நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

SANKYA YOGA..PART . 2, கபிலமாமுனிவர் அருளிய 'ஸாங்கிய யோகம்'...பகுதி 2.


சென்ற பதிவில், கபிலர் தன் தாயான தேவஹூதிக்குச் செய்த உபதேசங்களின் முதல் பகுதியைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கபிலர் மேலும் கீழ்வருமாறு கூறலாயினார்.

நீரில் பிரதிபலிக்கும் சூரியன், நீரின் குணங்களால் பாதிக்கப்படாதது போல், புருஷன்(ஆத்மா) என்று அறியப்பட்டது,  பிரகிருதியின் அதாவது மாயையின் குணங்களால் பாதிக்கப்படுவதில்லை.

ராஜகுமாரியான தாயே, எந்த யோகவிதிகளைக் கைக்கொண்டால், மனம் நல்வழியில் செல்லுமோ, அந்த விதிகளைக் கூறுகிறேன், கேட்பாயாக.

யோக லக்ஷணங்கள்
ஒருவன், தன் தர்மத்தை அதாவது தன்னுடைய கடமைகள் எதுவோ அதைக் கட்டாயம் அனுசரிக்க வேண்டும். தர்மமில்லாததைச் செய்யக் கூடாது. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். சிறந்த ஞானிகளை இகழாது, அவர்களைப் போற்றி, பூஜிக்க வேண்டும்.

விஷய சுகங்களைத் தேடாதிருத்தல், மோக்ஷமடைவதில் பற்றுதலுடனிருத்தல், மிதமாக உணவருந்துதல், இடையூறுகள் இல்லாத இடங்களில் வசித்தல், அகிம்சை, கள்ளமின்மை, அவசியமான அளவில் மட்டுமே பிறரது உதவியை ஏற்பது, பிரம்மச்சரியம், தவம், தூய்மை, வேதமோதுதல், புருஷோத்தமனான இறைவனைப் பூஜிப்பது, மௌனம், ஒரு ஆசனத்தில் ஸ்திரமாக அமரும் பயிற்சியில் வெற்றியடைதல், மூச்சுப்பயிற்சி (பிராணவாயுவை ஜயித்தல்), ஐம்புலன்களை அடக்கும் பயிற்சியில் வெற்றியடைதல், பகவானின் லீலைகளை தியானித்து அதன் மூலம் ஆனந்தம் அடைதல் ஆகியவையே யோக லக்ஷணங்கள்.

இறைவனைத் தியானிக்கும் முறை:
மிக பிரகாசமான தாமரை போன்ற முகம், தாமரையிதழின் உட்புறம் போன்ற சிவந்த கண்கள், நீலமேக சியாமள வண்ண திருமேனி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய கைகள், மஞ்சள் வண்ணப் பட்டாடை, திருமார்பில் துலங்கும் ஸ்ரீவத்ஸம், திருக்கழுத்தில் தொங்கும் கௌஸ்துப மணியின் ஒளி, வனமாலை, முத்துமாலை, கிரீடம், தோள்வளை, கங்கணம், நூபுரம், இடுப்பில் தங்க அரைநாண் ஆகியவற்றுடன், அடியாருக்கு இனியவரும், கண்ணுக்கு மிக அழகிய தோற்றம் கொண்டவருமாக, இறைவனை தியானிக்க வேண்டும்.
மனதை, பகவானின் ஒவ்வொரு அங்கத்திலும், சித்தத்தை லயிக்கச் செய்து தியானிக்க வேண்டும்.

பின், பகவானின் திருவடித்தாமரைகளைத் தியானிக்க வேண்டும். திருவடிகளை, வஜ்ரம், அங்குசம்,கொடி, தாமரை முதலிய அடையாளங்களுடன் இருப்பதாகவும், சிவந்த ஒளி பொருந்திய நகங்களுடன் உடையதாகவும் தியானிக்க வேண்டும்.

பிறகு, மனக்கண்ணால், படிப்படியாக, பகவானின் ஒவ்வொரு அங்கத்தையும், கணுக்கால், முழங்கால் இப்படியாக உற்று நோக்க வேண்டும். பகவானின் அழகிய மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்கள் விளங்கும் புன்முறுவலைத் தியானிக்க வேண்டும் இவ்வாறு புன்முறுவலைத் தியானித்தல் தியானத்தில் எல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த தியானத்தினால், பக்தி மேலிட்டு, மனம் மெதுவாக அடக்கப்படுகிறது. மனமானது, பகவான் ஹரியிடம் அன்பு வளரப்பெற்று, பக்திமேலீட்டினால் உருகிக் கசிந்து,  இறைவனை நினைத்த மாத்திரத்தில் பொங்கி வரும் ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகிக்கப்பட்டு, பரிபக்குவ நிலையை அடைகிறது.

இந்த நிலையை    அடைந்த மனிதன் தன்னுடையதாகப் பிறர் கூறும் சரீரத்தை உணர்வதில்லை. அவன் இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை எய்தி  விடுகிறான்.

தேகம் பூர்வ கர்ம வசத்தால் ஏற்படுவது. பிராரப்த கர்மம் இருக்கும்வரை அது புலன்களுடன் கூடி இருக்கும். ஆனால் யோகத்தில் உயர்ந்த சமாதி நிலையை அடைந்தவன், தேகத்தையும் பிரபஞ்சத்தையும் காண்பதில்லை(அதாவது பொருட்படுத்துவதில்லை). தூக்கத்தில் காணும் கனவை, விழித்தபின் நிஜமல்ல என்று உணருவதைப் போல, யோகத்தில் உயர் நிலையை அடைந்தவர், உலகைக் கனவென்று கருதுவர்.

ஒரு மனிதனை அவன் புத்திரர்களிடமிருந்தும், அவன் சேர்த்த செல்வத்திலிருந்தும் வேறானவன் என்று எப்படிக் கருதுகிறோமோ, அதைப் போல், தேகத்திலிருந்து, அதிலுறையும் புருஷன் வேறானவன்.

அக்னியை வைத்தே, கொள்ளிக்கட்டை, புகை போன்றவை உண்டாகிறது. ஆனால், அந்தக் கொள்ளி, புகை, பொறி முதலியவற்றிலிருந்து அக்னி வேறுபட்டது. அதாவது கொள்ளிக் கட்டையே அக்னியில்லை. அது போல், த்ரஷ்டா என்றும் பிரம்மம் என்றும் பகவான் என்றும் சொல்லப்பட்ட ஆத்மா, பஞ்ச பூதம், இந்திரியம், அந்தக் கரணங்கள் ஆகியவற்றிலிருந்து  வேறுபட்டது.

எப்படி, நெருப்பு என்பது ஒன்றாயிருந்தாலும், அது பற்றி எரியும் ஆதாரங்களைக் கொண்டு, கட்டை என்றும் பொறி என்றும் இன்னும் பல வடிவங்களாயும் அறியப்படுவது போல் ஆத்மாவும்(புருஷன்) பிரகிருதியில் அதன் குணங்களை ஒட்டி வெவ்வேறாக அறியப்படுகிறது.

இவ்வாறு பகவானைத் தியானிப்பவன், பகவத் கிருபையால், மாயையை (பிரகிருதியை) வென்று, தன் (ஆன்ம)ஸ்வரூபத்தில் நிலை பெறுகிறான்.

இவ்வாறு கபிலர் உபதேசித்ததும், தேவஹூதி, பக்தியோகத்தினை தனக்கு உபதேசிக்குமாறு வேண்டுகிறாள். கபிலர், தான் இறைவன் என்பதை தேவஹூதி அறிந்தவளானதினால், பின் வருமாறு பக்தியோகத்தைப் பற்றி உபதேசிக்கலாயினார்.

ஸ்ரீ பகவான் கூறிய பக்தி யோகம்:
 • பக்தியோகமானது, மனிதர்களின் இயற்கை குணங்களைப் பொறுத்தும், அவர்கள் பின்பற்றும் மார்க்கங்களைப் பொறுத்தும், வேறுபடுகிறது.
 • கோபம், பேதபுத்தி ஆகியவை உள்ள மனிதன், 'தான் பக்திமான்' என்று பிறரால் புகழப்படுவதற்காகவோ (டம்பம்), அல்லது பிறர் செய்யும் வழிபாட்டைக் கண்டு அதனால் எழுந்த பொறாமையின் காரணமாகவோ, என்னை(இறைவனை) வழிபடுவானேயானால் அவன் 'தாமஸன்' என்று அறியப்படுவான்.
Sri Padmanabhaswamy Temple Mahavishnu Idol 32 KG
 • உயிரினங்கள் அனைத்திலும் உறைவது நானே என்று அறியாமல் வித்தியாசம் பாராட்டும் பேதபுத்தியுள்ள ஒருவன், உலக சுகங்களையோ, செல்வத்தையோ, வேண்டி, என்னைப் பூஜிப்பானேயானால், அவன் 'ராஜஸன்'.
 • இவ்விதம் பேதபுத்தியில்லாமல், தன் பாபத்தைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடனோ, தான் செய்யும் பூஜையை, இறையர்ப்பணமாகச் செய்பவன் எவனோ, அல்லது இறைவனைப் பூஜிக்க வேண்டியது தன் கடமையென்ற எண்ணத்துடனோ, பூஜிப்பவன் எவனோ அவனே 'ஸாத்துவிகன்'.
பித்ரு ஸூர கணயாஜீ தார்மிகோயோ க்ருஹஸ்த:
ஸ ச நிபததி காலே, தக்ஷிணாத் வோபகாமீ
மயி நிஹிதம காமம் கர்ம தூதக்பதார்த்தம்
கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: (ஸ்ரீமந் நாரயணீயம்)

இதன் பொருள்:

