அருளினார். இவ்வாறு, காமதேவன் தகனம் நடந்த திருநாளே காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. இதை பத்து முதல் பதினாறு நாட்கள் கொண்ட திருவிழாவாகச் சிறப்பித்து, நிறைவு நாளன்று, காமதேவன் உயிர் பெற்ற திருநாளைக் கொண்டாடி மகிழ்வது பழங்கால வழக்கம்.

காமன் பண்டிகை, பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்று. பழந்தமிழ் நூல்கள் யாவும் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன். 

”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே”  என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.

இளங்கோவடிகள், இப்பண்டிகை பற்றி சிலம்பில் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். ஊர்காண் காதையில் காமவேள் என்னும் மன்மதனைச் சிறப்பிக்கும் விழா 

வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” என்று குறிக்கப்படுகிறது.

காமன் வழிபாடு, பாவை நோன்பின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. தான் விரும்பும் துணையை அடையவும், கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்து விழாவாகவும் காமன் பண்டிகை இருந்ததை, நாச்சியார் திருமொழியின் மூலம் அறியலாம். ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, காமன் பண்டிகை கொண்டாடும் முறையை விரிவாகத் தருகிறது.
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண்டலமிட்டுமாசி முன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்க தேவா
உய்யவு மாங்கொலோ வென்று
சொல்லி உன்னையு மும்பியையும்
தொழுதேன் வெய்யதோர் தழலுழிழ்
சக்கரக்கை வேங்கட வற்கென்னை
விதிக்கிற்றியே.......’  என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், தம் இல்லத்தை மெழுகித் தூய்மை செய்து, புது மணல் பரப்பி கோலமிட்டு, அனங்க தேவனான காமனை வழிபாடு செய்து, தம்மை திருவேங்கடப்பெருமானுக்கு வாழ்க்கைப்பட உதவுமாறு வேண்டுகிறார்.

கிட்டத்தட்ட மறந்து, மறைந்து விட்ட இப்பண்டிகை, இப்போது, பழங்குடியினரில் சில இனத்தினராலும், இலங்கையிலும் மட்டுமே இப்போது கொண்டாடப்படுகிறது.

பழங்குடியினரில் சில இனத்தவர், பத்து நாட்கள், காமன் கதை படித்து, இரவெல்லாம் 'காமன் கூத்து ' எனும் நாடகம் ஏற்பாடு செய்து நடத்தி, பத்தாம் நாள் இரவு (அநேகமாக அது பௌர்ணமி தினமாக இருக்கும்), காம தகனம் நடைபெற்றதை ஒட்டி, காமதேவன் உருவ பொம்மையை எரித்து விட்டு, அன்றிலிருந்து மூன்றாம் நாள் அதிகாலை, பச்சை மரக் கன்று ஒன்றை, காம தேவன் உருவ பொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்பெற்றதற்கு அடையாளமாக நட்டு வைத்து வழிபடுகிறார்கள். இது போல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு  விதமாகக் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கணவன், மனைவி ஒற்றுமை அருகி வரும் இப்போதைய கால கட்டத்தில், காமன் பண்டிகை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும். அன்றைய தினம், உமையோடு கூடிய சிவனாரின் திருவுருவப்படத்திற்கு வழிபாடு செய்து,  அதன் பின், கரும்பிலோ அல்லது மன்மதனின் உருவப்படம் இருந்தால் அந்தப் படத்திலோ, காம தேவனை ஆவாஹனம் செய்து பூஜிப்பது கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்த உதவும்.


இந்த வருடம்,ஸ்ரீராமர், -சீதை, திருமுருகன் -தெய்வானை, ஸ்ரீஆண்டாள் -திருவரங்கநாதர் முதலான‌ தெய்வத் திருமணங்கள் பல நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளை ஒட்டியே காமன் பண்டிகை வருகிறது. திருக்கல்யாண உற்சவங்களில் பங்கு கொள்வதும், அச்சமயம், இறை மூர்த்தங்களுக்கு கல்யாண மாலை சாற்றி வழிபாடு செய்வதும் மிகச் சிறந்த புண்ணியப் பலன்களைத் தரும். குறிப்பாக, திருமணம் கை கூட வேண்டுவோரும், மனதுக்கு இசைந்த வாழ்க்கைத் துணை வேண்டுவோரும் நிச்சயம் இந்த வழிபாடு செய்ய வேண்டும். அதனோடு கூட, இல்லத்திலும், இறைவழிபாடு செய்தால், நிச்சயமாக‌ வேண்டிய வரங்களெல்லாம் பெறலாம்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

 1. அம்மன்பாட்டு மூலம் உங்கள் (அன்பு)வலையில் சிக்கினேன் .

  பதிவு அருமை !நம்ம பக்கத்தில் ஹோலியைப் பற்றி அதிக உத்சாஹம் இல்லை என்ற எனது கருத்தை மாற்றிக்கொண்டேன் இன்று !

  மனமார்ந்த ஹோலி வாழ்த்துக்கள் !

  நேரமிருக்கும்போது எனது போனவருட ஹோலி பதிவில் கலாவின் குரலில் பாட்டைக்கேட்டு ரசிக்கவும் :

  http://kannansongs.blogspot.in/2012/03/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க!!வாங்க!!. தங்கள் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களுக்கும் என் மனமார்ந்த ஹோலி வாழ்த்துக்கள். தங்கள் பாராட்டுக்களால் மனம் மகிழ்ந்தேன். கட்டாயம் பாடலைக் கேட்டு விட்டு தங்களுக்கு எழுதுகிறேன். என் எழுத்துக்களை மேம்படுத்த தங்கள் மேலான ஆலோசனைகளை வேண்டுகிறேன். மிக்க‌ நன்றி.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..