முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
(ஸ்ரீஅருணகிரிநாதர், திருப்புகழ்)
தை மாதத்தில் வரும் விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று தை கிருத்திகை. ஞானஸ்வரூபமான எம்பெருமான் முருகனின் திருஅவதாரம் நிகழ்ந்தபொழுது, முருகப்பெருமானைப் போற்றி வளர்த்த ரிஷி பத்தினிகள் அறுவரே கார்த்திகைப் பெண்கள். அவர்கள் அறுவரும், முருகனருளால் வானமண்டலத்தில், நட்சத்திரங்களாக அருளுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, திருமுருகனை வழிபாடு செய்வோர், முருகனருளால், வேண்டியவை எல்லாம் கிடைக்கப்பெறுவது கண்கூடு.
இந்தப் பதிவில், திருமிகு கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணத்தில், கந்தப் பெருமானின் திருஅவதாரப்படலம் மற்றும் சரவணப்படலத்திலிருந்து சில செய்யுள்களை, அவற்றின் பொருளுடன் பார்க்கலாம்.
கந்த புராணம், திருஅவதாரப் படலம்.
தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான்
உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ.
சரவணப்பொய்கையில் உள்ள மிகுந்த தளங்கள் (இதழ்கள்) உள்ள தாமரை மலர் ஒன்றில், இந்த உலகம் யாவையும் காக்கும் பரம்பொருளான முருகப்பெருமான், தமக்கு நிகரென்று எவருமில்லாத குமரமூர்த்தி, தம் உள்ளம் நிறைந்த கருணையால், சிறு குழந்தையாகி இனிது வீற்றிருந்தார்.
மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல் நோக்கி
ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங்
கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார்.
நீர் நிரம்பித் திகழும் சரவணப்பொய்கையில், குழந்தையாகத் தோன்றித் தன் முதல் திருவிளையாடலை நிகழ்த்தியருளிய(இதன் பின் பற்பல திருவிளையாடல்களை முருகப்பெருமான் நிகழ்த்தி அருளப்போகிறார் என்பதால் இதை முதற்புரியாடல் என்று குறிக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள்) முருகப்பெருமானை கண்டதால் மகிழ்வுற்ற உள்ளத்துடன், திருமால் முதலான அமரர்கள் யாவரும், அவரை வளர்ப்பதற்காக, கார்த்திகைப் பெண்களை அழைத்தனர்.
வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத்
தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப்
போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார்.
திருமால் முதலான அமரர்கள் யாவரும், கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'சரவணப்பொய்கையில், ஆறுமுகத்துடன் உதித்தருளிய சண்முகப்பெருமானை, பாலூட்டி சீராட்டி வளர்த்து வருவீர்களாக'! என்று கட்டளையிட்டனர்.
நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே
அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்.
கார்த்திகைப் பெண்கள் அறுவரும், சரவணப் பொய்கையை அடைந்து, சண்முகப்பெருமானை வேண்ட, அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும் முருகப்பெருமான் அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்டார்.
ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறுவேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை
ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து
மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான்.
ஆறு கார்த்திகைப் பெண்களும் ஆறு சிறு குழந்தைகளாக உருக்கொண்ட ஆறுமுகப்பெருமானை ஆளுக்கொருவராக எடுத்து, வாரியணைத்து மகிழ்ந்து, பாலூட்டினர். முருகப்பெருமானும், தம் மாறாத அருட்திறனால், முறுவல் செய்து, பாலுக்காக வருந்தி அழும் குழந்தை போல், பாலருந்தினார்.
அழலெனும் மீன வர்க்கத் தறுவருங் குமரன் ஆடல்
முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக்
குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி
வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால்.
கார்த்திகைப் பெண்கள் அறுவரும், குமரப்பெருமான் குழந்தையாகப் புரிந்த திருவிளையாடல்களை, முழுவதும் பார்த்து பார்த்து, ஆனந்தித்து, அந்த அற்புதங்களில் திளைத்து, ஆறு உருக்கொண்ட பெருமானை குழந்தைகளென்று சீராட்டி வளர்த்தாராயினும், மனத்துள், பயபக்தியுடன் வழிபடத்தகுந்த பரம்பொருள் என்று உணர்ந்து அன்பால் போற்றினர்.
இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்.
சரவணப் பொய்கையில், தனது குழந்தையான முருகப்பெருமானின் ஆறு உருவங்களையும், தம் இருகரங்களால் உமாதேவியார் அன்புடன் எடுத்து சேர்த்து அணைத்தார். அவ்வாறு செய்து, திருமுகங்கள் ஆறும் பன்னிரு தோள்களும் சேர்ந்த ஒரு உருவமாக, கந்தப்பெருமானாக, ஒருங்கு செய்தருளினார்.
கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும்
நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்.
சிவனாரும் உமாதேவியாரும் கார்த்திகைப் பெண்களை நோக்கி, 'கந்தனை நீங்கள் போற்றி வளர்த்த காரணத்தால், முருகப்பெருமானுக்கு, கார்த்திகேயன் என்னும் திருநாமம் ஏற்படும்' என்று மகிழ்ந்து அருளினர். மேலும், சிவனார் கார்த்திகைப் பெண்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்து, 'உங்கள் நட்சத்திரம் வரும் நன்னாளில், விரதமிருந்து, முருகப்பெருமானை வேண்டி வழிபடுவோருக்கு வேண்டும் வரமெல்லாம் வழங்கி முக்தியும் அருளுவோம்' என்று ஆசி கூறினார்.
இத்துணை சிறப்புமிக்க கார்த்திகை நட்சத்திர தினத்தில், முருகபக்தர்கள் யாவரும், முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுகின்றனர். கிருத்திகை நட்சத்திர தினங்களில் ஆடி கிருத்திகை, தை கிருத்திகை ஆகிய இரண்டும் சிறப்பு மிக்கவை. தக்ஷிணாயனத் துவக்கமான, ஆடி மாதத்தில் வருவதால், ஆடி கிருத்திகையும், உத்தராயணத் துவக்கமான தை மாதத்தில் வருவதால் தை கிருத்திகையும் சிறப்புப் பெறுகின்றன. ஒரு வருடத்தில், ஆடி கிருத்திகை துவங்கி, தை கிருத்திகை வரை மாதந்தோறும் கிருத்திகை விரதமிருந்து வழிபடுவோருக்கு தீராத் துயர் தீரும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதம் இருக்கும் முறையிலேயே கார்த்திகை விரதமும் இருக்க வேண்டும். கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திர தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். பின், கார்த்திகை நட்சத்திர தினம் முழுவதும் உபவாசமிருந்து, மறு நாள் ரோகிணி நட்சத்திரத்தன்று அதிகாலையில் பாரணை செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்ய இயலாதோர், கார்த்திகை நட்சத்திர தினத்தன்று, முழு உபவாசம் இருந்து, கந்தப்பெருமானின் துதிகளை பக்தியுடன் பாடி, பூஜை செய்து, மாலையில், திருக்கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வந்து ஏதேனும் எளிய உணவு அருந்தலாம். உணவில் உப்பில்லாமல் இருப்பது சிறந்தது. அன்று முழுவதும் கோபப்படாமல், அதிகம் பேசாமல் உபவாசம் இருப்பது சிறந்தது.
கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானை வழிபட உதவும், ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்.
வேல் முருகன் கோலோச்சும் திருத்தலங்கள் தோறும் தை கிருத்திகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெப்பத் திருவிழாக்கள், தேர்ப்பவனிகள் முதலியன சிறப்புற நடத்தப்படுகின்றன. பக்தர் கூட்டம் கொண்டாடிப் போற்றும் சிங்கார வேலன், அருள்மழை பொழிந்து, நம் எல்லோரையும் வாழ்வித்து வழி நடத்த வேண்டுவோம்.
கிருத்திகை விரதமிருந்து, எல்லாம் வல்ல கந்தப்பெருமானின் அருள் பெற்று,
வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
தைமாத கிருத்திகை பற்றி சிறப்பான தகவல்களைப்பகிர்ந்திருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்..
/////இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குதைமாத கிருத்திகை பற்றி சிறப்பான தகவல்களைப்பகிர்ந்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்/////
தாங்கள் தரும் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி.