நான் எழுதி,உயர்திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை',மாணவர் மலரில் வெளிவந்த இந்தக் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உயர்திரு.SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.
இந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது?. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.
ஸ்ரீ வேத வியாசர் |
1. குரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும் படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.
ஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே!!! என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.
சமரின் முந்திய சாலுவன்மேல் மனம்
அமர நின்றது அறிந்துழி, அம்பையை,
'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,
அமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).
மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.
சென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,
'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'
என்று இகப்ப, இவனுழை மீளவும்,
மன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).
திரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.
சினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.
மீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.
ஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.
இறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.
இருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.
துடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்
ஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.
பீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .
வெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்
தும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,
வம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,
வம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்
அம்பை மானும் விழி, அம்பை என்பவளும்
அரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)
ஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.
மனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.
அம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.
அம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,
"சிகண்டி க்ருதகேதனாய நம:" என்னும் ஒரு நாமம் இருக்கிறது
செய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்?). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.
இந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.
எதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.
மூத்தவனான தருமன், " குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் " என்றான்.
மறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.
பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், "நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்!!!" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, " நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்"என்று சத்தியம் செய்தான்.
பின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,
தன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,
'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனால்,
உன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)
பின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்
பாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.
காலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா? என்பது அவர் எண்ணம்.
அரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், "உங்கள் மன்னனின் நண்பன்" என்று சொல்லிவிட்டார்.
வெகுண்டான் துருபதன். "அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. " நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான்!!! " என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.
'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;
இகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;
அகன்ற மெய்ம்மை உடையாய்! அறிதி' என்றேன்' என்று,
சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)
துருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, " நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.
'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று
இன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;
குன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே!
உன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).
பாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.
ஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.
எப்பொழு தும்பிர மத்திலே சிந்தை
ஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்-வகை
தானுணர்ந் தான்சஹ தேவானம்-எங்கம்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில்-வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று -அங்குச்
செப்பினன் காயை உருட்டினார்-அங்குத்
தீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்).
முடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.
'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்
சமரில்' என்றான்; (வில்லி பாரதம்).
பாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.
சகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,
மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,
உகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை
இகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)
இந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.
வெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.
வெற்றி பெறுவோம் !!!
கோபமும் க்ஷாத்ரமும் காரணம் எதுவானாலும் அழிவில் தான் நிறுத்தும் என்பதை பாரதமும் ராமாயணமும் காட்டுகின்றன.
பதிலளிநீக்குஅழகிய மேற்கோள்களுடன் இதை விளக்கிய உங்களுக்கு எனது பணிவான பாராட்டுக்கள், சகோதரி.