ஹே குருவாயூரப்பா!!, "பித்ருக்களையும், தேவர்களையும் பூஜித்துக் கொண்டு, தனது தர்மங்களைச் செய்து கொண்டு, இல்லறத்தில் உள்ளவன், இறந்த பின்னர், தென் திசையில் சென்றுவிடுகிறான். தன் புண்ணியங்கள் தீர்ந்தவுடன், மீண்டும் இந்தப் பூமியில் வந்து பிறக்கிறான். ஆனால், என்னிடம் அர்ப்பணமாகச் செய்யப்பட்ட, பற்றற்ற கர்மம் உடையவன்,  இறந்தவுடன் வட திசை நோக்கிச் சென்று என்னை வந்தடைகிறான். அவன் மீண்டும் பிறப்பதில்லை" இவ்வாறு, நீ உன் தாயான தேவஹூதிக்கு உபதேசித்தாய் அல்லவா!!!.
 • இறைவனது குணங்களைக் கேட்ட மாத்திரத்தில், கடலை நோக்கிக் கங்கையானது ஓடுவதைப் போல், மனமானது இறைவனை நோக்கி ஓடுவதாயும், காரணமில்லாததாயும் இயற்கையாக உள்ளத்தில் இருந்து எழுவதாயும், வேறு எந்த எதிர்பார்ப்புமில்லாததாயும், எந்த பக்தி புருஷோத்தமனிடத்து ஒருவனுக்கு ஏற்படுகிறதோ, அந்த பக்தி, நிர்க்குண பக்தியோகத்தின் லக்ஷணம் ஆகும்.
மம குண கண லீலா ஆகர்ணநை: கீர்த்தநாத்யை:
மயி ஸுரஸரி தோக ப்ரக்ய சித்தாநு வ்ருத்தி:
பவதி பரம பக்தி: ஸாஹி ம்ருத்யோ: விஜேத்ரீ
கபிலதநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யாகதீ: (ஸ்ரீமந் நாரயணீயம்)

இதன் பொருள்:
ஹே குருவாயூரப்பா, "பரமாத்மாவான, என் திருக்கல்யாண குணங்களையும், எனது லீலைகள் நிறைந்த சரிதங்களையும், என் திருநாமங்களையும், எப்போதும் தியானித்து வந்தால் அதுவே போதுமானது. கங்கையில் பெருகும் வெள்ளம் தடையில்லாமல் ஓடுவது போல், அவ்வாறு செய்யப்படும் தியானம், என் மீது தடையற்ற பக்தியை உண்டாக்கும். இந்த பக்தியானது, யமனை (ம்ருத்யு)க்கூட அருகில் நெருங்கவிடாமல் செய்யும் சக்தியுடையது" என்று நீ உன் தாயான தேவஹூதிக்கு, (கபிலராக) உபதேசம் செய்தாய் அல்லவா?.
 • நான்(இறைவன்) எல்லா உயிரினங்களிடத்தும், பூதாத்மாவாக  இருக்கிறேன்.
 • அப்படியிருக்க, என்னை அவமதிப்பது போல்,  மனிதன், வீண் புகழ்ச்சிக்காக, விக்ரக ஆராதனை செய்கிறான்.
 • எல்லா உயிர்களிடத்தும், ஆத்மாவாக உறையும் என்னை விட்டு விட்டு, மூடத்தனமான கொள்கையால், விக்ரகத்தை மட்டும் எவன் வழிபடுகிறானோ,அவன் சாம்பலில் ஹோமம் செய்பவனுக்கு ஒப்பாவான். (அதாவது, பக்தி செய்யும் ஒருவன், உயிர்களிடத்தில் பேதம் காட்டுவது கூடாது என்பது இதன் உட்பொருள். சக உயிரினங்களிடம், பேதம் காட்டும் ஒருவனது பக்தியை இறைவன் ஏற்பதில்லை).
 • எப்போதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவனாக உள்ள ஒருவனது உள்ளம் அமைதியை அடைவதில்லை. இவ்வித மனப்பான்மையாலேயே, பிற உயிர்களிடத்தில் வித்தியாசம் பாராட்டும் பாவனை தோன்றுகிறது.
 • மிக உயர்ந்த, அரிய பொருட்களைக் கொண்டு, இறைவனைப் பூஜித்தாலும், ஜீவர்களிடத்தில், வித்தியாசம் பாராட்டி, அவர்களிடத்து உறையும் பகவானை அவமதிப்பவர்களின் பூஜையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.
 • எல்லா பிராணிகளிடத்தும், அந்தர்யாமியாய் உறையும் இறைவனை தன் உள்ளத்தில் அறியும் பொருட்டு, அந்த நிலையை எய்துவதற்கு சாதனமாக, ஒருவன் தன் கடமைகளைச் செய்தவாறே, விக்ரக ஆராதனை செய்யலாம்.
 • ஒருவன், தனக்கும் பிறருக்கும் சிறிதளவேனும் பேதம் பாராட்டுவானேயானால், அவனுக்கு நான் கொடிய பயத்தை(ம்ருத்யு) தருகிறேன்.
 • ஆகையால், என்னை (இறைவன்) கட்டாயம் பேதமற்ற நோக்கத்துடனேயே ஒருவன் பூஜிக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் காணலாம்.

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..